Monday, 29 August 2022

சொற்களின் கூடுகளுக்குள்- வா.நேருவின் நூல் பற்றி வழக்குரைஞர் மதிவதனி அவர்களின் உரை

 



''சொற்களின் கூடுகளுக்குள்'' ஒரு தேடல்! 
 


தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில், மாலை 6:30 முதல் 8 மணி வரை திராவிட இயக்கச் சிந்தனைகள் நிரம்பிய சிறந்த நூல்களைத் தேர்வு செய்து திறனாய்ந்து வருகிறது. பயனுறு இத்தொடர் நிகழ்வின் ஏழாவது கூட்டமாக 12.08.2022 அன்று, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய "சொற்களின் கூடுகளுக்குள்" என்ற கவிதைத் தொகுப்பை  மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் ஆற்றல் மிகு பேச்சாளர் சே. மெ. மதிவதனி மிகச் சிறப்பாக திறனாய்வு செய்தார்.

இதயத்தின் ஒளிபரப்பே...

முன்னதாக எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவுப் பாவலர் சுப‌. முருகானந்தம் அவர்கள், தமக்கென்று உரிய தனிச் சிறப்பாக தம்பாக்களின்  வழியே, ஒவ்வொருவரையும் சிறப்பித்துக் கூறி, வருகை தந்திருந்த அனைவரையும் விளித்து வரவேற்புரை ஆற்றினார். சொல் ஒன்று செயல் ஒன்று; பேசுவது ஒன்று எழுதுவது ஒன்று அல்லாமல் இந்தக் கவிதைத் தொகுப்பு என்பது முனைவர் வா. நேரு அவர்களின் இதயத்தின் ஒளிபரப்பே என்றும், சொல்லோடு நிற்காமல் சொன்னதெல்லாம் தொண்டறமாய் வாழ்ந்து காட்டும் பண்பினர் என்றும், ஒவ்வொருவரையும் நீங்களும் எழுதுங்க நீங்களும் பேசுங்க என்று ஊக்கப்படுத்திக் காட்டும் ஒருவர் தான் நூலாசிரியர் என்றும் கவிதை நடையில் குறிப்பிட்டுக் காட்டினார்.

இந்நிகழ்வில்  பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் தமிழ் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன், முனைவர் சேதுராமன், முனைவர் மு.சு. கண்மணி, அறிவு வழி காணொலி பொறுப்பாளர்கள் சேரலாதன், தாமோதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மனிதர்கள் சிறக்க சிந்தனைகள் வேண்டும்

தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் ம. கவிதா தமது தலைமை உரையில், பறவைகள் உயரே பறக்கச் சிறகு வேண்டும், மனிதர்கள் சிறக்க சிந்தனைகள் வேண்டும் என்ற முகநூல் பதிவை எடுத்துக்காட்டி, அந்தச் சிந்தனைகள் என்பது தன்னையும் உயர்த்திக் கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கைபிடித்து உயர்த்துகிற சிந்தனைகளாக இருக்க வேண்டும் எனும் போது, அத்தகைய ஒரு கவிதைத் தொகுப்பைத் தான் இன்றைக்கு எழுத்தாளர் மன்றம் திறனாய்வுக்கு எடுத்திருக்கிறது என்றார். எப்போதும் நூல்களோடு பயணித்து, தன் குடும்பத்தினரையும் நூலக உறுப்பினர்களாக்கி வைத்திருப்பவரும், எதை எழுதினாலும் பேசினாலும் திறனாய்வு செய்தாலும் இந்தச் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தியை விதைத்து விட்டு வரும் மிகச் சிறந்த தொண்டற எழுத்தாளருமான இந்நூலாசிரியர் பாடுபட்டுக் கட்டிய இந்தக் கூடு படிக்கும் அத்தனை பேருக்கும் பலன்மிக தரக்கூடியதாகும் என்றார்.

உண்மைதான் அழகு 

நூலைத் திறனாய்வு செய்த மதிவதனி அவர்கள், எடுத்த எடுப்பிலேயே கொடுந்தமிழ், செந்தமிழ், கோனார் நோட்ஸ் என்றெல்லாம் தேவையில்லாமல் பெரியார் போன்று மக்கள் மொழியில் தமிழில் உள்ள எழுத்துகள் புரிபவர்கள் இதை வாசிக்கலாம் என்ற அளவில் எல்லோருக்குமான நூலை 120 பக்கங்களில் 35 கவிதைகளாக கொடுத்திருக்கிற நூலாசிரியர், மூன்று தளங்களில் தான் பெரியாரியளாளர் என்பதை மெய்ப்பித்துள்ளார். ஒன்று,  பெண்கள் இருவரை வைத்து அவர் இந்த நூலுக்கு அணிந்துரையை தந்துள்ளார். இரண்டாவதாக கவிதைக்கு பொய் அழகு என்ற கட்டமைப்பை உடைத்து, உண்மைதான் அழகு என்று பதிய வைத்திருக்கிறார். மூன்றாவது நானே சொல்லியிருந்தாலும் நம்பாதே என்ற பெரியார் வழியில், "கவிதை நூலை வாசித்து முடித்தப் பின் உங்கள் மனதில் தோன்றும் எண்ணமே வலிமையானது" என்கிறார் என தன் கருத்துக்கு வலு சேர்த்தார். 

தொடர்ந்து உறவுகள், சமூகம், பெண்கள், அரசியல், கவிஞர்கள் என்று கவிதைகளைப் பிரித்துப் பிரித்து திறனாய்வு செய்தார் உறவுகளில் முதல் கவிதையாக  "ஒன்ற இயலுவதில்லை!" என்ற கவிதையை ஆய்வு செய்தார்‌.

வாழ்வியலை உணர்த்துகிறது

'சுட்ட மண்பாண்டங்கள் களிமண்கள் ஆவதில்லை; மனவிரிசல்கள் உண்டானப் பின் என்னதான் ஓரிடத்தில்  ஒன்றாய் நின்றாலும் பழைய நிலையில் ஒன்ற இயலுவதில்லை!' ‌ என்ற வரிகளை எடுத்துக்காட்டி அறிவியலில் மீள் மாற்றம்- மீளா மாற்றம் என்று இரண்டு உண்டு. காகிதத்தை எரித்தால் அது மீளா மாற்றம். அப்படித்தான் ஒருமுறை மனவிரிசல் ஏற்பட்டு விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு அந்த உறவு திரும்புவது இயலாது என்பதால் ஒன்று அத்தகைய விரிசல்களைத் தவிர்க்க வேண்டும் அல்லது ஏற்பட்டு விட்டாலும் வெறுப்பு வயப்படுவதில் இருந்து விலகி விட வேண்டும் என்ற வாழ்வியலை இந்த கவிதை நமக்கு உணர்த்துகிறது என்றார்.

அர்த்தமற்ற சடங்குகளை...

அடுத்து, தன்தந்தையின் நினைவு நாளில் தம் பிள்ளைகளுக்கு சொல்கின்ற அறிவுரையாக, "ஆண்டுதோறும் திதியென்றும் திவசமென்றும்  உழைக்காதவர்கள் உண்பதற்கு #இழவுவரி அளிக்கும் ஏற்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. தாத்தாவின் நினைவு நாளில் அப்பாவின் கோரிக்கை, எதிர்காலத்தில் என் வழியைப் பின்பற்றுங்கள். அர்த்தமற்ற சடங்குகளை ஆழக்குழித் தோண்டி புதையுங்கள். அந்நாளில் எளியோருக்கு உதவுங்கள்" என்ற வரிகளை எடுத்துக்காட்டுகின்றார். தந்தையை இழந்தவர்களின் வலி அவருக்குத் தெரியும்.அவர் அனுபவித்த வலியையே மற்றவர்களுக்கு பாதையாக்கி கொடுக்கிறார், இழவு வரி என்று ஒரு புதுச்சொல்லை அறிமுகப்படுத்துகிறார். ஏற்கெனவே தந்தையை இழந்திருப்பவர்களிடம் இப்படி சுரண்டுகின்ற ஒரு மோசடியை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார். இந்த அறிவுரை ஒட்டுமொத்தக் கருஞ்சட்டைக்காரர்களுக்கும் தேவையான ஒன்று. இல்லையென்றால் நாம் இறந்த பின் நம் நெற்றியில் பொட்டு வைத்து விடும் நிலைமை ஏற்படும் என்பதையும் இக்கவிதையோடு இணைத்துப் பேசினார் மதிவதனி.

புரட்சியாளர் அம்பேத்கர்

பொதுவாக தன் மனைவியைப் பாராட்டும் போது அவர்கள் செய்கிற வேலையைப் பாராட்டுவார்கள். இன்னும் வேலை வாங்கலாம் என்ற உட்பொருளில் கூட அவ்வாறு செய்வார்கள். தனக்குப் பணி செய்வது தான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல் இன்னும் சிலர் நினைப்பார்கள்.
ஆனால் பகுத்தறிவாளரான இந்நூலாசிரியர் மிகைப்படுத்தல் கவர்ச்சி என்று ஏதுமின்றி ஆகா- ஓகோ சொற்களின்றி  தனக்கு நேர்ந்த இதய அறுவைச் சிகிச்சையில் துணை நின்ற தன் இணையருக்கு நன்றி சொல்லி "அன்பெனப்பட்டதே இல்வாழ்க்கை" என்ற  கவிதையை எழுதியதன் மூலம் படிக்கும் எவருக்கும் அவரவர் துணைக்கு நன்றி காட்டும் உயர் பண்பை ஊக்குவிக்கிறார் என்றார்.

உறவுகளில் நட்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது வெறும் கேளிக்கைக்காக அல்லாமல்" உயிர் வாழ்வதலுக்கான ஆக்சிஜன் காற்றாய் இருப்பது நட்பு" என்கிறார். 
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாளில் நான்கே முறை தான் ஊர்சுற்ற சென்றிருக்கிறார்; இரண்டு முறை தான் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்று அதுவும் படித்து முடிக்காமல் வைத்தப் புத்தகம் நினைவுக்கு வர பாதியிலேயே வீடு திரும்பியிருக்கிறார் என்பதையும் இங்கு  இடைச்செருகலாக நினைவூட்டினார் மதிவதனி.

பசியால் பட்டறிவு 

"பசியால் பட்டறிவு" என்ற கவிதையில், பக்கத்தில் கடை இருந்தாலும், கையில் பணம் இருந்தாலும் மருத்துவமனையில் இருக்கும் மகளை விட்டு ஒரு அடி கூட வைக்க இயலாத நிலையில் வயிற்றைக் கடித்த பசியால் பட்டறிவு கிடைத்தது என்று சொல்லி, உறவினர்கள் இந்த நேரத்தில்  அதிக நேரம் ஒதுக்கி உடனிருந்து உதவ வேண்டும், நம்  உறவினர்களுக்கு இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது நாம் இதை செய்ய வேண்டும் என்ற தன் எண்ணத்தைக் கவிதையாக்கி இருக்கிறார் என்றார்.


"கொரோனா காலத்தில் உங்களை!" எனும் கவிதையில் கொத்துக்கொத்தாக மக்கள் மரணிக்கிற பொழுது அவரவர் கடவுள் நம்பிக்கைகள் அவரவர்க்குத் தானாகவே தகர்ந்து தவிடு பொடியாகிறது  என்றாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "காப்பார் கடவுள்" என்று கதை சொல்கிறார்கள். "இருப்பது கடவுள் அருளால் என்றால் செத்தவர் எல்லாம் எவரருளால் செத்தார்கள்?" என்று நாம் கேட்டால் எக்குத் தப்பாக பேசாதே என்கிறார்கள்; அனைத்தையும் கேள்வி கேள் என்று சொன்ன அய்யா பெரியாரையே இப்பொழுது நினைவில் கொள்கிறோம் என்ற வரிகளை எடுத்துக்காட்டினார்.

ஜாதி என்னும் சதியால்...

"எதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்கள்" என்ற கவிதையில் தூங்குபவர் யார் தூங்குபவர் போல நடிப்பவர் யார் என்றுணர்ந்து  எதிர் கருத்துள்ளவர்களை நாம் அணுக வேண்டும், அவர்களிடம் வாதம் வைக்க வேண்டும்; சுவர்களைப் போல இருப்பவர்களிடம் எவ்வளவு வைத்தாலும் அது வீண் தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

"நடுங்குகின்றாய் நிலமே!" என்ற கவிதையில் புதிய கோணத்தைக் காட்டுகிறார்."இருப்போரை அச்சமூட்டி எந்த நேரம் சுனாமியோ நிலநடுக்கமோ என மக்கள் நடுங்கும் வண்ணம் அடிக்கடி நடுங்குகிறாய் நிலமே, ஏற்றத்தாழ்வு என்றும் நிலைத்திருக்கும்  ஜாதி என்னும் சதியால் மக்கள் சாகும் நிலை கண்டு நடுங்குகின்றாய் நிலமே... காணாத கடவுள்களால் கலகமூட்டி மக்களை கழுத்தறுக்கும் கொடுமைக் கண்டு இந்த மனிதர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று நினைத்து நடுங்குகிறாயோ நிலமே..?" எனும் வரிகள் மூலம்
இயற்கைச் சீற்றத்திலும்  தற்காத்துக் கொள்ள முடியும், இந்தச் செயற்கையான சீற்றம் மிகவும் ஆபத்தானது அதனால் அழித்தொழிக்க வேண்டும்  என்பதை புதுக்கோணத்தில் நிலமே மனிதர்களைப் பார்த்து நடுங்குவதாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகம் மறு! அச்சம் தவிர்!

"நன்கொடை என வாருங்கள்!"  இந்தக் கவிதையைப் பற்றி குறிப்பிடும் போது,
"கிராமத்து தெருக்களில்  வெளிச்சத்தோடு வரும் வண்டிகளுக்கு எழுந்து எழுந்து பின் அமர்ந்து அமர்ந்து கழிக்கும் அவலம் பெண்களுக்கு இருக்கும் நிலையில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வசூல் செய்ய கையில் நோட்டுப் புத்தகத்தோடு வருகின்ற பெரியோர்களே, ஊருக்கு மூன்று கழிப்பறைகள் கட்டி அதை அன்றாடம் தூய்மையாக வைக்க நன்கொடை கேட்டு வாருங்கள்!" என்று சொல்லுகிற நூலாசிரியரின் தாயுமான உள்ளத்தை எடுத்துக்காட்டுகிறார்.

"ஆன்மீகம் மறு! அச்சம் தவிர்! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிமுறைகள்? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடுகள்? எங்களுக்கு மட்டும் ஏன் விதிமுறைகள் மீறினால் இத்தகைய வன்முறைகள்? என்று கேள்வி கேட்கப் பழகுங்கள் பெண்களே!" என்கிறார் மற்றொரு கவிதையில்.

உரிமை கோரிக்கைகள்

மகளிர் நாள் என்பது கேளிக்கை நாளல்ல 'உரிமை கோரிக்கை நாள்' என்று உச்சரிக்கும் போதே அதன் வலிமையையும் உண்மையையும் உணர்த்தி விடுகிற பெயரைச் சூட்டுகிறார் கவிதை ஆசிரியர் என்றார்.

 இந்த அளவிற்கு பகுத்தறிவாளராக தன்னை வார்த்தெடுத்த தன் தாய் முத்துக்கிருஷ்ணன் அம்மாள், கிடைக்கும் சில நிமிடங்களிலும் நூல்களில் மூழ்கி எழும்  புத்தக வாசிப்பாளர், சாமி வந்தாடும் சொந்தக்காரப் பெண்களிடம் நேருக்கு நேராய் நின்று "சாமியாடிக் கிட்டே போய் அந்த கரண்ட் கம்பியைப் பிடிங்க பார்ப்போம்" என்று சொல்லுகிற புரட்சித்  தாய் என்பதையும் அவர் கவிதைகள் வழி அறிய முடிகிறது என்றாய்ந்தார் மதிவதனி.

