பதிப்புரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல ‘தலைப்பு சிலருக்கு சற்று மயக்கத்தினைக் கூடத் தரக்கூடும்’ எனச் சொல்லியிருப்பதுபோலத் தான் எனக்கும் தோன்றியது. ஆனால் தந்தை பெரியார் மறைந்துவிட்டார், அவரின் தத்துவம் என்பது மறையாதது, மங்காதது, என்றும் ஒளிக்கதிராய் வழிகாட்டக்கூடியது என்பதைக் காட்டும் வகையில் ‘‘தந்தை பெரியார் ஒரு தனி மனிதராய் இருந்திருக்கிறார், ஆனால் பெரியார் என்ற தத்துவம் -லட்சிய ஒளி என்றும் மறையாது; என்றும் வாழும்-பரவும் என்பதை விளக்குவதே இந்நூலின் தலைப்பு’’ என்பதனை ஆசிரியர் அவர்கள் விளக்கும்போது, உள்ளே சென்று உள்பக்கங்களை படித்து முடித்த பொழுது மிகப்பொருத்தமான, ஆழமான தலைப்பு இத்தலைப்பு என்றே தோன்றியது. பெரியாரின் உருவத்தோற்றத்தை சாமி.சிதம்பரனார் விவரிக்கும் விவரிப் பிலேயே தந்தை பெரியாரை நாம் மனக்கண்ணால் காண இயலுகின்றது (பக்கம் 10-11).
‘இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி’ என ஆரம்பித்து சாமி சிதம்பரனார் சொல்லிச்செல்லும் வேளையில் நேரத்திற்கு ஒன்றாய் பல இலட்சம் பெறு மான சட்டைகளை உடுத்துபவர்கள் தலைவர்கள் என அழைக்கப்படும் இந்த நாளோடு அன்றைய நாளை ஒப்பிட்டு நோக்கத் தோன்றுகிறது. பெரியாரைப் பற்றி பெரியார் -என்னும் பகுதி அனைத்தும் தந்தை பெரியாரின் வாக்குமூலங்களாக, உங்களை உலகத்து மக்களைப் போல ஆக்குவதற்காக நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்னும் வகையில் அமைந்துள்ளன, ‘எனது சீர்திருத்தம்‘, ‘எனது ஜாக்கிரதை’, ‘எனது மனத்திருப்தி’ என ஆரம்பித்து, நண்பர்களெல்லாம் பகைவர்களானாலும் நான் தொடருவேன். இந்த ‘செங்குத்தான மலைமேல் குண்டுப்பாறையை ஏற்றுவதுபோல்’ இயக்கப்பணியை எனத் தந்தை பெரியார் பறைசாற்றும் ‘ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்’, எத்தனை பதவிகள், எத்தனை பொறுப்புகள் அத்தனையையும் விட்டு விட்டு, உதறித் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்த தந்தை பெரியார், அத்தனையையும் பட்டியலிட்டு தான் எப்படிப்பட்ட நிலையில் இருந்து பொதுவாழ்க்கைக்கு வந்தேன் என்பதைச்சொல்லும் ‘துரோகம் செய்து அயோக்கியனாக நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை' பக்கம் (33-37) என்னும் கட்டுரையை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும்.பொது வாழ்க்கைக்கு வரும்போதே சட்டமன்ற உறுப்பினராக வேண்டும், அமைச்சராக வேண்டும், நிறைய சொத்து சேர்க்க வேண்டும் என்று வருவோர் மத்தியில் எத்தனை வாய்ப்புக்களை, வசதிகளை துறந்துவிட்டு சுயமரியாதை வேண்டி , உண்டானது அனைத்தையும் துறந்து வந்த துறவி எனத்தோன்றுகிறது. ‘எனது நிலை’ எனத் தனது 90 ஆவது வயதில் அய்யா எழுதியது. ‘எனது உற்சாகத்தின் ரகசியம்‘ எனத் தந்தை பெரியார் 93 வயதில் எழுதியது எல்லாம் இலக்கிய நயத்தோடு கூடிய அறிக்கைகளாய், சமுதாயப்பேதத்தை ஒழிக்க வரக்கூடியவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துபவையாய் இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர்க்குப் பெரியார் எப்படிப்பட்டவர் என்பதனை விளக்கும் விதமாக ‘பெரியாரின் தனித்தன்மைகள்’ பகுதி. தந்தை பெரியாரின் தனி உதவியாளராய் இருப்பதற்காகவே பிறந்தவர் போலத் தன் வாழ்நாளை பெரியாரின் பெரும்பணிக்கு ஒப்படைத்த புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் ‘பசித்தால் உண்பார், படுத்தால் உறங்குவார் ‘ என்னும் கட்டுரை, எந்த நிலையிலும் உணவு எப்படிப்பட்டது என்பதனைப் பற்றிக் கவலைப்படாத துறவி அவர் என்பதனை உணர்த்தும் ‘சிறையில் கஞ்சி’, ‘கூப்பிட்டால் வந்து விடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார், இது இரண்டிலும் அவர் குழந்தையே ஆவார்’ என்னும் அன்னை மணியம்மையாரின் அறிக்கை, தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் எழுத்துக்களில் இருந்து தந்தை பெரியார் எப்படி கவலையற்று உறங்குவார், மழை பெய்தால்கூட திண்ணையில் அயர்ந்து உறங்கும் தன்மையைப் பெற்றிருந்தார் போன்ற செய்திகளெல்லாம் தந்தை பெரியாரின் தனித்துவத்தை பறை சாற்றும் பகுதிகளாகும். பெரியாரின் 100 என பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் தொகுத்த செய்தியினைத் தொடர்ந்து ‘பெரியார் ஒரு சகாப்தம்‘ என்னும் தலைப்பில் ‘ஒளிவு மறைவுகள் இல்லாத ஒப்பற்ற தலைவர்’ எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் உடை நோக்கார், உணவு நோக்கார், மாற்றாரை மதிக்கும் மனமுடையார், காலந்தவறாமை என்னும் பண்பை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்த நேர நோக்காளர், ஒப்புக்கொண்ட கூட்டத்தை எந்த நிலையிலும் ரத்து செய்யும் எண்ணமிலார், அதனையே வாழ்கை நெறியாய் கடைப்பிடித்தார், எளிதில் எவருக்கும் அமையா பண்புடையார், ‘மிகவும் கவனமாக எதையும் செய்யும் செய்தல்’ என்பதற்கு விளக்க உரையாக அமைந்தார், ஒரு முனைப்பு ஆற்றல் மிக்கார், 90 வயதிலும்கூட மூன்று தலைமுறையைச்சார்ந்தவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்து கேட்கும் நினைவாற்றல் மிக்கார், பொறுப்பும், கலகலப்பும் உடையார் என ஒவ்வொன்றாய் விவரிக்கும் பகுதி அப்படியே தந்தை பெரியாரின் தனித்துவத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் பகுதியாகும்
‘நீரை ஆவியாக இழுத்து மழையாகப் பெய்வதுபோல சில்லரையாக சிக்கனப்படுத்தி லட்சக்கணக்காகக் கல்விக்கும் மருத்துவமனைகளுக்கும்,பொதுப்பணிகளுக்கும்வரை யாது தரும் வள்ளல் அவர்! அது கருமித்தனம் அல்ல- சிக்கனத்தின் சீரிய தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகும்‘ பக்கம்(73) எனச் சொல்லி தந்தை பெரியாரின் நகைச்சுவையை ஆசிரியர் சுட்டிக்காட்டுவது, நன்றியில்லாமல்தான் இருப்பார்கள் நமது இனத்தவர்கள் என அலட்சியப்படுத்தி பொதுப்பணியில் ஈடுபட்டது என இன்றல்ல, 1974 இல் ஆசிரியர் அவர்கள் ‘‘முர சொலி’யில் ,’’தென்னகம் ‘பத்திரிக்கையில் தந்தை பெரியார் பற்றி எழுதியதை இன்றைக்கு புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருப்பது கரும்புச்சாறுபோல கருத் துச்சாறாய் தித்திக்கிறது.
பெரியார் நடத்திய போராட்டங்களின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, தந்தை பெரியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு, அவரின் மரணசாசனம் ஒளிப்படம் அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற கூட்டம் தள்ளிவைப்பு, மருத்துவமனையில் அனுமதிப்பு எனத் தொடர்ந்த நிகழ்வுகள் பத்திரிக்கைகளில் எப்படி வந்தன என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து தந்தை பெரியாரின் மறைவு, தந்தை பெரியார் நோய் துவக்கமும் முடிவும் என ‘விடுதலை’யில் வந்த செய்தி, அனல் தங்களைச் சுட்டது போல அன் றைக்கு முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும், மற்ற தலைவர்களும் துடித்த செய்தி, அரசு மரியாதைக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் உத்தரவிட, கேள்வி எழுப்பப்பட்டபோது காந்தியார் எந்தப் பதவியில் இருந்தார்? அவருக்கு எப்படி மரியாதை செலுத்தப்பட்டது அதுபோல தந்தை பெரியாருக்கு செய்வோம், தந்தை பெரியாரின் உடலுக்கு அரசு மரியாதை செய்வதற்காக எத்தகைய இன்னல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனக் கலைஞர் நெஞ்சுரத்தோடும், எங்களையெல்லாம் ஆக்கிவைத்த அய்யா பெரியாருக்கு இல்லாமல் வேறு எதற்கு எனும் வேகத்தோடும் வரலாற்றை நிகழ்த்தியதை இப்புத்தகத்தின் பக்கங்கள் ஆவணமாக ஆக்கி வைத்திருக்கிறது.
‘மரித்தது பெரியாரல்ல/மாபெரும் தமிழர் வாழ்வு’ எனத் தமிழர்கள் கலங்கிய கோலத்தை, 15 இலட்சம் பேர் தந்தை பெரியாரின் இறுதி ஊர்வலத்திற்கு திரண்ட காட்சியை, ‘சரித்திரம் இறந்த செய்தி’ கேட்டு அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கதறி அழுதிட பெருந்தலைவர் காமராசர் கலைஞர் அருகில் சென்று கலைஞரை ஆற்றுப்படுத்தியதை, ‘சிவாஜி’ எனப் பெயர் வைத்த பெருமகனாரின் இழப்பைத் தாங்க முடியாமல் நடிகர் சிவாஜிகணேசன் கலங்கியதை, அன்றைய அரசியலில் மூன்று துருவங்களாய் இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும், பெருந்தலைவர் காமராசர் அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் ஒட்டு மொத்த சோகத்தோடு ஒன்றாய் அமர்ந்து தந்தை பெரியார் இறப்பு துக்கத்தில் இருந்ததையும் ஒளிப்படங்களாய் இப்புத்தகத்தில் பதிந்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தனது இரங்கலுரையில் ‘நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பெரியார் ஆற்றியுள்ள பணி மகத்தானது . அவர் ஒரு சிறந்த தேசபக்தர்’ எனக் குறிப்பிட்டு விவரித்துச்சொல்லும் சொற்கள் படிப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும். ‘உடன் பிறப்பே’ என விளித்து டாக்டர் கலைஞர் அவர்கள்’ இளம்பிஞ்சுப் பருவத்திலேயே என்னை நான் அவரிடத்திலே ஒப்படைத்துக்கொண்டு தன்மானத் தமிழகம் காண, தலை நிமிர்ந்து நிற்கும் சமுதாயத்தை உருவாக்க அணிவகுத்து நின்ற அவரது பெரும்படையில் ஒரு துளியானேன்.
என்னைப் போல் எத்தனை பேர் அவருடன் நெருங்கிப்பழகி , அவர் வீட்டிலேயே உணவருந்தி, அவர் அலுவலகத்திலேயே பணியாற்றி, அவருக்குச் செயலாளராகத் தொண்டுபுரிந்து, அவருடைய கரம்பிடித்தே பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிடும்போது, அடே அப்பா! எவ்வளவு பேருக்கு நிழலாக இருந்த மரம் சாய்ந்துவிட்டது என்ற கதறல்தான் என்னையும் அறியாமல் பீறிட்டுக் கிளம்புகிறது.
‘‘பெரியார், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் - நாம் தொடருவோம்; வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!’’ என வந்த அவரின் அறிக்கை, ஒவ்வொரு உடன்பிறப்பும் தன் மனதில் இருத்திக்கொண்டு பணியாற்ற வேண்டிய அறிக்கை. தந்தை பெரியார் மறைவை ஒட்டி ‘தத்துவங்களின் சின்னம் தந்தை பெரியார்’ என எம்.ஜி.ஆர். கொடுத்த இரங்கல், ‘பெரியார் வாழ்கிறார், பெரியார் காலத்தில் நாம் வாழ்கிறோம்’ என்ற எண்ணமே தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பான அரணாக அமைந்தது, ‘‘அவருடைய சிந்தனை, செயல் அத்தனையும் மனித சமுதாயத்திற்காகக் குறிப்பாக தமிழர் சமுதாயம் மேம் பாடு அடைவதாகத்தான் இருந்தது. அவருடைய ஆற்றல்மிக்க தூய தொண்டுள்ளத்தை அவருடைய எதிரிகள் கூடக் குறைத்து மதிப்பிட்டது கிடையாது’’ (பக்கம் 149) என விரியும் அந்த இரங்கலுரை இன்றைய அவரது கட்சியினர் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய இரங்கலுரையாகும்.
தந்தை பெரியார் மறைவை ஒட்டி விடுதலையில் முரசொலியில்,மக்கள் குரலில், சுதேசமித்திரனில், நவசக்தியில் ,தினத்தந்தியில், தினமணியில் , அலைஓசையில், தினமலரில் வந்த செய்திகள், தலைவர்கள் கொடுத்த இரங்கலுரைகள் அத்தனையும் வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மிஷன் அமைப்பின் ஸ்தாபகர், அப்துல் சமது போன்றவர்களின் அறிக்கைகளை இன்றைய தலைமுறையினர் படிக்கவேண்டும். தந்தை பெரியாருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் பார்வை’ மருத்துவர்களின் நெகிழ்ச்சி’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் இறுதிக் காலங்களில் அவரோடு உடன் இருந்த மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தந்தை பெரியாரின் மன உறுதியை எண்ணி எண்ணி நம்மை வியக்க வைக்கின்றன. ‘‘தனது வேதனையையும் சவுகரியக் குறைவையும் பெரியாரளவுக்குப் புகார் கூறாமல் பொறுத்துக்கொண்ட நோயாளியை நான் கண்டதே இல்லை’’ என்று டாக்டர் எஸ்.எஸ்.பட். அவர்கள், ‘கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை; என்று டாக்டர் கே.ராமச்சந்திரன் ‘மனித இயல்பை மிஞ்சியவர்’ என டாக்டர் ஏ.சி. ஜான்சன், ‘சரித்திர நாயகரை, நேரில் கண்டு உரையாடவும், நெருங்கிப்பழகவும் வாய்ப்புக்கிடைத்தற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்னும் டாக்டர் ஏ.ராசசேகரன் அவர்களின் கட்டுரை அனைத்தும் தங்களிடம் மருத்துவம் பெற்ற நாயகரின் குண நலன்களை கொண்டாடி மகிழும் கட்டுரைகளாக உள்ளன.
புத்தகத்தின் கடைசிப்பகுதி தந்தை பெரியார் மறைவுக் குப்பின் நடைபெற்ற நிகழ்வுகள், ‘அடுத்து என்ன?’ என்ற அன்னை மணியம்மையாரின் அறிக்கை, ‘திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும்‘ என்னும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பு, பெரியார் திடலில் கூடிய தோழர்கள், தோழியர்களின் ‘அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறவாமல் நடப்போம் ‘ எனும் உறுதிமொழி ஏற்பு எனத் தொடர்கிறது.
பின்னர் 1938 இல் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கிய நிகழ்விலிருந்து, தாமிரப்பட்டயம், யுனெஸ்கோ வழங்கிய சிறப்புப்பட்டயம், இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை எனத் தொடர்ந்து செயற்கரிய செய்த பெரியார் எனத் தொடர்ந்து முடிவில் ‘இலக்கியமானார் பெரியார்’ என முடிகிறது. புத்தகம் முழுக்க புகைப்படங்கள், வரலாற்றின் பக்கங்களை நினைவுறுத்தும் வண்ணம் நினைவில் நிற்கின்றன. ஆசிரியர் அவர்கள் பதிப்புரையில்’ அய்யா தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் குறித்துப்பலரும் தந்த செய்திகளின் தொகுப்பான வீர வணக்கக் கண்ணீர் புகழ்மாலை இது’ எனக் குறிப்பிட்டுள்ளதுபோல ஆவணக் கண்ணீர் மாலையாக, தந்தை பெரியாரின் புகழைக் கூறும் கூற்றுக்களின் தொகுப்பாக, எந்த நாளும் நம் வீட்டில் காப்பாற்றி வைத்து, இந்த நூலை தந்தை பெரியாரைப் பற்றி அறியாதவர் கைகளில் எல்லாம் கொடுத்து கொடுத்து படிக்கச்சொல்லும் களஞ்சியமாகத் திகழ்கிறது.
எந்த கட்சியில் இருந்தாலும், எந்த இயக்கத்தில் இருந்தாலும் திராவிடர்கள் ஒவ்வொருவரின் இல்லத் திலும் இருக்கவேண்டிய நூல் இது, படிக்க வேண்டிய நூல் இது.
நன்றி : விடுதலை 19.08.2016
2 comments:
அண்மையில்தான் இந்நூலினை வாங்கினேன்அய்யா
நன்றி
மகிழ்ச்சி அய்யா. நீண்ட நாள் விடுப்பிற்குப்பின் வலைத்தளத்தில் எனது பதிவு.படித்துவிட்டு உடனே மறுமொழி கொடுத்திருக்கின்றீர்கள். நன்றி. நூலை முழுமையாகப் படியுங்கள். உண்மையிலேயே மிக அருமையான புத்தகம்.
Post a Comment