Wednesday, 25 May 2016

விழிக்கொடை தரும் பன்றிகள்.... ..

பார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி

49 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த சில பத்தாண்டுகளில் உலகின் விஞ்ஞான கேந்திரமாக சீனா வளர்ந்திருக்கிறது. இதில் அதன் மருத்துவ ஆய்வுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
கண்பார்வைக் குறைபாடு சீனாவில் மிகப்பெரும் பொதுசுகாதார பிரச்சனையாக இருக்கிறது.
அங்கே எண்பது லட்சம் பேருக்கு கண்பார்வையில்லை. ஆனால் ஆண்டுக்கு ஐயாயிரம் கார்னியா மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன.
தற்போது சீன விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமான புதியதொரு சிகிச்சையை உருவாக்கியிருக்கிறார்கள்.
சீனாவின் உடலுறுப்பு பற்றாக்குறைக்கு வித்தியாசமானதொரு தீர்வாக பன்றிக் கண்களின் ஒரு பகுதி மனிதர்களுக்கு பொருத்தப்படுகிறது.
வுய் பிங் வே என்கிற நோயாளிக்கு பரீட்சார்த்த முறையில் பன்றியின் கார்னியா பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
வுய் பிங் வேயின் ஒரு கண்ணில் கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தில் தொற்று ஏற்பட்டதால் பார்வை பறிபோனது.
இன்னமும் தொடர் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்கும் வுய் பிங் வேயின் அறுவை சிகிச்சைக்குப் பின்னான பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக வந்திருக்கின்றன.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர் தெளிவாக பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாற்று சிகிச்சையை உருவாக்க தமது நிறுவனத்துக்கு பத்து ஆண்டுகள் பிடித்ததாக கூறுகிறார் சீன மீளுருவாக்க மருத்துவ நிறுவனத்தலைவரும் மருத்துவருமான ஷாவ் செங்கங்.
“மனித கார்னியாவுக்கு மாற்றாக பல விலங்குகளை பரிசீலித்தோம். ஆடு, நாய், பன்றி பசுவெல்லாம் முயன்றோம். இதில் பன்றியின் கார்னியாவே மனிதனுக்கு பொருந்துவதை கண்டோம்", என்கிறார் அவர்.
முதலில் பன்றியின் நோய் மனிதருக்கு பரவாமல் தடுக்க பன்றியின் கார்னியாவிலிருந்து வைரஸ் பாக்டீரியாக்கள் நீக்கப்படும்.
பன்றியின் செல்களும், மரபணுக்களும் கூட சுத்தமாக அகற்றப்படும். எஞ்சியுள்ள கார்னியா கட்டமைப்பு மட்டும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.
இந்த சிகிச்சை முறையின் நீண்டகால ஆபத்து குறித்து பரிசீலிக்காமல் சீனா வேகமாக அவசரகதியில் செல்வதாக சிலர் கவலைப்படுகிறார்கள்.
ஆனால் விலங்குகளின் உடலுறுப்புக்களை மனிதருக்கு பொருத்துவதில் அதிகரிக்கும் உலக அளவிலான ஆர்வத்தைப் பார்த்தால் இது வெறும் ஆரம்பம் என்றே தோன்றுகிறது.

நன்றி : பி.பி.சி. தமிழ்,25.05.2016

No comments: