Friday, 15 January 2016

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள் (1 ) --- வா. நேரு

                   
கனவு போலத்தான் நடந்தது , அவரது வருகையும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களும். அரசு பள்ளி என்றால் அவரவர் விருப்பத்திற்கு ஆசிரியர்கள் வருவர்,அவர்களது வருகைக்குப்பின் தலைமை ஆசிரியர் வருவார். படிக்கும் எண்ணமுள்ள மாணவ, மாணவியர் படிப்பார்கள், மற்றவர்கள் சும்மா பள்ளிக்கூடம் வந்து போவார்கள் என்றுதான் அன்றைக்கு நான் படித்த காலம் இருந்தது. சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்  எங்கள் பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் வந்தவுடன் அத்தனையும் தலைகீழாக மாறிப்போனது.'டோட்டாசான் ' என்னும் ஜப்பானிய நூலைப்படித்துமுடித்த பின்னும் பல நாட்கள் அந்தக் கதையில் வரும் தலைமை  ஆசிரியர் என் நினைவில் இருந்தார்.இப்போதும் இருக்கின்றார்.  என் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியருக்கும், டோட்டாசான் தலைமை ஆசிரியருக்கும் இருந்த ஒற்றுமை என்ன என்று நினைத்துப்பார்த்திருக்கிறேன். படிக்கும் குழந்தைகள் மீதான அன்புதான் எனது தலைமை ஆசிரியரையும் அந்த டோட்டாசான் தலைமை ஆசிரியரையும் இணைத்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

                                               35 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். இன்றைக்கும் எனக்கு நல்ல வழியைக் காட்டக்கூடியவராக , வரும் நன்மை தீமைகளை எந்த விதத்தயக்கமும் இன்றி சுட்டிக்காட்டுபவராக இருக்கின்றார். படித்து முடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவரோடு ஏற்பட்ட தொடர்பு எனக்கு எப்போதும் ஓர் ஊக்க சக்தியாக இருக்கிறது. எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி படிக்கும் மாணவ மாணவிகளின் மேல் செலுத்தும் அன்பும், பரிவும் ,அக்கறையும் ஆண்டுகள் பல கடந்து போயினும் ஆசிரியர்களை எவ்வளவு தூரம் உயர்த்தும் , மன நிறைவினைத் தரும் என்பதனை உணர்த்தும் விதமாகத்தான் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) அவர்களைப் பார்க்கின்றேன். அவரின் அனுபவத்தையும் , அவரது மாணவனான எனது அனுபவத்தையும் , இன்னும் சிலரின் அனுபவத்தையும் இணைத்து கல்வி பற்றிய , பள்ளிக்கூடம் பற்றிய சிந்தனையை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் ( நூலின் )நோக்கம் .
                                             
                   எங்கள் பழைய தலைமை ஆசிரியர் மாற்றலாகி, புதிய தலைமை ஆசிரியராக திரு. வி.வீரிசெட்டி சார் அவர்கள் 1979-ல் வந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் , குட்டை உருவமுமாக வந்த புதியவரைப்பார்த்து மாணவர்கள் எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம். கரடு முரடான மக்களைக்கொண்ட ஊர் ஆயிற்றே, நமது ஊர், இந்த ஊரில் இவ்வளவு சாதுவாக ஒருவர் வந்திருக்கின்றாரே, சமாளிக்க இயலுமா?  என்று எண்ணினோம். தாக்குப்பிடிப்பாரா ? இல்லை முடியாது என்று ஓடிவிடுவாரா? என்பதுதான் எங்கள் பள்ளியில் வேலைபார்த்த ஆசிரியர்களின் எண்ணமுமாக இருந்தது.உயரமாய், பருமனாய், வெடித்த குரல் கொண்டவர்களால் முடியாத செயல்களை எல்லாம் செய்து காட்டினார், அவரது பணிக்காலத்தில். எப்படி முடிந்தது அவரால் ? எனக்குள் எழுந்த அந்த ஆர்வம், நான் படித்து முடித்த பின்பும், தொலைபேசித்துறையில் வேலைக்குச்சேர்ந்த பின்பும் , பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராக  ஆனபோதும், மதுரையில் குடும்பமாக செட்டில் ஆன பின்பும், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துபோதும, முனைவர் பட்டம் பெற்றபோதும்  அந்தக் கேள்வி என்னை துரத்திக்கொண்டே இருந்தது. தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் நினைத்தால், அத்தனையையும் தலைகீழாக மாற்ற முடியுமா? முடியும் என்று நிருபீக்கப்பட்டதே ? அதற்கு அவரிடம் இருந்த குணங்கள் என்ன என்ன என்பதை ஆய்வு போல செய்ய வேண்டுமே , அதனை இந்தச்சமூகத்திற்கு சொல்ல முடிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஓடியது.

                               நான் 16-வய்தில் அவரிடம் மாணவனாகப்படித்தவன் .அவரால் மிக நல்ல மதிப்பெண்ணை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பெற்றவன். அதனால் வாழ்வில் உயர வழி கிடைத்தவன். மனதில் இருந்தார். படித்ததற்கு பின்னால் சந்திக்க வாய்ப்பில்லை.  ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து மதுரையில் அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னுள் மகத்தான மனிதர்களில் ஒருவராக வீற்றிருக்கும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதன்மூலமாக ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் என்னும் நிறுவனத்தை மதுரையில்  நடத்திவந்தார். அந்த நிறுவனத்தில் திரு.வி.வீரி(செட்டி) அவர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்றெண்ணி, நான் அவரது பழைய மாணவர் என்பதனை அறிந்து என்னையும் அழைத்துச்சென்றார். பார்த்தோம். பேசினோம். நான் உங்கள் பழைய மாணவன், மதுரை தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கின்றேன் என்று சொன்னவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஸ்பார்க் நிறுவனத்தில் வேலை பார்க்க வாருங்கள் என்று எங்கள் பிரின்ஸ்பால் அழைத்தபோது, சாரி சார், நான் பென்சன் வாங்குகின்றேன், வேறு வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்களது பிரின்ஸ்பால்," உங்கள் ஹெட்மாஸ்டர்,  மிகவும் நேர்மையானவர், கடும் உழைப்பாளி ஆனால் எதற்காகவும் காம்பரமைஸ் பண்ண மாட்டார் என்று சொன்னார்கள்...அவர்கள் சொன்னது உண்மைதான் "என்றார். எனது பழைய தலைமை ஆசிரியரை, எனது பழைய பிரின்ஸ்பாலின் மூலமாக அடையாளம் கண்டுகொண்டு , தொடர்பில் இருக்க ஆரம்பித்தேன்.

                                  2015-ல் என்னைச்சுற்றி இருக்கும் அரசு பள்ளிகளை, கார்ப்பரேசன் பள்ளிகளைப்பார்க்கின்றேன். நேர்மறையாகவும் ,எதிர்மறையாகவும் அந்தப்பள்ளிகளைப்பற்றிய எண்ணங்கள் ஓடுகின்றன. பெரும் பெரும் கட்டிடங்களோடு செயல்படும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளையும் பார்க்கின்றேன். படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள்,பணக்காரர்களின் பிள்ளைகள் எல்லாம் , பெரும் பணம் கட்டிப் படிக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து  புத்தாடை இன்றுதான் உடுத்தியவர்கள் போல் வெளியே வருகின்றார்கள். அன்றாடங்காய்ச்சிகள், சாதிப்படிக்கட்டின் கடைசிக்கட்டில் இருப்போர், மூடை தூக்குவோர் , குடிகாரத் தந்தையின் பிள்ளைகள் என்று விளிம்பு நிலை மாந்தர்களின் பிள்ளைகள் எல்லாம் படிக்கும் அரசுப்பள்ளிகளின் நிலையை உயர்த்த ஏதேனும் செய்ய இயலுமா?

                                இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் சில அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் 'தி இந்து ' தமிழ் பத்திரிக்கையில்  தொடர்ச்சியாக வந்தது, வருகின்றது. மகிழ்ச்சியாக இருந்தது. எனது தலைமை ஆசிரியர் திரு வி.வீரிசெட்டி அவர்கள் பல ஊர்களில் ( பண்ணைக்காடு,தேவதானப்பட்டி, சாப்டூர், கருங்காலக்குடி, நத்தம், வாடிப்பட்டி... ) அரசுப் பள்ளிகளின் நிலையைத் தலை கீழாக மாற்றியவர். அவரது அனுபவம் மிக வேறுபட்ட அனுபவம்.  அவரது நல்ல கல்வி தருவதற்கான போராட்டம், நீண்ட நெடிய போராட்டம்.வெற்றி, தோல்வி எனப் பல அனுபவங்களைக் கண்டவர் அவர்.  அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்களை இன்றைக்கு இருக்கும் நிலையோடு ஒப்பிட்டால் சில மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்னும் நோக்கில் எனது தலைமை ஆசிரியரை அணுகி பேட்டி கேட்டேன். உங்கள் வரலாற்றைப் பதியவேண்டும் என்றேன். "எனக்கு என்ன வரலாறு ? நான் மிகச்சாதாரணமானவன்" என்றார். "இன்றைய பள்ளிகளின் நிலைமைகள் உங்களுக்கு மன நிறைவு தருகிறதா ? "என்றேன். "இல்லை " என்றார். "என்ன , என்ன செய்ய வேண்டும் என்பதனைச்சொல்வதற்கு முன்னால் நீங்கள் என்ன என்ன செய்து மாற்றிக்காட்டினீர்கள் என்பதனைச்சொல்லவேண்டும் நான்" என்றேன் . "சரி" என்றார். அவரின் ' பணிப்பண்பாட்டை ', ' பணி அணுகுமுறையை'  தேர்வு எழுதத் தயாராகும் மாணவன் போல அவரிடம் கேட்டு கேட்டு எழுத ஆரம்பித்தேன். இனி அவரின் 'பணி அணுகுமுறைகள் ' உங்கள் பார்வைக்காக

                                                                                                                                                                     (தொடரும் ....)

2 comments:

ANBU said...

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு.ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

ANBU said...

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு.ஆவலோடு எதிர்பார்க்கிறோம்