எங்க ஆத்தக் காணோம்.......
வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றைக் காணவில்லை,கண்டு பிடித்துக்கொடுங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நகைச்சுவை புகழ்பெற்றது. அதனைப் போல பார்ப்பனர்கள் தங்களுடைய ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் 'சரஸ்வதி ' ஆற்றைக் காணவில்லை என்று ரொம்ப காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையத்தில சொல்லிட்டாக,ஐரோப்பாவில் இருக்கிற அறிவியல் அறிஞர் எல்லாம் சொல்லிட்டாக,இப்படி ஒரு நதி இந்தியாவிலே இருந்துச்சு,ஓடுச்சுன்னு சொல்லிட்டாக, ஆனா அந்த 'சரஸ்வதி ' ஆற்றைக் காணலையே, அந்த 'சரஸ்வதி ஆற்றைக்காணலியேன்னு சொல்லிப் பார்ப்பனர்கள் புலம்பியது மட்டும் இல்லாமல், 2014-ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் 'நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சுட்டோம், நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சிட்டோம்'ன்னு சொன்னாங்க. அந்த சரஸ்வதியைக் காணாம்ன்னு தேடியதைப்பற்றி ஒரு 20 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்திருக்கிறது.(21.07.2018) - தமிழ் இந்து பத்திரிக்கையில் ந. வினோத் குமார் என்பவர் எழுதியிருந்த 'எங்கே போனாள் சரஸ்வதி' என்னும் கட்டுரையைப் படித்தவுடன் அந்த இணைய தளத்திற்குச்சென்று பார்த்தேன்.
நம் விடுதலை இணையதளமான viduthalai.in என்னும் இணையதளத்திற்குள் சென்றாலே, periyar.tv என்னும் இணையதளமும் வரும். அதில் உள்ளே சென்றால் நமது கழக நிகழ்வுகளை, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையின் வீடியோவைப் பார்க்கலாம். அப்படி newyork times என்னும் இணையதளத்திற்குள் சென்றால் op docs என்னும் இணையதளம் வருகின்றது.அந்த இணையதளத்திற்குள் சென்றால் நூற்றக்கணக்கான ஆவணப்படங்கள் இருக்கின்றன.உலகம் முழுவதும் இருப்பவர்கள் அனுப்பக்கூடிய ஆவணப்படங்களைப் பார்த்து , அதில் வெளியிடத்தக்கது என்று நினைக்கும் ஆவணப்படங்களை அப்பத்திரிக்கையின் இணையதள இணைப்பில் வெளியிடுகின்றார்கள்.அதற்கான விண்ணப்ப படிவம் அந்த இணையதளத்திலேயே இருக்கின்றது. அந்த இணைப்பின் நோக்கமே ஆவணப்படத்தின் மூலமாக நேர்மறையான விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'Searching for Saraswati 'என்னும் ஆவணப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். சிர்லி ஆபிரகாம்,அமித் மாதேசியா ஆகியோர் இந்தக் ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.
ஹரியானாவில் 2015-ஆம் ஆண்டு 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்ததாக அந்த மாநிலத்தின் அரசாங்கமே அறிவித்தது நமக்கு நினைவிருக்கும். அந்த ஆற்றுக்காக உடனடியாக 50 கோடி ஒதுக்கினார்கள். கண்டு பிடித்த நதி இப்போது ஓடுகின்றதா? எனும் கேள்வி கேட்பார் இன்று யாருமில்லை. எதற்காக அந்த 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்தார்கள்,அவர்களின் நோக்கமென்ன, மூட நம்பிக்கையை ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விளக்குவதுதான் இந்த 'சரஸ்வதியைத் தேடி ' என்னும் ஆவணப்படம். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் இத்தனை நாட்கள் குடிக்காத பிள்ளையார், இப்போ எப்படி திடீரென்று பால் குடிக்கிறார் என்னும் கேள்வி கேட்கும் ஞானமின்றி, பிள்ளையாருக்கு பால் கொடுக்க பக்தர்கள் பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் , சென்னையில் தமுக்கு அடித்து பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று வீதிக்கு வந்து நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் தொண்டர்களாகிய என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இப்படம் பார்த்த அனுபவம் இருந்தது.
