Tuesday 26 February 2013

தடுக்க இயலுமோ ?

முணு முணுப்புகள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன‌
மதத்திற்குள்ளும்
மதத்திற்கு வெளியிலும்
மதங்களின் பெயரால்
நடக்கும் கொலைகள்பற்றி

சத்தம் பெரிதானால்
குரல்வளை அறுக்கப்படுமோ
எனும் அச்சத்திலேயே
பெரும் சத்தமாய்
சத்தமிட எத்தனிப்பவர்கூட‌
பூனைகளைக் கண்டு
பதுங்கும் எலிகள்போல‌
பம்மி பம்மியே
முணு முணுக்கின்றனர்

இளைய சமூகம்
மூத்த சமூகத்தின்
மூதுரைகளை ஏற்க‌
மறுப்பதுவும்
கடவுள் படைத்த உலகம் பற்றி
எதிர் கேள்விகள்
கேட்பதுவும்
பரிணாம வழியில்
சிந்திப்பதும்
பெரும் கோபத்தைக்
கிளப்புகின்றன மதவாதிகளுக்கு !

ஆண்டாண்டு காலமாய்
ஆட்சி நடத்திய மதங்கள்
காட்சிப் பொருட்களாய்
மாறிடுமோ எனும் கவலை
கோபத்தைக் கிளப்புவதோடு
மொத்தமாய்
கோபக்குரல் எழுப்பவும்
தூண்டுகின்றன !

அறிவியல் யுகத்தில்
பழைய பஞ்சாங்கங்கள்
கிழிந்து தொங்குவதைத்
தடுக்க இயலுமோ
உன்னாலும் என்னாலும் ?

--------
எழுதியவர் :வா. நேரு

நாள் :2013-02-13 22:44:56

நன்றி : எழுத்து.காம்


1 comment:

முனைவர். வா.நேரு said...

agan :
முற்றிலும் இன்றைய பிள்ளைகள் உள் வாங்க வேண்டிய அருமையான படைப்பு இது..

அன்றியும் முணுமுணுப்புகள் முழக்கங்களின் கருவறை தோழரே...!

முழக்கங்கள் புரட்சியின் விடியல்...!

புரட்சி ஒன்றே மறுமலர்ச்சியின் வாசல்..!வாசலில் னொரு விடியலை எதிர்நோக்க முதுமையின் விரல் பிடிக்கும் இளைய கூட்டம் வேண்டும்..நம்மிடம் உள்ள முதுமை கூட்டம் மதங்களில் இருந்து -அரசியல் மதம்...ஊழல் மதம்....மதங்களின் மீதான மதம்...- முழுமையாக வெளி வந்தால் மட்டுமே எதுவும் இங்கு அரங்கேறும்...

nantri : eluthu.com