Sunday, 19 April 2026

ஆனந்தக் கூத்தாடுவோம்! (முனைவர் வா.நேரு)

 





ஆனந்தக் கூத்தாடுவோம்!

                          (முனைவர் வா.நேரு) 

 

. ,

திராவிட இயக்கத்தின் முதன்மை வேர்களுள் ஒன்று  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.திராவிட இயக்கத்து தலைவர்களின் ,தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று,அவரது கவிதைகளால் என்றும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்பவர் பாரதிதாசன் ,புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் ஆவார். அவர் புதுமைக் கருத்துக்களையும்,மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக் கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார்.சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களைத் துணிந்து கூறிய பெரும்புலவர் ஆவார்என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டி மகிழ்ந்த கவிஞர் புரட்சிக்கவிஞர் ஆவார். பாரதிதாசன் நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ள தொண்டினை மறந்தாலும் மறக்கலாம், ஆனால் மறைக்க முடியாது. பாரதிதாசன் இலக்கியச்சுவையை அனுபவிக்க இலக்கணம் கற்றிருக்க வேண்டியது இல்லை.பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நம் இரத்தத்தோடு இரத்தமாகக் கலக்கின்றன. உணர்ச்சி நம் நரம்புகளிலே ஊறுகிறது;சுவைத்தால் ருசிக்கிறது  என்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது சொற்பொழிவில், படைப்புகளில் எல்லாம் புரட்சிக்கவிஞரின் கவிதைகளைக் கொண்டு வந்தார். நாவலர் நெடுஞ்செழியன் பட்டி தொட்டியெங்கும் புரட்சிக்கவிஞரின் கவிதைகளைக் கொண்டு சென்று உரையாற்றினார். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவராக ,93 வயதிலும் 20 வயது இளைஞரைப் போல உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க உரைகளை ஆற்றும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணியின் உரைகளில் புரட்சிக் கவிஞரின் கவிதைகள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றன.

இப்படித் திராவிட இயக்க்த்தின் பெரும் தலைவர்கள் முதல்  எளிய தொண்டர்கள்வரை ,அவர்கள் உள்ளத்திற்குள் புகுந்து உறைந்து கிடந்து, எழுதும்போதும் பேசும்போதும் ஆற்றொழுக்காய் வந்துவிழும் கவிதைகள் புரட்சிக் கவிஞரின் கவிதைகள்.ஆனால் அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர் அவர்கள் உலகப்புகழ் பெறவேண்டிய கவிஞர் . ஆனால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பாரதிக்குப் புகழ்பாடி முற்போக்குகளும் கூட பாரதிதாசனின் புகழை மறைக்க முயற்சி செய்தனர் . இன்றைக்கும் முயற்சி செய்கின்றனர்.

 திராவிட மாடல்ஆட்சியின் சாதனைச் சரித்திரங்களில் மிக முக்கியமான ஒன்று ,புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளான ஏப்ரல் 29-ம் நாளைத் தமிழ் மொழி நாளாகஅறிவித்திருப்பது. தமிழ் மொழி வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியது.திராவிட மாடல் அரசு எல்லாவற்றிற்கும் முன் உதாரணமாக இருப்பதுபோலப் புரட்சிக்கவிஞரின் புகழைப் போற்றுவதிலும் முன் உதாரணமாக இருக்கிறது.

புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாக அறிவிக்கவேண்டும் என்று பல தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை கொடுத்தது மட்டுமல்லாது,தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களிடம் இந்தக் கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைக்கவும் செய்தார்.

.”தமிழ் மொழியின்,தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண்-110-ன் கீழ் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் எனவும்,இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது,தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்,தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்  என்று அறிவித்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி ,கவியரங்குகள் மற்றும் இலக்கியக் கருத்தரங்குகள்.’எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்  என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை மையப்படுத்திச் சென்ற 2025-ஆம் ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன.

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர்,கவிஞர் ஒருவருக்குப் பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.

புகழ் பெற்ற தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்

பள்ளிகளில் மாணவர்களிடையே தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்கப் பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

தமிழ் இசை ,நடனம் மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தவர் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.’தமிழ் வார விழா அறிவிப்புக்குப் பல்வேறு வகையில் முயற்சியெடுத்த தமிழர் தலைவருக்கு விழாக்குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.(விடுதலை 30.04.2025). இந்நிகழ்வில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது தேர்தல் காலம். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையவேண்டும் என்பதற்காகத் தனது வயது, உடல் நோவு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல்,தன்னுடைய தேர்தல் பரப்புரையைத் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கும் இந்த நாளில்(6.4.2026) நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம். இன்னும் தீவிரமாக ஆசிரியர் அவர்கள் சுட்டும் திசையில் பணியாற்றுவோம்.

புரட்சிக்கவிஞர் அவர்கள்,அவர் அளவிற்கு எவரும் தமிழின் சிறப்பைப் பாடியதில்லை என்னும் அளவிற்குத் தமிழ்மொழியைப் பாடியவர்.ஆனால்  தமிழ்மொழியின் சிறப்பை மட்டும் அவர் பாடியவரல்ல. அவர் நாத்திகக் கவிஞரும் கூட. தமிழ்மொழியின் சிறப்பைப் பாடியதுபோலவே கடவுள் மறுப்புக் கவிதைகளையும் பாடியவர்.உடை வெளுக்கும் தோழரைக் கழுதை முன்னேற்றுமா? கடவுள் முன்னேற்றுமா? ‘ எனக் கேட்டவர். காதலுக்கு வழிவைத்து, கருப்பாதை சாத்த கதவு ஒன்று கண்டறிவோம் ,இதிலென்ன குற்றம் ?’ என்று கேட்டவர். இந்த உலகத் தமிழ் வார விழாவில் ,தமிழையும் நாத்திகத்தையும் இணைத்துப்பாடும், வாழும் கவிஞர் ஒருவருக்கும் புரட்சிக்கவிஞர் அவர்கள் பெயரில் விருதும், பரிசும் வழங்கவேண்டும் என்னும் கோரிக்கையை நாம் வைக்கிறோம்.

தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் மாபெரும் பெற்றியைப் பெறவேண்டும். வெற்றி உறுதியாகக் கிட்டும்..அப்படி திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைகிறபோது இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.தமிழ்வார விழாவின் இறுதி கொண்டாட்ட நாளன்று(மே 5) திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவதைக் காண்போம். களிப்புறுவோம்.திராவிட இயக்கம் வாழ்க! வாழ்க! என ஆனந்தக் கூத்தாடுவோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் (ஏப்ரல் 15-30),2026

 




No comments: