Thursday 18 July 2019

பாம்புக் கிணற்றின் நினைவுகள்..


கடந்து போன காலங்கள் (18)


விலைக்குத் தண்ணீரை
குடிக்கவும் குளிக்கவும்
வாங்கும்  நிலையில்தான்
கொட்டும் மழை நீரைச்
சேகரிக்கும் எண்ணம் வலுக்கிறது மனதில்...

சின்ன ஊர் அது......
மழை நீர் சேகரிப்பாய்
சில ஊர் நல விரும்பிகள் உழைப்பால்
ஊருக்குள் பெய்யும் மழையை
ஒருங்கிணைத்து
ஒரு கிணற்றுக்குள் விடும்செயலை
கட்செவியில்
பகிர்ந்திருந்தான் தம்பி.....

சின்ன சின்ன ஊருணிகள்
எல்லாம் மழை நீர் சேகரிப்பு நிலையங்கள்தான்..
ஊருக்குள் இருந்த கிணறுகள்
எல்லாம் நிலத்தடி நீரை உயர்த்தும்
அறிவியல் கூடங்கள்தான் ....
எனது கிராமத்தில்
நான் சிறுவனாக இருந்த காலத்தில்
தெருவுக்கு ஒரு கிணறு இருந்த நாளும்
அதன் தொடர்பான செய்திகளும்
நினைவுக்கு வர
கட்ச்செவியில் பதிவுகள் போட்டேன்....

எங்கள் தெருவில் இருந்த கிணற்றுக்கு
பெயர் பாம்புக்கிணறு.....
தெருவின் நுழைவு வாயிலில்
வெளியில் சென்று திரும்பும் நேரமெல்லாம்
வரவேற்கும் பாம்புக்கிணறு

சிறுவயதில் கேப்பக்களி தாத்தா
கமலையில் தண்ணீர் இறைத்து
அவர் தோட்டத்திற்கு பாய்ச்சியதைப் பார்த்திருக்கிறேன்....

எனது உடன் பிறப்பும்
அவரோடு படித்த இன்றைய வி.ஐ.பியும்
தண்ணீர்ப் பாம்பை பிடித்துப்போய்
வகுப்பில் விட்டு
செமையாய் வாத்தியாரிடம்
அடிவாங்கியதற்கு
அடித்தளமாய் பாம்பைக் கொடுத்தது இக்கிணறுதான்

கிணறு நிறையத் தண்ணீர்
இருந்த காலமும்
பெயருக்கு ஏற்ப சில பாம்புகள்
கிணற்றுக்குள் இருந்த நினைவும்
குளித்த நினைவும்
வாளியில் தண்ணீர் இறைத்த நினைவும்
என நினைவுகளால் நிறைகிறது
பாம்புக் கிணற்றின் நினைவுகள்......

பகிரக்கூடியதாய் சில
பகிர முடியாததாய் சில
அதன் நினைப்பே சிரிப்பும்
மகிழ்ச்சியுமாய் விரிகிறது மழைத்துளியாய்....

இப்போது வெறும் குப்பைக் கிடங்காக
இருக்கிறது கிணறு என்றான் தம்பி....
கிணறு எப்படி குப்பைக் கிடங்காக மாறும்?
கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை...
மக்கள் குப்பைக் கிடங்காக
மாற்றி விட்டார்கள் ...இப்போது அது
குப்பை நாறும் குழியாகக் கிடக்கிறது என்றான்....

நிலத்தடி மொத்தமாக குறைந்து விட்டது ஊரில்...
மழை பெய்தால் இக்கிணற்றுக்குள்
மழைத்தண்ணீர் செல்ல வழி செயல் வேண்டும்...
குப்பைகளை மொத்தமாக அள்ளி
வெளியில் போட்டு
மீண்டும் கிணறாய் அது ஊற்றெடுக்க வேண்டும்.....
ஆர்வமாகச் சொன்னான் தம்பி...

ஆம்! ஆம்!
குப்பைக் கிடங்குகளாய் மாறிவிட்ட
ஊர்க் கிணறுகள் எல்லாம்
மழை நீர் சேகரிப்பு கிணறுகள்
ஆகிட வேண்டும்....
மீண்டும் ஒரு நாள்
ஊற்றெடுக்கும் கிணறுகளாய் மாறிடல் வேண்டும்...

                          வா.நேரு ,
                          18.07.2019


No comments: