ஓடி ஓடிக் கலந்து
கொண்ட காலங்கள்
போல அல்லாது
ஓய்வு கேட்கிறது கால்கள்..
மூன்று பேருந்து
நான்கு பேருந்தென
மாறி மாறி
மதுரையிலிருந்து
சென்னைக்குப்
போன காலம்
போலல்லாது
படுக்கையுடன் கூடிய
தொடர்வண்டி
முன்பதிவு வேண்டி
நிற்கிறது மனது...
நட்பு உறவுகளின்
நல்லது கெட்டதன
பரபரவெனக் கலந்து
அலைந்து வந்த
காலம் போலல்லாது
கட்டாயம் போகவேண்டுமா
எனும் கேள்விக்கு
ஆம் என்னும் பதில்
வந்த பின்புதான்
பயணம் செய்யத் தோன்றுகிறது...
எதையோ சாதிக்கப்போவதாய்
பறந்து திரிந்த கால்களும்
பரபரவென அலைந்த மனதும்
நிலையாமையை உணர்ந்ததுபோல
நிறுத்தி நிதானாமாய்
நடக்கச்சொல்கிறது...
எது தேவை
எது தேவையற்றது
என ஒவ்வொன்றையும்
அளக்கச்சொல்கிறது...
கொரனா காலத்திற்குப்
பின்பு மனதும் உடம்பும்
நிரம்பவே மாறிவிட்டது
என்றான் நண்பன்....
ஒரு பேரழிவு நோயினால்
எத்தனை மாற்றங்கள்...
எத்தனை இழப்புகள்...
நம்மைச்சுற்றி என்றான் மேலும்...
எது தேவை
எது தேவையற்றது
என ஒவ்வொன்றையும்
அளப்பது நல்லதுதான்...
உனக்கென வாழும்
ஒவ்வொரு நாளும்
சோர்வைத்தான் தரும்...
மற்றவருக்கென வாழ்ந்துபார்..
கொடுத்துப்பழகு
இந்தக் கொரனா காலத்திற்குப்
பின்பாவது...
வாழ்வும் இனிக்கும்...
கால்களும் பறக்கும்...
என்றேன் நான்..
வா.நேரு, 31.08.2022
No comments:
Post a Comment