Sunday, 15 May 2016

அண்மையில் படித்த புத்தகம் : சுனை நீர்.... ராகவன் ஸாம்யேல்அண்மையில் படித்த புத்தகம் : சுனை நீர் (சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர்                           : ராகவன் ஸாம்யேல்
பதிப்பகம்                                   : அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம்,
                                                          செல்பேசி : 999 454 1010
முதல் பதிப்பு                             : செப்டம்பர் 2013, 146 பக்கங்கள், விலை ரூ 120 /-

                                                 'சுனை நீர் ' சிறுகதைத்தொகுப்பில் உள்ள 21 சிறுகதைகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு வியப்பைக் கொடுத்தது உள்ளடக்கம் மட்டுமல்ல, கதையைச்சொல்லும் விதமும்தான். ஒரு பெண்ணையோ அல்லது இடத்தையோ பார்த்து ஓர் ஓவியன் அப்படியே சித்திரமாக வரைவதைப்போல , தன்னுடைய எழுத்தால் இடத்தை , ஒருவனின் அல்லது ஒருத்தியின் மனதை அப்படியே அச்செடுக்க வல்லவராக இந்தச்சிறுகதை எழுத்தாளர் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.ராகவன் ஸாம்யேல் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்று இந்தத் தொகுப்பை அறிகிறபோது , மனதார பாராட்டவும், இன்னும் நிறைய இவரிடமிருந்து கதைகளாக எதிர்பார்க்கவும் தோன்றுகிறது.

                                           சுனையில் ஆண்மான் குடிக்கட்டும் என்று பெண்மானும், பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும் நினனைத்து தண்ணீரைக் குடிக்காமல் இருப்பதை சங்க இலக்கியம் காட்டும் , அதுபோல திருப்பதி ஆசாரியின் குடை தனது துணைக்கான இரையை எடுத்துச்செல்லும் பாத்திரம் என்பதனை சொல்லும் விதம் அருமை. மன நோய் வாய்ப்பட்ட மதுரவல்லி , தனது தாயாலேயே திருச்சி பேருந்து நிலையத்தில்  விட்டுச்செல்லப்படத் தூண்டும் எதார்த்தமும் , வறுமையும் படித்த பின்பும் நெடு நேரம் மனதை அரித்த கதை. கதை என்று கடந்து செல்ல இயலவில்லை என்னால், புனித தேசமென்று கோசமிடும் மனிதர்கள் மதுரவல்லிகளுக்கெல்லாம் என்ன வழி வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.இந்தியாவின் முதல் பணக்காரனும் அவன் தான், வங்கியில் கடன் வாங்கிவிட்டு , கட்டாமல் ஒரு லட்சத்து இருபதினாயிரம் கடன் வைத்திருப்பவனும் அவன்தான் என்று அனுமதிக்கும் இந்த நாட்டில் துயரம் தோய்ந்த மாந்தர்களின் வாழ்க்கையை ஓவியமாய்க் கதையாக வடித்தெடுப்பதும் மாற்றத்திற்கான  வழிமுறைதான்.

                                  கறிக்கடையைப் பற்றியும் , வெள்ளாட்டுக்கறிக்காக ஆடு தேடி வாங்கி வரும் அழகர், கறவை மாடுகளில் பால் கறக்கும் அழகர் என கடைசியில் கமிசன் கிடைக்கும் என ஏமாந்து போகும் அழகரைப் பற்றிச் சொல்லும் ' கடிவாளம் ',அப்படியே கண் முன்னே விரிகிறது , பலசரக்கு கடை சேர்மக்கனியைப் பற்றிச்சொல்லும் 'நுழை புலம் ' அப்படியே பலசரக்குக் கடையும் அது  சார்ந்த இடமுமாய் விவரிப்பதோடு சேர்மக்கனி தனது மனைவி புஷ்பத்தைப் பற்றிப் பயப்படுவதுமாய் முடிவடைகிறபோது , நமது தெருவில் கடை வைத்திருப்பவரின் உழைப்பும் , பயமும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

மெல்லிய இழையாய் தனது அம்மாவின் மனதில் இருக்கும் தீண்டாமையைச்சுட்டும் 'அம்மா அறிந்த பாத்திரம் ', கோமதியின் மாமியார் படுத்தும் பாட்டைச்சொல்லும் 'கழுத்துப்புண் ' கதைகள் எனப் பல கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் மனதைத் தொடுகின்றது.    

                                     பெண்களின் கணவருக்கு அப்பாற்பட்டவர்களின் தொடர்புகளைப் பற்றிச்சொல்லும் 'சுனை நீர்' -புஷ்பம், 'கண்ணாடித்தேர்' -சரோஜா, 'ஊஞ்சல் விழுது' ரூபினாவைப் பற்றிச்சொல்லும் கதைகள் இப்படி இப்படியெல்லாம் இருக்கிறது என்று எடுத்துச்சொல்லிச்செல்லும் கதைகளாகவே இருக்கின்றன, இது சரியா ? தவறா எனப்பட்டிமன்றம் எல்லாம் போடாமல், இருப்பதை இருப்பதாகச்சொல்லிச்செல்லும் கதைகளாக இருக்கின்றன, நம்மைச்சுற்றி நடப்பதுதானே....

'உண்டார்கண் நோக்கு' -வனஜாவைப் பற்றியும் அவளின் மாதவிலக்கு துணி பற்றி கத்தும் அவளின் பாட்டி பற்றியும் சொல்லும் கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது கீதா இளங்கோ அவர்களின் 'மாத விடாய் ' குறும்படம்  நினைவு வந்தது.மாத விடாய் பற்றி எத்தனை கற்பிதங்கள் இன்னும் இந்தச்சமூகத்தில் ....கள்ளத் தொடர்பில் இருப்பவள், தனது தங்கயை கட்டிக்கொள் என்று சொல்ல , அதனைக் கண்டு கொள்ளாமல் கழன்று கொள்பவனைச்சொல்லும் 'இந்திர தனுசு ' எனப்பல கதைகளின் தலைப்புகள் கவித்துவுமாய் அதே நேரத்தில் கதையின் உள்ளடக்கத்தில் தொடர்பு உள்ளதாக இருப்பது இத்தொகுப்பின் சிறப்பு எனலாம்.

                                தெற்குவாசல், கீழ வாசல், கிரைம் பிராஞ்ச்பேருந்து நிறுத்தம், தமிழக எண்ணெய்ப்பலகாரக் கடை, பதினொரு வீட்டுக் குடியிருப்பு காம்பவுண்டு, பணிரெண்டு வீட்டுக் காம்பவுண்டு என்று மதுரையைச்சார்ந்த பல இடங்களை நுண்ணிய விவரிப்புகளாய் இத்தொகுப்பு விவரிப்பதும், உயிரோடு நம்மைச்சுற்றி உலவும் பல மனிதர்களை தனது கதாபாத்திரங்களாக ஆக்கி அவர்களை புரிந்து கொள்ள வைத்திருப்பதும் சிறப்பாகத் தோன்றுகிறது எனக்கு. .

                    'சில கதைகளை நீ கடக்க வேண்டும் நல்ல எழுத்தாளன் ஆவதற்கு ' என்று தன்னைப் பற்றி , இத்தொகுப்பு பற்றி முன்னுரையாக இக்கதைத் தொகுப்பின் ஆசிரியர் ராகவன் ஸாம்யேல் கொடுத்திருக்கின்றார். நல்ல எழுத்தாளரை அடையாளம்  கண்டு , இத்தொகுப்பினை பதிப்பித்திருக்கின்றார்கள் இந்த பதிப்பகத்தார், உதவியிருக்கின்றார்கள் அவரின் நண்பர்கள் என்பேன் நான். எழுத்தாளர் வண்ணதாசனின் முன்னுரை கவித்துவமாய் , நேசமாய் 'என்னைத் தாண்டிச்செல்லும் ராகவனின் எழுத்துக்களை எனக்குப் பிடித்திருக்கிறது '  என்று சிறப்பாக அமைந்திருக்கின்றது. நூலுக்குள் புக எண்ணுவோரை  தூண்டி படிக்கச்சொல்கிறது.

             எழுத்தாளர் ராகவன் ஸாம்யேல் தற்போது கென்யாவில் இருப்பதாக எழுதியிருக்கின்றார். கடல் கடந்தாலும் , கண் முன்னே நிகழ்வதைப் போல எழுதும் ஆற்றல் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதவேண்டும், விளிம்பு நிலையில் இருக்கும் இவரது பாத்திரப்படைப்புகளாக வாழும் பால் கறக்கும் 'அழகர்'களும்,வாத்துமானமும், அடியும் முதலாளிகளிடம் வாங்கும் 'ராமர்'களும், வால் நட்சத்திரம் 'கெளசல்யா'க்களும்,சேர்மக்கனிகளும்  மனிதர்களாக வாழ்வதற்கான சூழல் உலகமயமாக்கலில் மறைந்து விடுமோ எனும் கவலையைப் போக்கும் வண்ணம் இவரின் எழுத்துக்கள் தொடரட்டும். நிறையக் கொட்ட வேண்டியதில்லை, ஆற அமர நாள் எடுத்துக்கொண்டு அடுத்த தொகுப்பு வரட்டும், இவரின் எழுத்துக்கள் அவசர பிரசவிப்புக்களாகத் தோன்றவில்லை, அசை போட்டு ,அசை போட்டு  வரையப்படும் ஓவியங்களாகத் தோன்றுகின்றன. எதிர்பார்ப்போம் அடுத்த கதைத் தொகுப்பு ஓவியத்தை, நம்மைச்சுற்றி வாழும் மனிதர்களின் காகித வரைபடங்களை.

No comments: