Sunday 10 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

                                   குமுதம் இதழில் வெளிவந்த ;வெற்றிக்கு ஒரு புத்தகம் ' என்னும் தொடரின் சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்று நூலின் பின் அட்டையில் அச்சிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். 32 நூல் அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல் என்றாலும், தமிழில் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ள அனைத்து நூல்களும் ஆங்கில நூல்கள். ஆங்கில நூல்களில் நல்லவற்றை , பயனுள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்து, அதனை முழுவதுமாக உள்வாங்கி, அந்த நூல் சொல்லும் கருத்தை சுருக்கமாகவும் , மனதில் நன்றாகப் பதியும் வண்ணமும் என்.சொக்கன் சொல்லியிருக்கின்றார். பாராட்டத்தக்க பணி.

                                     சுய முன்னேற்ற நூல்கள் தமிழிலும் வருகின்றன, ஆங்கிலத்திலும் வருகின்றன, ஆங்கில நூல்கள் வெறும் அறிவுரைகளின் கோர்வையாக இருப்பதில்லை, ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அந்தப் பிரச்சனையை அக்கு வேறாக, ஆணி வேறாகப் பிரித்து அலசி பின்பு பிரச்சனைக்கு இப்படி , இப்படி தீர்வு எனச்சொல்வது போல பல ஆங்கிலப்புத்தகங்கள் அமைகின்றன, அப்படிப்பட்ட பல புத்தகங்களை எடுத்துக்கொடுத்திருக்கின்றார் திரு.என்.சொக்கன் அவர்கள்.

                            " The Houdini solution, Monkey Business, 8 Patterns Of Highly Effective Entrepreneurs, Juggling Elephants, The One Minute Sales Person, The Secret Monkey Business, The Family Wisdom, The Last Lecture, Every Child has a Thinking Style, SUMO, Imagining India, Why So Stupid, Outliers, The one minute apology, Drop the Pink Elephant, The Case of the  Bonsai Manager, A Better India- A Better World, Peaks and Valleys, The Leader in Me, Whale Done, How Full is Your Bucket, Sandbox Wisdom,Fish for Life, The 7 Levels of Change, The Magic Of Thinking Big, Sway, Made to Stick, The Shark and the Gold Fish, Say it Like Obama, The Aladdin Factor, The Dip " மேலே சொல்லப்பட்டிருக்கும் 32-ம் நூல் மதிப்புரையில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் தலைப்புகள். யார் நூலின் ஆசிரியர், எந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்த நூலின் ஆசிரியர் எந்த நூலால் புகழ் பெற்றவர் ( The Family Wisdom - ஆசிரியர் ராபின்சர்மா The monk who sold his Ferrari என்னும் நூலால் புகழ்பெற்றவர்) போன்ற பல செய்திகளைச்சொல்லி, அந்த நூல் சொல்லும் முக்கியமான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். வெற்றிக்கு சில புத்தகங்கள் என்னும் இந்த நூலில் அவர் சொல்லும் நூலை மட்டுமல்ல , அந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலையும் படிக்கத்தூண்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

                             வேல் டன் என்னும் புத்தகத்தின் மதிப்புரை அருமையாக உள்ளது. திமிங்கலத்தைப் பழக்கப்படுத்தும் முறையும் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் என்னும் முறையில் 'நம்பிக்கை முக்கியம் ' என்று அழுத்தம் திருத்தமாகச்சொலவது அருமை. நம்பிக்கை இல்லா உறவோ, நட்போ வேதனையைத்தான் தருமே தவிர சாதனையைத் தராது  என்பது உண்மைதானே .

                          நீ எந்தத்துறையில் சாதனை புரிய நினைத்தாலும் குறைந்த பட்சம் பத்து ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதனைச்சொல்லும் Outliers புத்தக விமர்சனம் , உழைக்காமல் உட்கார்ந்துகொண்டு பொத்துன்னு நமக்கு மேன்மை வந்துடும் என்று ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு அலைந்தால் ஒன்றும் கிடைக்காது என்பதனை மறைமுகமாகச்சொல்கிறது எனலாம்,

                           ராண்டி பாஷ் என்னும் பேராசிரியர் கொடுத்த The Last Lecture , அது சொல்லும் செய்தி , இறக்கப்போகிறோம் என்று தெரிந்த நிலையில் ராண்டி பாஷ் அவர்கள் கொடுத்த அந்த நம்பிக்கையூட்டும் பேச்சு, மற்றவர்களுக்கு கொடுத்த தன்னம்பிக்கை , வழிகாட்டுதல் பற்றிய விவரம் அந்தப்புத்தகத்தைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக்கொடுத்திருக்கின்றது. 

                                                         ஸ்டீபன் கவே அவர்கள் எழுதிய The Leader in Me என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு ' The Seven Habits of Highly effective People '  பற்றியும் கொடுத்துள்ளார் என்.சொக்கன் அவர்கள் . வாழ்வியல் சிந்தனைகள் நூலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம்  , நான் தேடி  வாங்கி பல பேருக்கு  படிக்கவும் , சில பேருக்கு பரிசாகவும் கொடுத்த நூல். உண்மையிலேயே  இந்தப் புத்தகத்தைப் படித்தால் உன்னிடத்தில் உறுதியாக மாற்றம் நிகழும் என்று நம்பிக்கையோடு நண்பர்களிடம் நான் சொல்லும் புத்தகம்.

                                                             படிக்கும் நமது பிள்ளைகள் ஆங்கிலத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஆங்கில நூல்களைப் படிக்கச்சொல்கின்றோம். அவர்களும் இர்விங் வாலஸ், ஜேம்ஸ் காட்லி சேஸ் என்று வாசிக்கின்றார்கள். வெறும் துப்பறியும் கதைகளாக அவை முடிந்து போகின்றன. அதற்கு மாற்றாக இந்த நூலின் ஆசிரியர் திரு.சொக்கன் அவர்கள் கொடுத்துள்ள நூல்களில் ஒன்றை வாசிக்கச்சொல்லலாம். பரிசாக கொடுப்பதற்கு ஆங்கில நூல் வேண்டுமென்றால் துணிந்து இவர் கொடுத்துள்ள பட்டியலில் இருந்து ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம். நூல்களின் தலைப்பைக் கொடுத்தாலே ,கூகிள் தேடுதளம் பல செய்திகளை நமக்கு அந்தந்த  நூல்களைப்  பற்றித் தருகின்றது. பயன்படுத்தலாம். எம்.பி.ஏ. போன்ற பாடங்கள் படிக்கும் நமது மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறக்க, வாழ்வில் தன்னம்பிக்கையோடு முன்னேற இந்த நூலையும், நூலில் சொல்லியுள்ள நூல்களையும் பயன்படுத்தலாம்.
                              
                                   

                          

2 comments:

Naga Chokkanathan said...

என்னுடைய நூலைத் தங்கள் வாசகர்களுக்கு அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி முனைவர் திரு. வா. நேரு

: என். சொக்கன்,
பெங்களூரு.

முனைவர். வா.நேரு said...

நன்றி திரு.என்.சொக்கன் அவர்களே ! எனது வலைத்தளத்திற்கு- தங்களின் வருகைக்கும், கருத்தினை பதிவு செய்தமைக்கும் நன்றி . வா. நேரு . .