Tuesday, 1 November 2016

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள்.....

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள் 

முனைவர் வா.நேரு
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

தகைசால் சான்றோர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பது, அவர்கள் சொல்லும் கருத்துகளை மாணவர்களைக் கேட்க வைப்பது, ‘கேட்பினும் கேளாத்தகையவாய்’ செவிகளை ஆக்காது, பல்வேறு கருத்துகளை மாணவர்களின் செவி களில் விழவைப்பது அதன்மூலமாக கற்கும் கல்விக்கு மெருகூட்டுவது என்பது நல்ல கல்லூரிகளின் செயல்பாடு. அந்த வழியில் திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து தங்கள் மாணவ, மாணவியர்கள் மத்தியில் உரையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு கல்லூரிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய  உரைவீச்சுகளின் தொகுப்பாக, ‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’ என்னும் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. நல்ல  பலன் தரும் முயற்சி.

25.7.1974 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆற்றிய உரையில் ஆரம்பித்து, மதுரை மன்னர் திருமலைக் கல்லூரியில் 3.11.1998 அன்று ஆற்றிய உரை வரை ஏறத்தாழ 25 ஆண்டுகளில், 25 கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல்.
இந்த நூலின் அறிமுகவுரையில் மதுரை மன்னர் திரு மலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள் இந்த நூலின் சிறப்பினை சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் மாணவர்களி டையே உரை நிகழ்த்த அழைப்பு வரும்போதெல்லாம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் தமிழர் தலைவர் உற் சாகமாக ஒப்புதல் வழங்குகின்றார். இளைஞர்களின் உள்ளத் தில் கருத்துகளை விதைக்க வாய்ப்பாகக் கருதுகின்றார். மாணவர்கள் ஆர்வ மிகுதியினால் அழைத்தாலும், பேரா சிரியர்கள் விரும்பி வேண்டினாலும் தமிழர் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க

ஒரு விதியினைக் கடைப்பிடிக்கின்றார். கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக் கழக தலைமை அதிகாரி எழுத்து வடிவிலான அழைப்புக் கடிதம் அனுப் பினால் மட்டுமே இசைவு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தமிழர் தலைவர் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றார். ஆனால் அவை யாவும் தொகுக்கப்படவில்லை. இந்நூலில் 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
கற்பவையாக இளம்வயதிலேயே பெரியாரியலை ஏற்றுக் கொண்டு, கசடற பெரியாரியலைக் கற்றுக்கொண்டு வாழ்வில் கடைப்பிடித்ததால்,பெரியாரியலைப் பிஞ்சு வயதிலேயே  கற்றபின் தந்தை பெரியாரைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பெரியார் வழி நிற்பதற்கான வழியைக் கற்பிப்பதால் தனது தொண்டர்களால் ஆசிரியர் என அழைக்கப்படும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் கற்பிக்கும் ஆசிரியராய் நின்று கருத்துகளைக் கூறியதோடு மட்டுமல்லாது, மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் அளித்த பதிவுகள் இவை.
அமெரிக்கன் கல்லூரியில் உரையைத் தொடங்கும்போதே ‘‘தந்தை பெரியார் அவர்கள் இரண்டு மணி நேரத்திற்குமேல் உரையாற்றினாலும் இறுதியாக ஒன்றை மறக்காமல் கூறு வார்கள். ‘நான் சொன்னேன் என்பதற்காக எதையும் நம்பி விடாதீர்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப் பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள்’ என்று சொல்வார்கள். அவர் முடிவில் சொல்வதை நான் தொடக்கத்திலேயே சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் முடித்த இடத்திலிருந்து நாங்கள் பணி தொடங்குகின்ற நிலையில் இருக்கிறோம். நாங்கள் கூறுகிற கருத்துக்கள் உங்களுக்குக் கசப்பானதாகவும்இருக்கலாம்.தேவையானதாகவும் இருக்கலாம். தேவையற்றதாகவும் இருக்கலாம். கொள்ளவேண்டி யதையும் தள்ள வேண்டியதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்’’ எனச் சொல்லித்தான் தமிழர் தலைவர்  ஆரம்பிக்கின்றார்.
இந்தப் புத்தகத்தின் துவக்கத்திலேயே சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள் என்று  சொல்வதுமட்டுமல்ல உரையை முடிப்பதற்குமுன் (பக்கம்23) ‘‘நான் இங்குப் பேசிவிட்டுப்போன பிறகு இன்னொரு பேச்சாளரை எங்கள் கருத்துக்கு மாறுபாடானவர்களை அழைத்து எங்கள் கருத்துகளுக்கு மறுப்புக் கூறச் செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும் . இருதரப்பு வாதங்களில் எங்கு வலிமை இருக்கிறது என்று புரிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்’’ எனக் குறிப்பிடுகின்றார். தந்தை பெரியார் நான் சொன்னேன் என்பதற்காக நம்பாதீர் கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார் என்றால், ஆசிரியர் அவர்களோ’’ எனக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் பேச்சுகளையும் கேளுங்கள். கேட்டபின்பு எது உண்மை என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்று சொல்கின்றார். தான் சொல்லும் கருத்தின் உண்மைத்தன்மை மீதான நம்பிக்கை, நூறு சதவீதம் இருந்தால் மட்டும்தானே இப்படிச் சொல்ல இயலும், சொல்லியிருக்கின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர்கள் மத்தியில்.
தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் ஒவ்வொரு உரையும் தந்தை பெரியாரின் கொள்கை ஒன்றை விரிவாக அய்யா ஆசிரியர் அவர்கள் விளக்கும் விதமாக அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. தமிழின் சிறப்பைக் குறிப்பிடும் ‘நந்தனம் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை’ கோவிலுக்குள்ளே தமிழ் இருக்கிறதா என்னும் வினாவைத் தொடுத்து ஏன் இல்லை என்பதற்கான வரலாற்றை ஆசிரியர் கொடுப்பதாக உள்ளது. ‘எங்கள் இலட்சியம் எல்லாம் இந்த நாட்டில் ஜாதியற்ற சமுதாயம் அமையவேண்டும்.பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான்’எனச்சொல்லும் மதுரை தியாகராசர் கல்லூரி உரை பொருளாதாரப் பேதத்திற்கும், ஜாதி பேதத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுவதோடு, யாகம் என்ற பெயரில் வீணாக்கப்படும் பொருள்களைப் பட்டியலிட்டு இது நியாயமா என்னும் கேள்வியை மாணவர்கள் மத்தியில் எழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. சுதந்திரச் சிந்தனையை வளர்க்கவேண்டும், அது ஏன் வளரவில்லை என்னும் வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, ஆசிரியருக்கே உரித் தான நகைச்சுவை உணர்வை வாசகர்கள் அறியும் வண்ணம் நம் நாட்டு மூட நம்பிக்கைக்கும், வேற்று நாட்டு மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை ‘விருதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் ஆற்றிய உரை காட்டுகிறது.
தந்தை பெரியாரை திரையிட்டு மறைக்கப் பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திகைத்துப் போயிருக்கின்றார்கள். ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறை வதில்லை’ என்பதுபோல மொழி பெயர்க்கப்படும் மொழி களில் எல்லாம் தந்தை பெரியாரின் புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன, அய்யாவின் புத்தகங்களை இன்றைக்குப் படிப்பவர்கள் 70, 80 ஆண்டுகளுக்குமுன்னால் இவ்வளவு புரட்சிகரமான பேச்சுகளைத் தந்தை பெரியார் பேசியிருக்கின்றாரா என  வியந்து நிற்கின்றார்கள். மனித நேயத் தின் மறுபெயராய், புரட்சி என்னும் சொல்லின் விளக்கமாக  நடமாடிய மனிதரல்லவோ பெரியார் என அதிசயத்துப் போகின்றார்கள்.
