Monday, 23 March 2020

அண்மையில் படித்த புத்தகம்: பாரதப்பாத்திரங்கள்...சு.அறிவுக்கரசு

அண்மையில் படித்த புத்தகம்: பாரதப்பாத்திரங்கள்
நூல் ஆசிரியர் : சு.அறிவுக்கரசு
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை-05 9790706549/9790706548
முதல் பதிப்பு : ஜீன் -2019
மொத்த பக்கங்கள் : 59 பக்கங்கள்…விலை ரூ 60.00

திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு,வெளிவந்துள்ள சிறிய புத்தகம்..ஆனால் எழுப்பும் கேள்விகளால் மிகக் கனமான புத்தகம்.

மகாபாரதத்தில் வரும் பத்து பாத்திரப்படைப்புகள், வியாசன்,பாஞ்சாலி,பீஷ்மன்,தர்மன்,குந்தி,துரோணன்,பரசுராமன்,கர்ணன்,துரியோதனன்,கிருஷ்ணன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு,உள்ளது உள்ளபடி என்னும் அடிப்படையில்  மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகளை எழுப்பி, வாசிப்பவர்களை விடை சொல்லச்சொல்கிறார்.மேடையில் பேசும்போதே நிறைய அறிவார்ந்த கருத்துக்களை சொல்லும் நேரத்தில்,அதனோடு சேர்த்து சில செய்திகளை நக்கலாகவும் சேர்த்து சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர் அய்யா அறிவுக்கரசு அவர்கள். அந்த நக்கல் இந்தப் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறது,அதனால் நிறைவாக இருக்கிறது.

கதைகள் வெறும் கதைகள் என்று மட்டும் நம்பப்பட்டால், நமக்கு பிரச்சனையில்லை. ஆனால் இதிகாசக்கதைப் பாத்திரங்களை கடவுளாக்கி, அந்தக் கடவுள் இந்த இடத்தில்தான் பிறந்தார் என்று சொல்லி கலவரம் ஆக்கும் இந்தச்சூழலில் இம்மாதிரியான புத்தகங்கள் மிக அவசியத்தேவையாகிறது.வாராது வந்த மாமணியாய் வந்த சேது சமுத்திரத்திட்டத்தை .சிலரின் சூழ்ச்சியால், ராமர் கட்டிய பாலம் என்னும் அயோக்கியத்தனமான கூற்றால் அந்தத் திட்டத்தை இழந்து நிற்கிறோம்.இப்படிப்பட்ட சூழலில்,மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரமான கிருஷ்ணன் இன்று கடவுளாக கொண்டாடப்படும் நிலையில் கிருஷ்ணன் உள்ளிட்ட அத்தனை பாரதப் பாத்திரங்களையும் கேள்விக்கணைகளால் துளைக்கும் புத்தகம்தான் இந்தப்புத்தகம்.காலத்தின் தேவையாக வந்திருக்கிறது.



முதல் பாத்திரம் வியாசன்..." பாரதக்கதையைப் பாடியவன் வியாசன். மிகவும் கருப்பாக இருந்தவன்.அதனால் துவைபாயனன் என்பதை கிருஷ்ண துவைபாயனன் என்றாக்கிவிட்டனர். அவன் பாடப்பாட வினாயகன்(பிள்ளையார்) தன் தந்தத்தை ஒடித்து எழுது கோலாக்கி எழுதினான் என்கிறார்கள்.எங்கே எழுதினான் என்றால் இமயமலையின் என்கிறார்கள்.எவ்வளவு முட்டாள்தனமான கற்பனை " என்றுதான் இந்தப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் வியாசன் பற்றி ஆரம்பிக்கிறது. இந்த முட்டாள்தனமான கற்பனையை எதற்காக செய்தார்கள் என்பதனை முன்னுரையிலேயே அய்யா அறிவுக்கரசு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.(வாங்கிப் படிப்பதற்காக விட்டிருக்கிறேன்)


பாஞ்சாலியைப் பற்றிச்சொல்லும்போது ஐவருக்கும் அவள் மனைவியான கதையைச்சொல்கிறார்.சொல்லிவிட்டு 'தின்னும் பண்டத்துக்குப் பொருந்தும்.பெண்டாட்டிக்குமா? சே, என்னய்யா கலாச்சாரம்? அநாச்சாரம்....இந்த அசிங்கத்திற்கு ஆதாரக்கதைகளை கட்டி உலவ விட்டிருக்கிறார்கள் பாரதப்புத்திரர்கள். பகவானிடம் பாஞ்சாலி 'பதிம்தேஹி' என்று கேட்டாளாம். புருஷனைக்கொடு என்று கேட்டாளாம்.பகவான் காதில் விழுந்ததோ என்னவோ என்று எண்ணி மீண்டும் கேட்டாளாம். அய்ந்து முறை கேட்டாளாம்.அய்ந்து கணவனைக் கொடுத்தானாம் பகவான். பகவானுக்கு அறிவு வேண்டாமா? கேட்டவள் ஒருத்தி எனும் போது ...ஒரு புருஷன் போதுமே என்று பகவானுக்குத் தெரிந்திருக்க வேண்டாமோ ? ' ...நியாயமான கேள்விக்கு பாரதபுத்திரர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

தர்மன் என்னும் பாத்திரம் மகாபாரதக்கதைப்படி என்னென்ன பாதகம் எல்லாம் செய்தது என்பதனை புத்தக ஆசிரியர் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார்.கதைப்படி சொர்க்கத்தில் இடம் பெற்றான் துரியோதனன்,நரகத்தில் இடம் பெற்றான் தர்மன். தர்மனா? துரியோதனா? யாரை விரும்பிவீர்கள் எனக்கேட்டிருக்கிறார். உறுதியாக துரியோதனன்தான். கதைப்படியே துரியோதனன் என்னும் பாத்திரப்படைப்பில் 'எடுக்கவோ,கோர்க்கவோ உட்பட ' அவனது  நல்ல குணங்களை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். அதனைப்போல கர்ணன் என்னும் பாத்திரம் எவ்வளவு உயர்வானது என்பதனையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.

குந்தி என்னும் பாரதப்பாத்திரத்தில் அவளது கணவன் பாண்டு' எந்த முனிவனையாவது புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொள் 'என்றான். அவனே அப்படிப்பெறப்பட்டவன்தான் என்னும் கதையைச்சொல்கிறார்." பாண்டுக்கு மகன்கள் அய்ந்துபேர்.பாண்டவர்கள்.பஞ்ச பாண்டவர்கள். அய்வரும் அப்பனுக்குப் பிறக்காதவர்கள்.வேற்றானுக்குப் பிறந்தவர்கள்.பாரதக்கலாச்சாரத்தில் இதற்கு ஷேத்திரஜா என்று பெயர். வனஜா என்றால் வனத்தில் பிறந்தவள்.கிரிஜா என்றால் மலையில் பிறந்தவள். ஷேத்ரஜா என்றாள் ஊரானுக்குப் பிறந்தவள் ' என்று பெயர்களுக்கான காரணங்களை விளக்கமாகவே குறிப்பிட்டு கர்ணனுக்கு எப்படி எல்லாம் அவனது அம்மா குந்தி துரோகம் செய்கிறாள் என்பதனைக் குறிப்பிடுகின்றார்..

துரோணன் என்னும் கதாபாத்திரம் பார்ப்பனர் கதைப்படி. 'ஆரியம் சத்திரியனைப் பயன்படுத்தி சத்திரியனைப் பழிவாங்கியது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு இடையில் இருந்து இரத்தம் குடித்தது நரி ' என்று குறிப்பிட்டு, ஏகலைவன் கதையையும் கூறி துரோணன் என்னும் கதாபாத்திரம் உணர்த்துவது 'ஆட்கள் அழிவது தீர்வாகாது; தத்துவம் தீர்த்துக்கட்டப்படவேண்டும் ' என முடிக்கின்றார்.

பரசுராமன் என்னும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதனை ' பார்ப்பனன்.மற்ற ஜாதியாரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன்.சத்திரியர்களையே பூண்டோடு அழிக்கவேண்டும் என்றவன்.முயன்றவன் ' எனக்குறிப்பிட்டு அந்தப் பாத்திரப்படைப்பு எப்படி பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் மேல் விஷத்தைக் கக்கியது என்பதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்,

கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரம் எவ்வளவு நயவஞ்சகம் செய்பவனாக, அயோக்கினாக படைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் பட்டியலிடுகின்றார். 'யுத்த தர்மம் மீறுவதும்,ஜாதி தர்மம் காப்பதும் கடவுள் செய்கிற காரியமா ?.'தன் மக்கள் நூறு பேரையும் இழந்து அழுத காந்தாரி விட்ட சாபம் 'அயோக்கியனே,திருடனே,வஞ்சகனே 'என்றெல்லாம் திட்டினாள்.சாபமும் இட்டாள்.உன் மனைவியை இழந்து  ,உறவுகளை இழந்து,உன் குலத்தினரை இழந்து ,மீதமிருப்போர் ஒருவருக்கொருவர் அடித்து மாள்வர் என்ற சாபம் பலித்ததே!
வேடனால் வேட்டையாடப்பட்ட வேடனைப்போல நீயும் சாவாய் என அவனுக்குச்சாபம் .ஜராசந்த் விட்ட அம்பு கணுக்காலில் தைத்துச்செத்தானே கடவுள் கிருஷ்ணன் !கடவுள் சாகுமா? சாவு கடவுளுக்குமா? 'எனும் நேர்மையான கேள்வியை எழுப்புகிறார் அய்யா அறிவுக்கரசு. பக்தர்கள்தான் பதில் கூறவேண்டும்.

" ஜாதி/வர்ணம் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்குடன் பாடப்பட்ட பாரதக்கதையின் தீய எண்ணம் நிறைவேற உதவியவர்களில் ஒருவன் பரசுராமன். மற்றவன் கிருஷ்ணன்.மற்ற பாத்திரங்கள் "எக்ஸ்ட்ரா"க்கள் என்று குறிப்பிடுகின்றார். அவாளின் நோக்கத்திற்காகப் பாடப்பட்டது மகாபாரதம்,அதற்காக இடையில் செருகப்பட்டது கீதை என்னும் உண்மை நமது மக்களின் மூளையில் ஏறவேண்டுமே..இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று தெரியவில்லை,அதற்கு. 

.
தந்தை பெரியார் எழுதிய இராமயணப்பாத்திரங்கள் என்னும் நூல் மிகப்புகழ் வாய்ந்தது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருக்கும் புத்தகம்.2018-ல் கேரளா மாநிலம் தொடுபுழாவில் நடைபெற்ற கேரள யுக்திவாதி சங்கத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனக்கு முன்னால் பேசிய கர்நாடகப் பகுத்தறிவாளர் கே.எஸ்.பகவான் முழுக்க முழுக்க தந்தை பெரியார் எழுதிய இராமயணப்பாத்திரங்கள் என்னும் புத்தகத்தைப் பற்றித்தான், அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பற்றித்தான் பேசினார். அந்த நூல் இன்றைக்கு இந்தி,மலையாளம், ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கு எனப்பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இலட்சம் பேரைச்சேர்ந்தடைந்துள்ளது.

இராமாயணப்பாத்திரங்களை தந்தை பெரியார் அம்பலப்படுத்தியுள்ளது போல ,அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் பாரதப் பாத்திரங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.சிறு புத்தகம்தான் இராமாயாணப்பாத்திரங்கள் என்னும் புத்தகம் போல. ஆனால்  அதனைப்போலவே மிக வலுவான கருத்துக்களைக்கொண்டிருக்கும் புத்தகம் இந்த 'பாரதப்பாத்திரங்கள் ' என்னும் புத்தகம். நாமும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச்சொல்லவேண்டும். தெரிந்த பிற மொழி நண்பர்களிடம் சொல்லி மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் வெளியிடச்சொல்லவேண்டும்.பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டமான பலூன் களை உடைப்பதற்கு கனமான ஊசியாகப் பயன்படும் புத்தகம் இந்தப்புத்தகம்.பார்ப்பனர் அல்லாதவர்களை வைத்தே மகாபாரதக்கதைக்கு 'வெண்முரசு' வீச பார்ப்பனர்கள் முயலும் இந்தக்காலகட்டத்தில் அந்த முரசு யாருக்கானது என்பதனை 97 சதவீத மக்கள் புரிந்துகொள்ள இந்தப்புத்தகம் உறுதியாக உதவும்.

2 comments:

kowsy said...

அற்புதமாக இருக்கின்றது. இப்புத்தகத்தை எங்கே பெற்றுக்கொள்ளலாம்

முனைவர். வா.நேரு said...


மிக்க நன்றி.படிக்க வேண்டிய, பரப்ப வேண்டிய புத்தகம். புத்தகம் பெற .சென்னையில் உள்ள நாம் தமிழர் பதிப்பகத்தின் செல்பேசி எண்கள் 9790706549/9790706548....