முனைவர் வா.நேரு அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் அமெரிக்க அரசியல் வரை தம் கவிதைகளில்  பேசி இருக்கிறார். 2021 ஜனவரி 6 ட்ரம்ப் தோல்வி அடைந்து ஜோபைடன் வெற்றிபெறும் போது "வலதுசாரி தத்துவத்தின் அமெரிக்க குறியீடு" என்று ட்ரம்பை வர்ணிக்கிறார். இதுவரை இதுபோல அவரை யாருமே குறித்தது கிடையாது என்கிறார் திறனாய்வாளர்.

கழுதைதான் முன்னேற்றும்

உள்ளூர் அரசியலைப் பற்றி பேசும்போது, "உடைவெளுக்கும் தோழரை கடவுள் முன்னேற்றுமா? கழுதை முன்னேற்றுமா என்றால் கழுதை தான் முன்னேற்றும். கடவுள் பெயரால் கலகம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் வெறும் காட்சியாளர்கள் தான்" என்கிறார் நூலாசிரியர். தகுதி உள்ளவை தான் தப்பிப் பிழைக்கும். மாட்டு கோமியத்தை நம்பினால் மண்ணில் மட்கித்தான் போவார்கள் என்று தம் கவிதைகளில்  கடுமையாக சாடுகிறார்.

சதுரகிரி மலை அடிவாரத்தில் பிறந்தேன் எனினும், என் அண்ணன் அமாவாசை தோறும் மலையேறிக் கொண்டிருந்தாலும் எனக்கோ இளவயது முதலே பெரியார் திடலே  பிடித்துப் போயிற்று என்று  தன் கவிதைகளில் அவர் எழுதி இருப்பதில் தான் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது என்றார்.

இறுதியாக கவிஞர்கள் பற்றி குறிப்பிடுகிறார். முதலாவதாக புரட்சிக் கவிஞரைப் பற்றியும் இரண்டாவதாக கரிசல் இலக்கியத் தந்தை கி. ரா. அவர்களைப் பற்றியும் எழுதுகிறார். "சிக்மன்ட் பிராய்டை பின்னர் தான் அறிந்தேன். முதலில் உன் கதைகள் தான் பாலியல் உணர்வைப் பசி என்று உணர்த்தின" என்கிறார் கி.ரா.வைப் பற்றி எழுதுகையில்.

ஈரோட்டுச்சூரியனை...

மூன்றாவதாக "ஈரோட்டுச்சூரியனின் வெம்மையை சொற்களின் கூடுகளுக்குள் குவித்துத் தந்தவர்" என்று கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பற்றி  குறிப்பிட்டது தான் இந்த நூலின் தலைப்பாகவே இருக்கிறது என்று சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருக்கக்கூடிய அய்யா அவர்களின்  இந்தக் கவிதை தொகுப்பு பின்னாளில் என்னென்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே சுனாமியை உணரும் பறவைகளைப் போல அவரும் உணர்ந்திருப்பார் என்று முத்தாய்ப்பாக முடித்தார் மதிவதனி.




ஏற்புரையில்...

