Saturday 10 June 2023

அண்மையில் படித்த புத்தகம் : பனையோலை(நாவல்)

 

அண்மையில் படித்த புத்தகம் : பனையோலை(நாவல்)

நூல் ஆசிரியர்               : ஐரேனிபுரம் பால்ராசய்யா

பதிப்பகம்                    : புஷ்டகா டிஜிட்டல் மீடியா லிமிடெட்

                       பேச  : 7418555884,பெங்களூரு.

முதல் பதிப்பு                 : 2023

மொத்த பக்கங்கள்            : 218,விலை ரூ 240

 

ஒரு நாவல் என்பது எழுத்தாளனுக்கு விரிந்த களத்தைக் கொடுத்து தன் மனதுக்கேற்றவாறு எழுதுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது.அப்படி நாவல் கொடுக்கும் வாய்ப்பினை இந்த நூலின் ஆசிரியர் ஐரேனிபுரம் பால்ராசய்யா மிக நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார் .அதற்கு அவர் தன் பகுதி,நாகர்கோவில் பகுதி வட்டார வழக்கு மொழியினை எடுத்திருக்கிறார்.சில சொற்கள் புரியவில்லை என்றாலும் கூட கதை ஓட்டத்தில் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

 இந்திய ஒன்றியம் என்பது மிக வித்தியாசமானது.குறிப்பிட்ட சிலருக்கு பிறவி அடிப்படையில் வாய்ப்பையும்,மிகப்பலருக்கு வறுமைமையும் ஏழ்மையையும் கொடுக்கும் ஜாதி அமைப்பைத் தன்னகத்தே கொண்டது.அப்படி ஜாதிப் படிக்கட்டில் அடித்தட்டில் இருக்கும் இளமதி என்பவரைப் பற்றிய வாழ்க்கைச்சித்திரம்தான் இந்த நாவல்.

 இந்த நாவலில் மொத்தம் 13 அத்தியாயங்கள் இருக்கின்றன.இந்த நாவலின் நாயகன் இளமதியின் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றிச்சொல்லும் முதல் சில  அத்தியாயங்கள் மிகக் கனமான அத்தியாயங்கள். ஐரேனிபுரம் பால்ராசய்யா  புகுந்து விளையாடியிருக்கிறார்.இளமதியின் 8-வது பிறந்த நாளில் இந்த  நாவல் ஆரம்பிக்கிறது.சாறா அத்தைக்கு புட்டு வாங்கிப்போய்க் கொடுக்கும் சிறுவன் இளமதியின் செயல்பாட்டின் அடிப்படையில் அந்த பகுதியில் நிலவும் தீட்டைப் பற்றிக்குறிப்பிடுகிறார்.’தண்ணீருக்குப் போனால் தீட்டு என்று கோரவிடாமல் அடிப்பார்கள்’ என்று குறிப்பிடும் நாவலாசிரியர் ‘தீட்டு பார்க்கும் நம்பூதிரிகளோ,நாயன்மார்களோ,பிள்ளை சமூகத்தினரோ அந்த ஏரியாவில்  இல்லை.இருந்தாலும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் எண்ணிக்கையில் அதிகம் இருந்ததால் அங்கும் தீட்டு இருந்தது’ என்று குறிப்பிடுகிறார்.அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படிகள் போன்ற இந்த ஜாதி அமைப்பில் அல்லல்படும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலை மிக உருக்கமாக பாத்திரங்கள் வழியாகப் புலப்படுத்துகிறார்.

8 வயது சிறுவனாகத் தொடங்கும் இளமதியின் வாழ்க்கை,அவனின் ஆரம்பப்பள்ளி வாழ்க்கை,உயர் நிலைப் பள்ளி வாழ்க்கை,+1..+2 வாழ்க்கை,அப்புறம் அவனது கல்லூரி வாழ்க்கை என்று காட்டும் நாவல் ஆசிரியர் அத்தனை நிலைகளிலும் அவனை சுற்றிச்சுழலும் வறுமையையும் இணைத்து சொல்லிக்கொண்டே செல்கிறார்.பின்பு கல்லூரிக் காலத்தில் காதல் வயப்படுவதும் பின்பு அரசு வேலைக்கு செல்வதற்காக ஜாதிச்சான்றிதழுக்காக அவர் அலைவதும் ,வேலை வாய்ப்பில்லாமல் போவதும் அதனால் அந்தக் காதல் கைகூடாதவாறு காதலியின் தாய் பார்த்துக்கொள்வதையும் எதார்த்மாகச்சொல்லிச்செல்கிறார்.கதை ஓட்டம் தொய்வில்லாமல் செல்கிறது.



 இந்த நாவலுக்குள் போவதற்கு முன் வாழ்த்துரையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி இந்த நாவல் எது பற்றியது என்பது பற்றியும் நாவல் பற்றியும் தன் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.நான் எப்போதும் போல நாவலைப் படித்துமுடித்தபின்புதான் தோழர் மலர்வதியின் வாழ்த்துரையைப் படித்தேன்.மிகச்சுருக்கமாக ஆனால் நாவலை முழுவதுமாகப் படித்து உள்வாங்கிக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகிழ்ச்சியைக் கொடுத்தது.’மறைக்கப்படும் ,மறக்கப்படும் ஒரு இனத்தின் வாழ்வியலை தூக்கி நிறுத்த போராடும் ஒரு இளைஞனின் வாழ்வியலே இந்த ‘பனையோலை ‘நாவல் என அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார்.

 

என்னுரையில் ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள் ‘பனை மரத்திலிருந்து வெட்டப்படும் பனையோலைகளைக் கொண்டு பாய்,பெட்டி முடையும் கணியான் சமூகத்தினரின் வாழ்வியலை,வலிகளை,கலாச்சாரத்தை,பண்பாடுகளை…அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை,எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள்,சாதிய ஏற்றத்தாழ்வுகளால் மெல்ல மெல்ல விலகிச்செல்லும் ஒரு காதலையும்,ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் தங்களை கணியான் என்று சொல்லிக்கொண்டு அரசை நம்பவைத்து சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டதும்,கணியான் சமூகத்தினரை வஞ்சித்த நிகழ்வுகளை இந்த  நாவல் விவரிக்கிறது ‘என்று மிகச்சரியாகவே கொடுத்திருக்கிறார்.

 70,80 ஆண்டுகளுக்கு முன்னால் இட ஒதுக்கீட்டிற்காக பொய்ச்சான்றிதழ் பெற்றவர்களின் குழந்தைகளுக்கும் அந்த இட ஒதுக்கீடு கிடைக்கிறது.ஆனால் உண்மையானவர்களுக்கு கிடைக்கவில்லை என்னும் வேதனையை இந்த நாவலில் விரிவாக விவரித்திருக்கிறார்..ஜாதிகள் வாரியான கணக்கெடுப்பு எடுத்து இதனைப் போன்ற தவறுகளை எல்லாம் களையவேண்டும் என்ற எண்ணத்தை இந்த நாவல் உண்டாக்குகிறது.

 இந்த நூலாசிரியர் பற்றி குறிப்பிடும்போது 13 நாவல்கள்,4 சிறுகதைத்தொகுதிகள்,3 ஒருபக்கக் கதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டவர் என்ற குறிப்பு இருக்கிறது.அதனால் இயல்பான நடை ஓட்டமாக இந்த நாவல் அமைந்திருக்கிறது. இடையில் ஒரு அத்தியாயத்தில் வரும் பேய்க் கதைகள் இந்த  நாவலில் ஒட்டாமல் இருப்பதாக எனக்குத் தோன்றியது.ஓர் உண்மைக்கதைக்குள் கதை ஓட்டத்திற்கு தடங்கல் போலவும் அந்த அத்தியாயம் தோன்றியது.மற்றபடி இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதை. மிக நன்றாக சொல்லியிருக்கிறார்.  வாழ்த்துகள் ,பாராட்டுகள் இந்த நாவல் ஆசிரியர் அவர்களுக்கு.

 

2 comments:

இடைவெளிகள் said...

ஐயா வணக்கம் தங்களின் இந்த புத்தக மதிப்பீட்டு உரை எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்களுக்கு எனது அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்த்தும்

முனைவர். வா.நேரு said...

வணக்கம்.மகிழ்ச்சி அய்யா...தொடர்ந்து எழுதுங்கள்.