Tuesday 6 June 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(15).... முனைவர்.வா.நேரு

 

சிறுகுடியில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைத் தொடர்ந்தார் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்…

நான் பள்ளியில் வயரிங் எல்லாம் முடித்துவிட்டு,இணைப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு முதன்மைக் கல்வி அதிகாரி(C.E.O.) அலுவலகத்திற்கு எழுதுகிறேன். ஏன் என்றால் ,கரண்ட் பில் மாதம் மாதம் கட்ட வேண்டும், ,அதற்குப் பணம் வேண்டும்,உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் .என்பதால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு எழுதுகிறேன். அப்படி நான்  எழுதினால்,முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக சூப்பிரிடண்ட்டிடம் இருந்து “ நீ யாரைக் கேட்டு வயரிங் பண்ணினே “ அப்படின்னு பதில் வந்ததுங்க. நான் போய் நேரே C.E.O-வைப் பார்த்தேன்.” சார் பெரியவங்க,ஆபிசர்ஸைப் பார்த்து இதெல்லாம் செய்தேன். மக்கள் இப்படி உதவி செய்தார்கள்.நம்ம அலுவலகத்திலிருந்து இப்படிக் கடிதம் வந்திருக்கு “ என்றேன்.

மிகவும் வருத்தப்பட்டார். ” எவன் அப்படி எழுதினவன், நான் பார்க்காம கையெழுத்துப் போட்டுவிட்டேன் “ என்று சொன்னவர் அந்த அலுவலரைச் சத்தம் போட்டு “கொண்டாங்க அதை” என்று வாங்கி “ அனுமதிக்கப்படுகிறது” என்று பச்சை மையில் எழுதிக் கொடுத்துவிட்டார்.

இதிலிருந்து என்ன தெரிஞ்சுக்கிட்டோம் என்றால் நாம் போய் பார்க்காத குறைதான்.யாரைப் பார்த்தாலும்  நடக்கிறது.அப்புறம் போய் பொதுத்துறை பொறியாளரைப்(PWD engineer) பார்த்தேன் .” சார்,இப்போ எங்க பள்ளிக்கூடத்திற்கு கரண்ட் வந்திருச்சு.அருமையான கேணி.எங்களுக்கு மோட்டார் போட்டு டேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் ,பிள்ளைகளுக்கும் எங்களுக்கும்(ஆசிரியர்களுக்கும்) வசதியாக இருக்கும் “ என்றேன். “ நாளைக்கு நான் அங்கே வருகிறேன்.வந்து பார்த்துவிட்டுச்செய்வோம். பள்ளிக்கூடத்திற்கு செய்யுறதுக்கு என்னாங்க, நான் வருகிறேன் சார் “ என்றார்.

வந்து பார்த்தார்.அனுமதி ஆகிவிட்டது.மோட்டார் போட்டு,தண்ணீர் டேங்க் கட்டிக்கொடுத்தார்கள்.அப்புறம் ஒரு நீளமான கட்டிடம் கட்ட ஜாங்சன் ஆச்சு.நான்கு வகுப்பறைகள் கொண்ட நீளமான கட்டிடம் கட்ட பணம் ஜாங்சன் ஆயிடுச்சுங்க.எழுதிக்கிட்டே இருந்தோம்.மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.கட்டிடம் இல்லை என்று எழுதிக்கொண்டே இருந்தோம்.ஜாங்சன் ஆகிவிட்டது.

அதே பொறியாளர் வந்தார்.” இந்த மாதிரி வந்திருக்கிறது.நீங்க பள்ளிக்கூடத்தில் எங்கன கட்டச்சொல்றீங்களோ,அங்கன கட்டுகிறோம் “ என்றார். அந்தப் பள்ளி இருந்த பரப்பளவு 5 ஏக்கர்.பள்ளிக்கூடத்திற்குள் நல்ல விளையாட்டு மைதானம் இருந்தது.அப்படி ஒரு பசும்புல்தரை.அதிலே போய் கட்டிடம் கட்டினால் மாணவர்கள் எங்கே போய் விளையாடுவார்கள்?. “ சார்,இந்த விளையாட்டு மைதானத்தைத் தொடாமல் கட்டணும் “ என்றேன். அவர் பக்கத்து இடத்தைக் காண்பித்து ‘இந்த இடம் யாருடையது ?” என்றார்.அது தனியார் இடம் என்றேன்.அந்தப் பக்கத்து இடத்துக்காரரை அப்ரோச் செய்து,அந்த இடத்தையும் பள்ளிக்கூடத்திற்கு வாங்குங்கள்.அரசாங்கத்திற்கு –எங்களுக்கு அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தால் நாங்கள் மிக நன்றாக கட்டித்தருகிறோம் “ என்றார் பொறியாளர்.

சரி என்று சொல்லிவிட்டேன்.யார் பள்ளிக்கூடம் முழுமைக்கும் கரண்ட் வயரிங் பண்ணிக்கொடுத்தாரோ,அவருடைய நிலம் அது.புஞ்சைக் காடு. அவரைப் போய்ப் பார்த்தேன். “ இப்படி இருக்குங்க அய்யா.நீங்க கொடுத்த நிலம்தான் இப்போ பள்ளிக்கூடம் இருக்கிற 5 ஏக்கர் நிலம்.அதில் மேலும் ஒரு கட்டிடம் கட்டினால் விளையாட்டு மைதானம் இருக்காது.அதனாலே பக்கத்திலே இருக்கிற,உங்க இடம் 5 ஏக்கர் கிடைத்தால்,கட்டிடம் கட்டலாம்” என்றேன். “ நாளைக்கே ரிஸிஸ்டர் ஆபிஸுக்கு வாங்க சார் ,எழுதிக் கொடுத்து விடுகிறேன் “ என்று சொல்லி அந்த மாதிரியே எழுதிக் கொடுத்துவிட்டார்..

நிலத்தின் பத்திரத்தோடு போய் பி.டபுள்.யூ பொறியாளரைப் பார்த்தேன்.” ஓ.கே. சார்.நான் வருகின்றேன். புதிய கட்டிடத்தில் என்னென்ன வசதி வேண்டுமோ,எழுதிக் கொடுங்கள்.அதெல்லாம் செய்து தருகிறேன்.அரசாங்கத்திடமிருந்து வருகின்ற பணம் போதவில்லை என்றாலும் நான் வசூல் பண்ணி கட்டித்தருகிறேன்.” என்றார். அதே மாதிரி என்னென்ன வசதிகள் பள்ளிக்கூடத்திற்கு வேண்டுமோ,அதையெல்லாம் எழுதிக் கொடுத்தோம்.கல்லூரியில் இருப்பது போல மிக  நீண்ட கரும்பலகை..இங்கிருந்து அங்கு வரை.கரும்பலகையை ஒட்டி ஒரு நல்ல மேடை கீழே..ஆசிரியர்கள் அந்த மேடையில் சேர் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.அவ்வளவு அருமையாக அந்த பி.டபுள்.யூ.பொறியாளர் கட்டிக்கொடுத்தார்.எல்லா வகுப்பறைக்கும் மின் விசிறி(பேன்) வசதி செய்து கொடுத்தார்.சிறுகுடியில் அரசுப்பள்ளியில் அப்போது சுமார் 700 பேர்வரை படித்தார்கள்.நிறையப்பேர் மலேசியாவுக்குப் போய் சம்பாரித்து வந்தவர்கள்.,அந்த ஊரில் இருந்தார்கள்.எனவே பேருந்து வசதி,ரோடு போன்ற வசதிகள் எல்லாம் அப்போதே அந்த ஊரில் இருந்தது…” என்று குறிப்பிட்டார்.

எத்தனை அலுவலங்கள் ஏறி இறங்கி இருக்கிறார்.எத்தனை அதிகாரிகளைப் பார்த்து பேசியிருக்கிறார்.எத்தனை கொடையுள்ளம் கொண்டவர்களைச் சந்தித்து மாணவர்களுக்காகக் கேட்டிருக்கிறார்.எளிய வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காக எத்தனை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என நினைத்திருக்கிறார். நினைக்க நினைக்க வியப்புதான்.சிறுகுடி அரசுப்பள்ளியில் படித்த,படிக்கின்ற எத்தனை பேருக்கு,இப்படி நம் ஊர் அரசுப்பள்ளியில் வசதிகள் செய்து கொடுக்க இப்படி ஒருவர் பாடுபட்டார் என்பது தெரியும் என்பது தெரியவில்லை.

 இந்த உலகத்தில் அனுபவம் என்பதுதான் பெரிய சொத்து.ஒவ்வொருவரும் நமது அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறோம். சில அனுபவங்களை சொற்களால்  நமது குடும்ப வாரிசுகளுக்கு கடத்துகிறோம். அப்படித் தலைமுறை தலைமுறையாக நமக்கு கிடைத்த அனுபவங்கள் என்பது தனி.ஆனால் எழுத்தின் வழியாகக் கடத்தும் அனுபவம் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவமாக மாறுகிறது.அந்த அனுபவம் பொதுத்தன்மை பெறுகிறது.

அனுபவத்தைக் கடத்துவதற்கான நல்ல வழி எழுதுவதுதான்.இன்றைக்கு சமூக ஊடகங்கள் காலம்.எல்லோரும் எழுதும் காலம்.பலர் முக நூலில் ,வலைத்தளத்தில் என்று எழுதுகிறார்கள்.பல அனுபவப்பகிர்வு நடைபெறுகிறது.

திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் தனது ‘ நட்பெனும் நந்தவனம் ‘ நூலில் ஒரு நூலினைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். “ ஆசானிடம் எப்படி நாள் கடந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை விவரிக்கிறது செவ்வாய்க்கிழமைகளில் மோரியுடன் என்கிற மிட்ச் ஆல்பம் எழுதிய நாவல்.தன்னுடைய நோய்வாய்ப்பட்ட சமூகவியல் பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்து,ஆறுதலாகப் பேசி,நட்புடன் நடந்து அவருடைய வாழ்க்கை அனுபங்களை ஞானப்பிழிவாக ஒரு மாணவன் பெறுவதுதான் அந்த நூலில் கரு “ என்று விவரிப்பார்.

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு ‘செவ்வாய்க்கிழமைகளில் மோரியுடன்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்தேன்.படித்ததை எனது தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.‘செவ்வாய்க்கிழமைகளில் மோரியுடன்’ புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் பல்வேறு வடிவங்களில் இணையதளத்தில் கிடைக்கிறது.வாசித்துப்பார்க்கலாம். 

https://ofhsoupkitchen.org/tuesdays-with-morrie

https://www.supersummary.com/tuesdays-with-morrie/summary/

என்னைப் பொறுத்தவரையில் 1998 முதல் சென்ற ஆண்டு நவம்பர் 24வரை எனது தலைமை ஆசிரியர் அவர்கள் வழிகாட்டிக் கொண்டே இருந்தார். பல விசயங்களை மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக அவரின் தொடர்பு இருந்தது.இலக்கியம் பற்றிப் பேசுவார்,காந்தியைப் பற்றிப் பேசுவார்,பெரியார் பற்றிப் பேசுவார், கல்வி பற்றிப் பேசுவார்.நடப்பு அரசியல் பற்றிப்பேசுவார்.பல விசயங்களைப் பற்றிப் பேசிவிட்டு, ‘இப்படி இலக்கியம்,வரலாறு,தத்துவம் ‘இவற்றைப் பற்றி எல்லாம் எல்லோரிடமும் பேச முடிவதில்லை.பேசினாலும்  பலரால் அதைப் புரிந்துகொள்ளவும் முடிவதில்லை.அதனாலேயே உங்களை அடிக்கடி சந்திக்க நினைக்கிறேன்.பேச நினைக்கிறேன். நீங்கள் வந்து அப்படி பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி " என்பார்.அவர் மூலமாக எனக்குக் கிடைத்த அனுபவப்பகிர்வுகள் பல.

                                                   (தொடரும்)

No comments: