Saturday 18 April 2015

எல்லோருக்குமானவர்.........

எல்லோருக்குமானவர்



‘அம்பேத்கர் களம் 125' கண்டேன். சாதியத்தின் வெற்றி எப்படி என்பதை ஆதாரங்களால் நிறுவியவர் அம்பேத்கர். வரிசையாக அடுக்கப்பட்ட சமமின்மை என்பதே சாதியம் என்பதனை உணர்த்தியவர். ஏணிப்படிகளைப் போன்ற அமைப்பு உள்ள சாதி அமைப்பில் மிகக் கீழ்ப்படியில் உள்ளோரும், மிக மேல்படியில் உள்ளோரும் சண்டையிட்டுக்கொள்வதில்லை.
அடுத்தடுத்த படிகளில் உள்ளவர்கள்தான் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள், சாகின்றார்கள். நாங்கள் சண்டையிடுகிறோமா என்று உச்சாணிப்படியில் இருக்கும் சாதியினர் கேட்கின்றார்கள். ஆனால், இப்படிச் சண்டையிடும் அமைப்பை ஏற்படுத்தியவர்கள், இன்று வரை கட்டிக்காப்பவர்கள் அவர்கள்தான் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் அம்பேத்கர்.
இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும் என்றவர் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.
இதையே தந்தை பெரியார் “மூளையில் போடப்பட்ட விலங்கு, கண்ணுக்குத் தெரியாதது’’ என்றார். எல்லா சாதியைச்சார்ந்த பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்பதற்காகச் சட்டம் இயற்றி அது நிறைவேறாமல் போனதால் தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் அம்பேத்கர்.
அவர் எல்லோருக்குமான தலைவர் என எல்லோரும் உணரும்போது மாற்றம் நிகழலாம். ஆனால், சாதியவாதிகள், மதப் போர்வையில் சாதி வேண்டும் எனப் பாடுபடுபவர்கள் அவ்வளவு எளிதாக மக்களை அவ்வாறு உணரவிட மாட்டார்கள்.
முனைவர் வா. நேரு, மாநிலத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், மதுரை.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.04.2015


6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
அம்பேத்கவரின் நினைவினை போற்றுவோம்

கருப்பையா.சு said...

நேரு! உங்கள் கருத்தைத் தான் "இந்து" பத்திரிக்கை வெளியிட்டது. அதற்கு இந்து பத்திரிக்கை தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

அண்ணே, நன்றி. பல பத்திரிக்கைகள் நமது கருத்துக்களை நாம் எழுதினாலும் வெளியிடுவதில்லை. வெளியிடும் 'தி இந்து ' தமிழ் நாளிதழுக்கு நான்தான் நன்றி தெரிவிக்கவேண்டும்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. அடுத்த வாசிப்போர் களம் கூட்டம் எப்போது ?

முனைவர். வா.நேரு said...

அய்யா கரந்தை ஜெயக்குமார் அவர்களே, மிக்க நன்றி. ஆசிரியராக இருக்கும் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் இயல்பாகவே ஊக்க உணர்ச்சி பெறுவார்கள் என்பது தெரிகிறது. தாராளாமாகவும் தொடர்ந்தும் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு நன்றி.

Unknown said...

வாழ்த்துக்கள் ஐயா,
அம்பேத்கவரின் நினைவினை போற்றுவோம்

முனைவர். வா.நேரு said...

நன்றி மோகன் , வருகைக்கும் கருத்திற்கும்.