தாத்தாவின்
நினைவு நாளில் பேரனின் நினைவுகள்…
உங்களை வரைந்த
புகைப்படங்களில் மட்டுமே
பார்த்திருக்கிறேன்…
ஒரு முறையாவது உங்கள்
உண்மையான முகத்தைப் பார்த்துவிட
எங்கெங்கோ தேடி அப்பா
கொண்டுவந்த வாலிபால் குழுப்
புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்,
செயற்கை நுண்ணறிவில்
வரையச்சொல்லி கேட்டிருக்கிறேன்..
,
தானம் தர்மம்
கேட்போருக்கு
அள்ளி வழங்கும்
உங்களை ஊர்மக்கள்
ஆண்டவர் எனச்
சொன்னார்கள்
மாபெரும்
வாலிபால்
விளையாட்டு
வீரர் நீங்கள்…
அறப்பணியை
மேற்கொண்ட
ஆசிரியர்
நீங்கள்….
கடனில்
தத்தளித்த
உறவினர்
குடும்பத்தை
மீட்டெடுத்த
மாண்புமிகு
மரியாதைக்குரியவர்
நீங்கள்…
ஆண்டவர் மகன் என
நிருபித்துவிட்டாயடா நீ
என வெள்ளச்சாமி நாடார் மளிகைக்
கடைக்காரர்
சொன்னதில் இருந்து ….
சென்னையில்
சுந்தரேசன்
டாக்டர்
வாலகுரு மகன்
எனச் சொன்னதும்
அகம்
மலர்ந்து வரவேற்றது வரை
அத்தனைப் பெருமை
அப்பாவுக்கு
உங்கள் மகன்
என்பதில்…
முதுகில்
பெரிய மச்சம்
இருப்பதால்
மந்திரவாதி
கடத்திச்சென்று
விடுவானென
மடியிலேயே
அப்பாவை
வைத்திருந்தவர்
நீங்கள் ….
அன்றொரு
நாள் மாலை
மார்பு வலியில்
மறைந்துவிட்டீர்கள்
இன்றுவரை
அந்தமடி கிடைக்காமல்
அரை நூற்றாண்டாய் அப்பாவை
ஏங்கவைத்துச்
சென்றுவிட்டீர்களே
தாத்தா..
.
உங்களை எப்படி
நினைவு கொள்வது
நீங்கள்
விட்டுச்சென்ற
தானதர்மப்பணிகளை
உங்கள் நினைவுநாளில்
தொடர்வதே உங்கள்
நினைவுகளை உயிர்ப்புடன்
வைத்திருக்கும்
ஆகச்சிறந்த வழி தாத்தா ..
உங்களை
ஒருபோதும் பார்த்ததில்லை
வாலகுரு வாத்தியார்
வழி வாரிசு
என்பதில்
ஒருதனி மரியாதை
தான் தாத்தா…
உள்ளுக்குள்ளும்
ஊருக்குள்ளும் எப்போதும் ...
-சொ.நே.அன்புமணி
28.10.2026



No comments:
Post a Comment