Wednesday 8 February 2023

அயலி... அனைவரும் பார்க்கவேண்டிய படம்

 முழுமையாக 'அயலி' படத்தைப் பார்த்தேன்.அற்புதமான திரைப்படம்.எளிய மொழி.படத்திற்குத் தேவையான சொற்களை தயக்கமின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்ச் செல்வியாக நடித்தவரும், அவரது அம்மாவாக நடித்தவரும், அவரது பள்ளித் தோழி மைதிலியாக நடித்தவரும்  மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். எந்தப் பாத்திரமும் சோடையாக இல்லை. கிராமம், கிராமச் சொல்லாடல், கிராமக் கோயில் என்ற பெயரில் இருக்கும் கட்டுப்பாடுகள், பெண் படிப்பிற்கு தடையாக இருக்கும் உளவியல் காரணங்கள் எனப் பல கோணங்களை இந்தத் திரைப்படம் பேசுகிறது. இந்தப் படம் தமிழ்நாட்டில் உள்ள நகரத்தில்,கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சென்று அடைய வேண்டும். யார் எதிரி,எது நம்மைத் தடுக்கிறது, கல்வி என்பது எவ்வளவு அவசியம்  என்ற புரிதல் இருந்தால் முன்னேறுவதில் இருக்கும் தடைகளைப்‌ பெண்களால் போட்டு உடைக்க முடியும் என்பதை இந்தத் திரைப்படம் மிக அழகாக காட்டுகிறது. ஆதிக்க ஆண்களை வச்சு   செய்திருக்கிறார்கள்.


 படித்திருந்தாலும் சிலர் எவ்வளவு பிற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை அந்த ஊரின் கணக்கு வாத்தியார் பாத்திரத்தின் மூலமாக மிக நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள். இறுதிக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தைச் சிதைக்கும் கலாச்சாரக் காவலர்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள், நம் மீது திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை நினைவுபடுத்துகிறது. எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கக் கூடாது என்ற வன்மத்தின் பின்னால் இருக்கும் ஆதிக்க மனப்பான்மை இந்தப் படத்தின் ஒவ்வொரு நகர்விலும் காட்டப்படுகிறது தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கல்விக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதும் நமக்கு புரிகிறது. .'உன் மனதிற்கு எது சரி எனப்படுகிறதோ அதைச் செய்' என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் தொடர்ச்சியாக சொல்லிவரும்  பெண் கல்வி ஏன் தேவை என்பதை மிகச்சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.


 ஊர்ப்பெண்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் ஓடி ,தங்கள் பெயரையெல்லாம் கரும்பலகையில் எழுதும் காட்சி கண்ணில் நீர் வரவைக்கிறது.ஏதோ ஒரு வகையில் பெண்களின் உயர்படிப்பு பலவகையில் இன்றும் கூட தடைபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்கள் படிக்கவைத்தாலும் 'திருமணத்தை முடித்து வைப்பா,வருகிறவன் படிக்க வைத்துக்கொள்வான் ' என்பது இயல்பான உரையாடலாக இருக்கிறது. ஆனால் திருமணம் முடித்துப்போகும் பெண்கள் எத்தனை பேரால் தொடர்ந்து உயர் கல்வி கற்க முடிகிறது?மேலை நாடுகளில் இயல்பாக இருக்கும் மாதவிடாய் பிரச்சனை ,இங்கு எப்படி ஒரு கிராமத்தில் பெண்களின் படிப்பைத் தடை செய்யும் கருவியாக இருக்கிறது என்பதையும்,கடவுள் என்பது எப்படி பெண்களின் கல்விக்குத் தடையாக வெகு சமர்த்தியமாக ஆண்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் இப்படம் நன்றாகவே காட்டுகிறது.

இந்தப் படத்தில் தமிழ்ச்செல்வியாக நடித்தவரின் நடிப்பு வெகு இயல்பு.கண்களும் உடல்மொழியும் நிறையப் பேசுகின்றன.  ?இந்த 'அயலி'யை மிகச்சிறப்பாக உருவாக்க  பாடுபட்ட படக் குழுவினருக்கும் , குறிப்பாக இயக்குனர் முத்துக்குமார் அவர்களுக்கும் தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்தப் படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து நேரம் ஒதுக்கிப் பாருங்கள். ஒவ்வொரு பெண்ணும் மட்டுமல்ல,ஒவ்வொரு ஆணும் பார்க்கவேண்டிய படம்.

"கட்டாயத்தாலி கட்டுனவ தாலிய கழட்டி அவன் மூஞ்சில எறிஞ்சி பொளேர்னு விட்ட அறை, இத்தனை நாளா கட்டாய தாலி கட்டிட்டானு வேற வழியில்லாம கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வாழனும்னு படம்/சீரியல் எடுத்த டைரக்டர்/நடிகர்களுக்கு விட்ட அறையாவே நான் பாக்குறேன்." Sandhiya என்பவரின் அயலி படம் பற்றிய டுவிட்டர் பதிவு..


முனைவர்.வா.நேரு,

தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

4 comments:

Anonymous said...

அய்யா தங்கள் விமர்சனம் மிக சிறப்பு. படத்தை இயக்கிய நடித்த தோழர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி.கருத்துப்பகுதியில் தங்கள் பெயர் வரவில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் விமர்சனம் படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது.
அவசியம் பார்ப்பேன்
நன்றி

முனைவர். வா.நேரு said...

வணக்கம் அய்யா.நலம்தானே...மிக்க மகிழ்ச்சி. நன்றி.