Thursday, 5 May 2016

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.எஸ்.பகவான் .....

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டியவை தந்தைபெரியார்தம் பகுத்தறிவுக் கொள்கைகளே! கர்நாடக மாநில பகுத்தறிவாளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் அறிவுரை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பிதார், மே 5_ கர்நாடக மாநிலம் பிதார் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற பாபாசாகேப் அம்பேத்கரின் 126ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தனையாளரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் கே.எஸ்.பகவான், சமூகத்தில் கொடுமை யாக நடத்தப்படும் ஆணவக் கொலை களைப் பற்றி கடுமையாகச் சாடி உரையாற்றினார். சமூகக் கொடுமைகள், அடக்குமுறைகள் நீங்கிட, ஒடுக்கப் பட்ட மக்களின் உயர்விற்கு தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளைக் கடைபிடிப்பதே சரியான வழிமுறையாகும் என தமது உரையின்பொழுது குறிப்பிட்டார்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் கே.எஸ்.பகவான் தமது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம் பிள்ளைகளை பெற்றோரே கொன்று விடும் ஆணவக் கொலைகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருந்த அன்பைவிட, ஜாதி உணர்வே பெரிது என நினைக்கும் போக்கு பெற்றோர்களிடம் உள்ளது. இது எவ்வளவு கொடுமையானது.

இந்திய நாடு விடுதலை பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகளை எட்டும் நிலையிலும், ஆணவக் கொலைகள் நடைபெறும், நிலை ஜாதி அடிப்படையில் மனிதரைப் பேதப்படுத்திப் பார்க்கும் போக்கு நீடிப்பதன் அடையாள வெளிப் பாடாகும். மராட்டிய மாநிலத்தில் பெண்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக்குப் போராடிக் கொண்டிருப்பது, மனிதரில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பதாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்குமான சமத்துவநிலை இன்னும் எட்டப்படவில்லை என் பதைக் காட்டுவதாகவே, கோயிலில் நுழைந்து வழிபடுவதற்கு மகளிருக்கு உரிமை மறுக்கப்படுகின்ற நிகழ்வுகள் இருக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களை பேராசிரியர் கே.எஸ்.பகவான் விளக்கிப் பேசினார். அம்பேத்கர் மனுஸ்மிருதி¬யும், சாஸ்திரங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் உழைக்கும் மக்களை ‘சூத்திரர்’ பட்டம் சூட்டி, பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்திடும் அடிமைகளாக மனுஸ்மிருதி வலியுறுத்துகிறது; சட்டவடிவமாகவும் வழிமுறைப்படுத்திவிட்டது. மனுஸ் மிருதி  வலியுறுத்தும் இந்த சட்டவடிவங்கள், இந்துமதத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்பதைப் பறை சாற்றுவதாக உள்ளன.

இந்துமதத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்ற காரணத்திற்காகவே அண்ணல் அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறினார்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஓர் அன்பான அறைகூவல்; உள்ளார்ந்த வகையில் அம்பேத்கரின் கொள்கைகளை கடைப்பிடிக்கின்றீர்களா என்பதை உறுதி செய்யுங்கள்! அம்பேத்கரை போற்றி வணங்குவது மட்டும் போதாது. உண்மையிலேயே நாம் அம்பேத்கரின் உண்மைத் தொண்டர்களாக விளங்கிட அவரது கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த நடைமுறைகளை அவசியம் படித்து அதன்படி நடந்திட வேண்டும். இதைச் செய்திட தவறுவோமேயானால், முகுர்த்தா, ராகுகலா மற்றும் ஜாதகா ஆகியோரைப் போன்று பார்ப்பனீய சக்திகளுக்கு பலியாகிவிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்கள், சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் கொள்கை வழியையும் சமூக உயர்விற்கு ஜோதிபா பூலே போதித்த கொள்கைவழியினையும் பின்பற்றிட வேண்டும்.

ஏற்கெனவே நாம் வலியுறுத்தியபடி, அரசினரோ, நிறுவனங்களோ பௌ ரகர்மிகர் பணிகளை, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்திட வேண் டும் என கருதக்கூடாது. அத்தகைய பணிகளுக்கு உரிய சம்பள அள வினை அதிகப்படுத்தினால், எந்த சமுதாயத்தினரும் அத்தகைய பணிகளைச் செய்திட முன்வருவார்கள்.
மகாத்மா காந்தியார், சதுர்வர்ண கோட்பாட்டை ஆதரித்ததின் மூலம் மாபெரும் தவறினைச் செய்துவிட்டார். காந்தியார் நம்மையெல்லாம் ஆங்கி லேயர்களிடமிருந்து மீட்பதற்கு அரசியல் விடுதலை மட்டுமே பெற்றுத் தந்தார்கள். ஆனால் சமூக அடிமைத்தனத்திலிருந்த மீட்டெடுக்க முன்வரவில்லை. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தான் பார்ப்பனீய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நாம் மீண்டு எழவதற்குப் பாடுபட்டனர். இவ்வாறு நாத்திக அறிஞர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

நன்றி : விடுதலை 05.05.2016No comments: