Sunday, 6 March 2016

குறிப்பறிதல்......

குறிப்பறிதல்......

மின்னெலென
வந்து 
'வாருங்கள், வாருங்கள்'
என்று சொல்லி
மறைந்த அக்கணமே
உள்ளுணர்வு சொல்லியது 
ஏதோ சிக்கலென

ஒரு அறையில் 
நீ அமர்ந்து எனை
உபசரித்த நேரம்
சமையலறைக்குள்
இருந்து வந்த
'டொப், டொப் ' சத்தம்
இன்னும் அதனை 
உறுதிப்படுத்தியது ....

'உண்ணுங்கள், உண்ணுங்கள்'
என என்னை நோக்குங்கால்
முகம் மலர்ந்தும்
உன்னை நோக்குங்கால்
முகம் திரிந்தும்
உனது மனைவி  
முகம் மலர்ந்தும் 
முகம் திரிந்தும் 
வேற்றுமை காட்டிய
முகக்குறிப்பில் 
தெரிந்து போனது அத்தனையும்....

நோயுற்ற போதும்
நோயற்ற போதும் 
எப்போதும்
உறவு வீடுகளில் 
உண்ணுவதைவிட
உணவு விடுதிகளில்
உண்ணுவதே
உவப்பானது என
எண்ணியபடியே 
வீட்டை விட்டு 
வெளியேறும் நேரம் 

அருகில் வந்த 
உனது மகள்
'அங்கிள் தப்பாக
எடுத்துக்கொள்ளாதீர்கள்
அம்மாவிற்கும் 
அப்பாவிற்கும் 
இரண்டு நாளா சண்டை ...
வீட்டிற்கு வராமல்
இருந்து விடாதீர்கள் '
என்ற போது 
குழந்தைக்கும் உண்டு
குறிப்பறிதல் 
எனும் உண்மை 
புலர்ந்தது எனக்கு.....

கணவனை 
மனைவியை
கவனித்த என்னை
குழந்தை கவனித்ததை
நான் அறியவில்லை போலும்...
உங்கள் இருவருக்காக
அல்ல
உறவுக் குழந்தைக்காக
மீண்டும் வீட்டிற்கு
வரவேண்டுமென தோன்றியது....

                                                      வா. நேரு , 06.03.16

No comments: