Sunday, 4 May 2014

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை
தொகுப்பாசிரியர் : தி.அமிர்தகணேசன்
வெளியீடு : சபானந்தாச்சார்யா பதிப்பகம், புதுச்சேரி-1
முதல் பதிப்பு : 2014, 144 பக்கங்கள் , விலை ரூ 130.

'எனக்கென்று முகம் இல்லை' என்னும் இக்கவிதைத் தொகுப்பு 12 பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல். எழுத்து.காம். இணையதளத்தில் வெளி வந்த கவிதைகளின் தொகுப்பு. வய்தில், கருத்தில் வேற்றுமை இருந்தாலும் பெண் கவிஞர்களால் படைக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாய், பல மலர்கள் இணைந்த கதம்பமாய் மணக்கிறது. தொகுப்பாசிரியர் ' மேலெழும்பும் முகப்பிம்பங்கள் ' என்னும் தலைப்பில் அணிந்துரையும், ' ஒரு சோறு பதமென...அகத்தின் புற முழக்கம் ' என தோழர் பொள்ளாச்சி அபி அவர்களும் அணிந்துரை கொடுத்துள்ளார்கள். இரண்டுமே சிறப்பான ஒரு உள்ளடகத்தை, அதன் நோக்கத்தை நூலுக்குள் புகுமுன்னே கொடுக்கின்றன.

மனிதர்கள் குடியேறினால் செவ்வாய்க்கிரகம் என்ன வாகும் ? என்னும் கற்பனையில் 'செவ்வாய்க்கிரகம் பாவம்தான்' , உறுதி கொள் பெண்ணே என்னும் நோக்கில் அமைந்த 'பெண்ணே ,...நெஞ்சில் உறுதி வேண்டும் ' 'வலிகள் விற்பனைக்கல்ல ; போன்ற சொ. சாந்தி-யின் கவிதைகள் நேர் கொண்ட பார்வையோடு நினைவில் நிற்கின்றன.
.

கே.பிரியாவின் ' முதலிடம் எப்போதும் என் சைக்கிளுக்கு மட்டும்தான் ' என முடியும் சைக்கிள் நினைவுகள் அருமை. என்னென்மோ அதிசயம் நடக்குதுன்னு சொல்றீங்க, 'பிச்சை எடுக்கும் கைகளும் நாளை புத்தகம் தூக்காதோ ' என்னும் கேள்வி, 'கடல் நீர்', 'தனிமை' போன்ற கவிதைகள் கற்பனை வளத்தோடு நன்றாக அமைந்துள்ளது. 'முற்படுத்தப்பட்டவள் ' என்னும் கவிதையின் பொருளோடு எனக்கு 100 சதவீதம் மாறுபாடு உண்டு. என்னதான் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டாலும், அவரது சாதியின் பெயரை இழிவுச்சொல்லாய் யாரும் பயன்படுத்தப்போவதில்லை.


ஒரு மன்னிப்பாவது கேளேன் என்னும் கவிதை வேறு வழியில்லாமல் வாழ்வைக் கடக்கும் பெண்ணின் வலியை வார்த்தை சித்திரங்களாய் கொடுத்திருக்கிறது. 'நீ விரும்பும் முகமாய் ' என் முகத்தை மாற்றுகிறாய் தந்தையே, கணவனே, மகனே என்னும் மனு(அ)தர்மத்தின் நடைமுறையை சுட்டிக் காட்டும் ' எனக்கென்று முகம் இல்லை ' என்னும் கவிதையே தலைப்பாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு தகுதியான கவிதை கவிஞர் திலகவதியின் கவிதை( கே.பிரியாவின் கவிதையின் தொடர்ச்சியாகவே கவிஞர் திலகவதியின் கவிதை உள்ளது. கவிஞர் திலகவதி( நாஞ்சில் திலகா சிவம் ) என கவிதையாளர்கள் பட்டியலில் உள்ளது. உள்ளே தனித் தலைப்பாக இல்லை, தொகுப்பாளர் அடுத்த பதிப்பில் கவ்னிக்கவும்)

சென்னை ஹீஜ்ஜாவின் ' ஏன் சகாக்களே ' என்னும் கவிதையின் கேள்வி நியாயமானது. சந்தேகப்படுபவன் கூட வாழ்வதும், நல்ல பாம்போடு வாழ்வதும் ஒன்று என்றார் திருவள்ளுவர் . ' சதை விற்கும் பெண்ணா உன் மனைவி ? ' என சந்தேகப்படும் ஆணை பற்றிய கவிதை உள்ளம் தொடுகிறது. அதைப்போலவே ' எனதருமைக் கணவரே ? ' என்னும் கவிதை வரிசையாகக் காரணம் சொல்லி' உம் வாழ் நாள முழுவதும் தாமதாகி விட்டதே என்ன செய்யப்போகிறீர் ? ' எனும் கேள்வியோடு அருமையாக முடிகிறது.

மதுரை புலமி அம்பிகாவின் கவிதைகளில் வார்த்தைகள் புகுந்து விளையாடுகின்றன. மயக்க நிலையில் கொடுக்கப்படும் அறுவைச்சிகிச்சை போல , மயக்கும் வார்த்தைகளுக்குள் வந்து விழுகின்றன நல்கருத்துக்கள். சுதா யுவராஜின் 'புரட்சி செய், புரட்சி செய்' என்னும் கவிதை பிறப்பு முதல் இறப்புவரை பெண்ணுக்கு நேரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு,.புரட்சி செய் என விளிக்கின்றார். கோபமும், நியாயமும் கொப்புளிப்பதை வார்த்தைகளில் அப்படியே வடித்திருக்கின்றார். வாழ்த்துக்கள் சுதா யுவராஜ். சுதா யுவராஜின் ' விஞ்ஞானி கவிஞனானால் ' என்னும் கவிதை நல்ல கற்பனை .

'நெஞ்சில் சுமந்து வளர்த்த எனை
நட்ட நடு வீதியில் விட்டுவிடாமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்த' தன் கண்மணியை நலமுடன் நூறாண்டு வாழ வாழ்த்தும் சென்னை சியாமளா ராஜசேகரனின் கவிதைகள் 'ரசிக்க வாங்க' என்று அழைக்கின்றன. 'மனிதை மயக்கும் மழலை ' பாடும் சரண்யா, 'வேண்டாத நட்பை'யும்,'வாழ்க்கையை'யும் பாடும் நாகின் கருப்பசாமி, 'தாய்மை'யின் பெருமை பாடும் உத்தரப்பிரதேசம் புனிதா வேளாங்கன்னி, 'பிள்ளையில்லாதவள் ' படும் பாட்டை கனமான வார்த்தைகளால் கவிதையாகத் தொடுத்திருக்கும் உமா பாரதியின் ' என்னைப் பற்றியோ, என் கனவுகளைப் பற்றியோ எப்போதாகிலும் நீ அறிவாயா? ' என்னும் 'என் கணவனே ' என்னும் கவிதை படிக்கும் எல்லா கணவன்மாரையும் யோசிக்க வைக்கும்.

' வணக்கத்திற்குரிய வயிறே ' என்று மருத்துவரைப் போல கவிதை சொல்லும் குஜராத் யாத்விகா கோமுவின் 'புத்த்கம் ' கவிதை புத்தகத்தின் பெருமை பேசுகிறது.

மொத்தத்தில் இந்தத் தொகுப்பு, பல பெண் கவிஞர்களின் , பல பாடு பொருள், பல்சுவை கவிதைகளின் தொகுப்பாய் தித்திக்கின்றது. பெண் மனதைப் புரிந்து கொள்ள, அவர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள உதவும் தொகுப்பு. எல்லோருமே, ஒரு எல்லைக்குள் இருந்தே எழுதப்பட்ட கவிதைகளாக உள்ளன. இன்னும் உள்ளத்தின் கோபத்தையெல்லாம் , மகிழ்ச்சியையெல்லாம், துக்கத்தையெல்லாம் எழுத்துக்களில் வடிப்பதற்கு ஒரு முன்னோட்டமான தொகுப்பாக இந்தத் தொகுப்பு உள்ள்து எனலாம். தொகுத்து அளித்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி : எழுத்து.காம்


No comments: