அறிவு என்னவோ
இது இயற்கைதானே என்கிறது...
ஆனால் மனது என்னவோ
முழுக்க அழுகையால் நிரம்புகிறது...
எங்கள் கிராமத்து பள்ளிக்கு
தலைமை ஆசிரியராகத்தான்
வந்தார் அவர்
40 ஆண்டுகளாய்
எனது பேச்சில்
எனது எழுத்தில்
தொடர்ந்து வந்தார்..
அவரோடு ஏற்பட்ட தொடர்பு
இறுதி மூச்சுவரை தொடர்ந்தது...
சுவாசிப்பதை அவர் நிறுத்தியது
எனக்கு நெஞ்சை
அடைப்பது போல் இருக்கிறது...
மாமனிதர்கள் சிலர்
தங்கள் செயல்களால்
மனதுக்குள்
உட்கார்ந்து விடுகிறார்கள்..
உயரப் பறக்கும் காலெமெல்லாம்
ஏற்றி விட்ட ஏணிகள்
மனதில் நிறைந்து விடுகிறார்கள்...
பேருந்து வசதியில்லாக் காலத்தில்
பள்ளியிலேயே இருந்துகொண்டு
இருக்கும் நேரமெல்லாம்
மாணவர்களுக்கு இலவசமாய்
போதித்த மனது
எவ்வளவு பெரிய மனது ?
எத்தனைபேரை உயர்த்திய
கரங்கள் இந்த ஆசிரியரின் கரங்கள்
எத்தனை ஊரின் பள்ளிகளை
செழுமைப்படுத்திய
சிந்தனை இந்த ஆசிரியரின் சிந்தனை...
எங்கும் பயமில்லை...
எவர் கேள்விக்கும் பதிலுண்டு...
நேர்மை என்ற ஒன்றால்மட்டுமே
நிமிர்ந்து நின்ற
எங்கள் தலைமை ஆசிரியரே...
வீரி(செட்டி) சாரே..
ஆசிரியர்கள் இன்னும் ஒருதாய்
என்பதற்கு எடுத்துக்காட்டாய்
வாழ்ந்தவரே...
மறைந்து விட்டீர்கள் என்றாலும்
நாங்கள் வாழும் காலெமெல்லாம்
எங்கள் மனதில் வாழ்வீர்கள்!
வா.நேரு
24.11.2022
No comments:
Post a Comment