Sunday, 2 February 2020

விட்டு விடுதலையாகி......வா.நேரு


விட்டு விடுதலையாகி
வா(ங்க) நேரு
என்று முக நூலில்
அழைத்திருக்கிறார்
அய்யா சு.அறிவுக்கரசு.....
அதனை ஆமோதித்து
வழி மொழிந்திருக்கிறார்
அய்யா பெல் ஆறுமுகம்...

விட்டு விடுதலைதான்
முப்பத்தி ஆறு ஆண்டுகள்
பணியாற்றி அதில்
4 ஆண்டுகள் காந்தி கணக்கில் போக
மீதம் 32 ஆண்டுகள் நேருவின் கணக்கில்
பணி முடித்து விட்டு விடுதலையாகி
வந்ததென்னவோ மகிழ்ச்சிதான்
என்றாலும் இனம் புரியாத
சோகம் மனதிற்குள் ஓடுகிறது...


இரண்டு மாதங்களாக சம்பளம் கூடக்
கொடுக்காமல்...
பணி நிறைவன்று
எந்தப் பணமும் பணிப்பலனும் கொடுக்காமல்
ஒருவர் இருவரல்ல
எழுபத்து எட்டு ஆயிரம் ஊழியர்களை
விருப்ப ஓய்வு எனும் பெயரில்
அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது...

அதிசயமாகத்தான் இருக்கிறது...
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...
வெகுண்டெழுந்து போராடும் சென்ற
தலைமுறையைச்சார்ந்தவர்கள்தான்
விருப்ப ஓய்வில்
எந்த வித எதிர்ப்பும் இன்றி
எப்படி இவ்வளவு பேரும் விருப்ப ஓய்வில்.

காட்டில் மேட்டில் கம்பம் நட்டு
மழையில் குளிரில் கம்பி இழுத்து
அன்றைய தொலைபேசி சேவையை
அளித்தவர்கள் இவர்கள்...
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில்
அன்றைய அரசுகள்
காட்டிட்ட அக்கறையால்
ஆலமரமாய் வளர்ந்த
பி.எஸ்.என்.எல். வளர்ச்சியில்
தங்களையும் பிணைத்துக்கொண்டு
தாங்களும் வளர்ந்து
நிறுவனத்தையும் வளர வளர வைத்தவர்கள்...
இன்றைக்கு விருப்ப ஓய்வில் ...

முடியாதவர்கள் அல்ல, இயலாதவர்கள் அல்ல..
எதனையும் அறியாதவர்கள் அல்ல
அரசு தருவதாகச்சொன்ன
வாக்குறுதிகளால் மட்டும்தானா
இத்தனை பேர் விருப்ப ஓய்வு?...
இல்லை ! இல்லை !

அரசு மாறியபோது அனைத்துமே
மாறுவதை மெல்ல மெல்ல உணர்ந்தார்கள்...
தனியாருக்காக அரசு நிறுவனம்...அரசாலே
மெல்ல அழிக்கப்படுவதை உணர்ந்தார்கள்...

மின் கட்டணம் கட்டாமல் அரசாங்கமே
தொலைபேசி சேவையை
முடக்கி வைக்கும் கொடுமை ஏன்?ஏன்?..
என மனதிற்குள் வினவினார்கள் .....
எல்லோருக்கும் கொடுத்தபின்பும்
அரசு நிறுவனத்துக்கு 4ஜி
தர மறுப்பது ஏன் எனப்புலம்பினார்கள்...
எட்டாயிரம் கோடி பத்தாயிரம் கோடி
எனக் கடன் பெற்று
பணக்காரன் பலபேர் நாட்டை விட்டே
பறந்து செல்வதைப் பார்த்தவர்கள்
அரசு நிறுவனத்திற்கு அரசு வங்கிகள்
கடன் கொடுக்கக் கூடாது எனும்
அரசின் கட்டளையைப் பார்த்து
பார்த்துத் திகைத்தார்கள்

என்று வரும் போனமாதச்சம்பளம்
என ஊழியர்களைப்  புலம்ப விட்ட
நரித்தனத்தை நன்றாகவே உணர்ந்தார்கள்...
பழுதினைச் சரி செய்ய ஆட்கள் இல்லை
சென்று வர வாகனம் இல்லை
தற்காலிக ஊழியராய்
ஆழக்குழி தோண்டி தடம் பதிக்கும்
தோழனுக்கு ஏழு எட்டு மாதங்களாய்
ஊதியம் இல்லை....அட!
கழிப்பறையைக் கழுவிச்சுத்தம் செய்யும்
தோழியருக்கும் ஏழெட்டு  மாதங்களாய்
ஊழியம் இல்லை..


கொலை செய்ய முடிவெடுத்தவன்
மெல்ல மெல்ல கொல்லச்செய்யும்
கொடும் நஞ்சை அளிப்பது போல
அரசே கொடுக்கும் கொடும் நஞ்சை
பார்த்துப் பார்த்துச் சலித்தவர்கள்
கூட்டமாக வேடனுக்கு எதிராக
பறந்து சென்ற புறாக்கள் போல
ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கிறார்கள்..
எங்களின் சம்பளத்தால்தானே
இழப்பு என்றாய் அரசாங்கமே...
இலாபத்தைக் காட்டு வருவாயைக் கூட்டு
என அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்....

                                                                                வா.நேரு,03.02.2020



?

No comments: