உடுமலையில் பட்டப் பகலில் அந்தோ கொடுமை! கொடுமை!!
ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கொலை வெறித் தாக்குதல்
வடக்கே‘லவ்ஜிகாத்';தமிழ்நாட்டில் ‘கவுரவக்கொலை’யா?
தமிழர் தலைவர் கடும் கண்டனம்!
தமிழர் தலைவர் கடும் கண்டனம்!
உடுமலையில் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெற்று சங்கர் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமாரலிங்கம் சாவடியைச் சேர்ந்த திரு. வேலுச்சாமி என்பவருடைய மகன் சங்கர் (வயது 22) கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளார்.
ஜாதி மறுப்புத் திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவை (19) காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 8 மாதங்களாகி விட்டது.
திருமணம் முடிந்து குமரலிங்கம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். கவுசல்யா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.
பட்டப்பகலில் பகிரங்க படுகொலை!
இவர்கள் இருவரும் நேற்று (13.3.2016) உடுமலைப்பேட்டையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கயவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளனர். பட்டப் பகலில் பேருந்து நிலையம் அருகில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்தார். தடுக்கச் சென்ற கவுசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை செய்த கொடியவர்கள் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளைத் தோளில் தொங்கப் போட்டுச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் இவையெல்லாம் பதிவாகியுள்ளன.
திருமணம் செய்து கொண்ட இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், இதில் சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் பின்னணியில் தான் இந்தப் படுகொலை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
இந்தப் பின்னணியில் தான் இந்தப் படுகொலை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
கவுரவக் கொலைகளா?
இத்தகு கொடுமைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனோ?
அசிங்கத்துக்குப் பொட்டு வைத்ததுபோல, இதற்குக் ‘கவுரவக் கொலை’ என்றும் வேறு மகுடம் சூட்டுகின்றனர் ஜாதி வெறியர்கள். இந்த நிகழ்வுகள் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாகவே நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படும்பாடு!
நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலிப் பறிப்பு என்பது ஏராளம் இடம் பெற்று வருகின்றன. இந்த லட்சணத்தில் சட்டம் - ஒழுங்கு தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருப்பதாக முதல் அமைச்சர் கூறுகிறார். இதென்ன நாடா? காடா?
காதலித்துத் திருமணம் செய்து
கொள்வது என்பது குற்றமா?
கொள்வது என்பது குற்றமா?
வட மாநிலங்களில் ‘லவ்ஜிகாத்’ என்று சொல்லி, மதம் மாறித் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக பிஜேபிஆட்சியின் துணையோடு சங்பரிவார்கள் வன்முறை வெறியாட்டம் போடுகின்றனர். தமிழ்நாட்டில் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்த விரும்புபவர்கள் பிரச்சாரத்தால், செயல்பட்டால் ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்வோர் உயிருக்கு உலை வைக்கப்படுகின்றது.
அரசு செயல்படட்டும்!
இது கடும் கண்டனத்துக்கு உரியது. கட்சிகளைக் கடந்து கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
தமிழ்நாடு அரசு இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காலந் தாழ்த்தவும் கூடாது; குற்றவாளிகள் உரிய தண்டனைக்கு ஆளாக வேண்டும்.
தருமபுரியில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டு, ஊரே கொளுத்தப்பட்டது - தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளவரசன் மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. பெரும்பாலும் கொலைதான் என்ற கருத்து நிலவுகிறது. இது நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதை தொடர்ந்து நடைபெற்ற கோகுல்ராஜ் படுகொலையும் வேதனைக்குரியது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி தானே! குற்றவாளிகளை காலந்தாழ்த்தாது கண்டுபிடித்து தண் டனையைப் பெற்றுத் தருவதில் காவல்துறை வேகத்தையும், விவேகத்தையும் காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
14.3.2016
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
14.3.2016
No comments:
Post a Comment