Monday, 31 March 2025
Saturday, 22 March 2025
இன்குலாப் ஜிந்தாபாத்....
தோழர்
பகத்சிங்
முழங்கிய
‘இன்குலாப்
ஜிந்தாபாத்’
இந்தி
மொழிச்சொல்லாக
எனக்குத்
தெரியவில்லை…
சில நேரங்களில்
புரட்சி
ஓங்குக என்னும்
மொழிபெயர்ப்பை
விட
‘இன்குலாப்
ஜிந்தாபாத்’
நாடி
நரம்புகளில்
ஊடுருவதை
முழக்கம்
இடுகையில்
பார்த்திருக்கிறேன்..
ஆண்டுகள் பல போனபின்பும்
போபால் மாநாட்டின்
ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டே
முழக்கமிட்ட சீக்கிய சகோதரனின்
முழக்கம் காதுக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
'இந்து முஸ்லீம் சீக்....குஹே..
பை..பை,...பைபை'
சில சொற்கள்
மொழிகடந்து
நம் மனதிற்குள்
ஊடுருவி
விடுகின்றன!
‘தோழர்
பகத்சிங் ஜிந்தாபாத்’...
இன்னுயிர்
போகுமென்ற
நிலையிலும்
அவரும்
அவரது தோழர்கள்
இராஜகுருவும் சுகதேவும்
இதே நாளில் அன்று
இணைந்து
முழங்கிய
'ஜிந்தாபாத் ஜிந்தாபாத்'
‘இன்குலாப்
ஜிந்தாபாத்’
‘நாஸ்திகம்
ஜிந்தாபாத்’
வா.நேரு,23.03.2025
யோசித்துக்கொண்டிருக்கிறேன்...
தோழர்,இந்தக் கவிதை
என்னைப் பற்றி
எழுதியதுதானே என்றார் அவர்..
மறைக்க இயலவில்லை..
ஆமாம் என்றேன் மெல்லிய குரலில்
எளிதில் கண்டுபிடிக்கும்
நிலையில்தான் எனது
கவிதைக்கருவும் கதைக்கருவும்…
என்னைச் சுற்றி நிகழும்
நிகழ்வுகளே என் கவிதைக்குள்ளும்
என் கதைக்குள்ளும்…
எங்கோ நிகழ்வுவதுபோல்
எழுதுதல் வேண்டும் எனும்
அறிவுரைப்படி எல்லாம்
எழுதிப்பார்க்கிறேன் ஆனாலும்
எளிதில் அடையாளம்
கண்டு கொள்கிறார்கள்..
எவரையும் இழித்துப் பழித்து
எழுதுவதில்லை எனினும்
என் செய்வது ? எழுதலாமா?
எழுதுவதை நிறுத்தலாமா?
Sunday, 16 March 2025
சுயமரியாதை சுடரொளிகள் நாள்
சுயமரியாதை சுடரொளிகள் நாள்
(முனைவர் வா.நேரு)
திராவிடர் கழகத்தால் ,அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது .இந்த நாளில் அன்னை மணியம்மையார் அவர்களை நினைவில் கொள்வதோடு, அவர்களுக்கு முன்னும் பின்னும் சுயமரியாதை இயக்கத்திற்காக, சுயமரியாதைக் கருத்திற்காக உழைத்தவர்களை நினைவில் கொள்ளும் நாள் இந்த நாள். தன்னுடைய உறவுகளை, தன்னுடைய ஊரை, தான் பிறந்த ஜாதியை ,தான் பிறந்த மதத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக் களமாடிய சுயமரியாதை இயக்க வீரர்களை,வீராங்கனைகளை நினைவில் கொள்ளும் நாளே சுயமரியாதைச் சுடரொளிகள் நாளாகும்.
சுயமரியாதைச் சுடரொளிகள் என்னும் அந்தப் பெயர் கொடுக்கும் பெருமிதம் அளப்பரியது.சுயமரியாதைச் சுடரொளிகளில் சிலர் பணக்காரர்கள். பெரும்பான்மையினர் ஏழைகள்,அனைத்து ஜாதிகளைச்சார்ந்தவர்களும் சுயமரியாதைச்சுடரொளிகளாக இருக்கிறார்கள்- பார்ப்பனைர்களைத் தவிர. சுயமரியாதைச் சுடரொளிகள் என்பவர்கள் மிக அரிதான தொண்டர்களைக் கொண்ட ஒரு படையில் அணிவகுத்தவர்கள், போராடியவர்கள், களத்திலே மடிந்தவர்கள் என்று பலவிதமான தோழர்களை நாம் நினைவில் கொள்ள முடியும்.
என்னுடைய கடந்த 40 ஆண்டுகாலத் திராவிடர் கழக இயக்க வரலாற்றில் நினைத்துப்பார்க்கிறேன்.எப்படி
மதுரை மாவட்டம் என்று பார்த்தால் அய்யானார்குளம் ம.பவுன்ராசா,கருப்பட்டி நல்.லோகநாதன், அய்யா பே.தேவசகாயம்,அம்மா அன்னத்தாயம்மாள் தேவசகாயம்,வழக்கறிஞர் கி.மகேந்திரன்,பொறியாளர் சி.மனோகரன்,திருப்பரங்குன்றம் அழகர்சாமி,ஹார்விபட்டி ஆசிரியர் இராமசாமி,முனிச்சாலை துரைராசு,செல்லூர் எல்.ஆர்.ராசன், கைவண்டிக்கருப்பு, வண்டியூர் சேது,மாகளிபட்டி பாலகிருஷ்ணன்,ஆசிரியர் சுப்பிரமணி,சொக்கலிங்க நகர் இராமமூர்த்தி,சக்கர நாற்காலியில் வரும் சின்னக்கண்மாய் முருகேசன், மீனாம்பாள்புரம் சீனி அய்யா,பீபிகுளம் நவநீதகிருட்டிணன்,எல்.ஐ.சி. மு.கனி,விராட்டிபத்து அய்யாச்சாமி எனப் பல சுயமரியாதைச்சுடரொளிகள் கண்ணுக்கு முன்னால் வருகின்றனர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் பற்றி நினைத்து இவர்களைப் பற்றி எல்லாம் யோசிக்கிறபோது கண்களில் கண்ணீர் வருகிறது.உணர்ச்சி மேலிடுகிறது.குடும்பத்தோடு இணைந்து இயக்கத்திற்காக உழைத்தவர் பலர்,குடும்பத்தை எதிர்த்து இயக்கத்திற்காக உழைத்தவர் சிலர் என அவர்களைப் பற்றிய சிந்தனைகள் மனதிற்குள் ஓடுகிறது.
சின்னாளபட்டி விடுதலை மணி என்று ஒரு தோழர் இருந்தார். பெரியகுளத்தில் நான் இருக்கும் பொழுது அவர் தன்னுடைய உழைப்பால் வெகு சொற்பமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு அதில் வாழ்ந்து வந்தார். ஆனால் விடுதலைப் பத்திரிகையைக் காண்கின்ற அனைவரிடத்திலும் விற்பார். அதில் எந்தவிதமான மனச் சஞ்சலமும்,தயக்கமும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு முயற்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். இன்னும் கேட்டால் கொஞ்சம் படித்ததால் என்னைப் போன்றவர்கள் ஒதுங்கி இருக்கக்கூடிய வேலைகளில் சின்னாளப்பட்டி விடுதலை மணி போன்ற தோழர்கள் மிகப்பெரும் செயல்களை ஆற்றுவதைப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கும்.
மதுரை முனிச்சாலை பகுதியில் இருந்த அய்யா துரைராஜ் அவர்கள் நன்றாகப் பாடுவார். புதிய புதிய தோழர்களை இயக்கத்தில் சேர்ப்பதற்கு அப்படி ஒரு ஆர்வம் காட்டுவார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னுடைய முழு வாழ்க்கையையும் திராவிடர் கழகத்திற்காக அர்ப்பணித்த தோழர் அவர் முதலில் ஒரு கடை வைத்திருந்தார் அப்புறம் சின்னச் சின்ன வேலைகளை செய்து கொண்டு மிகப்பெரும் தொண்டினை செய்து கொண்டிருந்தார்.அதைப்போல மதுரை செல்லூர் பகுதியில் இருந்த அய்யா எல்.ஆர்.ராசன் அவர்கள்,தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,அன்னை மணியம்மையார் போன்றவர்களின் படங்களை ஸ்டிக்கராகப் போட்டு விற்பார். நம் இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை விற்பார்.மதுரையில் எங்குத் திராவிடர் கழகக்கூட்டம் போட்டாலும் அய்யா எல்.ஆர்.இராசன் அவர்கள் இருப்பார்.வறுமையில் வாழ்ந்த தோழர் அவர்,ஆனால் கொள்கை வளமிக்கவர்.அவர் இருக்கும் காலத்தில்தான் மதுரை செல்லூர் பகுதியில் பல புதிய தோழர்களை உருவாக்கினார்.
மதுரை ஹார்விபட்டியில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இராமசாமி அவர்கள் ,அப்படி ஒரு சிக்கனக்காரர்.இணையர் இல்லாத நிலையில் தானே சமைத்து,தானே துவைத்து வாழ்ந்து வந்தவர்.ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார்.பல ஆண்டுகளாக விடுதலையின் வாசகர்.நெருக்கடி நிலை காலத்தில் தான் ஆசிரியராகப் பணியாற்றியபோது தான் விடுதலையை எப்படிப் பெற்று வாசித்தேன் என்பதை எல்லாம் ஒரு கதை போல ஒரு முறை நேரில் சந்தித்தபோது கூறினார்.அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் திருச்சி,தஞ்சை வல்லம் பகுதியில் நடைபெறும் கல்விப்பணிகளை,நம் இயக்க கல்வி நிறுவனங்களை எல்லாம் பல நாட்கள் சுற்றிப்பார்த்தார்.அய்யா ஆசிரியர் அவர்களின் கல்வி அறப்பணியைப் புரிந்துகொண்டு தனது பங்களிப்பாக ரூபாய் 32 இலட்சத்தை நன்கொடையாக அளித்தார்.அய்யா ஆசிரியர் அவர்கள் அவரின் பெயரால் ஒரு கல்விக் கட்டடத்தையே நிறுவியுள்ளார்கள்.வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் அவரைப் பற்றி எழுதி மகிழ்ந்தார்கள்.
இன்றைய நாளில் பொது வாழ்க்கைக்கு வர நினைக்கின்ற ஒரு நபர் அரசியலில் ஈடுபட வேண்டும், தான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று பலவித கனவுகளோடு தான் பொது வாழ்க்கைக்கு வருகின்றார்கள். ஆனால் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களைப் பொறுத்த வரை தனக்கு என்ன கிடைக்க வேண்டும்?, கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள் அல்ல மாறாக ஆண்டாண்டு காலமாக நம்மீது சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டம், பஞ்சமர் பட்டம் போக வேண்டும் என்பதற்காகத் தங்களைக் கருப்பு மெழுகுவர்த்திகளாக உருக்கி கொண்டவர்கள்.தங்களுக்கு ஏதும் கிடைக்காது என்றாலும் இந்தக் கொள்கை பரவவேண்டும்,சம நீதி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்,பெண்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக வாழ்க்கைத் தீயில் தங்களை உருக்கிக்கொண்டவர்கள்,அதனால் எல்லோருக்கும் வெளிச்சம் கிடைப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள்.
தோழர்களே,சுயமரியாதைச் சுடரொளிகள் நாளில் நாம் நம் கண்களை மூடி ,இயக்கத்திற்காக வாழ்ந்து மறைந்த நம்மைச் சுற்றி இருந்த தோழர்களை நினைவில் கொள்வோம்.அவர்களின் எதிர் நீச்சல் வாழ்க்கையை மீண்டும் நம் மனதிற்குள் கொண்டு வருவோம்.எத்தனை இடர்பாடுகள் வந்தபோதும்,எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அஞ்சாமல் கொள்கைப் போர் புரிந்த அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு உளமார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.அந்த வீரவணக்கத்தின் வழியாக இன்னும் வேகமாக,தீரமாகச் சுயமரியாதை இயக்கப்பணிகளை ஆற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொள்வோம்.
வாழ்க அன்னை மணியம்மையார் !
வாழ்க சுயமரியாதைச்சுடரொளிகள்..!
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 16-31,2025
Friday, 14 March 2025
அம்மா செண்பகம் இராமசுவாமி புகழ் நிலைக்கட்டும்....
பெரியாரின் தத்துவத்தை
இளையோர் மனங்களில்
ஏர்போல் உழுது
ஆழ
விதைக்கும் அன்பர்
இவர்…
‘பெரியாரைப் புரிந்துகொள்வது
எப்படி?’ –ஓர்
அற்புதமான
நூலினை ஆய்ந்தறிந்து
கொடுத்த பெருந்தகை
இவர்..
‘கலகக்காரர் தோழர்
பெரியார்’
எனத் தொடங்கி கடந்த
கால் நூற்றாண்டுக்காலத்தில்
தந்தை பெரியார்
பற்றி
ஐந்து நிஜ நாடகங்களைக்
கொடுத்தவர் இவர்…
இந்த நாட்டில்
சிவப்புச்சட்டை
ஆட்சி மலர இந்தக்
கருப்புச்சட்டைக்காரர்தான்
தேவையென்பதை ஆய்ந்து
ஏற்றுக்கொண்டவர்
இவர்…
விதம்விதமாய்ப்
பெரியாரை
உற்று நோக்குகிறார்..
வேறுபட்ட வடிவங்களில்
நாடகமாய் அரங்கேற்றுகிறார்…
இளையோர் பங்கேற்பால்
அரங்கங்களை அதிர
வைக்கிறார்..
பெண்களின் வெடிச்சிரிப்பால்
பழமைவாதிகளைப்
பயந்தோட வைக்கிறார்…
கருப்பும் நீலமும்
சிவப்பும்
இணைந்து போராடும்
ஓர் எதிர்காலத்தைக்
கட்டமைக்கிறார்
தன் நாடகங்களின்
வழி…
27 ஆண்டுகளுக்கு
முன் மறைந்த
தன் இன்னுயிர்
இணையர்
அம்மா செண்பகம்
இராமசுவாமி
அவர்களின் நினைவாய்
அவர் நினைவு நாளில்
தான் எழுதிய நூல்களின்
வழியே
தமிழ் சமூகம் அம்மாவை
நினைவு கூரக் களம்
அமைக்கிறார்…
மார்க்ஸ் மேல்
அளவற்ற காதல்
கொண்ட ஜென்னிபோல்
மார்க்ஸ் நினைவு
நாளில் மறைந்திட்ட
அம்மா செண்பகம்மேல்
அளவற்ற
காதல் கொண்ட தோழர்
மு.இராமசுவாமியை
நேரில் கண்டோம்
மனதில் உவகை கொண்டோம்..
எப்போதும் தோழர்
மு.இராமசுவாமியை
இயக்கிக் கொண்டே
இருக்கும்
அம்மா செண்பகம்
இராமசுவாமி
புகழ் நிலைக்கட்டும்!வாழ்க!
Tuesday, 11 March 2025
வாசிக்கும் மனம்...
ஒரு நல்ல
புத்தகத்தின்
வாசிப்பு
நம்மை
எங்கெங்கோ
அழைத்துச்செல்கிறது…
அத்துவானக்
காட்டில்
துயரத்தில்
அல்லல்படும்
அவர்களின்
துயரத்தில்
நம்மையும்
கூட
பங்குபெற
வைக்கிறது..
ஏதுமற்ற
பழங்குடிப்பெண்ணாக
இருந்தாலும்
அவளின்
கள்ளங்கபடமற்ற
நகைப்பும்
வாழ்ந்து
காட்டவேண்டும்
எனும்
உள்ளத் துடிப்பும்…
தன் துயரை
மட்டுமே
எண்ணி
அழுதுகொண்டிருக்காமல்
தன்னைப்போல்
பாதிக்கப்பட்டு
அழுதுகொண்டிருப்பவர்களுக்காக
நீளும்
அவளின்
உதவிக்
கரங்களும்…
உன்னதமாக
வாழ்வது எப்படி
என்னும்
உண்மையைப்
போதிக்கிறது
எழுத்தின் வழியே
‘அரிவாள்
ஜீவிதம்’ நாவலின்
ஜெகந்தி…ஏனோ படித்து
முடித்தபின்பும்
மனதிற்குள்
வாழ்ந்து
கொண்டிருக்கிறாள்…
கதை
என்னமோ அவள்
சாகும்
இடத்தில்
இருந்துதான்
தொடங்குகிறது !
வா.நேரு,11.03.2025
Thursday, 6 March 2025
நெருப்புச்சிலிர்ப்புகள்...கவிஞர் ம.வீ.கனிமொழி
அழகிய வடிவமைப்புடன் ,அமெரிக்காவில் இருக்கும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் 'நெருப்புச்சிலிர்ப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் தாயார் ,திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா வீரமர்த்தினி அவர்கள் இந்த நூலினை எனக்குத் தபாலில் அனுப்பிவைத்தார். நன்றிகள் அவருக்கு.இனி 'நெருப்புச் சிலிர்ப்புகள் ' நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை தங்களின் வாசிப்பிற்கு...