Monday 4 January 2021

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்....ஈரோடு தமிழன்பன்

 


https://tinyurl.com/y79sywfs                                 நூல் மதிப்புரை

   நூல் : பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
   நூல் ஆசிரியர் : ஈரோடு தமிழன்பன்
   வெளியீடு     : சண்முகம் பெரியசாமி,நியூயார்க்,அமெரிக்கா.
   விற்பனை உரிமை : விழிகள் பதிப்பகம்,சென்னை-41.
   மொத்தபக்கங்கள் :196,விலை ரூ 160.            

 நெருப்புத்துண்டாய் தமிழ் உணர்வை,பகுத்தறிவைப் பற்றவைக்கும் புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படித்ததுண்டு.படித்ததை உள்ளத்தில் ஏற்றியது உண்டு.உள்ளத்தில் ஏற்றிய உணர்ச்சிமிகு கவிதையை மற்றவர் மனதில் பதியும்வண்ணம் எடுத்துச்சொன்னது உணடு. ஆனால் அந்த மாபெரும்  புரட்சிக்கவிஞரை நேரில் நான் பார்த்தவனில்லை. அவரோடு பேசியவனில்லை.என்னைப்போன்றுதான் இந்த மதிப்புரையை வாசிக்கும் பலரும். ஆனால் அந்தப்புரட்சிக்கவிஞரை அருகில் இருந்து பார்த்தவர்,அவரின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை உடனிடருந்து கேட்டவர், அவரின் கிண்டலை அருகே இருந்து சுவைத்தவர் அந்த அனுபவங்களைச் சொன்னால்,சொல்லச்சொல்ல நமக்கு இனிக்கும்.  ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்ல நேரம் இன்மையால்,கவிஞர் பெருந்தகை ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு நூலாக அதனை யாத்து நமக்கு அளித்திருக்கிறார். அந்த நூலின் பெயர் ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’.

 இந்த நூலினை வெளியிட்டவர் நியூயார்க்கில் வாழும் சண்முகம் பெரியசாமி அவர்கள். அவரை " கண்டியார் குடும்பம் தண்டமிழ் காக்கும் தலைமைக்குடும்பமாக இன்றும் விளங்கி வருகிறது என்பதற்குக் கண்காண் சான்றாக இருப்பவர் திரு.பெ.சண்முகம் " எனக் கதவுரையில் குறிப்பிடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் " புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு என் கல்லூரி நாள்களிலேயே வாய்த்தது.விட்டுவிட்டு நேர்ந்தாலும் அவ்வாய்ப்பு அவர் மறைவு நாள்வரை தொட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது....நான் பழகிய பத்து ஆண்டுகளில் -அவருடைய தமிழாற்றல்-கவிதை மேதமை,தமிழின உணர்ச்சி அழுத்தம்,பாரதி நேயம், அழகியல் ஈடுபாடு எனப் பலவற்றையும் நான் உணரமுடிந்தது- ஒரு பக்கம் எனில் ,கனிந்த மனிதம்,கட்டற்ற வெகுளி,விருந்தேற்கும் விருப்பு,தன்னிரக்கம் என அவருடைய மானுட ஆளுமையின் பல பரிமாணங்களை நுகர முடிந்தது மறுபக்கம் என்று சொல்வேன் " என்று இந்த நூலின் உள்ளடக்கத்தை ஒரு சில சொற்களில் முன் கூட்டியே நூல் ஆசிரியர் கொடுத்து விடுகின்றார்.

பாரதி-பாவேந்தர்,பாவேந்தர்-தமிழன்பன் என இருக்கும் ஒற்றுமைகளை அழகு ததும்ப' பாட்டு இடையிட்ட உரைநடைக்காப்பியம் ' எனும் தலைப்பில் பேரா.வ.ஜெயதேவன் அவர்கள் முன்னுரையாகக்  கொடுத்திருக்கின்றார்.'பாரதியார்..பாரதிதாசன்..தமிழன்பன்' எனத் தலைப்பிட்டு பேரா.சி.அ.சங்கர நாராயணன் அவர்கள் முன்னுரை அளித்திருக்கின்றார்.இந்த நூலினை வெளியிட்ட நியூயார்க் சண்முகம் பெரியசாமி அவர்கள் 'உளமார்ந்த நன்றி ' எனும் தலைப்பில் தன்னுரையைக் கொடுத்திருக்கின்றார்.அதில் "படித்த பின் உணர்ந்தேன்.இது வழக்கமான நூல் அல்ல.இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தகைமைசால் ஆளுமைகள் இருவர் குறித்த ஓர் ஆவணம் என்பதை உணர்ந்தேன்" என்று நியூயார்க் சண்முகம் பெரியசாமி குறிப்பிடுகின்றார். உண்மைதான்,அந்த உணர்வு எனக்கும் படித்து முடித்தபின் தோன்றியது. இந்த நூல் படிக்கவேண்டிய நூல் மட்டுமல்ல,பத்திரமாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு அளித்துச்செல்லவேண்டிய நூல் என்று.

