Wednesday, 12 February 2020

'ஜாதியற்ற கேரளம் ' என்னும் முழுக்கத்துடன் நடைபெற்ற கேரளா யுத்திவாதி சங்கத்தின் 31-வது ஆண்டு மாநில மாநாடு

செவ்வாய், 11 பிப்ரவரி 2020 

  .


கேரளா யுக்திவாதி சங்கத்தின் 31ஆவது மாநில மாநாடு கேரள மாநிலம் ஆலப்புழா நகரில் டிசம்பர் 2019 - 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் மதமற்ற கேரளம், ஜாதியற்ற கேரளம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்றது.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனை வர் வா.நேரு மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
27ஆம் தேதி காலையில் நடைபெற்ற சார்பாளர்கள் கூட் டத்திற்கு பின்பு கேரளா யுக்திவாதி சங்கத்தின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் கே.என். அணில் குமார் அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டிய கேரளா மாநில நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் அய்சக் அவர்கள் வராத நிலையில், மாநாட்டின் தொடக்க  உரையாற்றும்படி பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வா. நேரு தொடக்க உரையாற்றினார்.
அவர் தனது உரையில்: இந்த 31-ஆம் ஆண்டு கேரளா யுக்தி வாதி சங்கத்தின் ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற ஆண்டு கேரளா தொடுபுழாவில் திரு. நரேந்திர நாயக், கே.எஸ்.பகவான் அவர்களோடு சேர்ந்து 30-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு எங்களது பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் அழைக்கப்பட்டு , அவர்கள் வர இயலாத நிலையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
எங்களது தலைவர் டாக்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்க மனித நேய சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை விருதுகளும் , விழுப்புண்களும் ஒன்றுதான். அவரைக் கொலை செய்ய பல முறை முயற்சி நடந்திருக்கிறது. பல விருதுகளும் வழங் கப்பட்டிருக்கிறது. இருதய அறுவைச்சிகிச்சைக்களுக்குப் பின்னும் அயராமல் உழைக்கும் தந்தை பெரியாரின் முதன் மைத் தொண்டர் எங்களை வழி நடத்தி சென்று கொண்டி ருக்கிறார். எனவே அந்த இயக்கத்தின் சார்பாக கலந்து கொள்வதிலே மிக்க மகிழ்ச்சி.
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது
கேரளா யுக்திவாதி சங்கம் தொடர்ந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. இப்போதுதான் தமிழகத்தில் பகுத்தறி வாளர் கழகத்தின் பொன்விழா தொடக்க மாநாடு விருது நகரில் நடைபெற்றது. உங்கள் இயக்கத்தின் சார்பாக தோழர் கள் கலந்து கொண்டனர். இன்று கேரளாவில் நடைபெறும் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்கள் எதிர் நீச்சல் போட்டு உண்மைகளை மக்களுக்கு உணர்த்தியவர். அந்த வழியில் கேரளா யுக்தி வாதி சங்கம் உண்மையை உணர்த்துவதற்காக, மகரஜோதி எப்படி மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்னும் உண்மையை உணர்த்துவதற்காக, மகர ஜோதி தோன்றும் நேரத்திலேயே மேலும் சில ஜோதிகளை மலை உச்சியிலிருந்து காட்டிய வர்கள். அதற்காக கடுமையாக தாக்கப்பட்டவர்கள். உண் மையை உணர்த்திய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். அதனைப்போல தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரி மையை சட்டமாக்கி, முதலில் செயல்முறைப் படுத்தியது கேரளா அரசு.எங்களது மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்....
மனித உரிமை போராட்டம்
மனித நேயத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் நாம்.தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த அளவில் மனித நேயத்தின் அடிப்படையில்தான் அவரது கொள்கைகளும் போராட் டங்களும் அமைந்தன.சமூக நீதி, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என அவரின் அனைத்து கொள்கை களும் மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்தவை. கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டம் மனித உரிமைப் போராட்டம். நீங்கள், கேரள மக்கள் அறிந்த போராட்டம்.தெருவில் ஆடு நடக்கலாம், மாடு நடக்கலாம், பன்றி நடக் கலாம், ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக்கூடாதா எனக் கேள்வி கேட்டு பெரியார் தலைமையில் நடந்த போராட்டம்.அது மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்த போராட் டம்.
விதவைத் திருமணங்கள்
பெண்ணுரிமைக்காகப் பெரிதும் போராடியவர் தந்தை பெரியார். ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இருந்தால் பெண்ணைப் படிக்கவையுங்கள் என்றார்.7,8 வயது என இருந்த விதவைக்குழந்தைகளைப் பார்த்து மனம் நொந்தார். விதவைத் திருமணங்களை நடத்திவைத்தார்.பெண் உரிமை என்று வருகின்றபோது நீங்கள் உங்கள் மனைவிமார்களை மட்டும் வைத்துக்கொண்டு யோசிக்காதீர்கள். உங்கள் தாயை, சகோதரியை,மகளை நினைத்துக்கொண்டு பெண் உரிமையை யோசித்துப்பாருங்கள் என்று பளிச்சென்று புரியும்படி சொன்னவர் பெரியார்.பெண் உரிமை என்று பேசப்படும் இடமெல்லாம் பெரியார் நினைக்கப்படுகிறார்.
மதம் மனிதத்திற்கு எதிரானது
மதம் மனிதத்திற்கு எதிரானது. இடி தாங்கியை கண்டு பிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் மதவாதிகளால் கண்டிக்கப் பட்டார். இந்த இடத்தில் இடி விழ வேண்டும் என்பது கடவுள் ஏற்படுத்துவது, நீ ஒரு கருவி கண்டுபிடித்து அதனைத் தடுப்பதா எனக்கேட்டார்கள், தேவாலயத்தின் மூலம் கண்டித்தார்கள். வெறி நாய்க்கடி என்பது கொடிய நோய். வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயில் பாஸ்டர் கண்டிக்கப்பட்டார். உலகம் உருண்டை என்று சொன்ன புரூனோ அவரது புத்தகங்களோடு சேர்த்து எரிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். இப்படி வரலாறு முழுக்க அறிவியலுக்கு எதிராக மதவாதிகள் நடந்து கொண்டதை நாம் பார்க்கமுடியும். அறிவியல் மாநாடுகளிலேயே நமது நாட்டில் அஞ்ஞானத்தை விதைக்கிறார்கள். ஆனால் நாத்தி கம் என்பது, பெரியாரியல் என்பது கேள்வி கேள் என்பது. திருக்குறள் சொல்வது போல,
'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பதனைத் தொடர்ந்து சொல்பவர்கள் நாம்.
உலகத்தில், மதம், கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுப்பதற்காக ஒவ் வொரு மதத்தைச்சார்ந்தவர்களும் தங்கள் மதத்தைச் சார்ந்த வர்களுக்கு வெறியூட்டுகிறார்கள். நாம், நம்மைப் போன்ற அமைப்புகள் அறிவை ஊட்டுகிறோம். யோசிக்க சொல்கி றோம். அறிவியல் வழியில் நடக்கச்சொல்கின்றோம். அந்த வேலையை நாம் தொடர்ந்து செய்வோம். சாதாரண மக்களி டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். சாமியார்களின் பொய்களை அம்பலப்படுத்துவோம். இனி வரும் உலகம் நமக்கான உலகம். மனித நேயத்தில் அமைந்த உலகம் .அது அமைய நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். மாநாடு சிறக்கவும், புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக் களையும் கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்." என்று உரை யாற்றினார்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் உரையாற்றினார். மேலும் முன்னாள் அய்அய்டி மாணவர், உலகளாவிய சிந்தனையாளர் தொழில் முனைவர் சிறந்த கருத்துரையாளர் முரளி குமார், கேரள யுக்தி வாதி சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர் கலந்து கருத்துரை ஆற்றினர். மதிப்பிற்குரிய முரளி குமார் கேரள மக்கள் மிக்க வளர்ச்சியடைந்துள்ளனர் என்றாலும் சமூக மாற்றம் மந்தப்பட்டும் நிலையற்றதாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவிவருவதாக பதிவிட்டார். மக்களின் வளர்ச்சி குழுக்களாக பிரிந்திருப்பதால் ஒட்டு மொத்த சமூக மாற்றம் நிகழ்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகநூல் குழுக்களில் இயங்குபவர்கள் அந்த எல்லைக்குள்ளே அடங்கிவிடுவதால் சமூக மாற்றத்தின் தாக்கம் திசை மாறிப் செல்கிறது என்று பதிவிட்டார். மேலும் இந்திய விஞ்ஞானிகள் மதப்பித்து பிடித்து பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டிகளாக வாழ்வதை பதிவு செய்தார்.தொடர்ந்து மதிப்பிற்குரிய கேரள யுக்தி வாதி சங்கத்தின் புரவலர் கலாநாதன் உணர்ச்சிகரமான நீண்ட சொற்பொழிவு ஆற்றினார். மானமிகு அ.தா.சண்முகசுந்தரம் காலையிருந்து மலையாளத்தில் அனைவரும் பேசியதால்   மேலும் நீண்ட சொற்பொழிவுக்கிடையில் மாற்றம் வேண்டி எளிய ஆங்கி லத்தில் நிதானமாக கருத்துரை ஆற்றினார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபுலே அவர்களின் தொண்டினை நினைவுபடுத்தும் முகமாக அறிமுக உரை யாற்றிவிட்டு காலையிலிருந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசிய கருத்துக்களை நினைவூப்படுத்திவிட்டு வந்திருக் கின்ற தோழர்கள் செய்ய வேண்டிய அடுத்த கட்ட கடமை களை தொகுத்துரைத்தார். குறிப்பாக உணர்ச்சிகரமான பேச் சுக்களுக்குப் பின்னால் குடும்பங்களை பகுத்தறிவாளர்களாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய விஞ்ஞானிகள் தங்கள் நிலையை மாற்றுவதன் கட்டாயம் பற்றி எடுத்துரைத்தார். பதவி மோகம், அரசியல் சார்ந்த பதவி வழங்கல் போன்றவற்றால் இந்திய விஞ்ஞானிகள் மாட்டிக்கொண்டு அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் வழியில் நடப்பதனை எடுத்துரைத்தார். இன்னும் நூறு வருடங்களுக்கு நாத்திகவாதிகள் விஞ்ஞான கழகங்களின் தலைவர்கள் ஆக முடியாது என்பதை எடுத்துரைத்தார்.மனிதன் சமுதாய விலங்கு என்பதையும் சார்புவாழ்வின் தத்துவத்தையும் எடுத்துரைத்தார். உடலியலின் மரபுவழி கோட்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்.
கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பேரணி, ஆலப்புழா படகு வீட்டில் கேரளா யுக்திவாதி சங்கத்தினர்  படகு சவாரியோடு கேள்வி-பதில் என வெகு உற்சாகமாகவும், எழுச்சியாகவும் மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாள மனோராமா போன்ற பத்திரிக் கைகள் படங்களோடு செய்திகளை மிக விரிவாக வெளியிட்டதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.
நன்றி : விடுதலை 11.02.2020



No comments: