Wednesday 18 January 2017

ஜல்லிக்கட்டிற்காக போராடும் தமிழ் மாணவர்கள்...

சில நாட்களுக்குமுன் வாசிப்போர் களத்தின் தோழர் மு.சங்கையா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது, இன்றைய சமூக வலைத்தளங்கள் பற்றிப் பேச்சு வந்தது. அதனைப் போல உலக அளவில் நடைபெற்ற புரட்சிகள்பற்றியும் பேச்சு வந்தது. சீனாவில் தோழர் மாவோ,ருசியாவில் தோழர் லெனின் மற்றும் சென்ற நூற்றாண்டில் நடந்த புரட்சி நேரத்தில் , இவ்வளவு அறிவியல் கருவிகள் இல்லை, ஆனால் இன்றைக்கு 4 பேர் ஒன்று சேர்ந்தால் கூட கண்காணிக்க கருவிகள் இருக்கிறது என்றேன். அறிவியல் நுட்பம் முதலாளிகளுக்கும், உயர் ஜாதியினருக்கும் ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது, ஒரு மாற்றத்திற்காக இளைஞர்கள் ஒன்று சேர்வது கடினம். அதனைப்போல இன்றைய இளைஞர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை, சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் இளைஞர்களைத் தவறான வழியில் வழிகாட்டுகிறது என்பதாக அந்த விவாதம் விரிந்தது.

அப்போது தோழர் சங்கையா, ' நான் அப்படி நினைக்கவில்லை ' என்றார். 'இன்றைய சமூக வலைத்தளங்கள் மாற்றங்கள் விரும்புவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ' என்றார். 'இன்றைய இளைஞர்கள் இணைவதற்கும், ஒன்று திரள்வதற்கும் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய வாய்ப்பு ' என்றார். இன்றைக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை நம்மைப்போன்றவர்களுக்கு கொடுத்திருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் சுய நலமிக்கவர்கள், தன் வீடு, தன் குடும்பம், தன் வேலை வாய்ப்பு, தன் வசதி என்று மட்டும் நினைப்பவர்கள் என்று சிலர் கொண்டிருந்ததைப் பொய் என்பதனை தமிழின இளைஞர்களும், மாணவர்களும் நிருபித்திருக்கின்றார்கள். ஒற்றைப்புள்ளியாய் சாதி, மதம் என்பதையெல்லாம் புறந்தள்ளி, தமிழர்கள், தமிழ்ப்பண்பாடு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்து போராடும் மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ் இனத்தின் உயிரானவர்கள் ' என்னும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் மீண்டும் எனது காதில் ஒலிக்கிறது.

ஜல்லிக்கட்டிற்காக போராடும் இளைஞர்களுக்கான ஆதரவுக்கரம் நீள்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ் ஈழத்தில், இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்தப்போராட்டத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். தங்கள் தங்கள் இடங்களில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று நடந்த என்.டி.டி.வி. நிகழ்ச்சியில் 'தமிழ்ப்பண்பாடு ' என்றால் என்ன என்பதனைப் பற்றி நீண்ட விவாதம் நடந்தது. நடக்கட்டும். 'தமிழா இன உணர்வு கொள்' என்பதனை தெருத்தெருவாய், சுவரெழுத்தாக திராவிடர் கழகத்தினர் ஆண்டாண்டு காலமாக எழுதினார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 'தமிழன் ' என்னும் இன உணர்வோடு நடைபெறும் இப்போராட்டம் வெல்லும் என்பதனை நாளைய வரலாறு சொல்லும். போராடும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். .

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வெற்றி பெறுவோம் அய்யா...

ஸ்ரீராம். said...

சென்னை வெள்ளத்தின் போதே இந்த உணர்வு வெளிப்பட்டதைப் பார்த்தோம். தலைமை ஏற்க என்றொருவர் இல்லாத நிலையில் கட்டுப்பாடுடனும், கலவரங்கள் இல்லாமல் போராட்டம் நடைபெறுவது சிறப்ப

முனைவர். வா.நேரு said...

உண்மைதான்,கருத்திற்கும், வருகைக்கும் மகிழ்ச்சி, நன்றி.