Sunday 11 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : ஜாதி கெடுத்தவள்...திருமகள் இறையன்

அண்மையில் படித்த புத்தகம் : ஜாதி கெடுத்தவள்
ஆசிரியர்                   : திருமகள் இறையன்
வெளியீடு                  : திராவிடன் குரல் வெளியீடு,சென்னை-56.
மொத்த பக்கங்கள்           : 96, விலை ரூ 60

                         திராவிடர் கழகத்தின் ஆளுமை மிக்க பெண் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவராக  இருந்து மறைந்த அம்மா திருமகள் இறையன் அவர்களின் தன் வரலாறு இந்த நூல்.அவர்கள் உயிரோடு இருக்கும்போது வெளிவந்த நூல். இன்று அவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும்,ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட இன்னல்களையும் அதில் இருந்து மீண்டு வந்த வரலாற்றையும் சிறு சிறு கட்டுரைகளாக எழுதி அதனை அருமையாகத்  தொகுத்துத் தந்திருக்கின்றார்கள்.



                       அணிந்துரையை 'காவியம் போல் ஒரு வாழ்க்கை! கவிதையைப் போல் ஒரு வரலாறு 'என்று தோழியர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கொடுத்திருக்கின்றார்.ஆமாம், காவியம் போல திரைப்படம் எடுக்கும் அளவிற்கு திருப்பங்களும் திகில்களும் நிறைந்த துவக்க வாழ்க்கையாகத்தான் இறையனார்-திருமகள் இணையர்களின் வாழ்க்கை இருந்திருக்கின்றது.அதனை வழக்கறிஞர் அருள்மொழி " ஆதிக்க உணர்வுடைய ஒரு ஜாதியில் பிறந்து,ஜாதி உரையாடல்களையே தன் இளம் வயது முதல் கேட்டு வளர்ந்த திருமகள் அவர்கள் அந்த ஜாதிப்பற்றை எவ்வளவு வெறுத்தார் என்பதையும்,ஜாதி என்ற அடையாளத்தையே மறுத்து தன் வாழ்க்கையில் எப்படி சாதித்துக்காட்டினார் என்பதையும் அவர் சொல்லிக்கொண்டே போக கதை கேட்டபடியே நாமும் நடந்து போகிறோம் அவரது வாழ்க்கையுடன் " என்று சொல்கின்றார்.மேலும் " பெண்ணியம் பற்றி புத்தகம் படித்து பேசும் பலரைவிட பெரியாரியல் வாழ்க்கை வாழ்ந்து அதில் இருந்து பெண்களின் உடல் பிரச்சனைகளைக் குறித்தும் , படித்த பெண்களின் கடமைகளைப் பற்றியும் அம்மா கூறியிருக்கும் கருத்துகள் பெரியாரின் பெண்ணியத்தின் விளக்கமாகும்." என்று குறிப்பிடுகின்றார்.ஆம், இன்று பெரியாரியலைப் பேசுகிறவர்களை விட பெரியாரியல் அடிப்படையில் வாழ்பவர்கள்,வாழ்ந்தவர்களின் ,அனுபங்களின் பகிர்வுதான் தேவை.இன்றைய இளைஞர்கள் நேற்றைய முட்புதர்கள் நிறைந்த பாதைகளைத் தெரிந்துகொண்டால்தான் இன்றைய தெளிவான பாதைக்கு உழைத்தவர்களைத் தெரியும். அந்த வகையில் இந்த 'ஜாதி கெடுத்தவள் ' என்னும் திருமகள் இறையன் அவர்களின் புத்தகம் மிக மிக குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

                      என்னுரையே பெரியார் சொல்வதைப் போல நேரடியாக இருக்கின்றது. ஜாதியாம் ஜாதி , என்னங்கடா உங்க ஜாதி என்று கேட்பதுபோல " தெருவில் நடக்க முடியாத ஜாதி, செருப்பு அணிந்து நடக்கக்கூடாத ஜாதி,...." என வரிசையாக அடுக்கும் பகுதியை மட்டும் தனியாக துண்டறிக்கையாக கொடுக்கலாம். அவ்வளவு கோபமும்,உணர்ச்சியும் இருக்கிறது. " இப்படிப்பட்ட ஏராளமான பிரிவுகளையும் ,பிற்போக்குகளையும், மனிதத்தன்மையற்ற போக்குகளைக் கடைபிடித்த கேவலமான ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சமூகத்தில் ,காட்டுமிராண்டித்தனத்தையே ஒரு அடையாளமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து ,1959 மார்ச் 10ல் மானமிகு இறையன் அவர்களை இணையராக ஏற்றுக்கொண்டது முதல் ,கடந்த 55 ஆண்டுகளாக இந்தச்சமூகத்தில் திராவிடர் இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் ஒரு சிறிய திரட்டுதான் இந்த புத்தகம் " என்று குறிப்பிடுகின்றார்.

                     பிறப்பும் ,தொடக்கக் கல்வியும் எனும்  முதல் கட்டுரை தொடங்கி , இருபத்து மூன்றாவதாக உள்ள 'என்றும் நான் மறக்க(கூடாத) முடியாத சிலர் ' என்னும் கட்டுரை வரை அம்மா திருமகள் இறையன் அவர்களின் வாழ்க்கையும், அவரது இணையர், அவரது பிள்ளைகள் , அவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவியவர்கள் என அவர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பின் இணைப்புகளாக அவர் எழுதிய கட்டுரைகள் 'சோதிடம்,தாலி ஒரு வேலி, மகளிர் அன்றும் இன்றும் ,பெண்களைப் பற்றிய வேதங்களின் பார்வை, மகளிர் கடமை,மன்றல் 2012, ஜாதி மறுப்புத் திருமணங்களின் பட்டியல் ' போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

                     சின்ன சின்ன கட்டுரைகள் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு  செய்தியைச்சொல்கின்றது.அவரது இளமைக்காலத்தில் ஜாதிக்கொடுமை எப்படியெல்லாம் இருந்தது. தன் குடும்பத்தைச்சார்ந்தவர்களே எப்படி ஜாதி வெறி பிடித்து பேசுவார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டிருக்கின்றார். அய்யா இறையனார் அவர்களைத் திருமணம் செய்தது, அதன் விளைவுகள், உயிருக்கு பயந்து ஒவ்வொரு ஊராக ஒளிந்து மறைந்து வாழ்ந்தது, ஆசிரியர் பணிக்கு சென்றது, ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள்,4 குழந்தைகள் பிறந்தது,அவர்கள் வளர்ந்தது, அவர்கள் அனைவருக்கும் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துவைத்தது,அவர்களின் வாழ்க்கை, அவர்களின் குழந்தைகள்( அத்தனையும் தமிழ்ப்பெயர்கள்) என விவரித்து செல்வதோடு தந்தை பெரியாரை முதலில் சந்தித்தது, நெருக்கடி காலத்தில் அன்னை மணியம்மையார் அவர்களோடு இணைந்து இயக்க வேலைகள் செய்தது, பின்பு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின் தலைமையில் பணியாற்றியது எனப் பல்வேறு செய்திகளை அவருக்கே உரித்தான பாணியில் நூலாசிரியர் திருமகள் இறையனார் அவர்கள் சொல்லிச்செல்கின்றார்.

                     பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கெல்லாம் காண்டேகரின் நூல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த நூலில் அன்னை மணியம்மையார் அவர்களுக்கும் காண்டேகரின் நூல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதனை நூலாசிரியர் "அன்னையாரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் காண்டேகர் எழுதிய 'வெறுங்கோயில் ' என்ற நாவலை பலமுறை படிப்பேன் என்பார்கள். அன்றைய காலப்பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாகப் பயன்பட்டிருக்கிறது (பக்கம் 47)" எனக்குறிப்பிடுகின்றார். நெருக்கடி நிலை காலத்தில் நெல்லையில் நடந்த   பொறியாளர் அண்ணன் மனோகரன்-கசுதூரி திருமணம் பற்றி எழுதியிருக்கின்றார். அண்ணன் மனோகரன் அவர்களும் அம்மா திருமகள் அவர்களும் பேசும்போது கேட்க வேண்டும். அவ்வளவு கேலியும் கிண்டலும், உரிமையும் நட்பும் கொள்கை உறவும் அப்பப்பா....இருவரும் இல்லை இப்போது.....அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (2019) வரும் இந்த நேரத்தில் அவரைப் பற்றிய பல செய்திகளை நூலாசிரியர் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

