Sunday 7 April 2024

கவிதை கவிதையாக இருக்குமா?

 

மொழி பெயர்ப்புக் கவிதை

வாசிக்கும் தருணங்களில்

ஏதோ ஒன்று குறைவது

போலவே தோன்றுகிறது…

 

அயல் நாட்டுக் கவிஞரின்

வரிகளை அப்படியே தருவதா?

அவரின் கருத்துகளை உள்வாங்கி

நம் சொற்களில் சொல்வதா?

எனும் குழப்பம் மூலக்கவிஞனின்

கவிதையைக் கொன்று விடுகிறதோ?

 

ஒரு கவிதை  எப்போதும்

எனக்கு ஒரு சித்திரம் …..

முழுமையாகப் பார்த்தபின்பு

எனக்குள் நானே என்னை

வரைந்து கொள்ள

உரிமை அளிக்கும்

சித்திரமாக கவிதை எனக்கு..

எனக்கான உணர்வுகளோ

இணைப்பதற்கு  ஏதும்

இல்லாத 

வெறும்

சொற்களாய் சில

மொழி பெயர்ப்புக் கவிதைகள்…

 

செயற்கை நுண்ணறவு

யுகத்தில்

எல்லாக் கவிதைகளையும்

இயந்திரங்களே

மொழி பெயர்க்கும்

எனச்சொல்கிறார்கள்…

 

ஒற்றைச்சொடுக்கில்

ஒரு நூறு மொழிகளில்

மொழி பெயர்ப்பாகிவிடும்

ஒரு கவிதை என்கிறார்கள்

 

மனிதர்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளிலேயே

சாரமற்று

சொற்களின் மொழிபெயர்ப்புகளாய்

சுருங்கி விடும் இக்காலத்திற்கு

மாற்றாய்

இனிவரும் காலங்களில்

இயந்திரங்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளில்

உயிர் இருக்குமா?

உள்மனது இருக்குமா?

கவிதை கவிதையாக இருக்குமா?

 

                             வா.நேரு,07.04.2024

 

 

 

2 comments:

Anonymous said...

மிகச் சரியான கேள்வி அய்யா... மொழிபெயர்ப்பில்
கவிதைகள் உயிர்ப்போடு இருக்கும் வாய்ப்பு இல்லை தான் அய்யா...

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சியும் நன்றியும் ..தங்கள் பெயர் வரவில்லை பதிவில்..