வெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது . முந்தா நாள் இரவு பிடித்த மழை. மூன்றாவது நாளாக இப்பொழுதும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. பெய்யும் மழையும் சாதாரணமாகப் பெய்யவில்லை, ஓவென்று இரைச்சல் கொடுத்தபடி, இடி , மின்னலென அவ்வப்போது ஒளியும் சத்தமும் கொடுத்தபடி,பெய்து கொண்டேயிருந்தது. இரவில் எந்த நேரம் எழுந்து பார்த்தாலும் சோவென்று மழை பெய்து கொண்டேயிருந்தது அதிசயமாக இருந்தது பூவரசனுக்கு.தனது ஊரில் இப்படி ஒரு இடைவிடாத மழையை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை அவன்.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மெல்ல வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. இருளும் மழையும் போட்டி போட்டுக்கொண்டு இணை பிரியாமல் கொட்டிக் கொண்டிருந்த நிலையில் இப்போது மழையோடு கொஞ்சம் வெளிச்சமும் தெரிந்தது. வெளியே பார்த்தான். ஓங்கி வளர்ந்த மரங்கள் தங்கள் கிளைகளை விரித்தபடி , உற்சாகமாய் மழையை வரவேற்று நடனமாடுவது போலத்தோன்றியது பூவரசனுக்கு. குலுங்கிக் குலுங்கிச்சிரிக்கும் மனிதர்கள் போல குலுங்கி குலுங்கி கிளைகள் ஆடுவது போலத் தோன்றியது . கிளைகளோடு சேர்ந்து இலைகளும் ஆட, ஜன்னலுக்கு முன்னால் நிற்கும் மரங்கள் முழுவதுமாய் ஆடுவதுபோலத் தோன்றியது .
ஆனந்தமாக ஆடும் மரங்களைப் பார்த்தபொழுது பக்கத்து வீட்டில் வசித்த சின்னப்பையன் குருவின் ஞாபகம் வந்தது பூவரசனுக்கு. மழை வந்தால் போதும், அப்படி ஓர் உற்சாகம் அவனுக்கு. மழைத்தூறல் தெருவில் விழ ஆரம்பித்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு தெருவில் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்து விடுவான். நனைந்து கொண்டே , சிரித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பான். அவனது அப்பாவும், அம்மாவும் ஏன் தாத்தாவும் பாட்டியும் கூட அவன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். யாரும் ஏதும் சொன்னதில்லை. பெரும் மழையாய் , இடி மின்னலென பெய்தால் அவனை வீட்டிற்குள் வரவைப்பார்கள், இல்லையென்றால் அவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டேயிருப்பான். அப்படி ஒரு குழந்தையின் மன நிலையில் மரங்கள் இருப்பது போலவும், பெய்யும் மழையால் உடல் பூரித்து, உள்ளம் நெகிழ்ந்து உற்சாக நடனம் ஆடுவது போலவும் தோன்றியது . .
மழை என்றால் பூவரசனுக்கும் பிடிக்கும்.மழை பெய்யும்போது ஜன்னல் அருகிலோ ,வாசலிலோ வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். ஆனால் விடாமல் கொட்டு கொட்டென்று கொட்டும் மழை அச்சத்தைக் கொடுத்தது. தொடர்ந்து இப்படியே பத்து நாட்கள் பெய்தால் வாழ்க்கை என்னவாகும் என்னும் நினைப்பு ஓடியது.ஏய், சுய நலம் பிடித்த மனிதப்பிறவிகளே, எத்தனை எத்தனை மரங்களை வெட்டிச்சாய்த்திருப்பீர்கள். நீங்கள் வாழ்வதற்க்காக இந்த உலகத்தை எவ்வளவு தூரம் வெப்ப பூமியாக ஆக்கியிருப்பீர்கள். கடல் மட்டம் உயரும்படி, வளமான பகுதிகள் பாலைவனமாக மாறும்படி, விடாமல் மழை பெய்யும்படியாய் பூமியை ஆக்கி வைத்த கொடுமைக்காரர்களே, படுகிறீர்களா துன்பத்தில் சிக்குண்டு என மழையில் ஆடிக்கொண்டே மரங்கள் கேட்பதுபோல இருந்தது பூவரசனுக்கு.
பயிற்சிக்கென சென்னைக்கு வந்திருந்தான் பூவரசன்.ஐம்பது வயதில் படிப்பு ,தேர்வு எனக் கடந்த சில நாட்களாக மும்மரமாக வகுப்புக்கள் இருந்தன. மழை விடாது பெய்து கொண்டிருந்தாலும் இரண்டு நாட்களாய் வகுப்புக்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. குடையைப் பிடித்துக்கொண்டாலும் நனைந்து கொண்டுதான் வகுப்புகளுக்கு போக வேண்டியிருந்தது. இன்று விடுமுறை. மழை பெய்யத்தொடங்கியவுடன் மின்சாரம் போய்விட்டது. ஆனால் ஜெனரேட்டர் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டிருந்தது. மழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது என்பதனை இணையத்தின் மூலமாக கிடைக்கும் செய்தித்தாட்கள் மூலமாக படித்துக்கொண்டிருந்தான் பூவரசன்.மழை பெயவதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா ? என்ற சிந்தனையே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கடந்த 3 நாட்களாக.
திடீரென்று ஓடும் ஜெனரேட்டர் நின்றது. அரைமணி நேரம், ஒரு மணி நேரம் மின்சாரம் வரும் , ஜெனரேட்டர் ஓடும் என்று நினைத்தான். வரவில்லை, ஓடவில்லை. என்னவென்று விசாரித்தான். இருந்த டீசல் தீர்ந்து விட்டது. டீசல் வாங்க கையில் பணம் இல்லை. டீசலும் எளிதாக எங்கும் கிடைக்கவில்லை. மின்சாரம் வரும்வரை அல்லது டீசல் கிடைக்கும் வரை இருட்டுத்தான் என்றார்கள். பயிற்சி இயக்குநர் அனைவரையும் அழைக்கிறார்கள் என்றார்கள். எல்லோரோடும் இணைந்து பூவரசனும் போனான். இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை. மின்சாரம் வரத்தாமதம் ஆகும் , மின்சாரம் இல்லாமல் எந்தப் பயிற்சியும் கொடுக்க இயலாது, எல்லாமே கணினி மூலமாக கற்பிப்பது, எனவே 3 நாட்கள் விடுமுறை என்று அறிவித்தார்கள். அறிவித்த ஒரு மணி நேரத்தில் பயிற்சிக்கு வந்திருந்த எல்லோரும் சிட்டாக சொந்த ஊருக்குப் பறந்து விட்டார்கள்.
உடல் நிலை இடம் கொடுக்காத நிலையில் கிடைத்த பேருந்தில் நின்று கொண்டு மணிக்கணக்காக பயணம் செய்வது சரியென்று படவில்லை பூவரசனுக்கு. மனைவி வேறு தொலைபேசியில் , அரும்பாடுபட்டு இல்ட்சக்கணக்கில் செலவழித்து உங்களைக் காப்பாத்தியிருக்கிறேன். திடீர் லீவு, திடீர் பயணம் என்றெல்லாம் வேண்டாம், அங்கேயே தங்கி சமாளியுங்கள் என்றாள். உண்மைதான். தனி ஒருத்தியாய், அத்தனை அவலங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள். அவளை மனதளவில் கூட வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தான் பூவரசன்.
தனி அறை. எவரும் இல்லாத தனிமை . மின்சாரம் இல்லை. நிறைய அறைகளும் விடுதிகளும் இருக்கும் விடுதியில் ஒரே ஓர் அறையில் அவன் மட்டுமாய் தனித்து இருந்தான் பூவரசன்.. பூவரசன் இருக்கும் பகுதியில் மழை நின்றிருந்தது. சென்னையின் மற்ற பகுதிகளில் மழை பெய்துகொண்டிருந்தது. ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்னும் செய்தி வந்து கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாமல் இரவைக் கழிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைத்தால் , கொசுக்கள் பட்டாளமாய் உள்ளே வந்தது. ஜன்னலை மூடினால் காற்று இல்லாமல் மூச்சு திணறுவது போல இருந்தது. ஜன்னலைத் திறந்தும் மூடியும் தூங்காமலும் முழிக்காமலும் எப்படியோ இரவைக் கழித்தான் பூவரசன்.
காலையில் இரவில் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சென்னையின் சில பகுதிகள் மிதக்கிறது என்றார்கள். கோடம்பாக்கம், சூளைமேடு, சைதாப்பேட்டை எனப் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது என்றார்கள். கேள்விப்படும் செய்திகள் எல்லாம் இரத்தக் கண்ணீர் வரவழைக்கும் விதமாக இருந்தது. எந்தப் பேருந்தும் இல்லை. ஓயாது கேட்டுக்கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் டிரெய்ன் சத்தம் இல்லை, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கேட்கும் விமானம் பறக்கும் சத்தம் இல்லை. திடீரென்று அனைத்தும் நின்று ஏதோ சுடுகாட்டில் இருப்பது போன்ற அமைதி இருந்தது.
. பல மொழிகளை பேசுபவர்கள், இந்தியாவின் பல மாநிலங்களைச் சார்ந்தவர்கள் அந்த பயிற்சி நிலையத்தில் இருந்தார்கள். சில நாட்களுக்கு முன் மாலையில் நடந்துகொண்டிருந்த பொழுது , ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்த ஒருவன் , தன் நண்பனைப் போலத்தெரிய பூவரசன் அவன் பக்கத்தில் போய் விளையாட்டாய் முதுகில் தட்டப்போனான் , வேறு ஆள் எனத்தெரிந்ததும் திரும்பினான். அருகில் வரை சென்று விட்டோம் என நினைத்து " சாரி சார் , என் நண்பர் என்று நினைத்து கையை ஓங்கிவிட்டேன் " என்றான். ஆழ்ந்து பூவரசனைப் பார்த்த அவன் " ஐ ஆல்சோ சாரி சார், ஐ டோண்ட் நோ டமிழ் " என்றான். பின்னர் ஆங்கிலத்தில் பூவரசன் சாரி சொன்னான்.
. " சார் என் வீட்டில் பேசி 2 நாளாகி விட்டது. என்னிடம் பி.எஸ்.என்.எல். சிம் இல்லை. என் மனைவி வேறு கம்பெனி சிம் வைத்திருக்கிறாள். பி.எஸ்.என்.எல். சிம் மட்டும்தான் சென்னையில் இப்போது கிடைக்கிறது. இவ்வளவு மழை , வெள்ளம் சென்னையில் என்று பார்த்ததால் மனதைக் குழப்பிக்கொண்டு இருப்பார்கள் " என்ற ரவீந்தரிடம் அமைதியாய் அவனது மனைவியின் செல்போன் நம்பரை வாங்கி தன்னிடம் இருந்த பி.எஸ்.என்.எல். கார்டில் போட்டுக் கொடுத்தான்.அவன் தெலுங்கில் பேச ஆரம்பித்தான். அவன் பேசுவது புரியவில்லை என்றாலும் கணவன் மனைவியோடு பேசிக்கொண்டிருக்கும்போது நாம் நின்று கேட்டுக்கொண்டு இருப்பது சரியல்ல என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான்.
பேசி முடிந்த ரவீந்தர் பூவரசனிடம் நண்பனாகி விட்டான். மாலையில் நடைப்பயிற்சி என அந்த பயிற்சி வளாகத்திற்குள்ளேயே நடக்கும் நேரங்களில் ரவீந்தரும் இணைந்து கொண்டான். தெலுங்கானாவிலிருந்து பயிற்சிக்காக வந்திருப்பதாகச்சொன்ன அவன், தான் தெலுங்கானாவின் பழங்குடி இனத்தைச்சார்ந்தவன் என்றான். ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கை, ஒடுக்கப்பட்டோரின் இயக்கம் என பேச்சு நாளும் விரிவடைந்திருந்தது. தெலுங்கானா முதல்வர் , பட்டம் முடித்த அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கொடுப்பதாகவும், அது நிரந்தமானதல்ல என்றாலும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு , நல்ல முயற்சி, கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை தங்கள் மாநிலத்தில் உயர்கிறது என்றான். பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் ஏற்கனவே செய்திருக்கிறார் என்றான். சிரித்துக்கொண்ட பூவரசன் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராசர் அமுல்படுத்திய திட்டம் இது. அவரின் கல்விபுரட்சியில் இதுவும் ஒன்று என்றான். காமராசரைப் பற்றி மேலும் பல செய்திகளைச்சொன்னான். தெலுங்கானா பழங்குடி மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எனப்பல செய்திகள் கிடைத்தது பூவரசனுக்கு.
மழை ஆரம்பித்து இன்று ஐந்தாவது நாள்.மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. காலை மணி 9 ஆகியிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. எல்லோரும் அவரவர் ஊருக்கு பறந்தவுடனேயே மெஸ்காரரும் பறந்துவிட்டார். மூன்று நாளைக்கு மெஸ் கிடையாது என்று அறிவிப்பு இருந்தது. மாடிப்படியை விட்டு கீழே இறங்கி பக்கத்தில் இருக்கும் உணவு விடுதி இருக்குமா ? என எண்ணிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் பூவரசன். பூவரசனுக்கு எதிராக ரவீந்தர் வந்து கொண்டிருந்தான். அவன் வேறு விடுதியில் தங்கியிருந்தான். " என்ன ரவீந்தர் , நீ ஊருக்கு போகவில்லையா ? " என்றவனிடம் "சார்நான் தெலுங்கானா போக வரவே 3 நாட்களாகும். நான் போகவில்லை " என்றான்." சரி , வா, நீயாவது துணைக்கு இருக்கிறாயே எனக்கு , மகிழ்ச்சி " என்றான். நாம் மட்டும் இல்லை, என்னோடு பயிற்சிக்கு வந்த ஒரு அஸ்ஸாம் மாநிலத்தச்சார்ந்த பையனும், மேகாலாயா மாநிலத்தைச்சார்ந்த பெண்ணும் இருக்கிறார்கள் " என்றான். பக்கத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்று பார்த்தபொழுது உணவு விடுதி திறந்திருந்தது. சமைப்பதற்கு காய்கறி எல்லாம் எங்கும் வாங்கமுடியவில்லை. எக்மோரிலிருந்து எங்களது நிறுவனத்தின் ஊழியர்கள் 10 கி.மீ. நடந்து , சுமந்து வந்திருக்கிறார்கள் சமைக்கும் பொருட்களை என்றார் அந்த உணவு விடுதிப் பெண்.இட்லி, தோசை என்றெல்லாம் ஒன்றும் இல்லை, உப்புமா மட்டுமே இருக்கிறது என்றார்கள். இருவரும் உப்புமாவைச்சாப்பிட்டு விட்டு விடுதிக்கு வந்தார்கள்.
சிறிது நேரத்தில் அஸ்ஸாம், மேகலாயா, தெலுங்கானா, தமிழ் என நான்கு மாநிலத்தைச்சார்ந்தவர்களும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். ரவீந்தர்தான் ஆரம்பித்தான் " ஹைதாராபாத் எல்லாம் இப்படி இல்லை சார், எவ்வளவு மழை பெய்தாலும் ஓடி விடும், ஏன் சார், தமிழ் நாட்டுத்தலை நகரம் இப்படி, என்ன திட்டமிடுதல், என்ன செயல்படுத்துதல், எல்லாப் பக்கமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்தவுடனேயே கரண்ட் இல்லை, கொசுக்களின் தொல்லை, சாக்கடை நாற்றம்... " எனக் கடுப்பாய் சொன்னான் .அவனது உணர்வுகளை உள்வாங்கிக்கொண்ட பூவரசன் ஒன்றும் மறித்துச்சொல்லவில்லை. மற்ற நேரமென்றால் தமிழ் நாட்டையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டு விட்டுக்கொடுக்காமல் பேசுவான். பூவரசனால் இன்றைக்கு பேசமுடியவில்லை. ' மனிதர்களின் பேரவலம் ' என்னும் 'சமஸ்' எழுதியிருந்த கட்டுரையை அப்போதுதான் 'தி இந்து ' தமிழ் நாளேட்டில் இணையத்தின் வழியாகப் படித்திருந்தான். அரசாங்கத்தின் செயல்படாத தன்மையை, வெள்ளம் வந்த அன்று மக்கள் பட்ட துயரத்தை ,அவலத்தை படிப்போர் கண்களில் கண்ணீர் வரும்படியான செய்திகள் அந்தக் கட்டுரையில் இருந்தது. கும்பிடு போடுவதற்கும், காலில் விழுவதற்கும், காசைக் கல்லா கட்டுவதற்கும் மட்டுமே பதவி என நினைப்போர் மத்தியில் மக்களின் அவலங்கள் பெரிதா என்ன? என நினைப்பு ஓடியது.
மேகலாயாவைச்சார்ந்த பெண் துன்பத்திலும் கல கலவெனச்சிரித்தாள். மிகவும் கண்ணியமாகவும் அதே நேரத்தில் மிக கனமாகவும் தன்னுடைய கருத்துக்களைச்சொன்னாள். ஆங்கிலத்தை அவ்வளவு அருமையாகவும், எளிதாகவும் கையாண்டு ஜோக் அடித்தாள். எனக்கு வயது 25, எனக்கு 75 வயது ஆகும்போதும் இந்த சென்னை மறக்காது என்றாள். ஓரிரு நாளில் அந்தப்பாடு பட்டு விட்டேன் என்றாள். 3 நாட்களாக விடுதியில் கரண்ட் இல்லை. மெழுகுவர்த்தி ஒன்று கிடைக்குமா என்று பார்க்கும் ஆளிடம் எல்லாம் கேட்டு விட்டேன் .கிடைக்கவில்லை என்றாள்.ஓசிக்கும் கிடைக்கவில்லை, விலைக்கும் கிடைக்கவில்லை, மின்சாரம் இல்லை, அதனால் செல் போனிற்கு சார்ஸ் போட முடியவில்லை, இல்லையெனில் அதில் இருக்கும் டார்ச் லைட்டையாவது பயன்படுத்தலாம். இரவு முழுவதும் எந்த வித வெளிச்சமும் இல்லாமல், இருட்டு அறைக்குள் ஒத்தையாய், வாட் சென்னை ? " என்றாள் வெறுப்பாய். பூவரசனின் கையில் இருந்த செல்போனில் சார்ஸ் இல்லை. ஆனால் கீழே பொதுவாக இருந்த லேண்ட்லைன் போனில் இருந்து ஊருக்கு பேசமுடிந்தது ஆறுதலாக இருந்தது. தொலைபேசி நிலையத்தில் மின்சாரம் இருந்தால் போதும், நம் வீட்டில் மின்சாரம் இல்லையென்றாலும் லேண்ட்லைன் போன் வேலை செய்யும் ஆனால் செல்போனுக்கு தனித்தனியாக நம் வீட்டில் சார்ஸ் செய்ய வேண்டும் என்பது ஞாபகம் வந்தது.
இடைவெளி விட்டு இடைவெளி விட்டு மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது. இரவில் மின்சாரம் இல்லாமல், மின்விசிறி இல்லாமல் தூங்குவது இன்றோடு நான்கு நாட்களாகிவிட்டது. கொசுப்பேட்டை எடுத்து அடிக்க ஆரம்பித்தான். ஒரு கொசுவும் செத்தது மாதிரித் தெரியவில்லை, கொசுப்பேட்டின் மேலேயே கொத்தாக கொசுக்கள் உட்காருவது தெரிந்தது. அப்போதுதான் மின்சாரம் இல்லாமல் நான்கு நாட்களாக கொசுப்பேட்டிற்கு சார்ஸ் போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டான். இப்படியே மின்சாரம் இல்லாமல் 1 மாதம் ஆனால், 6 மாதம் ஆனால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தான். இவனுக்கு 20 வயதில்தான் , வீட்டிற்கு மின்சார வசதி கிடைத்தது. அதற்குப்பிறகுதான் மின்சார விளக்கு, மின் விசிறி எல்லாம். கிராமத்தில் இருந்தபோது மின்சாரம் இல்லை என்று ஒரு நாளும் தூங்காமல் இருந்ததில்லை. அப்போதும் கொசுக்கள் இருந்தது.ஆனால் வாழ்க்கையைப் பற்றிய பயம் இல்லை.மின்சாரம் என்பதே அப்போது பழக்கம் இல்லை. சிறு வயதில் மின்சாரம் இல்லாமல் வளர்ந்த தனக்கே இப்படி இருக்கிறது, பிறந்தது முதல் மின்சாரத்திலேயே இருக்கும் இந்தக் காலக் குழந்தைகளுக்கு மின்சாரம் இல்லாத வாழ்க்கை, மின்சாரம் இல்லாத உலகம் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தான் பூவரசன்.
தனித்து அறையில் இருந்த பூவரசனுக்கு நேரம் போவது மிகக்கடினமாக இருந்தது.தனிமை மிகக்கொடுமையாக இருந்தது. தனக்குத்தெரிந்த எழுத்தாளர் ஒருவர் எண்பது வயதை நெருங்குபவர். மனைவியை இழந்து , பிள்ளைகள் வெளியூரில் இருக்க தனித்து இருப்பவர். மிகப்பெரிய புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் அதனை எழுதி முடித்தவுடன் செத்துப்போய் விடவேண்டும் என்று சொன்னவுடன் திடுக்கிட்டதை பூவரசன் நினைத்துப்பார்த்தான். தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை என்று அவர் சொன்னது அன்று ஏனோ சட்டென்று புரியவில்லை பூவரசனுக்கு, இன்று தெளிவாகப்புரிந்தது.இந்தத் தனிமைக்குப் பயந்தே தன்னை அடித்தால்கூட தாங்கிக் கொண்டு பிள்ளைகளிடம் சேர்ந்து வசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சில முதியவர்களை பூவரசன் அறிவான். பகலில் கூட ஏதோ படிக்க, எழுத என்று நேரம் போனது. ஆனால் மாலை ஆறுமணிக்கே இருட்ட ஆரம்பித்து ஏழு மணிக்கெல்லாம் கும்மிருட்டு ஆனவுடன், தனிமை வறுத்து எடுத்தது. ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் அமைதியாக. இப்போதெல்லாம் இருட்டு கொஞ்சம் பழக்கமாயிருந்தது. இருட்டிலேயே நடக்கவும், பொருட்களை எடுக்கவும் பழகியிருந்தான். இருட்டில் எடுப்பதற்காகவே பொருட்களை அந்தந்த இடத்திலேயே வைக்கப் பழகியிருந்தான் பூவரசன். காலையில் இதை, இதை படிக்க வேண்டும், இதை இதை எழுதவேண்டும் என யோசித்தான். யோசனை ஒரு கட்டத்திற்கு மேல் ஓடவில்லை. எத்தனை திருக்குறள் தனக்குத் தெரியும் என்று கணக்கிடலாம் என்று திருக்குறள்களை சொல்ல ஆரம்பித்தான். அப்புறம் தனக்குப் பிடித்த புரட்சிக் கவிஞர் கவிதைகள், மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகள் என மெல்ல வாய் விட்டு சொல்ல ஆரம்பித்தான். என்னதான் சொன்னாலும் நேரம் 9 மணியைத் தாண்டியிருக்காது எனத் தோன்றியது, மெல்ல நடந்து சென்று அலமாரியில் இருந்த அறுவை ரொட்டிகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். வெள்ள நிவாரணப் பணிக்காக வந்திருந்த ஒரு நண்பர் கொடுத்தது என்று பூவரசனின் நண்பர் வந்து இரண்டு நாட்களுக்கு முன்னால் கொடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுங்கள் என்ற பூவரசனிடம்," சார், நாங்களெல்லாம் ஊருக்குப் போய்விட்டால் நீங்கள் மட்டும் தனியாக இருக்கும்போது பயன்படும், தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் " என்று வற்புறுத்திக் கொடுத்திருந்தார். அதனை எடுத்து சாப்பிட்டு , தண்ணீரைக் குடிக்க வயிறு நிரம்பியது போல இருந்தது. மாத்திரைகளைச்சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பூவரசனின் அறைக்கதவு தட்டப்பட்டது.
திறந்தால் அந்த பயிற்சி நிலையத்தில் வேலை பார்க்கும் ராம்பிரசாத் நின்றிருந்தார். " சார், நான் சப்பாத்தி கொண்டு வந்திருக்கிறேன். குருமாவும் இருக்கிறது. பக்கத்தில் எந்தக் கடையும் இல்லை, நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை , தயவு செய்து வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுங்கள் " என்றார். பருத்த உடல் படைத்த ராம்பிரசாத் பரந்த மனமும் படைத்தவராக இருந்தார். சப்பாத்தியை சாப்பிட்ட பூவரசன் ' இதற்கு எவ்வளவு பணம் ? " என்றபோது , சார் , எங்கள் வீட்டில் செய்தது. இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம்தான் எனது வீடு, ஏதோ என்னால் முடிந்த உதவி, போகும்போது அள்ளிக்கொண்டா போகப்போகிறோம். பலரை வெள்ளம் அள்ளிக்கொண்டு போய்விட்டது, பலரின் வாழ்க்கையில் சம்பாரித்து வைத்த அனைத்தும் இந்த வெள்ளத்தில் போய்விட்டது, இது மிகவும் சிறிய உதவி " என்றார்.குடையை பிடித்துக்கொண்டு, உணவைச்சுமந்துகொண்டு வீட்டிலிருந்து இருட்டில் நடந்து வந்திருக்கின்றார் அந்த மாமனிதர். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலத்தச்சார்ந்த அந்த மூன்று பேருக்கும் அவர் உணவு கொண்டுவந்து கொடுத்ததை காலையில் கேள்விப்பட்டான் பூவரசன்.
வெள்ளத்தின் கொடுமைகளை , தங்கள் உறவுகள், நண்பர்கள் படும் துன்பங்களை விடுதிக்கு வந்து சேர்ந்த சிலர் விளக்கிக்கோண்டிருந்தார்கள் . அந்த விடுதியை துப்பரவு செய்யும் மஞ்சு, தன்னுடைய வீட்டிற்குள் கழுத்தளவு வெள்ளம் வந்ததையும், தானும் தன் குடும்பத்தினரும் உயிர் தப்பியதே பெரும் பாடு என்றும் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் பாடப்புத்தகங்கள், லேப்டாப் கணினிகள் மற்றும் இருந்தவைகள் அடித்துச்செல்ல்ப்பட்டதை அழுதுகொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். 10 வருசமா, 15 வருசமா நாங்க சேர்த்து வச்ச பொருளையெல்லாம் அடிச்சிட்டுப் போயிருச்சு. எங்க கூடுவாஞ்சேரியிலே நிறைய ஆட்களையும் அடிச்சுட்டுப் போயிருச்சு சார், நாசமாப் போறவங்க, நட்ட நடு இராத்திரியில இப்படி தண்ணீரைத் துறந்துவிட்டுடாங்களே என்று அழுகையும் கண்ணீருமாய் நடந்தவற்றை விவரித்தார்.
செக்ரிட்டியாக வேலைபார்க்கும் முனியாண்டி தன் வீடு மூழ்கிய கதையை சொல்லிக்கொண்டிருந்தார். "60 வருசமா இருக்கிறேன் சார் அந்த வீட்டில எங்க அப்பா காலத்திலே இருந்து, இப்படி தண்ணீர் எப்பவும் வந்ததில்லை, பூரா வாய்க்கால்,ஆற்று எல்லாத்தையும் வீடாக்கி விட்டார்கள் சார், தண்ணீர் எங்கே போகும் , எப்படிப்போகும்? இதுவரைக்கும் பாதிக்கப்பட்டது எல்லாம் குடிசையில இருக்கிறவங்க மட்டும்தான், இந்தத்தடவைதான் கொஞ்சம் வசதி படைச்சவங்களும் பாதிக்கப்பட்டிருங்காங்க . என வீடு எல்லாம் கார வீடு சார். இராத்திரி 1 மணிக்கு திமு திமுன்னு சத்தம். எந்திரிச்சு பாத்தா வீட்டுக்குள்ள தண்ணீர். தண்ணீரோடு சேர்த்து பாம்பு, பூச்சின்னு அத்தனையும் வீட்டுக்குள்ள வந்திருச்சு சார் . இன்னும் வீடு முழுக்க சகதியாக் கிடக்கு. சகதிக்குள்ள கட்டில், மெத்தை அத்தனையும் கிடக்கு " என்றார்.
ம்னித நேயத்திற்கு முன்னால் சாதி, மதம் அனைத்தும் சக்தி இழந்து போனதை நிவாரணப் பணிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. அனைத்து இயக்கங்களும் தங்கள் அலுவலகத்தை நிவாரணப் பணி முகாமாக மாற்றியதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டியிருந்தது.பெரியார் திடலில் இருந்து செய்யப்படும் உதவிகளை விடுதலை பத்திரிக்கை வழியாகப் படித்தான் பூவரசன். முழுவதுமாக பக்தி கோலத்தில் இருந்த ஒருவர், அரசியல் கட்சிகள் என்றால் உதவி வேண்டாம் என்றவர், பெரியார் என்ற பெயரைக் கேட்டவுடன் உதவியைப் பெற்றுக்கொண்டதை பத்திரிக்கையில் படித்தான். தன்னுடைய உயிரையும் , பிறக்கும் குழந்தையின் உயிரையும் காப்பாற்றிய இஸ்லாமியரின் பெயரை தன்னுடைய குழந்தைக்குச்சூட்டிய இந்துப்பெண்ணைப் பற்றிய செய்தி பத்திரிக்கையில் வந்திருந்தது. உதவி செய்பவர்கள், உதவி தேவைப்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக மட்டும் சென்னை மக்கள் பிரிந்ததுபோல் தோன்றியது பூவரசனுக்கு.பேரிடர் மனிதத்தன்மையை உசுப்பி விட்டுவிட்டது என்று நினைத்தான் பூவரசன்.சென்னையே மனித நேய சென்னையாக மாறிவிட்டதோ எனத்தோன்றியது பூவரசனுக்கு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளைச்செய்து கொண்டிருந்ததைக் கண்டதும் மனது நிறைந்தது துன்பத்திலும்.
சேலத்திலிருந்து அரக்க பரக்க ஒரு குடும்பத்தினர் காரில் வந்து விடுதியில் இறங்கினர். தன்னுடைய ஒரே பையன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் , நாலைந்து நாட்களாக அவனிடமிருந்து எந்தச்செய்தியும் இல்லை என்றும் சொன்ன அவர்கள் , பையனின் அம்மாவை மட்டும் விடுதியில் விட்டுவிட்டு அவனது அப்பாவும், மாமாவும் அவனைத் தேடி காரில் சென்றனர். கீழே இறங்கி வந்த பூவரசன் அந்த அம்மாவோடு பேசிக்கொண்டிருந்தான். ராம்பிரசாத் உணவோடு காலையில் தேடி வந்திருந்தார். பூவரசனுக்கு உணவைக் கொடுத்தவுடன் வாங்கிக்கொண்டான. பிரகாசம் அந்த அம்மாவை வற்புறுத்தி சாப்பிடச்சொல்ல,மகனைக் காணாம் என்று எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ ஒரே ஒரு பூரியை எடுத்து வாயில் வைக்க ஆரம்பித்தார்.
திடிரென்று ராம் பிரசாத்தோடு வேலை பார்க்கும் ஒருவர் அங்கு தோன்றினார். " விடுதியில் ஏன் ஆட்கள் இருக்கிறீர்கள். அதுதான் லீவு விட்டு எல்லோரையும் ஊருக்குப் போகச்சொல்லியாச்சே " என்றவர், சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அம்மாவைப் பார்த்து " நீங்கள் யார் ? " என்றார் அந்த அம்மையார் தான் யார் என்பதையும் தனது கணவர் இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ' மகனைக் காணாம் என்றெல்லாம் இப்படி தேடிக்கொண்டெல்லாம் வரக்கூடாது " என்றவரைப் பார்த்து பூவரசன் " சார் , அவர்கள் மனம் பதைத்து வந்திருக்கின்றார்கள். உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தனது பிள்ளையைக் காணவில்லை என்று வந்திருக்கிறார்கள் " என்றான். " எனது பிள்ளைகள் , நான் பெற்ற பிள்ளைகள் நாலு பேரைக் காணாம், நான் என்ன தேடிப் போய் தொந்தரவு செய்து கொண்டா இருக்கிறேன் ? " என்றவுடன் வாயில் வைத்த ஒரு வாய் பூரியையும் முழுங்காமல் அப்படியே பூரியைக் கீழே வைத்தார்கள் அந்த அம்மையார். சென்னை மொழியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த ஆளோடு அப்படியே மல்லுக்கட்ட வேண்டும் என்று கையும் காலும் பரபரத்தது பூவரசனுக்கு. சென்னையே மனித நேய ஊராக மாறிவிட்டதாக பெருமைப்பட்டது உண்மை இல்லை என்பது பளீரென்று உரைத்தது பூவரசனுக்கு. ராம்பிரசாத் மாதிரி ஆட்கள் இருக்கும் இடத்தில்தான் இப்படிப்பட்ட ஆட்களும் இருக்கிறார்கள். நன்மையும் தீமையும் போல, வெயிலும் நிழலும் போல மனிதர்களுடைய உணர்வுகளைப் புரிந்தவர்களும் , புரியாதவர்களும் சேர்ந்தேதான் ஓரிடத்தில் இருக்கின்றார்கள்.என்று தோன்றிற்று . அந்த அம்மாவோடு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தான் பூவரசன். சிறிது நேரத்தில் தேடிச்சென்றவர்கள், தனது பையனோடு வருவதைப் பார்த்த அந்த அம்மா, திடுத் திடுவென ஓடி அந்தப் பையனிடம் பேசியதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பூவரசன். மழை முழுவதுமாக விட்டிருந்தது. மின்சாரம் நாளை முதல் வந்து விடும் என்றார்கள். .நாளை முதல் வகுப்புகள் நடக்கும் என்றார்கள்.நாளை முதல் பயிற்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தான் பூவரசன்.
- எழுதியவர் : வா.நேரு
- நாள் : 19-Jan-16, 6:56 am
- நன்றி : எழுத்து.காம்
5 comments:
அருமையான பதிவு நேரு சார் .பல சிந்தனைகளை என்னுள் தூண்டியது.நன்றி .
நன்றி பிரசன்னா சார், சின்ன சின்ன ஊக்கமூட்டல்கள் தொடர்ந்து இயங்க உதவும் ....
நீளமானதாக இருப்பினும்நன்று.
நீளமானதாக இருப்பினும்நன்று.
நன்றி ஷான் சார். தங்களின் கருத்தை இனிவரும் கதைகளுக்கு எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி.
Post a Comment