அண்மையில் படித்த புத்தகம் : தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ?
நூல் ஆசிரியர் : திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி
வெளியீடு : திராவிடர் கழக இயக்க வெளியீடு
பதிப்பு : முதற்பதிப்பு 9,ஜனவரி 2019, இரண்டாவது பதிப்பு 21,ஜனவரி 2019, மூன்றாவது பதிப்பு 30,ஜனவரி 2019
மொத்த பக்கங்கள் : 304, விலை ரூ 180 /-
மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ள விடுதலை (10.08.2019) நாளிதழுக்கு நன்றி.
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ? சொல்லச் சொல்ல இனிக்குதடா.......
முனைவர் வா.நேரு,தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
சொல்லச் சொல்ல இனிக்கும் சொல்லாய் பலருக்கும் , சொல்லச் சொல்ல பார்ப்பனர்களுக்கு கடுப்பை ஏற்றும் சொல்லாய் ஒரு தலைவரின் பெயர் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில், பாராளுமன்றத்தில் ஒலிக்கிறது. அந்தத் தலைவர் தந்தை பெரியார்.அவருடைய பணியை, வரலாற்றை, தியாகத்தை, அறிவுத்தெளிவை, அஞ்சாமையை,எதிரிகளை வாதத்தில் வெல்லும் திறனை விவரித்துக்கொண்டே போகலாம். அவரைப் பற்றி அறியாதவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி அறிந்தவர்கள் ஆனால் தங்களின் அரசியலுக்கு, மூடத்தனம் பரப்பும் முட்டாள்தனச்செயல்களுக்கு மிகப்பெறும் இடையூறாய் அவரும் அவரது கொள்கைகளும் இருக்கிறதே என்னும் எரிச்சலில் அவரைப் பற்றி தவறான தகவல்களை, பொய்களை, அக்கப்போர்களை அன்றாடம் அன்றுமுதல் இன்றுவரை பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பரப்பும் பொய்களுள் முதன்மையானது தமிழைத் தந்தை பெரியார் பழித்தார் என்பது. அதற்குப் பதிலடியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் 'தமிழுக்கு என்ன செய்தார் ? பெரியார் 'என்னும் புத்தகமாகும்.
'தமிழைக் காட்டு மிராண்டி மொழி' என்று சொன்னாரா ? பெரியார் . ஆம் , சொன்னார். ஏன் சொன்னார், எதற்காக சொன்னார் என்பதனை தந்தை பெரியாரின் மொழிக்கொள்கை என்னும் முதல் அத்தியாயம் விளக்குகிறது. மறைந்த பகுத்தறிவு பேராசிரியர், கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியர் புலவர் ந.இராமநாதன் அவர்கள் விளக்கியுள்ள தந்தை பெரியாரின் மொழிக்கொள்கை என்னும் பாடம் நமக்கு சிறுபிள்ளைகளுக்கு வகுப்பில் பாடம் நடத்துவது போல பாடம் நடத்துகிறது. மொழி என்றால் என்ன? மொழியின் தன்மை என்ன ? இன்று தமிழ் மொழி எந்த நிலையில் இருக்கிறது ? எந்த நிலைக்கு வரவேண்டும் என பெரியார் விரும்பினார் என்ற விவரிப்புகளை அய்யா இராமநாதன் அவர்கள் விவரிக்கிறபோது படிப்பவர்களை வியப்பு தொற்றிக்கொள்கிறது. தன் பிள்ளை உலக அளவில் போட்டி போடவேண்டும், அதற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், ஆத்திக பூமாலை சூட்டி , வெட்டப்படப்போகும் ஆடாய் பார்ப்பான் நம் தமிழை ஆக்கி வைத்திருக்கிறான், அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை ,தமிழை இழிவுபடுத்துவதற்காக பெரியார் சொன்னார் எனத் திரித்துவிடப்பார்க்கிறான் பார்ப்பான் என்னும் தெளிவு படிப்பவர்க்கு கிட்டும் வகையில் பெரியாரின் மொழிக்கொள்கை விவரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மொழிகள் பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனை என்ன? . தமிழ் மொழி பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனை என்ன என்பதனை இரண்டாகப் பிரித்து புலவர் ந.இராமநாதன் விவரிக்கின்றார்.
மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்துக்கு ஒரு போர்க்கருவியாகும்.போர்க்கருவிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டும்.அவ்வப்போது கண்டு பிடித்துக் கைக்கொள்ள வேண்டும் '.தமிழ் மொழி குறித்து சிந்தித்த தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்க்கை பற்றியும் சிந்தித்தார். பன்னெடுங்காலமாக பார்ப்பனர்களால் நம்மவர்கள் கல்வி கற்க முடியாத நிலையைக் கண்டார். ஆங்கில மொழியைப் படித்து பார்ப்பனர்கள் பதவி,பட்டங்களைப் பெறுவதையும் கண்டார். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஆங்கிலத்தைப் படியுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதே நேரத்தில் இந்த உலகப்போட்டி போராட்டத்தில் போர்க்கருவியாக மாற தமிழுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தார். செயல்பட்டார்.அது பற்றி மக்களிடம் பேசினார்.ஆங்கிலம் இப்படி வேகமாக பரவுதற்கு ஒரு காரணம், மிகச்சுருக்கமாக உள்ள 26 எழுத்துக்கள் என்பதனை எடுத்துக்காட்டினார். அதனைப் போல தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தைக் குறைக்க வேண்டும் என்றார். எப்படி குறைப்பது என்பதற்கு வழி காட்டினார்.தனது விடுதலை நாளிதழில் தான் சிந்தித்து போலவே எழுத்துக்களை குறைத்து அச்சிட்டார்.இன்று எல்லோராலும் தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழ் மொழிக் கட்டுரை .இதனைக் கணினியில் அடித்துக்கொண்டிருக்கிறேன், விடுதலையில் நீங்கள் தமிழில் படிப்பதற்காக. ஆனால் எழுத்துக்களை அடிக்கும் கணினி கீ போர்டில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில எழுத்துக்களில் நான் டைப் செய்ய அது யுனிக்கோடு தமிழாக எனது கணினித் திரையில் பதிவாகிறது. 26 ஆங்கில எழுத்துக்கள், சில சிறப்பு குறியீடுகளை வைத்துத்தான் 247 எழுத்துக்கள் உள்ள தமிழை நான் மென்பொருள் துணையோடு கணினியில் டைப் செய்து கொண்டிருக்கிறேன். இதனை கணினி என்பது வருவதற்கு முன்பே ஆங்கில எழுத்துக்கள் போல குறைவான எழுத்துக்கள் இருந்தால் டைப் செய்ய ஏதுவாக இருக்குமே,அச்சிட ஏதுவாக இருக்குமே என நினைத்தவர் பெரியார்.எழுதியவர் பெரியார்.காரணம் பெரியாருக்கு மொழி என்பது உலகப்போட்டி போராட்டதிற்கான ஒரு கருவி . மற்றவரல்லாம் தமிழைத் தெய்வமே எனப் பாடிக்கொண்டிருந்தபோது அதனைக் கருவியாக நினைத்தவர் பெரியார்.மற்றவரெல்லாம் தெய்வத்தால் பாடப்பட்ட மொழி , தெய்வத்தால் கொடுக்கப்பட்ட மொழி தமிழ் என்றுபோற்றிக்கொண்டிருக்கும்போது, நம்முடைய சாதாரண மனிதர்கள் வளம் பெறுவதற்கு ,நலம் பெறுவதற்கு ,உயர்வு அடைவதற்கு நமது தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனச் சிந்தித்தவர் பெரியார்.அதனால்தான் சொன்னார் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களைக் குறையுங்கள் என்று சொன்னார்.
தமிழ் மொழி இன்று நமது மக்களின் உயர்வுக்கான கருவிக்கான கருவியாகப் பயன்படுகின்றதா? தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விடுங்கள்.தமிழர் தலைவர் அவர்களின் காலமான நிகழ் காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வும் தமிழ் மொழியில் இல்லை...மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.ஸி.பள்ளிகளில் தமிழ் இல்லை. விருப்பப்பாடமாக இருந்த தமிழ் இன்றைக்கு பள்ளி விடப்பட்டு மாணவ மாணவிகள் எல்லோரும் போன பிறகு விருப்பம் இருப்பவர்கள் இருந்து படிக்கும் மொழியாக இருக்கிறது.ஆனால் செத்த மொழியான சமஸ்கிருதம் அந்தப்பள்ளிகளில் விருப்ப பாடமாக இருக்கிறது.செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு ,செம்மொழித் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுக்க மறுக்கிறது. ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட 26 பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நிலைத் தேர்வில்(PreliminaryExamination ) தமிழில் வினாத்தாள் கிடையாது, வினாத்தாள் ஆங்கிலத்திலும் இந்தியில் மட்டும்தான் உள்ளது. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இந்தியில் வினாத்தாள் உண்டு.இந்தியாவின் மிக முக்கிய துறைகளில் முக்கிய பொறுப்பிற்கு நடக்கும் இந்தத்தேர்வின் விடையளிப்பதில் நேரம் மிக முக்கியம். ஆங்கிலத்தில் புரியாத சில வினாக்கள் தாய்மொழியில் கேட்கப்படும்போது உடனடியாகப் புரியும். பதிலளிக்கும் வாய்ப்பு கூடுதலாக உண்டு. அது இந்தியாவில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இருக்கிறது.தமிழை அல்லது மற்ற இந்திய மொழிகளை,எடுத்துக்காட்டாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், அஸ்ஸாமி போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இல்லை. இந்த இடங்களில் தமிழ் மொழி அரசு எந்திரத்தில் கருவியாகப் பயன்படுத்தப்படவில்லை, இன்றைக்கு கூட கட்செவியில்(வாட்ஸ் அப்) ஒருசெய்தி வந்திருக்கிறது.தமிழில் எழுதிக் கொடுக்கும் மனுவை இரயில்வே ஊழியர் வாங்க மறுக்கிறார்.தமிழ் தெரியாது என்று சொல்கிறார். தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமல் அரசு ஊழியராக எப்படி வேலை பார்க்கிறீர்கள் எனப் பயணி கேட்கிறார்.இதுதான் இன்றையை நடைமுறை. தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும் மொழியாக (கருவியாக) இல்லை. தந்தை பெரியார் ஆட்சி அதிகார மொழியாக தமிழ் கருவியாகப் பயன்படுவதற்கான வழிகளைச்சொன்னார்.இறுதி மூச்சுவரை அதற்காகப் போராடினார்.
மொழி பற்றிய தந்தை பெரியாரின் பார்வை என்ன? தமிழ் மொழி பற்றிய தந்தை பெரியாரின் பார்வை என்ன என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள முதல் அத்தியாயத்தை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.கட்செவி,முக நூல் வழியாக இந்தக் கருத்துக்களைப் பரப்பிட வேண்டும்.'பகுத்தறிவுப் பகலவனின் முன்னோக்குப் பார்வையில் ,மொழி ஒரு வணங்கப்படுகின்ற ஒன்றல்ல,மாறாக,பயன்பட வேண்டிய போர்க்கருவி -புதுமை, புத்தாக்கம். அது காலத்தின் தேவைக்கேற்ப மாறிக்கொண்டே இருந்தால்தான் போரில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். பண்பாட்டுப் படையெடுப்பு என்ற போரின் ,முனை மழுங்காத ஆயுதமாக ,தமிழை தந்தை பெரியார் பல்வேறு காலக் கட்டங்களில் கூர்மைப்படுத்தினார் ...."என 'நூலைப் படிக்குமுன் ...!'என தலைப்பிட்டு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்துள்ள முன்னுரை தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.முனைவர் அவ்வை நடராசன் அவர்களின் உணர்வுரை உணர்வூட்டுவதாகவும் அறிவூட்டுவதாகவும் நூலின் நுழைவு வாசலில் உள்ளது.
முழுமையாக தந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த நூல் அமைந்துள்ளது.பொருளடக்கம் முழுவதும் தமிழுக்காக தந்தை பெரியார் என்ன என்ன செய்தார் என்பதனை சுட்டுகிறது.ஒவ்வொரு தலைப்பும் என்னை எழுது , என்னை எழுது என அழைப்பது போல அத்தனை கருத்துச்செறிவோடு அமைந்துள்ளன.பேச்சுக்கலையில் தந்தை பெரியார் தொண்டால் ஏற்பட்ட மாற்றங்கள்,தமிழிசையில் ஏற்பட்ட மாற்றங்கள்,சமஸ்கிருத ஆதிக்கத்தை,இந்தி நுழைவதை தந்தை பெரியார் எப்படி தடுத்தார் என்பதனை, பார்ப்பன விழாக்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரியார் எப்படி தமிழர் விழாக்களை அடையாளம் காட்டினார் என்பதனை,தமிழ்ப் பண்டிதர்கள் பரணியில் இருந்த திருக்குறளை எளிய மனிதர்களிடம் எப்படி பெரியார் கொண்டுவந்து சேர்த்தார் என்பதனை,படைப்பாளராய்,தொலை நோக்கு கருத்தாளராய், ஆய்வாளராய், பதிப்பாளராய், பத்திரிக்கை ஆசிரியராய் எப்படியெல்லாம் தமிழுக்கு தந்தை பெரியார் தொண்டாற்றினார் என்பதையெல்லாம் விளக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்கு ஓர் அரும் வாய்ப்பாய் இந்த 'தமிழுக்கு என்ன செய்தார் ?பெரியார் ' என்னும் இந்த நூல் நமக்கு தமிழர் தலைவர் அவர்களால் கிடைத்திருக்கிறது.ஒவ்வொரு கட்டுரை மட்டுமல்ல, இணைப்புக் கட்டுரைகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. வாங்காதவர்கள் இந்த நூலினை வாங்கிப் படியுங்கள். வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் படியுங்கள்.மற்றவர்களிடமும் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.படித்தவுடன் 'தமிழுக்கு தந்தை பெரியார் செய்த தொண்டை சொல்ல சொல்ல இனிக்குதடா .... ' என்று படித்தவர்களும் சொல்வார்கள்.
No comments:
Post a Comment