                   முடிவாக 1995 முதல் தான் சுயமரியாதை இயக்க திருமண நிலையத்தின் இயக்குநராக இருந்ததையும் அங்கு சுயமரியாதைத் திருமணம் நடத்திக்கொண்டவர்களின் பட்டியலையும் கொடுத்து " சென்னை ,பெரியார் திடலிலுள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணங்களே இந்தப் பட்டியலில் உள்ளவை.இவற்றில் 90 விழுக்காடு காதல் திருமணங்களே! இவை இல்லாமல் இங்கே பதிவு செய்து தமிழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றுள்ளன.ஜாதி கெட்டவளாக கூறப்பட்டு வாழ்க்கையைத் தொடங்கிய நான் இந்த சுயமரியாதை திருமணங்களை செய்து வைப்பதன் விளைவாக 'ஜாதி கெடுத்தவள் ' என்ற பெருமையைப் பெற்றுள்ளேன்.இது தமிழர் தலைவரால் எனக்கு கிடைக்கப்பெற்ற பேறு ..." என்று குறிப்பிட்டுள்ளார். 


                   திராவிடர் கழகத்தினைச்சார்ந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது சவால்.....அவர்களின் வாழ்க்கை போராட்டமே...ஆனால் போராட்டத்தில் எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்களாகவே.வெற்றி பெறுபவர்களாகவே  பெரியார் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையை தன் வரலாறாகப் பதியும்போது இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த 'ஜாதி கெடுத்தவள் ' என்னும் புத்தகம். இன்னும் 'ஜாதி கெடுத்தவர்கள் ' பலர் என் முன்னே இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் தங்கள் வரலாறைப் பதியும்போது இன்னும் களமும் விரிவாகும்,களத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் விவரிப்பும் கூடுதலாகும்.எதிர்பார்ப்போம்.படித்துப்பாருங்கள். மற்றவர்களையும் படிக்கச்சொல்லுங்கள். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைப் புத்தக நிலையத்தில் இப்புத்தகம் கிடைக்கிறது. புத்தகச்சந்தைகளிலும் கிடைக்கிறது. 

                        

  

4 comments:

முனைவர். வா.நேரு said...

என்னுடைய அம்மா நினைவு நாள் வருகின்ற 14 ஆம் தேதி.
அந்த வேளையில் நேரு அவர்களுடைய #ஜாதிகெடுத்தவள் நூல் விமர்சனத்திற்கு எங்கள் குடும்பம் சார்பில் நனிநன்றி!
..................................
பேஸ்புக்கில் தோழர் இசை இன்பன்

முனைவர். வா.நேரு said...

நேரு அவர்களுக்கு நன்றிகள் பற்பல...

பேஸ்புக்கில் தோழர் பண்பொளி பண்பு

முனைவர். வா.நேரு said...

Well put it maanamigu vaa! Nehru avargale!; நானும் சில காலம் அந்த இணய்யரோடு பழகியிருக்கிறேன்!‌வாழ்க திருமகள் அம்மா!

பேஸ்புக்கில்....தோழர்....கோரா...

முனைவர். வா.நேரு said...

ஜாதி மறுப்புத் திருமணங்கள் குறிப்பாக ஆதிக்க மனோபாவமுள்ள ஜாதிக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதிக்குமிடையே நடைபெறும் காதல் திருமணங்கள் அனைத்துமே வன்முறையிலும் ,சோகத்திலும் முடிவதில்லை என்பதற்கு திருமகள்-இறையன் தம்பதிகள் சாட்சி.சாய்ராட்(மராத்தி),காதல் போன்ற படங்கள் எடுத்தும்,இலக்கியங்கள் படைத்தும் ஜாதி மறுப்பு காதலர்களைப் பயமுறுத்தாமல் இது போன்று வாழ்ந்து காட்டியவர்களின் அனுபவத்தை இலக்கியமாகப் படைத்தும்,சினிமாவாக எடுத்தும் நம்பிக்கை ஊட்டுவார்களாக!

இந்த புத்தக விமர்சனத்தைப் படித்து விட்டு , கட்செவியில்(வாட்சப்பில்) பி.எஸ்.என்.எல். கோட்ட அதிகாரி(ஓய்வு) திரு.எஸ்.சுப்ரமணியன்(எஸ்.எஸ்) அவர்கள்