அண்மையில் படித்த புத்தகம் : கரும் பலகைக்கு அப்பால் ....
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
வெளியீடு : நீலவால் குருவி ,சென்னை -24 பேச: 9442890626
முதல் பதிப்பு : ஜனவரி 2018, 80 பக்கங்கள், விலை ரூ 70
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
வெளியீடு : நீலவால் குருவி ,சென்னை -24 பேச: 9442890626
முதல் பதிப்பு : ஜனவரி 2018, 80 பக்கங்கள், விலை ரூ 70
இந்த வருடம் மதுரை புத்தகச்சந்தையில் வாங்கிய புத்தகம். இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா தனது முன்னோட்டத்தில் ' ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.உலகமெங்கும் ஆசிரியர்கள்,குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இப்படங்கள் வாயிலாக அறிய முடியும்.அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் நல்ல பலன்களைத்தரும் " எனக்குறிப்பிடுகின்றார். ஆமாம், தான் பார்த்த ,ரசித்த ஆசிரியர்கள்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 12 திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்தான் இந்தப் புத்தகம்.
கரும்பலகைக்கு அப்பால், தி இந்து தமிழ் பத்திரிக்கையில் வரும் தொடர் கட்டுரைத் தலைப்பு. 2011-ல் வெளியான "Beyond the Blackboard " என்னும் படத்தைப் பற்றியதுதான் முதல் கட்டுரை. இதுதான் புத்தகத்தின் தலைப்புக்கும் கூட.சில ஆசிரியர்கள், நானே கூட எனது கல்லூரிக் காலத்தில் சந்தித்ததுண்டு. கைகளில் நோட்ஸ்களோடு வருவார்கள், வருகைப் பதிவேட்டை எடுப்பார்கள். பின்பு எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு 40,45 நிமிடம் கரும்பலகையில் எழுதி மட்டும் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். சில விளக்கங்கள் சொல்வார்கள், ஆனால் அது உருப்படியாக இருக்காது. இன்றைக்கும் பல ஆசிரியர்கள் அப்படி இருக்கக்கூடும்.பாடங்களைப் புரிவது, மாணவர்களைப் புரிவது, மாணவர்களின் வீட்டுச்சூழலைப் புரிவது எனப் பல புரிதல்களோடு வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரால் மட்டுமே , காலம் கடந்து நிற்கும் ஆசிரியராக நிற்கமுடியும். "டேசி பெஸ் என்ற ஆசிரியை தனது பள்ளி அனுபவங்கள் குறித்து எழுதிய 'Nobody Don't Love Nobody " என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மைச்சம்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " Beyond the Blackboard " என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கனவுகளோடு ஆசிரியராகப்போகும் டேசி பெஸ், எதார்த்தங்களால் உடைந்து போவதும், மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவதும் பின்பு சூழலை உள்வாங்கிக்கொண்டு மிகச்சிறந்த ஆசிரியராக, பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும், மாணவிகளும் நேசிக்கும் ஆசிரியராக எப்படி மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை என்பதனை நூலாசிரியர் குறிப்பிட்டு விவரிக்கின்றார்." இயல்பான கலந்துரையாடலே கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது " " வகுப்பறை மாற்றங்களை சந்திக்கும்போது சுற்றுப்புறமும் மாறுகிறது " (பக்கம் 12), "ஆசிரியர் என்ற பெருமிதத்தை பார்ப்பவர்க்கும் வழங்குவதே, Beyond the Blackboard " திரைப்படம் எனக்குறிப்பிடுகின்றார்.
குறைபாடு உள்ள பிராட் என்னும் குழந்தை , பின்பு அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் விளக்கி, அந்தக் குறைபாட்டை வைத்துக்கொண்டே படித்து பின்பு மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி மாறுகின்றார் என்பதனை விளக்கும் ஆங்கில மொழியில் வந்த " Front of the Class " என்னும் திரைப்படத்தை அடுத்த கட்டுரை விவரிக்கின்றது. "குழந்தைகளிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்த தெளிவான அறிதல்கள் ஆசிரியருக்கு மிகவும் அவசியம்" பக்கம் 17 ...இதனை ஆசிரியர்களின் ஓய்வறையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் எழுதி வைக்கலாம்.
நமது அண்டை மாநிலமான கேராளாவில் சமூக அக்கறையோடு கூடிய பல படங்கள் பல காலமாக எடுக்கப்படுகின்றன. (தமிழில் அப்படியான போக்கு இப்போதுதான் காணப்படுகின்றது. அது மகிழ்ச்சியே ).மலையாள மொழியில் 2012 எடுக்கப்பட்ட " Last Bench " என்னும் படம் பற்றியது அடுத்த கட்டுரை. " ஆசிரியர்களும்,பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமல்லாமல் முன் மாதிரியாக இருக்கவேண்டும் .(பக்கம் 28 ).என்பதனை கடைசி பெஞ்சின் படிக்காத மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றியது.
சீன மொழியில் 1999-ல் எடுக்கப்பட்ட " Not One Less " என்னும் திரைப்படம், 2016-ல் இந்தியில் வந்த " Chalk n duster " என்னும் திரைப்படம்,1984-ல் ஆங்கில மொழியில் வந்த "Teachers " என்னும் திரைப்படம்,'அறிவுக்கு நிறம் இல்லை என்பதனை அழுத்தமாகச்சொல்லும்- 2007-ல் வெளிவந்த " The Great Debaters " என்னும் திரைப்படம், 2004-ல் கொரிய மொழியில் வெளிவந்த " Lovely Rivals " என்னும் திரைப்படம், 1981-ல் அமெரிக்காவில் வெளிவந்த " The Marva Collins Story " ,2005-ல் ஆங்கில மொழியில் வெளியான "School of Life " ,1989-ல் ஆங்கிலத்தில் அமெரிக்காவில் வெளியான "Lean on Me " ,றைவாக அமெரிக்கக் கல்வி பற்றிய 2010-ஆம் ஆண்டு ஆவணப்படமான " Waiting for Superman " என்னும் படத்தைப் பற்றிய கட்டுரையோடு புத்தகம் முடிகின்றது.
ஒவ்வொரு திரைப்படத்தினையும் தன்னுடைய ஆசிரியர் அனுபவத்தோடு இணைத்து, இன்றைய சூழலில் இருக்கும் சமூகச்சூழலையும் சுட்டிக்காட்டி இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கின்றார்.பாராட்டுக்குரிய பணி. பின்லாந்து நாடு முன்னேறியதற்குக் காரணம் அதனுடைய கல்வி முறைதான் என்று மாற்றி மாற்றி கட்செவியில் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. கடவுளைப் பற்றிக் கவலைப்படாத பின்லாந்து நாடு, மிகத்தீவிரமாக கல்வி பற்றிக்கவலைப்படுகின்றது. நமது நாடு அதற்கு நேர் எதிராக கடவுள்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு, கல்வியை பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றது. ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. சாதிகளால், மதங்களால்,சுய நலமிக்க அரசியல்வாதிகளால் பிளவுண்டு கிடக்கும் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி கல்வியே. கல்விக்கூடங்களையும்,கல்வியையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப்புத்தகத்தைப் படித்தவுடன் கல்லூரியில் படிக்கும் எனது மகன் ,இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டான். " அப்பா, கணினியில் எடுத்துவைத்திருக்கிறேன், நீங்களும் பாருங்கள் " என்று சொல்லியிருக்கிறான்.பார்க்க வேண்டும்.
எனது முன்னாள் தலைமை ஆசிரியர் ,திரு.வீ.வீரி(செட்டி) அவர்கள் இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டு ," எல்லா வாத்தியார்களும் இதனைக் கட்டாயம் படிக்கவேண்டும்.படிக்கவேண்டும் " என்றார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக,தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அவர் சொன்னதை நானும் வழிமொழிகின்றேன் " ஆசிரியர்களாக இருப்பவர்கள், இருக்க விருப்பபடுபவர்கள்,பெற்றோர்கள் " கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment