Saturday, 1 February 2014

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ...

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ....

                                 மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூர் திராவிட முன்னேற்றக்கழகக் கிளையின் அவைத் தலைவர், அருமைக்குரிய அய்யா ஜோதி(நாடார்) அவர்கள் இன்று(31-1-2014) மறைந்தார். தி.மு.க. ஆரம்பித்த 1949 முதல் தி.மு.க.வின் உறுப்பினர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்களின் மேல் வற்றாத பாசம் கொண்டவர். சின்னக் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்றுவரை , தி.மு.க. என்னும் கட்சியை சாப்டூரில் வளர்ப்பதற்கும், காப்பதற்கும் ஒரு தீரராய் , ஒரு தனி இராணுவம் போல  செயல்பட்டவர் திரு. ஜோதி அவர்கள்.

                                 ஆரம்ப காலப் பேச்சாளராக இருந்த காலத்தில்  நாஞ்சில் சம்பத் பலமுறை சாப்டூரில் வந்து பேசியிருக்கின்றார். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், கண்மணி தமிழரசன், கோவை மு,.இராமநாதன் போன்ற தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்களையெல்லாம் வரவழைத்து, அவர்களைப் பேச வைத்து, கிராமத்தில் தி.மு.க.வை வளர்த்தவர். வருகின்ற பேச்சாளர்களைத் தன் வீட்டில் உணவளித்து, கூட்டம் முடிந்த பின் திரும்பிச்செல்ல பேருந்து இல்லாமல் போவதால் அவர்களை தனது வீட்டில் தங்கவைத்து மறு நாள் காலை வழிச்செலவிற்கு பணம் கொடுத்து உபசரித்து அனுப்பும் வழக்கம் உள்ளவர்.
திரு. சேடபட்டி முத்தையா அவர்கள் அ.தி.மு.க.வில் சபாநாயகராக இருந்த காலத்தில்,ஊரில் இருந்த பெரும்பாலோர் அவருக்கு ஆதரவாக இருந்த நிலையிலும், இரும்பு போன்ற உறுதியோடு இயக்கம் காத்தவர், தி.மு.க.வை வளர்த்தவர்.

                           பத்திரிக்கையின் வாயிலாகத்தான் கருத்துக்களை கொண்டு செல்ல முடியும் என்று உணர்ந்ததாலோ என்னவோ, கையில் முரசொலி பத்திரிக்கையை வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள நாலைந்து டீக்கடைகளில்,முக்கிய இடங்களில் எல்லாம் முரசொலியை ஒவ்வொருவரிடம் கையில் கொடுத்து படிக்கச்சொல்லி, அதில் வந்திருக்கும் முக்கியமான செய்திகளை, கட்டுரைகளை எல்லாம் விவாதிக்கும் இடமாக அந்த இடத்தை மாற்றி , நடமாடும் முரசொலியாக திகழ்ந்தவர் திரு.ஜோதி அவர்கள். மறைந்த பண்பாளர் அய்யா பி.டி.ஆர் பழனிவேல்ராசன் போன்றவர்கள் எல்லாம், இவரைப் பார்த்தவுடன் 'என்ன ஜோதி நன்றாக இருக்கின்றீர்களா ' என்று கேட்கும் அளவுக்கு மூத்த தலைவர்கள் அனைவரிடமும்  அறிமுகமானவர்.ஆனால் அதனை வைத்து தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளாதவர். 

                      தேர்தல் நேரத்தில் அவரின் பணி தனித்தன்மையாக இருக்கும் . ஊரின் வோட் லிஸ்ட்டை மனப்பாடமாக வைத்திருப்பார். அந்த லிஸ்டில் தி.மு.க. வோட் எது, எது என்று  தெளிவாகத் தெரியும். முதலில் ஒவ்வொரு வார்டாக, தி.மு.க. வின் வோட் எல்லாம்  பதிவாகி விட்டதா என்று பார்ப்பார். விடுபட்ட பெயர்களை கட்சிக்காரர்களிடம் சொல்லி, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று பார், காட்டில் இருந்தால் வந்து ஓட்டுப் போட்டு போகச்சொல் என்று ஒவ்வொரு ஓட்டையும் பதியச்செய்வார். ஊரில் 4000 ஓட்டு இருக்கிறது, அதில் தி.மு.க.வின் ஓட்டு 1600 என்றால், முதலில் அந்த 1600 ஓட்டையும் தி.மு.க. வேட்பாளருக்கு விழவைக்க வேண்டும் என்று திட்டம் இருக்கும். அதற்கு மேல் வரும் ஓட்டு நமக்கு வாய்ப்பு, ஆனால் உறுதியாகத் தெரிந்த ஓட்டு , பதிவாகாமால் போகக்கூடாது என்பதே அவரின் முதல் நோக்கமாக இருக்கும்.

                       தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குப் போயிருக்கின்றார். மதுரை திராவிடர் கழகத்தைச்சேர்ந்த அய்யா பாடகர் துரைராசு அவர்களோடு சிறையில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களை எல்லாம் நகைச்சுவையாகச்சொல்வார். தத்துவார்த்த அடிப்படையில் திராவிடர் கழகக் கூட்டம் எவ்வளவு அதிகமாக நடக்கின்றதோ, அவ்வளவு தி.மு,.க.விற்கு நல்லது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.  ஆதலால்  அடிக்கடி தி.க. கூட்டம் ஊரில் போடுங்கடா என்பார் எங்களிடம். மேடையில் நிறையப் பேசமாட்டார். ஆனால் களப்பணி, களப்பணி, அப்பப்பா...

                       எனது அம்மா மறைந்த திருமதி. முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர். எளிதாக யாருக்கும் நன்கொடை கொடுக்க மாட்டார். கோவில் என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லி விரட்டி விடுவார். ஆனால் திரு. ஜோதி அவர்கள் வந்து கேட்கும் போதெல்லாம் , மாநாடு போன்றவைகளுக்கு மறுக்காமல் கொடுப்பார். "டேய், ஜோதி அண்ணனே வந்து கேட்டு விட்டாரடா, இல்லை என்று எப்படி சொல்ல முடியும்"என்பார் எனது அம்மா. (எங்கள் குடும்பத்திற்கும் அவரின் குடும்பத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எனது அம்மாவும் , திரு.ஜோதி அவர்களின் இணையர் திருமதி சரசு அவர்களும் வகுப்புத் தோழிகள். அதனைப் போல எனது மூத்த அண்ணன் ஜெயராஜூ-ம் அவரின் மூத்த மகன் அண்ணன் மதிவாணன் அவர்களும் வகுப்புத் தோழர்கள். எனது இரண்டாவது அண்ணன் தமிழ்ச்செல்வனும், அவரின் மகள் அக்கா தமிழ்ச்செல்வியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நானும் அவரது 3-வது மகன் இராஜேந்திரனும் வகுப்புத் தோழர்கள். எனது தங்கை சாராதாவும், அவரது 4-வது மகன் கருணாநிதியும் ஒரே வகுப்பு, எனது தம்பி சிவக்குமாரும் அவரது 5-வது மகள் தங்கை பூங்கோதையும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எல்லோரும் எங்கள் கிராமத்தில் ஒன்றாக, ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால் மிக நன்றாக எங்களை அறிந்தவர். தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்க்கையிலும் நாங்கள் உயர வேண்டும் என்று விரும்பியவர். அவரின் இழப்பு தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய இழப்பே.  )

                      நேற்று பெய்த மழையில் முளைத்த விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம், திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று கனவு கண்டு பிதற்றிக் கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க. அழிந்து போகும் என்று சு.சாமி போன்ற ஆட்கள் எல்லாம் உளறிக்கொண்டிருக்கும் வேளையில் , தன்னை முன்னிறுத்தாத ஆனால் இயக்கத்தை , இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்தி அதற்காக தனது உழைப்பை, உதிரத்தை, எண்ணத்தை  செல்வழிக்கும் ஆயிரக்கணக்கான ஜோதிகள் ஊர்தோறும், தமிழகம் தோறும் இருக்கின்றார்கள்.அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் விழுதுகள், வேர்கள்.. எல்லாம்.   திராவிட என்று தனது கட்சியில் பெயரை வைத்துக்கொண்டு, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு , வேரில் நீர் ஊற்ற நிறையப் பேர் கிளம்பி இருக்கின்றார்கள். காணாமல் போவார்கள் விரைவில் உறுதியாய்.  காசு கொடுத்து வளர்ந்த இயக்கம் அல்லடா திராவிட இயக்கம். உதிரத்தில், உணர்வில் கலந்த கொள்கை உத்வேகத்தில் உண்ணாமல், உறங்காமல் உழைத்த,உழைக்கும்  தீரர்களின் கூடாரமடா திராவிட இயக்கம்.


 

                             வீர வணக்கம்! வீர வணக்கம். எங்கள் ஊரின் நடமாடும் முரசொலியாய் திகழ்ந்த  அய்யா ஜோதி அவர்களுக்கு வீரவண்க்கம்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் ஐயா...

தமிழ் ஓவியா said...

அய்யா ஜோதி அவர்களுக்கு வீரவண்க்கம்.

Unknown said...

அய்யா ஜோதி (நாடா்)அவர்களுக்கு எனது நினைவஞ்சலி மற்றும் வீரவண்க்கம் தொிவித்து கொள்கிறேன். அதனை நினைவு கூா்ந்த அய்யா அவா்களுக்கும் நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி !

முனைவர். வா.நேரு said...

நன்றி !

முனைவர். வா.நேரு said...

நன்றி !

Unknown said...

உண்ணாம்ல், உறங்காமல் உழைத்த அய்யா ஜோதி அவர்களுக்கு வீரவண்க்கம்...!

முனைவர். வா.நேரு said...

நன்றி செந்தில் .

Unknown said...

Sapturil pirandhadhil perumai kolgiren

vasi said...

May his soul rest in peace

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

VIJAYAN MARIAPPAN said...

ஜோதியின் முரசு ஒலித்துக்கொண்டுதான்
இருக்கின்றது.ஜோதி
ஒளிர்ந்துகொண்டுதான்
இருக்கின்றது.

முனைவர். வா.நேரு said...

ஆமாம். நன்றிங்க...விஜயன் மாரியப்பன்