பழங்கால சரஸ்வதியைத் தேடும் பயணம் முடிவில் ஹரியானாவில் முடிந்தது என்றுதான் இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.இது ஒரு அதிசயம்(miracle). நீங்கள் படித்த சரஸ்வதி நதி உங்கள் கண்முன்னால் இருக்கின்றது.பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்த நதித்தேடலை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. ஹரியானா மாநிலம் இதற்கென 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.முகாவலி என்னும் கிராமத்தில் சரஸ்வதி நதியைத் தோண்டும் பணி ஆரம்பித்திருக்கின்றது. எனும் டைட்டிலோடு ஆரம்பிக்கின்றது. இந்துத்துவப் பார்ப்பனர்களின் சூதுவினை அறியாத சகிராம் காசியப் என்னும் விவசாயி,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சரஸ்வதி தன்னுடைய வயலில் தோன்றப்போவதாக நம்புகின்றார். சரஸ்வதி நதி மீண்டும் தோன்றும்வரை கிணற்றுக்குப்பக்கத்திலேயே பூசை செய்யப்போவதாக அறிவிக்கின்றார்.
அங்கே கோபல தாஸ் என்னும் பார்ப்பன பூசாரி வருகின்றார். நான் இந்து. அதனால் சரஸ்வதி நதி தோன்றப்போகும் இடத்தை வணங்க வந்திருக்கின்றேன் என்று சொல்கின்றார்.அரசாங்கம் இங்கு சரஸ்வதி நதி ஓடப்போவதாக அறிவித்திருக்கின்றது.நம் பகுதியில் இதற்காக நாம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சொல்லும் கோபாலதாஸ் என்னும் பார்ப்பனர் அதற்கான திட்டங்களைச்சொல்கின்றார்.ஊர் மக்களைத் திரட்டுகின்றார். புனிதமான சரஸ்வதி நதி மீண்டும் தோன்றுவது நாம் செய்த பாக்கியம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகத்திற்கு தலைமையாக ஆக்குவேன் என்று சொல்கின்றார், நாம் கங்கை-யமுனை, சரஸ்வதி நதிகளின் மூலமாக இந்தியாவை உலகத்தின் தலைமையாக ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றார்.தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து பாட்டிலில் எடுக்கப்பட்ட தண்ணீரை சரஸ்வதி நதியின் தண்ணீர் என்று மக்கள் மேல் தெளிக்கின்றார்கள்.மக்கள் மண்பானைகளில் தெய்வத்தின் தண்ணீர் என்று பூக்களைச்சூட்டி வங்குகின்றார்கள். சரஸ்வதி, கங்கை, யமுனை என்று மூன்று பெண்களை வேடமிட வைத்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.பண வசூல் செய்கின்றார்கள். மக்கள் பணத்தை தட்டுகளில் வந்து கொட்டுகின்றார்கள்.சரஸ்வதி நதியின் தண்ணீர் தீராத நோயை எல்லாம் தீர்க்கிறது,இருதய நோய், தொழு நோய் எல்லாம் இந்தத் தண்ணீரைக் குடித்ததால் சரியாகி விடுகின்றது,ஒரு பெண் வந்தார், அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. இந்தத் தண்ணீரைக் கொடுத்தேன். இதய ஓட்டை சரியாகி விட்டது. மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படிப்பட்ட மருந்து என்று சொல்வதைக் காட்டிவிட்டு , அடுத்து அந்த நீரில் தவளை மற்றும் பல பூச்சிகள் செத்துக்கிடப்பதைக் காட்டுகின்றார்கள்.அந்த இடத்தில் உணவு தயாரித்து பலருக்கும் கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு ஜர்னல்சிங் என்னும் விவசாயி மற்றும் பி.பி கபூர் எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இருவரும் வருகிறார்கள்
அவர்களிடம் இந்த இடத்தில் சரஸ்வதி நதி தண்ணீர் வருவதாக சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இங்கு வரும் தண்ணீரை விட பக்கத்தில் இருக்கும் கிணற்று ஊற்றில் நிறையத் தண்ணீர் வருகின்றது. ஆனால் சரஸ்வதி நதியினை ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுதான் சரஸ்வதி நதி நீர் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள். ஜர்னல்சிங் எங்கே அந்த அறிக்கை இருக்கிறது என்று கேட்கின்றார். அவர்கள் தங்களிடம் அறிக்கை இல்லை என்று சொல்கின்றார்கள்.புனித நூலில் இருக்கிறது. உயர்ஜாதி பிராமணர்களாகிய நாங்கள் இதனை நம்புகின்றோம் என்று பதில் சொல்கின்றார்கள்.இல்லை, இது சரஸ்வதி நதியின் நீர் இல்லை என்று அழுத்தமாக ஜர்னல்சிங்க் சொல்கின்றார். கபூர் இஸ்ரோ உட்பட பல நிறுவனங்களுக்கு 10 முதல் 15 கிலோ வரை கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அனுப்பியுள்ள பதில்களில் அப்படி ஒரு நதி இல்லை என்றே வந்திருப்பதாகவும் சான்றுகளுடன் காட்டுகின்றார்.கற்பனையான சரஸ்வதி நதியை அரசாங்கம் கொண்டுவந்தால், அடுத்து கற்பனையான இராமன், இராவணனை எல்லாம் அரசாங்கம் உயிரோடு கொண்டுவருமா ? என்று ஜர்னல்சிங் கேட்கின்றார். அதற்கு அந்த கோபாலதாஸ் எனும் பார்ப்பனபூசாரி கடவுள் தன் ரகசியங்களை அறிய அனுமதிப்பதில்லை எனக்கூறி கல்பனா சாவ்லா இறந்ததை உதாரணம் காட்டுகிறார், கடவுளின் ரகசியங்களை அறிந்து வந்த கல்பனா சாவ்லா பூமிக்கு வரும்முன் இறக்கும் படி கடவுள் செய்து விட்டாராம். இவர்களெல்லாம் சரஸ்வதி வந்து விட்டால் உலகின் முதன்மை விண்வெளி நிறுவனமாக உள்ள நாசாவை,அமெரிக்காவை முந்தி விடுவார்களாம்.
அரசு அதிகாரிகள் ஒன்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் பேசுகின்றார்கள்.சரஸ்வதியின் கதை அறிவியலின் கதை என்று பிரச்சாரப்பயணம் போகின்றார்கள்.மனிதர்களால் நதியை உருவாக்க முடியுமா? என்று கேட்கின்றார்கள் .ஆனால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சரஸ்வதி நதிக்கரையில் பூசைகள் நடைபெறும் என்று அறிவிக்கின்றார்கள். உணமையாக நடந்த பல நிகழ்வுகளை, பேட்டிகளை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள். அரசு அதிகாரிகள், தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு நன்றாக சிரிக்கலாம், அப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.கடைசியில் ஜர்னல்சிங், சகிராம் காசியப்பிடம் கேள்விகளாகக் கேட்கின்றார். நோயெல்லாம் இந்த நீர் தீர்த்துவிடுமென்றால், இந்த நீரை அப்படியே மருத்துவமனையில் வைத்து எல்லா நோயையும் தீர்த்து விடலாமே, எதற்கு மருந்தும் அறுவை சிகிச்சையும் எனக் கேட்கின்றார்.
சென்னை முதல் சேலத்திற்கு எட்டு வழிச்சாலை என்று இன்று தமிழகத்தில் விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துதல் போல ஹரியானா அரசாங்கம் 10 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்த நிலங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆறுபோல வெட்டி அதில் மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை எடுத்து , சரஸ்வதி என்னும் பெயரில் இருக்கும் ஓடையில் விடுகின்றார்கள். இதனால் அந்தப் பத்து கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் கீழே போயிருக்கின்றது. விவசாயம் செய்ய முடியவில்லை அவர்களால் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றார்கள்.
தொல்பொருள் துறையோ மற்ற துறைகளோ சொல்லாத நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு நதியைத் தோண்டுவதாக சொல்வதற்கு நோக்கம் இருக்கின்றது. வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில்கள் இல்லை,உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. இதனை மறக்கச்செய்வதற்கு இப்படிப்பட்ட செயல்களை, பொய்மைகளை இந்துத்துவாவாதிகள் செய்கின்றார்கள் என்பதனை கடைசியில் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றார்கள். அரசாங்கம், அரசு அதிகாரிகள் பொன்றவர்களைப் பயன்படுத்தி இந்துவத்தைப் பரப்புவதற்கான ஒரு திட்டமாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த சரஸ்வதி நதி தோன்றியதாக எப்படி அறிவித்தார்கள் எப்படியெல்லாம் பொய்களால் பரப்பினார்கள், எப்படி பரப்புகின்றார்கள் என்பதனை நறுக்கென்று சொல்லும் ஆவணப்படம் இப்படம். யூ டியூப்பில் சென்று 'Searching for Saraswati " என்று டைப் செய்து படத்தைப் பாருங்கள்...தமிழில் நல்ல ஆவணப்படம் எடுக்கும் தோழர்கள், தோழியர்கள் இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.
No comments:
Post a Comment