நூலாசிரியர் முனைவர் வா. நேரு அவர்கள் தனது ஏற்புரையில் தம்முடைய நூல்கள் வெளிவர  தோன்றாத் துணையாக இருந்த தோழர்கள் 'ஒரு துளி கவிதை'  தோழர் அகன்,  பாவலர் சுபமுருகானந்தம், கருப்பையா ஆகியோருக்கும்  இந்நிகழ்வில்  கனடாவில் இருந்து இணைந்த பெர்னாட்ஷா, இலண்டனிலிருந்து சங்கையா, கருநாடக மாநிலத்திலிருந்து முத்துமணி நன்னன் என்று வெளி நாடுகளிலும் மாநிலங்களிலும் இருந்து இணைந்திருக்கிற தோழர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டார். மனதிற்குப் பட்டதை சரியெனப் பட்டதை தான் கவிதையாக்கியதாகக் கூறிய அவர், மரபுக்கவிதை- புதுக்கவிதை- சிறுகதை -கட்டுரை என எந்த வடிவத்தில் இருந்தாலும்  எழுத்துகளை நாம் பதிய வைக்க வேண்டும், 

தொண்டற நோக்கத்தோடு 

தமிழ்நாடு முழுவதும் நம்முடைய எழுத்தாளர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தொண்டற நோக்கத்தோடு நிறைய எழுதுகிறார்கள், அத்தகு நூல்களை எல்லாம் நாம் திறனாய்வு செய்ய வேண்டும், நம்மைப் பற்றி நாமே பேச வேண்டுமா என்று தயக்கம் வரும் ஆனாலும் அந்த தயக்கம் தேவையில்லை, ‌. வாழக்கூடிய எழுத்தாளர்களை- அவர்களுடைய புத்தகங்களை நாம் தொடர்ந்து  வாராவாரம் பேசுவோம்; அவர்களையும் சிறப்பிப்போம் என்றார். கொரோனா காலகட்டங்களில் இறந்தவர்களின் உடல்களை கல்லறைகளில் அடக்கம் செய்ய முடியாமல் இருந்த கடினச் சூழ்நிலைகளில், பொது இடத்தில் எரித்து மீண்டும் கல்லறைக்குச் சாம்பலைக் கொண்டு வருவார்கள்.  'உயிரோடு எழும்புதல்' என்ற அவர்களின் தத்துவமே அப்போது அடித்து நொறுக்கப்பட்டாலும் கூட மக்கள் அதையெல்லாம் ஏற்க மறுத்து கடவுள் இருக்கிறார் என்பார்கள். இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்றார். குடந்தை மாவட்ட தொண்டறச் செம்மல் க.குருசாமி அவர்களினுடைய 'விடுதலையால் விடுதலை' நூலை திறனாய்வுக்கு பிறகே தான் படித்ததாகவும் எந்த அளவிற்கு துன்பமான சூழ்நிலையில் இருந்து அவர் அடைந்திருக்கிற உயரத்திற்கு விடுதலை இதழ் பாதையை அமைத்து தந்தது என்பதையும் அறிந்து  நெகழ்ச்சி உற்றதாகவும், எனவே தொடர்ச்சியாக இப்பணியை நாம் முன்னெடுப்போம் என்றும் அழுத்தமாக பதிய வைத்தார்.

மனித நேய பயணத்திற்கான....

இறுதியாக நன்றியுரை ஆற்றிய பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி, இது கவிதை நூல் மட்டுமன்று, ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை விவர நூல், மனித நேயப் பயணத்திற்கான ஒரு சாரம், சனாதனம் போற்றுவோருக்கு இது  வெப்ப விரவல் ஏற்படுத்தும் என்று புகழாரம் சூட்டி, சமுதாயத்தை யாரெல்லாம் மாற்றி அமைக்க நினைக்கிறார்களோ அவர்களே இதை எழுதியதாக  உணர்வார்கள்; நானும் அப்படித்தான் இந்த கவிதைகளில் என்னையே பார்க்கிறேன். இத்தகு சிறப்புமிக்க இந்த நூல் திறனாய்வு இனி நம் எல்லோரையும் எழுதத் தூண்டும் என்றார். வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொன்னதோடு நம் தோழர்கள் பலரின் தனித்திறமைகளை வளர்த்து விட்ட கொரோனாவுக்கும் சேர்த்து நன்றி சொல்லி  நிகழ்வை முடித்தார்.

தொகுப்பு : ம.கவிதா

நன்றி : விடுதலை 29.08.2022









No comments: