Saturday 25 June 2016

இரண்டு ஊர்க்காரர்களும் அவதிப்பட்ட காலங்கள்.....



                                                           கடந்துபோன காலங்கள்(10)

மதுரையில் அழகர்
ஆற்றில் இறக்கப்படும்
சித்திரை திருவிழா
போல எங்கள் ஊரிலும்
சித்திரைத் திருவிழா உண்டு....

சித்திரைத் திருவிழாவிற்கு
பூந்தியும் இலட்டும்
வீட்டில் அம்மாவால்
பலகாரமாய்  செய்யப்படும்
பல வருடங்கள் தொடர்ச்சியாக...

திருவிழா நாட்களில்
அம்மா ஏதாவது
பலகாரம் செய்துவிடுவார்கள்!
இல்லையென்றால் வீட்டிற்கு
மற்றவர்களின் பலகாரங்கள்
படையெடுக்கும் எனப்பயந்து
அம்மா சாமி கும்பிடவில்லை
என்றாலும்
பலகாரங்களை செய்துவிடுவார்கள்
எங்கள் வீட்டில்.....

வருடாவருடம்
சுற்றி இருக்கும்
கிராமத்தைச்சேர்ந்தவர்கள்
சாமியைத் தூக்கி வருவார்கள்
அந்த வருடம்
எங்கள் ஊரின்
பக்கத்து ஊர்க்காரர்கள்
சாமியைத் தூக்கி வந்தார்கள்....


சின்ன வயதில்
நானும் அழகரைப் பார்க்க
போலீஸ் ஸ்டேசன் பக்கத்தில்
இருக்கும் கோயிலுக்கு
முன்னால் போக


பெரிய பல்லக்கு
பல்லக்கு மேலே சாமி
சாமிக்கு பக்கத்தில் அய்யர்
எனத் தூக்கி வந்த வேளை

எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
சாமியை மேற்குப் பக்கமாகத்
திருப்பு எனச் சொல்ல
சாமியைத் தூக்கி வந்த
பக்கத்து ஊர்க்காரர்கள்
அது வழக்கமில்லை என
மறுக்க
வாக்குவாதம் சிறிது
நேரத்தில் சண்டையாக மாற

சாமி தூக்கி வந்தவர்களை
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
அடித்து விட
அடியைப் பொறுக்க இயலாத
பக்கத்து ஊர்க்காரர்கள்
அய்யரோடும் சாமியோடும்
பல்லக்கை டொம்மென்று
கீழே போட்டு  விட
விழுந்து கிடந்த அய்யர்
எழுந்திருக்கும்முன்னேயே
அந்த இடம் ஒரு
போர்க்களமாக மாற

அடிபட்ட பக்கத்து ஊர்க்காரர்கள்
திரும்பப் போகும் வழியில்
வைக்கோல் படப்புகளுக்கு தீவைக்க
காட்டில் இருந்த கிழவியைத்
தூக்கிக் கிணற்றில்
போட்டு விட்டார்கள் என
வதந்தி பரவ

ஏதோ ஒரு
போர்க்களத்திற்கு போவது
போல ஆரம்பப்பள்ளிக்கூடத்திலிருந்து
விசிலிடித்துக்கொண்டு
இளைஞர்களும் முதியவர்களும்
கைகளில் கம்புகளோடும்
கூர்மையான ஆயுதங்களோடும்
ஒட்டு மொத்தமாய்
பக்கத்து ஊருக்கு ஓடிய
காட்சி இன்றும் கூட
நினைவில் நிற்கிறது.....


அந்த ஊரிலிருந்துதான்
அருமை நண்பன்
மனுநீதி உடன் படித்தான்
ஊரும் ஊரும் சண்டையிட்டு
ரொம்ப நாளா
பகை ஊராக இருந்தது
இப்போது நகைப்பாக இருக்கிறது...
ஆனால்

அந்தச்சண்டைக்காக
எங்கள் ஊரிலிருந்தும்
பக்கத்து ஊரிலிருந்தும்
நிறையப் பேர்
இருபது வருடம்
நீதிமன்றத்திற்கு
அலைந்தார்கள்,,,,,
கடைசியில் வழக்கு
முடித்துவைக்கப்பட்டது
என்றாலும்
வழக்குக்காக நடந்தவர்கள்
இருபது வருடங்களாக
நடந்துகொண்டேதான்
இருந்தார்கள்
வாய்தா வாய்தாவாக....

யாரோ ஒருவர் இருவர்
அடாவடித்தனத்தால்
இரண்டு ஊர்க்காரர்களும்
அவதிப்பட்ட காலங்கள்.....
மறக்க இயலா காலங்கள்....

                                                           வா.நேரு-----25.06.2016

2 comments:

shanthi mathi said...

We had a non teaching staff from that nearby village working in our school.He was hiding in school premises for two days!

முனைவர். வா.நேரு said...

அண்ணனுக்கு- கருத்திற்கு நன்றி. என்னையை விட 5, 10 வருடங்கள் மூத்தவர்களுக்கு இந்த சண்டையைப் பற்றிக் கூடுதலாக தெரிந்திருக்க வாய்ப்ப்ண்டு.இது நடந்து 40 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களை பின்னூட்டமாகத் தரலாம்...