பல மொழிகளில், பல நாடுகளில் பெரியார் பன்னாட்டு மய்யம் போன்ற இயக்கங்கள்மூலமாக தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி’ தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் எண்ணங்களிலே புகக் கூடாது. இதுபோன்ற மன்றங்களிலே நுழையவிடக்கூடாது. பேசப் படக்கூடாது என்று கிரகணத்தை உருவாக்கியவர்கள் உண்டு, அதைக் கண்டு பயந்தவர்கள் எல்லாம் உண்டு’ (பக்கம் 48) எனக்குறிப்பிட்டு மனிதர்களின் மனங்களிலே மாற்றம் வரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ‘மாற்றம் என்பது உடையிலே இருந்து, முடியிலே இருந்து பயன் என்ன? மனிதன் சிந்தனைகளிலே மாற்றம் வேண்டும்! செயல் முறைகளிலே மாற்றம் வேண்டும்! அந்த மாற்றங்கள் சமுதாய நன்மைக்கு,  சமுதாய முன்னேற்றத்துக்குத் துணை செய்வதாக -வகை செய்வதாக அமைய வேண்டும்' என மாணவர்களிடம் அறிவுறுத்தும் ஆசிரியர் ‘வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகியலைக் கற்றுக்கொள்ளுங்கள். புத்துலகம் படைக்கலாம்' எனக் குறிப்பிடுகின்றார் தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடந்த விழாவில்.
மதுரை யாதவர் கல்லூரியில் மாணவர்களின் வினாக் களுக்கு தமிழர் தலைவரின்  பதில்களை இன்றைய மாணவ, மாணவிகள் கட்டாயம் படித்தல் வேண்டும். ‘திரு மணத்திற்கு பொருத்தம் பார்க்காது வரதட்சணை, ஜாதகம் என்று பார்க்கும் படித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?’ என்பது கேள்வி. ஆசிரியரின் பதில் ‘மிகக் கேவலமாகக் கருதுகிறேன் நான்’ என்று ஆரம் பிக்கின்றது. பின் ஏன் அப்படிக் கருதுகிறேன் என்பதற்கு விளக்கம் தருகின்றார். இன்றைக்கு  நம்மை நோக்கி கேட்கும் பல கேள்விகளுக்கான பதிலை நாம் இதில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பேருரை, ‘இவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்திலே தாழ்த்தப்பட்டோர் ஆறு பேர் மட்டுமே என்பதை எண்ணும் போது நெஞ்சம் கொதிக்கிறது’ என்று குறிப்பிட்டு இட ஒதுக்கீட்டின் வரலாற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆற்றிய உரையாக இருக்கிறது. தான் கற்ற ‘சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்’ தமிழர் தலைவர் ஆசிரியர் ‘தாய் வீடு’ எனக்குறிப்பிட்டு ஆற்றிய உரை சமூக நீதியின் வரலாற்றை குறிப்பிட்டு ‘நம்முடைய நாட்டிலே மண்ணுக்கு ஒருமைப்பாடு பேசுகிறோமே தவிர , மனிதனுக்கு ஒருமைப்பாடு பேசுவதாகத் தெரியவில்லை’ எனக்குறிப்பிட்டு பேதமை உண்டாக்கும் ஜாதியினை பாபு ஜெக ஜீவன்ராம் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பேசுவதாக அமைந்துள்ளது.
பெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எப்படியெல்லாம் எண்ணினார், அதற்கு எந்த எந்த வகையில் எல்லாம் உழைத்தார் என்பதனை இளம் மாணவிகளுக்கு எடுத்துக்கூறும் விதமாக அய்யா ஆசிரியர் அவர்களின் ‘கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் ஆற்றிய உரை’யும், ‘தஞ்சை-வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் ஆற்றிய உரை’யும்  அமைந்துள்ளன. ‘பல்கலைக் கொள்கலனா’ய் அமைந்த அறிஞர் அண்ணா எப்படி கண்டதும் கொண்டதுமான தலைவராக தந்தை பெரியாரை வரித்துக்கொண்டார் என்பதும், அண்ணாவை பெரியார் எப்படியெல்லாம் உயர்வாக மதித்தார், நடத்தினார் என்பதையெல்லாம் வரலாற்றுச் சம்பவங்களோடு அய்யா ஆசிரியர் அவர்கள் விவரிக்கும் தனித்தன்மையான உரை யாக, ‘புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை’ கொடுக்கப்பட்டுள்ளது.
‘இனி வரும் உலகம்‘ என்னும் அற்புதமான தந்தை பெரியாரின் கருத்துகளை தமிழர் தலைவர் தன்னுடைய நடையில் விவரிக்கும் மதுரை மன்னர் திருமலைக் கல்லூரி யில் ஆற்றிய உரை என ஒவ்வொரு உரையுமே தந்தை பெரியாரின் தத்துவங்களை, நடைமுறை உத்திகளை விவரிக்கும் தன்மையுடையதாக இருக்கிறது.
‘தங்கப் பதக்கம் வாங்கியவன் என்று அறிமுகப்படுத்திய தைவிட, தன்னை ‘தந்தை பெரியாருடைய தொண்டன்’ என்று அழைத்தற்காகவே, அறிமுகப்படுத்தியதற்காகவே தான் மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்கிறேன்’ என்று மதுரை மன்னர் திருமலைக்கல்லூரியில் ஆற்றிய உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தந்தை பெரியாரின் தொண்டனாய் ஒன்பது வயதில் திராவிடர் கழகக் கொடி பிடித்து, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே கொடி என தனது 84 வயதினை டிசம்பர் 2, 2016 இல் எட்டும் தமிழர் தலைவர் அவர்களின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான இந்த நூல் கழகப் பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் கைகளில் தவழ்வது மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கும், படித்த தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய புத்தகம், அவர்கள் பக்கம் பக்கமாகப் படித்து பலன் பெறவேண்டிய புத்தகம். ‘தகுதி-திறமை’ எனப் புரியாமல் பேசும் இளந்தலைமுறையினர் பலர் இந்த நூலைப் படித்தால், அறிவியல் மனப்பான்மையை, பெண்ணுரிமையை, பகுத்தறிவினை, தந்தை பெரியாரின் தனித்தன்மைகளை, தந்தை பெரியாரின் தன்னிகரில்லா போராட்ட உணர்வினை, திராவிட இயக்கத்தின் எதிர் நீச்சல் வரலாற்றைப்  பாடமாக கற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.


நன்றி : விடுதலை 01.11.2016

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

முனைவர். வா.நேரு said...

நன்றி,ஐயா

இரா.கதிர்வேல் said...

அருமையான அறிமுகத்தை புத்தகத்திற்கு அளித்துள்ளீர்கள். உங்களது இந்த கட்டுரையே இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்கத் தூண்டுகிறது. மறுமுறை பெரியார் திடலுக்குச் செல்லும் போது வாங்கி படித்து விடுகிறேன்.

ஆசிரியரின் உரையை நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த போது பலமுறை கேட்டிருக்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இந்த புத்தகம் சிந்தனை தெளிவைக் கொடுக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனக்கு தாய் வீடு என ஆசிரியர் கூறியது போல எனக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் எனக்கு தாய்வீடு.

படித்து முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் என்னுடைய வலைப்பூவிலே பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் எனக்கு அறிவை ஊட்டியது, மனிதனாக மாற்றியது. திராவிடம், தமிழ் என பற்றுக்கொள்ள வைத்தது. தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருங்கள். என்னைப் போன்வறவர்க ள் எங்கோ ஒரு மூலையில் இருந்து படித்துக்கொண்டே இருப்போம்.

முனைவர். வா.நேரு said...

கதிர்வேல் சார், தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதத்தூண்டும் உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் வலைத்தளத்திற்குள் வந்தேன். மிகவும் பயனுள்ள , கணினி தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை, பாடங்களை, கருத்துக்களை பதிவிட்டிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடர்வோம் .....

இரா.கதிர்வேல் said...

நன்றி.