இந்த நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களைப் பற்றி இருபது ஆளுமைகளின் கருத்துகள் " அறிஞர்கள் பார்வையில் தமிழன்பன் " என்னும் தலைப்பில் இடம் பெற்றிருக்கின்றன." தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க,தமிழன்பு மேலும் தழைத்து ." எனப் புரட்சிக்கவிஞரின் கூற்றிலிருந்து ஆரம்பித்து "...தமிழன்பன் கவிதைகள் எல்லாம் வரலாற்றுக்கு முக்கியமானவை. தமிழன்பன் தமிழ் நாட்டுக்கவிஞர் அல்லர்;அவர் உலகத்தமிழ்க்கவிஞர் " என்று குறிப்பிடும் பேரா.முனைவர்.சாச்சா எபிலிங் அவர்களின் கூற்றுவரை இடம் பெற்றிருக்கும் கருத்துகள் நாம் பெருமை கொள்ளத்தக்கவை, தமிழன்பனைத் தமிழ் நாடு ஈண்டு ,உலகத்திற்கு கொடுத்திருப்பதால்...

விழிகள் பதிப்பகத்தின் உரிமையாளர்,எளிமையும் இனிமையும் குடி கொண்டிருக்கும் பதிப்பாளர் தி.நடராசன் அவர்கள் 'உங்களுக்காகப் பழைய பதிவு ' என்று தன்னுடைய கருத்துகளை, முதல் நூலாக தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல் பற்றி, வெளியிட்ட நிகழ்வில் இனமானப்பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் ஆற்றிய உரை பற்றி,அந்த நிகழ்வில் நூலின் ஆசிரியர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் உரைபற்றி நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.அடுத்து 2.9.2000-ல் நிகழ்ந்த இந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்,கவிஞர்கள் புரட்சிக்கவிஞரும்,ஈரோடு தமிழன்பனும் இடம் பெற்றிருக்கும் புகைப்படம்,அந்த வெளியீட்டு விழாவின் புகைப்படங்களின் அணிவகுப்பு என நூலுக்குள் நுழைவதற்குமுன்பே நிறைவு தருகிறது,விருந்தில் சோற்றுக்கு முன்பே வைக்கப்படும் இனிப்புகள் போல... .

தனது பேராசிரியர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் பற்றி இந்த நூலில் பல இடங்களில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 1983-84-ஆம் ஆண்டுகளில் நான் பெரியார் சிந்தனை பட்டயப்படிப்பு படித்த காலங்களில் அய்யா பேரா.ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் புரட்சிக்கவிஞர் பற்றியும் நடத்திய பாடங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. புரட்சிக்கவிஞர் பாடல்களில் மூழ்கி ,முத்தெடுத்து அவர் கூறிய கருத்துகள் மறக்க இயலாதவை என் வாழ்க்கையில். " எங்கள் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் என்மீது தாய்மைப்பிரிவு கொண்டவர்.தனி அன்பு காட்டியவர்" என்று சொல்லி அவரைப் பற்றிச்சொல்லும் உரைநடையே கவிதையாய் மிளிர்கிறது." பேராசிரியர் ந.இராமநாதனார்,அன்று 'கரும்பைத்தின்னு' என்று சொல்லவில்லை...'தேன்பாகு உண்க' என்று சொல்லவில்லை...பின் என்ன சொன்னார்?நான் தாம்திரிகிட தாம்திரிகிட...என்று ஆட?...தன்னானா,தன்னானா என்று பாட ?
" புரட்சிக்கவிஞருக்குப் பக்கத்தில் இரு !
 புரட்சிக்கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய் !" போதாதா ? மின்மினிகளைத் துரத்திக்கொண்டிருந்தவனிடம் நட்சத்திரங்களை அள்ளிக் கையில் போட்டது போலாயிற்று ! "இது நூலாசிரியரின் உரைநடை மொழி...கவிதை மொழியாய் உரை நடை மொழி. நூலில் பல பக்கங்கள் இப்படி கவிதை மொழியில் ...புரட்சிக்கவிஞரை முதலில் பார்த்த நிகழ்வில் இருந்து ஆரம்பிக்கும் இந்த நூல் பலமுறை நாம் படிக்கவேண்டிய நூல்.

மாணவர் விடுதிக்கு வந்த புரட்சிக்கவிஞர்,கரடிக்கறி,புலிக்கறி தின்ற கவிஞர் என்று புரட்சிக்கவிஞரை புகைப்படம் போல ஒவ்வொரு தலைப்பிலும் அப்படியே படம் பிடிக்கிறார் நூல் ஆசிரியர். "இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல-மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்." என இருபெரும் ஆளுமைகள் மேடையில் தோன்றியதைக் குறிப்பிடுகின்றார்.
"இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை.இதோ! தலைவன் உங்கள் முன்னால் !இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்..நீங்கள் விரும்பும் தமிழ் மீளும்.தமிழ் நாடு வாழும்!முண்டங்களாய்,முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும்,இன்னும் அப்படி இருக்க வேண்டுமா?உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள்,சமயங்கள்,வேதங்கள்,வியாக்கினங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச்சேற்றில் புதைத்துவிட்டன.உங்களுக்குள் இருக்கும் தமிழனை,உங்கள் சாதிகளே வீழ்த்திவிட்டன....தமிழனை விடுதலை செய்ய,தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? " "என்று அனலாய் கக்கிய புரட்சிக்கவிஞரின் உரையை நமது மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தனது நினைவிலிருந்து பதிவு செய்து " அன்று புரட்சிக்கவிஞர் பேசிய பேச்சில் வெளிப்பட்ட கருத்துகள் இன்றும் என்னுள்ளிருந்து புறப்பட்டுப்போகாமல் பதிந்து இருக்கின்றன" என்று குறிப்பிடுகின்றார்..ஆகா, என்ன அருமையான பதிவு. தந்தை பெரியாரின் தலைமை பற்றி,புரட்சிக்கவிஞர் பேசியதை அருகில் இருந்து கேட்ட கவிஞரின் பதிவு,காலத்தால் அழியாத பதிவு.

புரட்சிக்கவிஞரின் பல்வேறு பரிமாணங்கள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. "முரட்டுக்கவிஞர் பாரதிதாசன் -குளிரும் பனியாவதும் இனிக்கும் கனியாவதும் ஆகிய அழகிய மனிதப் பரிமாணத்தை என்னைப்போலவே அவருடன் பழகியவர்கள் உறுதியாகக் கண்டறிந்திருப்பர்" என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்  தனது அனுபங்களை முத்துச்சரங்களாய் தொடுத்துக்கொடுத்திருக்கிறார்.

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். " என்னும் குறளைப் போல தனக்கு தீமை செய்பவருக்கு கூட நன்மை செய்யும் நயத்தக்க நாகரிகம் உடையவர் புரட்சிக்கவிஞர் என்பதனை, புரட்சிக் கவிஞரின் சொற்களிலேயே இப்படிக்கொடுக்கின்றார்.

" வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
 தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை
 படிப்புத் தந்தேன் சோறு தந்தேன், தலை
 எடுக்கச்செய்தேன்..என்தலை தான் அவன்
 அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்"......

இளைஞராய்,மாணவராய் இருந்த காலத்தில் புரட்சிக்கவிஞரோடு பயணித்த நினைவுகளை தனது மனக்கண் முன்னால் கொண்டு வந்து அதனை உணர்வோடும் நெகிழ்ச்சியோடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பதிவு செய்து  நமக்கு கொடுத்திருப்பது,மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு. புதியவர்களை ஊக்கப்படுத்துவது,வழிகாட்டுவது அவர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புரட்சிக்கவிஞரால் ஊக்கப்படுத்தப்பட்ட ,வழிகாட்டப்பட்ட நூல் ஆசிரியர் அவர்களே நமக்கு நல்பெரும் சான்று."உன்னிடம் நல்ல தமிழ் ஆளுமை இருக்கிறது.உபயோகப்படுத்தினால் கதை,கவிதை எதை வேண்டுமானாலும் செய்து வெற்றிபெற முடியும் " என்று ஊக்கப்படுத்தினார்.ஒரு 'தந்தைமை அக்கறை' அவரிடத்தில் அன்று பொங்கி வழிந்தது என்பால் " என்று நன்றியோடு புரட்சிக்கவிஞரை நினைவு கூறுகின்றார் நூல் ஆசிரியர்.
 
"எழுதறவன் எப்போதும் படிக்கிறவனாகவும் இருக்கவேண்டும் ' என்னும் தலைப்பில் இருக்கும் கட்டுரையை இன்று எழுத வருபவர்கள் பலமுறை படித்தல் வேண்டும். அதில் நூல் ஆசிரியரின் அறச்சீற்றமும் புரட்சிக்கவிஞரின் சீற்றத்தோடு இணைந்து பயணிக்கும் கட்டுரை.பாரதி-பாரதிதாசன் பிணைப்பு பற்றி அருமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. புரட்சிக்கவிஞருக்கு ஞானபீட பரிசு கிடைக்காமை-அதில் இராஜாஜி அவர்களின் பங்கு,பிரின்ஸ்டன் கவிதை-கவிதையியல் 'கலைக்களஞ்சியத்தில்' தமிழ்க்கவிஞர்கள் பட்டியலில் புரட்சிக்கவிஞரின் பெயர் இடம் பெறாமை-அதில் சென்னைப்பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் வே.இராகவன் பங்கு போன்ற சில செய்திகள் இன்றைய தலைமுறை வாசித்து உள்வாங்கி வைக்கவேண்டியவை. அதற்கு எதிர்வினையாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புரட்சிக்கவிஞரை,புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் பதிவு செய்ய வேண்டிய உந்துதலைப் பெற வேண்டியவை.

"உங்கள் கவிதைகள் எம்மோடு இருக்கின்றன.போய் வாருங்கள் புரட்சிக்கவிஞரே' என்று கரையில் நின்று கொண்டே ,கையை அசைத்தவர்கள் கண்களிலும் கடல்கள் இருந்தன"...என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல படைப்பாளிகள் மறைவதில்லை, அவர்கள் தங்கள் படைப்புகளால் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இனியும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.அதுவும் புரட்சிக்கவிஞர் எப்போதும் தமிழர்கள் உள்ளங்களில், உலக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.கரும்பின் எந்தப் பாகத்தை இனிப்பு என்று சொல்வது என்று உண்பவர் திகைப்பது போல, இந்த நூலின் எந்தப் பாகத்தை சிறப்பு என்று சொல்வது என்னும் திகைப்பு இருக்கிறது எனக்கு இருக்கிறது.அப்படி ஒவ்வொரு பக்கத்தையும் விவரிக்கலாம்.வரலாற்றோடு இணைத்துச்சொல்லலால். ஒப்பியல் நோக்கில் மற்ற நூல்களோடு ஒப்பிட்டு விவரிக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்த நூல் வரலாற்றுப்பெட்டகம். இரண்டு மாபெரும் கவிஞர்களின் வாழ்வியல் பெட்டகம். வாங்கி வையுங்கள் வரும் தலைமுறைக்காக, படித்து, படித்து உள்ளத்தில் தேக்கி வையுங்கள், உங்களுக்காக.

நன்றி : வல்லினச்சிறகுகள் ,திசம்பர் 2020.

3 comments:

முனைவர். வா.நேரு said...

" வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை
படிப்புத் தந்தேன் சோறு தந்தேன், தலை
எடுக்கச்செய்தேன்..என்தலை தான் அவன்
அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்"... புரட்சிக்கவிஞர்...!"
கு.வெ.கி.செந்தில்...முக நூலில்

கரந்தை ஜெயக்குமார் said...

விழிகள் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டால், நூல் இல்லை என்று பதில் வருகிறது ஐயா

முனைவர். வா.நேரு said...

வணக்கம்.வல்லினச்சிற்குகள் இதழ் ஆசிரியர் தோழர் அகனிடம் கேட்கிறேன், இருக்கிறது என்றால் தங்களுக்கு வாட்சப்பில் பதிவிடுகிறேன், நன்றி