Sunday, 8 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை...முனைவர் சு.சோமசுந்தரி

 

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை

ஆசிரியர்                    : முனைவர் சு.சோமசுந்தரி

வெளியீடு     : கவியமுது பதிப்பகம், திருநின்றவூர் ,9283275782

முதல்பதிப்பு : அக்டோபர் 2025,மொத்த பக்கங்கள் 154, விலை ரூ 150

சில்லாட்டை என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 25 கதைகள் உள்ள தொகுப்பு. இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிறையப் பெண்கள் உயர் கல்வி படித்திருக்கிறார்கள்.சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்பு பெண்கள் பலர் எழுதுகிறார்கள்.தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி ,சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அதனைப் படைப்பாக மாற்றித் தருகிறார்கள்.அந்த வகையில் முனைவர் சு.சோமசுந்தரி அவர்களின் முதல் படைப்பாக வெளிவந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு பாராட்டுக்குரியது.



தனது என்னுரையில்  இந்த நூலின் ஆசிரியர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ‘ நமக்குள்ளிருக்கும் மன இறுக்கங்களை உடைப்பதற்கான வழியாக எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது.இதைப் படிக்கும் எல்லோரும் உணரமுடியும். நான் எழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கான வெளி திறந்ததுபோல உணர்ந்தேன்.எனக்கான சிறகுகள் விரிய ஆரம்பித்தன. “ என்று குறிப்பிடுவது சிறப்பு.

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை ‘அத்துமீறல்’.அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் அத்துமீற நினைக்கும் அவரது மேல் அதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்குமான போராட்டத்தை விவரிக்கும் கதை.அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒரு வழிகாட்டல் போலக் கொடுத்திருக்கிறார்.’தவறுகள் குற்றங்கள் அல்ல ‘ என்னும் சிறுகதையில் ,அத்து மீறி தவறு செய்யும் ஆண் அதிகாரி பேசுவதாக அந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருப்பார்.இந்தக் கதையில் பெண் பேசுவதாக வருகிறது.

மறைந்த போன அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிரும் கதையாக ‘அப்பா ‘ என்னும் கதை இருக்கிறது. நிறைய நினைவுகளைச் சொல்லும் கதை.25 கதைகளையும் ஓரிரு நாளில் படித்து முடித்தேன்.

இந்த 25 கதைகளில் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள்.எவரும் அந்நியமாகத் தெரியவில்லை.பெரும்பாலான கதைகளில் பெண்கள் எப்படி எல்லாம் இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையே விவரிக்கின்றன. சில்லாட்டை என்னும் கதைத் தலைப்பில் அமைந்த கதையும் கூட ஒரு பெண்ணின் அவலத்தையே சொல்கிறது.

“ சிறிய வடிவத்தில் இருந்தாலும் ஒரு முழுமையான உணர்வையும்,நடைமுறையையும் வாசகருக்குச் சிறுகதை மூலம் யதார்த்தமாகப் பெண்ணியலை,சமுதாய நிகழ்வுகளை,கதைகளாக மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளார் ஆசிரியர் “ என்று அணிந்துரையில் முனைவர் பேரா வே.பூங்குழலி பெருமாள் குறிப்பிட்டிருப்பது உண்மை.

“ அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச்செல்லும் ஆசிரியரின் கதை சொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது.பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியுள்ளார் “ என்று அணிந்துரையில் முல்லை அமுதன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவர் படைத்திருக்கும் இந்த 25 கதைகளின் தொடக்கமுமே இயற்கை வர்ணனையாக இருக்கிறது. இதனை “ஓவ்வொரு கதையின் தொடக்கத்திலும் இயற்கை வர்ணனை.அவை நம்மை நிலவோடு கட்டிப்போடுகின்றன.புல்லின் நுனியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பனித்துளியில் முகம் பார்க்கவைக்கின்றன” என்று கவிஞர் விஜயகிருஷ்ணன் மகிழ்வுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.



இயல்பான கதைகள். இன்றைய நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள்தான் பல கதைகளின் மையக்கரு.’குளியலறை விபத்துகள்’ என்னும் கதை மட்டும் நான் வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலைக் கொடுத்தது. தற்செயலாக நடப்பது ,அப்படியே நடக்கும் என நம்புவதே மூட நம்பிக்கை என்பது என் கருத்து.

கதை சொல்லல் கச்சிதமாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களாகக் கதைகளில் கொடுத்திருக்கிறார்.அளவான விவரிப்போடு கதைகளை நகர்த்திச் செல்கிறார். தொடர்ந்து இவர் நிறையச் சிறுகதைகளை எழுதி வெளியிடலாம்.இன்னும் விரிவாகக்கூடச் சில கதைகளை இவர் விவரித்து எழுதலாம். படித்துப் பாராட்ட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. எழுத்துப்பிழைகள் இல்லாத பதிப்பு. முதல் சிறுகதைத் தொகுப்பை அருமையாகக் கொண்டு வந்திருக்கும் தங்கை முனைவர் சு.சோமசுந்தரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

8 comments:

முனைவர் சு.சோமசுந்தரி said...

மிக்க நன்றி ஐயா. என்னுடைய கதையின் நிறை, குறைகளை வெளிப்படையாகத் தங்களின் விமர்சனத்தில் முன்வைத்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி.

தமிழ்முனி said...

நூலாசிரியருக்கு வாழ்த்துகள். தொடர்ந்து தங்களது படைப்புகளை தமிழ்ச் சமூகத்திற்கு தரவேண்டும் என்பது எனது கோரிக்கை.

Anonymous said...

அருமை வாழ்த்துகள் சகோதரி

முனைவர். வா.நேரு said...

நன்றி....நூலாசிரியர் சார்பாக

முனைவர். வா.நேரு said...

நன்றி...நூலாசிரியர் சார்பாக....

Anonymous said...

நமக்குள்ளிருக்கும் மன இறுக்கங்களை உடைப்பதற்கான வழியாக எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது.இதைப் படிக்கும் எல்லோரும் உணரமுடியும். நான் எழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கான வெளி திறந்ததுபோல உணர்ந்தேன்.எனக்கான சிறகுகள் விரிய ஆரம்பித்தன. “

-பிரியும் உங்கள் சிறகுகளில் நாங்கள் எங்கள் விரல்கள் பதித்து கண்டறியும் தூது செய்திகளாய் உங்கள் சிறுகதைகள் தமிழ் உலகத்திற்கு கிடைத்திருக்கிறது அம்மா🕊️🪽 ....அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....✨ நிச்சயமாக உங்களுக்கு புத்தகத்தை வாசிப்பேன் ....♥️
செல்வி முத்துமீனா

முனைவர். வா.நேரு said...

@செல்வி முத்துமீனா... நன்றிங்க... நூல் ஆசிரியர் சார்பாக