Monday, 27 July 2026

அண்மையில் படித்த புத்தகம் : ஒற்றைப்பல் ( நாவல்)

 

அண்மையில் படித்த புத்தகம் : ஒற்றைப்பல் ( நாவல்)

ஆசிரியர் : கரன் கார்க்கி

வெளியீடு டிஸ்கவரி பேலஸ்,,சென்னை-78.

முதல் பதிப்பு : 2016

,மொத்த பக்கங்கள் 184 ,விலை ரூ 160

கலைஞர் நூற்றாண்டு நூலகம் எண் : 894.8113.KAR;1

ரு நாவலின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திடுவது அதன் கதாபாத்திரங்கள்தான்.அந்த வகையில் மறக்கவே இயலாத கதாபாத்திரங்களை-  கோயில்தாஸ் என்ற கிழவன், சாரதா லீனா மேரி என்ற சாரதா,குஷ்பூ என்னும் மூவரைப் படைத்திருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர். குழப்பமான மன நிலையில் இருக்கும் கிழவனைப் பற்றிய விவரிப்போடுதான் நாவல் தொடங்குகிறது.சென்னையின் தெருக்கள், இடங்கள் என்று விரியும்  நாவல் குஷ்பூ என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறபோது,சென்னையின் விளிம்பு நிலை மக்கள் வாழும் வீடு என்று சொல்லப்படும் மூடிய திரைகளைக் கொண்ட குடிசைகளைப் பற்றியும் அங்கு இருக்கும் வாழ்நிலை பற்றியும் இரத்தமும் சதையுமாக விவரிக்கிறது.




எந்த நாவலிலும் நான் படிக்காத சென்னையில் வசிக்கும் அன்றாட உழைத்து உண்ணும் மக்களைப் பற்றிய விவரிப்பு நாவல் முழுவதும் இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் மனித நேயமும், உதவும் மனப்பான்மையும்,எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் , அடிகளும்,மிதிகளும் அதைத் தாண்டி நிற்கும் அன்பும் பரிவும்கரன் கார்க்கி வேறு ஒரு உலகத்தைத் தன் எழுத்தின் மூலம் நமக்குப் படைத்துக் காட்டியிருக்கிறார்.

கடவுள் மூலமாக வாழ்க்கையைப் பார்ப்பவன்கோயில்தாஸ் என்றால் வாழ்க்கையின் மூலமாகக் கடவுள் என்னும் ஏற்பாட்டைப் பார்ப்பவளாகச் சாரதா..சாரதாவின் மன நிலையில் கடவுளைப் பற்றி ஏற்படும் சந்தேகம், கடவுளைக் கும்பிடுகிறவர்களின் வேறுபட்ட தன்மைகள்,நடவடிக்கைகள், மெல்ல மெல்ல அந்தக் கடவுள் என்னும் கருத்திலிருந்து மாறுபட்டு, கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வருவதை அருமையான கதையாக ஆக்கியுள்ளார்.கிறித்துவ மதத்தில் அளவுக்கு மீறிய பற்றுதல் கொண்டு பின்பு எழுந்த கேள்விகளுக்குப் பதில்களை உறவுகளிடம் தேடி,அது கிடைக்காமல் நாத்திகராக மாறி தொடர்ந்து பதிவிடும் அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் தருமி அவர்கள் எனக்கு நினைவுக்கு வந்தார்.

சாராதாவுக்குக் கடவுள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அதை  ஓங்கி ஒலிக்காமல் தன் கணவன் கோயில்தாஸிடம் மட்டும் அவ்வப்போது வெளிப்படுத்தும் உரையாடல்களால் வெளிப்படுத்துவது அருமை.மிக நுட்பமாக அவளின் உணர்வுகள், நடவடிக்கைகளில் கடவுள் என்னும் கருத்து பற்றிய மாற்றங்களை அற்புதமாக இலக்கியமாக வடித்துக்கொடுத்துள்ளார் நாவல் ஆசிரியர்.சாரதா என்னும் கதாபாத்திரம் பற்றியே நிறைய எழுதலாம். ஆனால் நீங்கள் வாசித்துப்பார்க்கவேண்டும்.வாசிப்பதன் வாயிலாக எழுத்துகளின் வழியே அந்த உணர்வைப் பெறவேண்டும் என்பதால் நான் நிறைய விவரிக்கவில்லை.

அன்பை மட்டுமே வாழ்க்கையில் செலுத்தத் தெரிந்தவனாக, நாவல் முழுக்க முழுக் கடவுள் நம்பிக்கையும் , கடவுளுக்குத் தொண்டு செய்யும் ஒரு சேவகனாகவும் மட்டுமே வரும் கோயில்தாஸ்.வாயில் எச்சில் ஒழுகும் அவனது தோற்றம்,சாரதாவின் மேல் அப்பழுக்கற்ற அன்பைச்செலுத்தும் அவனது உள்ளம், கடவுள் பற்றிச் சாரதா சொல்வதால் ஒரு நிமிடம் சிந்தித்து , பின்பு அதைத் தாண்டி கடவுள் சேவகம் செய்யும் கோயில்தாஸ்.’கடவுளின் தோட்டத்தில் பூப்பறிக்க எனது சாரதாவை அழைத்துக்கொண்டாயே, என்னை அழைத்துக்கொள்ள மாட்டாயா கடவுளேஎன்று கடவுளிடம் வேண்டும் கோயில்தாஸ், வெவ்வேறு இடங்களுக்கு மறதியால் சென்று மாட்டிக்கொள்ளும் கோயில்தாஸ், தனது வாயில் இருக்கும் ஒற்றைப்பல்லால் தொடர்ந்து வலியைச் சந்திக்கும் கோயில்தாஸ், அவனுக்குப் பணிவிடை செய்யும் அவனது மகன், அவனது மருமகள் என்று பெரும்பாலும் இந்த நாவல் கோயில்தாசைச் சுற்றியே சுழல்கிறது.

 நன்றியுடன்என்னோடு கடந்த காலங்களில் உரையாடிய, நிகழ்காலத்தில் உரையாடுகிற,எதிர்காலத்தில் உரையாடப்போகிற முதியவர்களுக்கு …’  என்று இந்த நூலின் முதல்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நாவல் ஆசிரியர். முதிய வயதில் இருக்கும் கோயில்தாஸை விவரிப்பதன் மூலமாக நம் வீடுகளில் முதியவர்கள் இருந்தால் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்னும் அக்கறை கலந்த எழுத்தும் இந்த நாவல் முழுக்க இருக்கிறது. மறதியால் அவதியுறும் கிழவனைக் குஷ்பு எப்படிக் கவனித்துக்கொள்கிறாள், உணவு கொடுக்கிறாள், அவனைக் கூப்பிட்டுக்கொண்டு பல் மருத்துவமனைக்குப் போகிறாள் என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கும் விவரிப்பு உள்ளத்தைத் தொடுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்திற்கு வருகிறார் என்று சொன்னவுடன், விளிம்பு நிலை மக்கள் வாழும் இடத்தை எல்லாம் மறைப்பு போட்டு மறைத்து வைத்து காட்டினார்கள் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களின் வாழ்விடத்தை,ஒரு தடுப்புக்குள்ளேயே அனைத்தும் நடைபெற வேண்டிய அவலத்தை, குஷ்புவின் உச்சகட்ட இலட்சியமே ஒரு கழிப்பறையும் படுக்கையறையும் இருக்கும் வாடகை வீட்டிற்குக் குடிபோகவேண்டும் என்பதே என்பதைக் காட்டுவதின் மூலமாக உழைக்கும் மக்களின் வேதனையை விவரித்து,உலகம் முழுக்கப் படிப்பவர்களின் மனதைத் தொடும் வண்ணம் எழுதியிருக்கிறார் கரன் கார்க்கி.

 நாவலின் முதல் சில பக்கங்கள் மெதுவாக நகர்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வாசிக்க, வாசிக்க ஈர்ப்பும் வியப்பும் ஏற்படும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த நாவலைப் படித்து முடித்த இரவு முழுக்க இந்த நாவல் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இரு வேறு உலகமாக இருக்கும் இந்த இந்தியா, என்று ஒன்றாகும்?,எல்லோரும் சமமாக,எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பது எல்லாம் எப்போது நடக்கும் என்று எண்ணம் ஓடியது.

கோயில்தாஸ் போன்றவர்கள், கடவுளைப் பற்றிய அதீத நம்பிக்கையால் ,கடவுள் ஒரு நாள் வருவார் என்று எதிர்பார்ப்பவர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள். பொய்யை உண்மையாக நம்பும் அவர்கள் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார் கரன் கார்க்கி.

‘நன்றியால் நெகிழ்கிறேன்’ என்று தன்னுடைய என்னுரையைக் கரன் கார்க்கி கொடுத்திருக்கிறார். தன்னுடைய குழந்தைப் பருவம், பாலியப் பருவம், கதை எழுதுவதற்கு முன் இருந்த பருவம் என்று பல பருவங்களைப் பட்டியலிட்டு, இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உருவாகக் காரணமானவர்கள் யார் என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார். அற்புதமான என்னுரை..துளியும் பம்மாத்து இல்லை.

மாக்சிம் கார்க்கியின் நூல்களைப் படித்து எனது பெயரை கரன் கார்க்கி என்று மாற்றிக்கொண்டேன் என்று இந்த நாவல் ஆசிரியர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். உண்மைதான். தமிழ் நாட்டின் மாக்சிம் கார்க்கி- தோழர் கரன் கார்க்கி என்று தாராளமாக நாம் குறிப்பிடலாம்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர்,எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு. நாவலை வாசிக்காதவர்கள் கட்டாயம் ஒருமுறை நாவலை வாசித்துப்பாருங்கள்.வறுமையும் பிணியும் வதைக்கும் நிலையிலும் அன்பை மட்டுமே செலுத்த தெரிந்த அந்த அற்புத மனிதர்களை, மனுசிகளைப் புரிந்து கொள்ள இந்த நாவலின் வாசிப்பு மிகவும் உதவும். உலக இலக்கிய வரிசையில் வைக்கப்படவேண்டிய நாவல் இது. படிக்கப்பட வேண்டிய நாவல் இது.


வா.நேரு, 28.07.2026

@ மதுரை.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

 

8 comments:

  1. எழுத்தாளர் ரெஜினா சந்திரா27 July 2026 at 22:28

    சமீபத்தில் தான் நானும் இந்த நாவலைப் படித்தேன். வித்தியாசமான கதை.
    உங்கள் விமர்சனம் அருமை.
    (வாருங்கள் படிப்போம் -வாட்சப் குழு வழியாக)...

    ReplyDelete
  2. இரா.சிந்துபிரியா கமல்28 July 2026 at 00:11

    ஒற்றைப் பல் பதிவு படித்தேன். அய்யா.அருமையாக கண்முன் கதைக்களத்தைக்
    காட்டியிருக்குறீங்க.🙏

    ஒற்றைப் பல்

    எல்லாம் ஒன்றாக இருந்தால், எழுந்தால் தனமே!.
    ஒன்றிருந்து
    எதுவுமில்லை, இழந்தால்
    ரணமே!.
    அன்பை ஆயுள்வரை
    வலியே கினும்
    வழங்கி களிப்பவர்
    வறியோரே!.

    அடிப்படைத் தேவைக்கு
    போராடும்
    வாழ்வு
    ஒரு புறம்.
    ஆடம்பர
    போதைக்கு
    வாதாடும்
    வாழ்வு
    மறுபுறம்.

    தனிமை தரும் வலி,
    முதுமை வரும்
    விழி!
    தோழா!.
    அன்புடன்
    அரவணைப்புடன்
    தோள்களை
    ஆதரி!.
    இளமையிலிருந்தே
    விதை.,
    முதுமையிலினிக்கும்.,
    சுளை.....
    இரா.சிந்துபிரியா கமல்

    ReplyDelete
  3. கரன் கார்க்கி28 July 2026 at 01:11

    சிறந்த பதிவு
    மகிழ்ச்சி 🍁

    ReplyDelete