Sunday, 23 November 2025
பொறியாளர் க.சி.அகமுடை நம்பி அவர்களின் பிறந்த நாள் விழா..
Saturday, 22 November 2025
கவிதை பாடிக்கொண்டிருந்த வானம்பாடி
ஈரோட்டு வானில் கவிதை
பாடிக்கொண்டிருந்த வானம்பாடி ஒன்று இன்று விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கவிதை புனைவதே
தன் வாழ்க்கை என்று தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துப் பாடிக்கொண்டிருந்த பறவை அது.
ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !
ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?
வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?
எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !
தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !
எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !
வா. நேரு -
நன்றி : எழுத்து.காம்- 18.2.2014
11 ஆண்டுகளுக்கு
முன் எழுதிய கவிதை. அய்யா தன்னுடைய 92-ஆம் வயதில் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்திருக்கின்றார்
.நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வீரவணக்கத்தை பகுத்தறிவு
எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன். தனது கவிதைகளால்
அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்றென்றும் வாழ்வார். தமிழ் இலக்கிய உலகம் இருக்கும்வரை
அவரது புகழ் வாழும்.அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும், தோழர் அகன் போன்ற
அவரது கவிதை வழி வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தtத்தைத் தெரிவிக்கிறேன்.
முனைவர்
வா.நேரு, மாநிலத்தலைவர்,
பகுத்தறிவு
எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.
Thursday, 20 November 2025
எங்களுக்கும் வலிக்கிறது ...
ஊடகத்துக்காரன் காட்டும்
கடவுள் வெளிச்சமெல்லாம்
உண்மை வெளிச்சமென…
விட்டில் பூச்சி போய்
டியூப்லைட் வெளிச்சத்தில்
மோதி விழுந்து சாவதுபோல்
கூட்டத்துக்குள் சிக்கி
அய்யகோ எங்கள் உறவுகள்
திக்கித் திணறுகிறார்களே!
மூச்சுத் திண்றிச் சாகின்றார்களே…
சொர்க்கம் கிடைக்குமென
மெக்காவிற்குப் போய்
பேருந்து தீப்பிடித்து
‘அய்யோ கடவுளே !
காப்பாற்று எங்களை
எனக் கதறி அழுதபோதும்’
குழந்தைகளைக் கூடக்
காப்பாற்றவில்லையே கடவுள்…!
எங்கள் உடன்பிறப்புகளின்
இறப்பு..துன்பம்...
எங்களுக்கும் வலிக்கிறது
..
எனினும் இல்லாத கடவுளை
நோக்கி எங்கெங்கோ
பயணம் செய்தாலும்
உதவ மாட்டார் கடவுள்
என்னும் உண்மையைச்
சொல்ல வேண்டியிருக்கிறது…
ஏனெனில் கடவுள் இல்லை..
கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!
வா.நேரு, 20.11.2025
Monday, 17 November 2025
பசுமை நிறைந்த நினவுகளின் பகிர்வாய் ஒரு சந்திப்பு...
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1981 முதல் 1984
வரை பிஎஸ்சி
வேதியியல் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள பியர்ல்
ஹோட்டலில் 9
11 2025 காலையில்
நடைபெற்றது மொத்தம் படித்தவர்கள் 38 பேர் அதில் மூன்று பேர் இறந்து விட்டார்கள் மீதி இருக்கக்கூடிய 35 பேரில் வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் வர
இயலாது எனத் தெரிவித்தவர்கள் தவிர்த்து 20
பேர் வருவார்கள்
என்று நண்பர்கள் சொல்லி இருந்தார்கள் ஆனால் 11 பேர் தான் வந்திருந்தோம். ஒரு வித்தியாசமான அனுபவமாக காலை 11 மணி போல ஆரம்பித்த அரட்டை சிரிப்பு உற்சாகம்
மாலை ஐந்து மணி வரை நீடித்தது.
1984 க்கு பிறகு இவர்களில் பல
பேரை நான் நேரில் சந்திக்கவில்லை. 1984க்கு பிறகு தாங்கள் என்னென்ன செய்தோம் என்பதை, எப்படி இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமைக்கு
வந்திருக்கிறோம் என்பதை தங்கள் சொற்களாலேயே நண்பர்கள் சொன்னார்கள் 1984 முதல் 2025 வரையிலான
தன் வாழ்க்கை
வரலாற்றை சுருக்கமாக சிரிப்போடும் உற்சாகத்தோடும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது
மகிழ்ச்சியாக இருந்தது.
சித்தர் சிங் நெல்லை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து எப்படி எம் எஸ் சி
வேதியியல் அலிகார் யூனிவர்சிட்டியில் சென்று படித்தேன் என்பதை,அதற்கு வந்த அனுமதி கடிதத்தை,கையில் அம்மா வைத்திருந்த சிலுவாட்டுப்
பணத்தை வாங்கிக்கொண்டு முதன் முதலாக சென்னை முதல் டில்லி வரை விமானத்தில் சென்றதை,அங்கு சேர்ந்ததை ஒரு சிறுகதையைப் போலச்
சொன்னான். அதற்கு பின்பு வடநாட்டில் சில இடங்களில் வேலை பார்த்தது அதற்கு பின்பு
வளைகுடா நாட்டிற்கு சென்று பணியாற்றியது மிகவும் இயல்பாகச் சொன்னான். கிரீன்
கார்டு கிடைத்தது என்று கனடாவிற்கு தானும் தன் மனைவியும் தன் குழந்தையும் சென்ற
கதையை அங்கு சென்று ஒரு ஆறு மாதம் வேலை இல்லாமல் அவதிப்பட்டது கையில் இருந்த
பணமெல்லாம் கரைந்து
நிற்கதியாக
நிற்கப் போகும் நிலையில் தனக்கு வேலை கிடைத்தது, அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சம்பாதித்தது பற்றிச் சொன்னான்.
. இப்போது அமெரிக்க நாட்டில் வாழ்வதையும், பல மருந்து வேதியியல் கம்பெனிகளுக்கு ப்ராஜெக்ட் கைடாக இருப்பதையும் அமெரிக்காவில் வீடு, சொந்த ஊரில் வீடு என்று வசதியாக இருப்பதையும் இந்தியா வந்திருக்கும் இந்த நிலையில் உங்களை எல்லாம் சந்திப்பது பெரும் மகிழ்ச்சி என்று அதே கனத்த குரலில் கனமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டதை ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பின்னால் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
மதிவாணன்,தன்ராஜ்,சித்தர்சிங்,செல்வகணேசு,பாலகிருஷ்ணன்,துளசிராமன்,நான்(வா.நேரு),சித்திரைராஜா,வின்ஸ்டன்
அதைப்போல சுகாதாரத் துறையில் பணியாற்றிய மதுரையில் இருக்கும் துளசிராமன், அருகில் தான் பல ஆண்டுகளாக நாங்கள் இருந்திருக்கிறோம் ஆனால் தொடர்பில்லை. அவர் தனது கதையைச் சொன்னார்.படிக்கும்போதே ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலைக்கு அழைப்பு வந்ததை,நன்றாகப் படிக்கிறாய் தொடர்ந்து படி என்று எங்கள் பிரின்ஸ்பால் டிசி கொடுக்க மறுத்ததை,பின்பு டி.சி. வாங்கிப் பணியில் சேர்ந்ததை சொன்னார். பல ஊர்களில் நேர்மையாகப் பணியாற்றி ,கீழே இருக்கும் ஊழியர்களிடம்,அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்று ஓய்வு பெற்றது,ஓய்வு பெறும் நிலையில் நல்ல போஸ்டில் இருந்ததை,தனது பிள்ளைகள் நன்றாகப் படித்து வெளி நாட்டில் இருப்பதை,இப்போது அமைதியாக இணையரோடு இருப்பதைச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.
திருச்செந்தூருக்கு அருகில் ஆசிரியராக,தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கும் வின்ஸ்டன் , கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைக்காமல் இருந்ததை,எம்.எஸ்.ஸி போவதற்கு முயன்றதைப் பின்பு பி.எட் சேர்ந்து பட்டம் பெற்றதைச் சொன்னார். பின்பு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தது,3 பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டது,இப்போது மகனோடும், மனைவியோடும் வீட்டில் ஓய்வில் இருப்பது என்று தன் கதையை கலகலப்பாக எதார்த்தமாகச் சொன்னார். .
உடன்குடியைச் சார்ந்த சந்திரபோஸ், பி.எட். முடித்ததை,வேலைக்கு முயற்சிகள் செய்ததை,
பின்பு கிடைக்காமல் கடை வைத்ததை .கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில்
தானாக வேலை கிடைத்ததை,ஆசிரியராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றிருப்பதைச்சொன்னார்.. சந்திரபோஸ் மிகத் தாமதமாக தனக்கு வேலை
வந்தது,
தாமதமாக மணம்
முடித்ததையும் இயல்பாகச் சொன்னார்.தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து
கொண்டார்.
நானும் 1984-ப் பிந்தைய என் கதையைச் சொன்னேன்.1984 இல் எனக்கும் ,நண்பர் சீனிவாசனுக்கும் தொலைபேசித் துறையில்
திண்டுக்கல்லில்
வேலை
கிடைத்தது.வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்தது ,பின்பு திருமணம் முடித்தது. பி.எஸ்.ஸி
படிப்பை முடிக்க பிரின்ஸ்பால் திரு
டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் ஆலோசனை வழங்கி உதவியது.தொலைபேசித்துறையில் விருது
வாங்கியது .எம்.ஏ படித்தது,
பி.எச்.டி
படித்தது மற்றும் பல பட்டங்களை வாங்கியது. பின்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில்
பதவி உயர்வு பெற்றது. இந்த 2020 இல் விருப்ப ஓய்வு பெற்றது. நான் எழுதிய ஏழு புத்தகங்கள் வெளியாகி இருப்பது
என்று கூறி என்னுடைய தொழிற்சங்க அனுபவம், தொலைபேசித் துறை அனுபவம், இலக்கிய அனுபவம்,
இயக்க அனுபவம்
என்று பல அனுபவங்கள் இருக்கிறது என்று நண்பர்களுக்குச் சொன்னேன்.
மொத்தத்தில் கல்லூரிக் காலத்தில் இருந்த உற்சாகத்தோடு,அதே சிரிப்போடும் விளையாட்டோடும் நடந்த சந்திப்பு உண்மையிலேயே மிகப்பெரிய டானிக்காக உள்ளத்திற்கு அமைந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.


.jpg)

.jpg)

.jpg)

