Wednesday 2 March 2016

இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தியதுதான்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல
மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தியதுதான்!
மொழிப்போர் தியாகி அய்யம்பாளையம் வீரப்பன் படத்திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கருத்து விளக்கம்

கரூர், மார்ச் 2- தந்தை பெரியார் அவர்களின் இந்தி மொழி எதிர்ப்பு என்பது அம்மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் நோக்கம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
30.1.2016 அன்று தியாகச் செம்மல் மறைந்த அய்யம்பாளையம் வீரப்பன் அவர்களின் படத்திறப்பு  விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மறைந்தவர் அல்ல; எப்பொழுதும்
தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவர்
மிகுந்த நெகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய தியாகச் செம்மல் ஆசிரியர் வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றி அவர்களுடைய பெயரால், அவருடைய ஈகையைப் போற்றி, அவர் மறைந்தவர் அல்ல; எப்பொழுதும் தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவர் என்கிற பெருமைக்குரியவராக, தமிழுக்காகத் தியாகம், தன்னலம் மறுப்பாளர்களை, தன்னுயிர் ஈந்த பெருந்தகையாளர்களை நினைவூட்டுகின்ற மொழிப் போர் தியாகிகள் என்கிற வரிசையில், ஒப்பற்ற தன்னலமறுப்புடன் இந்த சமுதாயத்திற்கு, தன்னை அழித்துக் கொண்டாலாவது மக்கள் திரும்பிப் பார்க்கமாட்டார்களா? தமிழர்களுடைய உறக்கம் குறைந்துவிடாதா? அல்லது தீர்ந்துவிடாதா? என்ற உணர்ச்சியோடு தன்னை அழித்துக்கொண்டு, இந்தி மொழி என்பதை எதிர்த்து, செஞ்சியில் வென்ற - இருந்த - என்றும் வாழ்கின்ற நம்முடைய வீரப்பனார் அவர்களுடைய நினைவைப் போற்றி, அவர்கள் பணியாற்றிய இந்த சிறிய ஊரிலே - பெரிய போரினை நிகழ்த்தியிருக்கிற பொதுமக்களை - தோழர்களை - ஒத்துழைத்தவர்களை - அதற்கு முனைப்பாக நின்ற புலவர் கடவூர் மணிமாறன் அவர்களையும் - ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களையும், மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்களையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்ற அந்தச் சொல்லை முதலில் வைக்கிறேன்.
இந்த ஊர் சிறிய ஊர் என்று சொன்னார்கள்; நான் முதல்முறையாக இந்தப் பகுதிக்கு வருகிறேன். இந்த ஊரைப்பற்றிச் சொல்லும்பொழுதே அச்சுறுத்தக் கூடிய அளவில் சொன்னார்கள். திருச்சியிலிருந்து உங்கள் பயணம் இரண்டரை மணிநேரத்திற்குக் குறையாமல் இருக்கும் என்றார்கள். நான் திருச்சியில் காலையில்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கேயிருந்து  உடனே புறப்பட்டுவிட்டேன் 4 மணிக்கெல்லாம் இங்கே வரவேண்டும் என்பதற்காக.
கேட்டுத் திருந்தக் கூடியவர்களாக இருந்தால், அங்கே பேசுவதுதான் பயனுடையதாக இருக்கும்
இங்கே காணுகின்ற உணர்ச்சிதான் மிக முக்கியம். சிறிய  ஊர், சிறிய கூட்டம் என்றெல்லாம் சொன்னார்கள். நான் பெரியார் தொண்டன். சிறிய கூட்டமாக இருந்தாலும், அவர்கள் கேட்டுத் திருந்தக் கூடியவர்களாக இருந்தால், அங்கே பேசுவதுதான் பயனுடையதாக இருக்குமே தவிர, பெரிய திருவிழா கும்பலில், பெரிய அளவில் ஆடம்பரமாக கூடினார்கள், கலைந்தார்கள் அவர்கள் எடுத்து கொண்டது எதுவுமில்லை என்று சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடாது.
நகரங்களில் பேசுவதைவிட, கிராமங்களில் பேசுவதும், மக்களை சந்திப்பதும்தான் பயன்படும். நகரங்களில் கூட்டம் கூடுவார்கள், வேடிக்கைப் பார்ப்பார்கள், விளம்பரங்கள் கிடைக்கும், ஆடம்பரங்கள்தான் அங்கே இருக்கும். ஆனால், எங்கே மிகப்பெரிய ஒரு கருத்து ஈர்ப்பு இருக்கும் என்றால், அது உள்ளபடியே நமது கிராமத்துப் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் என்பதுதான் பொது உண்மையாகும். அந்த வகையில் இங்கே நிறைய தாய்மார்கள் வந்திருக்கிறார்கள்.
நாம் இங்கே மிக்சி, கிரைண்டர் கொடுக்கவில்லை; அல்லது இலவசங்களை வாரி இறைக்கவில்லை. இலவசமாக வழங்கக்கூடிய ஒரே ஒரு செய்தி என்னவென்றால், அறிவு, பகுத்தறிவு, தன்மானம் - இதைத்தான் நீங்கள் கேட்காமலே கொடுக்க வந்திருக்கின்றோம் நாங்கள். நீங்கள் ஏற்காவிட்டாலும், நாங்கள் விடப்போவதில்லை என்பதுதான் மிக முக்கியமாகும்.
இந்த இயக்கமே அப்படிப்பட்ட இயக்கம்தான். வள்ளலார் அவர்கள் சொன்னார்கள்,
கடை விரித்தேன், கொள்வாரில்லை
கட்டிவிட்டேன் என்று.
ஆனால், பெரியார் சொன்னார்,
கடை விரித்தேன், நீங்கள் கொள்ளும்வரை
என் கடையை கட்டமாட்டேன் என்றார்.
மொழி உணர்வாளர்களுக்கு
நாம் நன்றி சொல்லவேண்டும்
வீரப்பன் அவர்களைப்பற்றி அதிகமாக நான் கேள்விப்படவில்லை. இன்றைக்கு நடந்திருப்பது ஒரு பெரிய வரலாற்று மீட்டுருவாக்கம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்கூட, மற்றவர்களை நாம் நினைவு கூர்கிற அளவிற்கு தள்ளிப் போய்விட்டது - தொலைதூரத்தில் இருக்கிறது என்பதற்காக - அந்தப் பட்டியலில் அவருக்குக் கிடைக்கவேண்டிய இடம் இன்றைக்குத்தான் முறையாக - தெளிவாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆயிரம் நன்றிகளை கடவூர் மணிமாறன் அவர்களுக்குச் சொல்லவேண்டும். உங்களுக்குச் சொல்லவேண்டும். இதற்குப் பாடுபட்ட அரும் இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
பொதுவாக பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றும். நியாயம்கூட அதில் இருக்கிறது.
புரட்சிக்கவிஞர்கூட சொன்னார்,
சாகின்றாய் தமிழா! சாகின்றாய்
சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல்
சாகின்றாய் தமிழா சாகின்றாய்’
என்று சொன்னார்.
அதனைப் பார்க்கும்பொழுது நமக்கு மிகுந்த வேதனை. மொழிக்காக எத்தனை பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். மணிமண்டபம் மிக அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த சிக்கலும் இல்லை. அரசாங்கத்திற்கும் சொல்லிக் கொள்கிறேன், ஏதோ ஒரு பொதுவான விதியை வைத்துக்கொண்டு அவர்கள் இதனை நோக்கியிருக்கக் கூடும். ஆனால், அவர்களுக்கே அது தெளிவாகும்.
ஜனவரி 25: மொழிப் போர்
தியாகிகள் நாள்!
ஏனென்றால், இந்த ஒரு செய்தியில்தான், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடியவர்கள் - எதிரும் - புதிருமாக ஒரே அமைப்பிலே இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் - அதிலும் அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள். மொழிப் போர் தியாகிகள் நாள் என்று ஜனவரி 25 ஆம் தேதி இந்தப் பக்கத்திலும் நடக்கிறது, அந்தப் பக்கத்திலும் நடக்கிறது  என்று சொல்லிக் கொண்டு, ஒரு மொழிப் போர் தியாகியினுடைய சிலையை வைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னால், அது யாருக்குச் சங்கடம்? யாருக்கு வேதனை? என்றால், அது அரசாங்கத்திற்குத்தான் முதலில் அவப்பெயரை உருவாக்கக்கூடிய ஒரு செய்தியாக முடியும். ஆக, அவர்கள் சரியான கண்ணோட்டத்தோடு பார்த்தால், இதில் ஒரு சிக்கலும் இல்லை என்று தெரியும்.
நாங்கள் இந்திக்கு எதிர்பக்கம் இருக்கிறோம்! தமிழுக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கிறோம்!
வருகிறவர்கள் யார் என்று பார்க்கக்கூடாது. செய்த தியாகம் எதற்காக என்பதைத்தான் பார்க்கவேண்டும். ஆனால், அவர்கள் தலைகீழாக இந்நிகழ்வில் கலந்து கொள்கிறவர்கள் யார்? என்று பார்த்திருக்கக் கூடும். அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் இல்லை. இவர்கள் எந்தப் பக்கம் - எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறார்கள். நாங்கள் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்றால், இந்திக்கு எதிர்பக்கம் இருக்கிறோம்; தமிழுக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கிறோம். பகுத்தறிவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம். மனிதநேயம் பக்கத்தில் இருக்கிறோம். வீரப்பன் எங்கள் பக்கத்தில் இருக்கிறார். எனக்குக்கூட ஒரு சந்தேகம் - வீரப்பன் சிலை என்று சொன்னவுடன், ஆசிரியர் வீரப்பனை வேறு வீரப்பன் என்று குழப்பிக் கொண்டார்களோ என்று. ஏனென்றால், அப்படி குழப்பம் வரக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது.
ஆக, அந்த சூழ்நிலையில், இது தனியார் அமைப்பு - அவர்கள் மேலே சொல்லியிருப்பார்கள் - காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு எதிரிகளோ - அல்லது அவர்கள் நமக்கு விரோதமான சிந்தனை உடையவர்களோ அல்ல - அவர்களும் தமிழின உணர்வாளர்கள்தான் - தமிழர்கள்தான்.
நாம் எப்பொழுதும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். அந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, இன்றைக்கு படத்திறப்பை  வைத்திருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்தவிதமான இடையூறும் இல்லை. மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் என்று ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடுகின்ற நேரத்தில், அந்த மொழிப் போர் தியாகியாக - ஒப்பற்ற தியாகிகள் - வரிசையாக ஒரு பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
தியாகம் செய்பவர்களுக்கு குறுகிய
ஜாதிப் பார்வை கிடையாது!
தாளமுத்து நடராசன் என்று சொல்லிப் பழக்கப்பட்ட காரணத்தினால், அதை ஒரு பிரச்சினையாக்கி, சிலர் உள்ளே நுழையலாம் என்று நினைத்து, ஜாதீயப் பார்வையெல்லாம் பார்த்தார்கள். தியாகம் செய்பவர்களுக்கு மொழி, இனம் என்று சொல்லும்பொழுது, குறுகிய ஜாதிப் பார்வையெல்லாம் கிடையவே கிடையாது.
இங்கே நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம். கவுதமன் அவர்கள், புலவர் வகுப்பில் படிக்கும்பொழுதே சாதனையாளர். அது என்னவென்றால், திருப்பனந்தாளில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு வாங்கியவர் நம்முடைய கவுதமன் அவர்களாவார். அவருடைய தந்தையார் அவர்கள் தீவிரமான பெரியார் தொண்டர்; தீவிர சுயமரியாதை வீரர்.
அதேபோன்று இந்த மேடையில் இருக்கின்ற எல்லோரையும் பாருங்கள். முகுந்தன் அவர்களை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அதேபோன்று ஆசிரியர் புலவர் அவர்கள். என்னை அவர்களுக்கு சிறு பிள்ளையில் இருந்து தெரியும். ஆனால், நான் என்ன ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? என்றால், தெரியாது.
நாங்கள் இனத்தால் திராவிடர்கள்; மொழியால் தமிழர்கள்;  வழியால் தமிழர்கள்; விழியால் திராவிடர்கள்.
இந்த உணர்வுதான் நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கவேண்டுமே தவிர, நமக்கு வேறு உணர்வுகள் வரவேண்டிய அவசியமே கிடையாது.
மொழிப் போர் தியாகிகளின் பட்டியல்!
இங்கே வெளியிடப்பட்ட மலரில் ஆசிரியர் புலவர் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கீழப்பழுவூர் சின்னசாமி 25.1.1964
கோடம்பாக்கம் சிவலிங்கம் 25.1.1965
விருகம்பாக்கம் அரங்கநாதன் 27.1.1965
கீரனூர் முத்து 11.2.1965
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் 11.2.1965
சத்தியமங்கலம் முத்து 11.2.1965
மயிலாடுதுறை சாரங்கபாணி 15.3.1965
துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர் - 27.1.1965 அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் சிலையாக இருக்கக்கூடிய சிவகங்கை ராசேந்திரன்
10.2.1965 அன்று கோவை குமாரமங்கலம் வெள்ளக் கோவில், திருப்பூர், மணப்பாறை முதலிய 40 இடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 100-க்கும் மேற் பட்டோர் மாண்டனர்.
இவையெல்லாவற்றையும் இங்கே வெளியிட்டுள்ள மலரில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பதிவுகள் மிகவும் அவசியம்; ஏனென்றால், தமிழர்களுக்கு மறதி அதிகம். பல இயக்கங்கள், பல அரசியல் தலைவர்கள், பல பொதுவாழ்க்கைக்காரர்கள் வாழ்வதே, பொதுமக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இதனை நினைவூட்டவேண்டியது அவசியமான கடமையாகும்.
அந்த வகையில், 12.2.1965 ஒரே நாளில் நூற்றுக்கணக் கானோர் படை வீரர்களால் சுடப்பட்டு, குவியல் குவியலாய் உடல்கள் குழிக்குள் தள்ளப்பட்டு, மறைக்கப்பட்ட ஊர் பொள்ளாச்சி.
நஞ்சுண்டு மாண்டோர் -
விராலிமலை சண்முகம் 1965
2.3.1965 கோவை பீளமேடு தண்டபாணி
இப்படி எண்ணற்றவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். எதற்காக? வெறும் மொழிக் காகவா - வெறும் மொழிப் பிரச்சினை மட்டும்தான் இதில் இருக்கிறதா என்பதை வீரப்பன் அவர்களுடைய நினைவை நாம் போற்றுகின்ற நேரத்தில் நினைத்து, ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அகில இந்திய காங்கிரசு தலைவராக இருந்த சீதாராம் கேசரி
ஒருமுறை நான் டில்லிக்குச் சென்றிருந்தபொழுது, அகில இந்திய காங்கிரசினுடைய நீண்ட நாள் பொருளாளராகவும், பிறகு அகில இந்திய காங்கிரசிற்கு - சோனியா காந்தி அம்மையார் வருவதற்கு முன் வரையில், தலைவராக இருந்த சீதாராம் கேசரி அவர்கள், பெரியார் பற்றாளர் அவர். பெரியார் அவர்களுடைய கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்துவிட்டு,  பெரிய அளவிற்கு அடிக்கடி சந்தேகங்களைக் கேட்பார். அவர் நேரு காலத்திலிருந்து பொருளாளராக இருந்தார் அந்த இயக்கத்திற்கு. நம்பிக்கையான ஒரு தலைவர் - அவர்களுடைய அமைப்பிற்கு.
பெரியாரைப்பற்றி சந்தேகம் கேட்பார், டில்லியிலிருந்து தொலைபேசி வாயிலாகவே அந்த சந்தேகத்தைக் கேட்பார்.
பெரியார் அவர்கள் வெறும் மொழிக்காக மட்டும் இந்தியை எதிர்த்திருப்பாரா?
ஒருமுறை அவர் அப்படி கேட்கும்பொழுது, பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி. அவர் வெறும் மொழிக்காக மட்டும் - இந்தி மொழியை எதிர்த்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் அதற்கு ஆழமான காரணம் இருந்திருக்கவேண்டும். ஆகவே, உங்களைக் கேட்டால், அது தெளிவாகும் என்று என்னிடம் கேட்டார்.
நான் தெளிவாக சொன்னேன், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - ஒரு இனத்தின் பண்பாட்டை - நீண்ட காலமாக, பாரம்பரியமாக இருக்கக்கூடிய ஒரு பண்பாட்டை அழிப்பதற்கு, இன்னொரு பண்பாட்டினுடைய படை யெடுப்பு - அது இந்தி என்ற ஆயுதத்தின் மூலமாக, கருவியின் மூலமாக, பயன்படுத்துகின்ற காலம் என் பதை பெரியார் உணர்ந்தார்; பெரியாருடைய இயக்கம் உணர்ந்தது; திராவிடர் இயக்கம் உணர்ந்தது. ஆகவேதான், அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கு உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால் என்று பல்வேறு  செய்திகளை எடுத்துச் சொல்லிவிட்டு, இந்திய அரசியல் சட்டத்திலேயே சூதாக அவர்கள் சட்டத்தை இயற்றியவர்கள் - அதிலே ஆட்சி மொழி என்று போடுகிற நேரத்தில், அவர்கள் இந்தி என்று மட்டும் போடவில்லை. இந்தி அதிகாரப்பூர்வமாக ஆட்சி மொழியாக இருக்கும். பிறகு போராடிய பிறகு, மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்கிற நேருவினுடைய உறுதிமொழி சட்ட ரீதியானது என்று அதைக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் கொடுத்தது. வெறும் தனிப்பட்ட நேரு அல்ல. இந்தியப் பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதிமொழி கொடுத்தார். அதற்கு என்ன பின்னணி என்று ஒருபக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி உண்டு.
அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் மிக சாமர்த்தியமாக என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால்,
Hindi - that is in devnagri script என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்துஸ்தானி என்பது உருது கலந்த இந்தி - அதுதான் இந்துஸ்தானி. வடநாட்டில் உருது கலந்த இந்துஸ்தானிக்கும், தேவநகரி என்று சொல்லக்கூடிய சமஸ்கிருதம் கலந்ததற்கும் - பண்பாட்டுப் போராட்டம். ஆரிய - திராவிட போராட்டம் போன்று. நிறைய பேருக்கு இது தெளிவாகத் தெரியாது.
எப்படி என்று சொன்னால், தேவநகரி என்றால் இந்தியில் என்ன அர்த்தம் என்றால், கடவுள் எழுத்து. சமஸ்கிருத மொழியை தேவபாஷை என்றார்கள். அதற்கு நேர் எதிராக தமிழை நீஷ பாஷை என்றார்கள்.
மந்திரம் சொல்லுங்கள், மந்திரம் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்
தமிழ் மொழியை ஏன் கோவிலில் விடமாட்டேன் என்கிறார்கள். இன்னமும் நம்முடைய தமிழர் வீட்டுத் திருமணங்கள் சமஸ்கிருதத்தில் நடத்தப்படுகிறது. யாருக்காவது அது புரியுமா? மணமக்களுக்குப் புரி யுமா? ஒருவருக்கும் புரியாது. ஆனால், அய்யரே மந் திரம் சொல்லுங்கள், மந்திரம் சொல்லுங்கள் என்று சொல் கிறார்கள்.
அய்யரோ, சமஸ்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்கிறார்.
திருமணங்களில் கூறும் மந்திரத்தின்
அர்த்தம் என்ன தெரியுமா?
திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ்கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய மந்திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் ஒன்று.
மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவதாவது: சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாம் கணவன் அக்னி. உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.
இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத சுலோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.
ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.
ஸோமோ (அ)தத் கந்தர் வாய கந்தர்வோ (அ)தத் அக்நயேர
யிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்
இதைத்தான் நம் ஆள்கள் சொல்லுங்க சாமி, சொல்லுங்க சாமி என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் சொல்வதால், நம் ஆள்களுக்குப் புரியவில்லை. இதுபோன்று தமிழில் சொன்னால், அவரை வெளியில் விடுவார்களா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
- தொடரும்
நன்றி : விடுதலை 02.03.16

No comments: