Thursday, 8 December 2022

எதிலிருந்து கவிதை எழுகிறது?...

 எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...


மெளனமாக இருக்கும் 

நேரங்களில் கேட்கும்

ஒலிகளில் இருந்தா?

இடியோசை எனக் 

காதைப் பிளக்கும்

சப்தங்களுக்கு நடுவிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

அதிகாலையில் வானத்தில்

அணிவகுப்பு போல

வரிசையாகப் பறந்திடும்

பறவைகளின் ஒழுங்கிலா?...

எவ்வித ஒழுங்கும் இன்றி

அறை முழுவதும்

சிதறிக் கிடக்கும்

பொருட்கள் போல

ஒழுங்கு இன்மையிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

இருட்டு அறைக்குள்

பொருளைத் தேடி அலைந்து

உத்தேசமாய்த் தொட்டு

அதுதான் என உணர்ந்து

மகிழும் அக்கணத்திலா?...

பகலைப் போல 

விளக்குகள் ஒளிரும் இரவில்

எங்கு வைத்தோம் 

எனத் தெரியாமல் 

தேடித் திணறி

திகைத்து நொந்து நிற்கும்

அக்கணத்திலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

ஒன்றுபோல இருக்கும்

பொழுதுகளால்

ஒரு போதும் 

கவிதைகள் வருவதில்லை...

முரண்களோடு நிகழும்

எதிர்பாராத நிகழ்வுகளே

எப்போதும் கவிதைகளுக்கு

'தொட்டணைத் தூறும் மணற்கேணி'


அதிகாலையில் கிழக்கே

உதிக்கும் சூரியன்போல அல்லாது

எப்போது உதிக்கும்...

எப்படி உதிக்கும்...

எனச்சொல்லமுடியாததாய் கவிதை...



                         வா.நேரு

                         08/12/2022


No comments: