அண்மையில் படித்த புத்தகம் : தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும்-பணியும்
நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர்.நம்.சீனிவாசன்.எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி.
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல், சென்னை-7
முதல் பதிப்பு : 2015 பக்கங்கள் :384 விலை ரூ 200/-
நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர்.நம்.சீனிவாசன்.எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி.
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல், சென்னை-7
முதல் பதிப்பு : 2015 பக்கங்கள் :384 விலை ரூ 200/-
பேரா. நம். சீனிவாசன் அவர்கள் தனது முனைவர் பட்டத்திற்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எடுத்துக்கொண்ட தலைப்பு " வீரமணியின் வாழ்வும் பணியும் " என்பதாகும். தமிழர் தலைவர் பற்றி ஆய்வு நடத்தி அதன் மூலமாக முனைவர் பட்டம் பெற்ற பேரா.முனைவர் . நம்.சீனிவாசன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்தப்புத்தகம்.இந்த நூலிற்கு டாக்டர்.மு.தவமணி அவர்கள் அணிந்துரை அளித்திருக்கின்றார். அதில் " அவர்(பேரா.நம்.சீனிவாசன்) எனக்கு இன்னொரு மகன்.அதிகம் பேசாதவர்.விளம்பர வெளிச்சத்தை விரும்பாதவர்.இயக்கத்திற்கு வெளியே இலக்கிய வட்டங்களிலும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருப்பவர்...தலைவர் வீரமணி அவர்களின் செயல்பாடு எந்த ஒரு தலைவராலும் தொடமுடியாத சிகரமாகும். இந்நூல் உலகத் தமிழர்களின் கைகளில் தவழட்டும்" என்று கூறியிருக்கின்றார். உண்மை.
இந்த நூல் 5 இயல்களைக் கொண்டிருக்கின்றது. முதல் இயலின் தலைப்பு 'வீரமணியின் வாழ்க்கைத் தகவல்கள்' என்பதாகும். 62 பக்கம் கொண்ட இயல். ஒவ்வொரு பக்கமும் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை பற்றிய தகவல்களை விரிவாகத் தருகின்ற பக்கங்களாக இருக்கின்றது.. அவரது பிறந்த தேதி 02.12.1933 என்று ஆரம்பித்து அவரின் பெற்றோர், உடன் பிறந்தோர், சிற்றன்னை, கல்வி, இயக்கத்தொடர்பு,திராவிடர் கழகப்பொதுச்செயலாளர், இதழாசிரியர்,இராவண லீலா, ஆசிரியருக்கு இராகு காலத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணம்,திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திய புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதை, அவருக்கு கிடைத்த பரிசு, பட்டங்கள்,அவர் மீது ஏவப்பட்ட தாக்குதல்கள்,வெளி நாட்டுப்பயணங்கள்,தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு, எத்தனை முறை ,எதற்காகவெல்லாம் சிறை பட்டார், கைது செய்யப்பட்டார் என்னும் விவரங்கள், சுற்றுப்பயணம், அவருக்குள்ள அனைத்து தரப்பட்ட ஆத்திக,அரசியல்வாதியாக உள்ள நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர் பெயரில் உள்ள விருது, ஆசிரியர் பற்றி சான்றோர் பெருமக்களின் கருத்துகள்,கி.வீரமணியின் பண்பு நலன்கள் என்று குறுந்தலைப்புகள் இட்டு நூலாசிரியர் கொடுக்கும் புள்ளி விவரங்களும்,தகவல்களும் அருமை. அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ள இயல் முதல் இயலாகும். முடிவில் இயல் முடிபுகளையும்,பயன்படுத்திய புத்தகங்கள் பற்றிய தகவல்களையும் பக்கங்களோடு குறிப்பிட்டு ஆதாரங்களை அள்ளிக்கொடுத்திருக்கின்றார் நூலாசிரியர் பேரா.நம்.சீனிவாசன்.
இரண்டாவது இயல் 'வீரமணியின் பணிகளில் தமிழர்,தமிழ் நாடு, தமிழ் மொழி ' என்பதாகும்.இந்த இயல் ஆசிரியர் அவர்களின் பணியைப் பற்றிக்கூறுவதாக இருந்தாலும் கடந்த 60,70 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறு பற்றி விரிவாக அடிப்படையிலிருந்து கூறுவதாக இருக்கின்றது. இந்தி எதிர்ப்பு என்னும் உணர்வு ஏன் ஏற்பட்டது, தமிழ் புறக்கணிப்பு-அதனால் ஏற்பட்ட எழுச்சி,இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் என விரிவான தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றையும் அதில் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பையும் கூறுவதாக இந்தி எதிர்ப்பு என்னும் குறுந்தலைப்பு இருக்கிறது. அதனைப் போலவே 'தமிழ் அர்ச்சனை உரிமைப்போர், வட மொழி எதிர்ப்பு, நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு,காவிரிப்பிரச்சனை,வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு, சேது சமத்திரத்திட்டம் போன்ற குறுந்தலைப்புகள் ஒவ்வொன்றும் அடிப்படையை விளக்கி வாசிப்பவர் எவரும் போராடவேண்டியதன் தேவையை உணர்ந்து கொள்ளும் வண்ணமும் அதில் ஆசிரியர் அவர்களின் போராட்டத்தையும் விவரிப்பதாக இந்த இயல் இருப்பது அருமை.
மூன்றாவது இயல் 'வீரமணியின் எழுத்தும் பேச்சும் ' என்பதாகும்." திராவிடர் கழகம் ஒரு கருத்துப் பரவல் இயக்கம்." நாதசுரக்குழாயாக இருந்தால் ஊதியாகவேண்டும். தவிலாயிருந்தால் அடிப்பட்டுத்தானாகவேண்டும் என்பதுபோல் எனக்குத் தொண்டை,குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும்;பிரசங்கம் செய்தாக வேண்டும் " என்கிறார் தந்தை பெரியார் " என்று இயலின் ஆரம்பத்தில் குறிப்பிடும் பேரா.நம்.சீனிவாசன் தந்தை பெரியாரின் பிரச்சார நாட்களை பட்டியலிடுகின்றார். தொடர்ந்து ஆசிரியரின் எழுத்து பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள் என வரிசையாக குறிப்பிடுகின்றார்.தமிழர் தலைவர் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் 39, அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்கள் 45( இது 2011-ல் முனைவர் பட்டம் பெற்ற போது ),இப்போது இன்னும் நிறைய புத்தகங்கள் வந்துள்ளன.ஆசிரியரின் குறிப்பிடத்தக்க நூல்களாக கீதையின் மறுபக்கம்,பெரியார் மணியம்மை திருமணம்-ஒரு வரலாற்று உண்மை விளக்கம், உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம் 2, சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும், கோயில்கள் தோன்றியது ஏன்? ,சக்தி வழிபாடு, அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு,விடுதலைப்போராட்டமும் திராவிட இயக்கமும் உண்மை வரலாறு, பிரார்த்தனை மோசடி, வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள்(13 தொகுப்புகள் இப்போது ),அய்யாவின் அடிச்சுவட்டில் (6 பாகங்கள் இப்போது) என ஆசிரியர் எழுதியுள்ள ஒவ்வொரு நூலினைப் பற்றியும் விளக்கமான குறிப்புகளாக கொடுத்திருக்கின்றார். சொற்பொழிவாளர் என்ற முறையிலே அவருடைய சொற்பொழிவு எப்படிப்பட்டது, எவ்வளவு வலிமையானது என்பதையெல்லாம் எடுத்துரைத்திருக்கின்றார்.
நான்காவது இயல் " வீரமணியின் சமூகப் பணிகள்' ...இட ஒதுக்கீடு ஏன், இட ஒதுக்கீடு வரலாறு,இட ஒதுக்கீடும் நீதிக்கட்சியும், இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோல், எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9000 வருமான வரம்பு திட்டம், அதனை எதிர்த்து நடந்திட்ட போராட்டங்கள்,வெற்றியில் ஆசிரியரின் பங்கு,மண்டல் குழு,அதனை அமுல்படுத்துவதில் ஆசிரியர் கி.வீரமணியின் பங்களிப்பு,69 விழுக்காடு உயர்வு, ஜாதி ஒழிப்பு,(ஜாதியின் தோற்றம், அதன் கொடுமைகள், தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்கள், ஆசிரியர் காலத்தில் நடந்த போராட்டங்கள்) என விரிவாக கொடுத்து பின்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை,அதற்கான போராட்ட வரலாறு, ஜாதி ஒழிப்பிற்கான பத்து அம்சத்திட்டங்கள்,ஆசிரியரின் மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,பெண்ணுரிமை,கல்விப்பணி, வெள்ளம்,புயல் போன்ற நேரங்களில் நேரிடையாகச்சென்று ஆசிரியர் அவர்கள் அளிக்கும் நிவாரண பங்களிப்பு என விரிவாக இந்த இயலில் குறிப்பிடுகின்றார்.முனைவர் பட்ட ஆய்வு -வாய்மொழித்தேர்வில் "சமூக நீதிக்காக தமிழர் தலைவர் அவர்கள் பாடுபட்டதுதான் மற்ற பணிகளை விட அதிகம் என்பது எனது ஆய்வின் முடிவு" என ஆய்வாளர் நம்.சீனிவாசன் குறிப்பிட்டதும் அதற்கான ஆதாரங்களை பல்வேறு ஆய்வுத் தரவுகளோடு விளக்கியதும் எனது நினைவில் வந்தது.
அய்ந்தாவது இயல் 'வீரமணியின் நிருவாகப் பணிகள் "என்பது.2007-ஆம் ஆண்டின் ஆசிரியர் அவர்களின் முழு சுற்றுப்பயணத்தையும் இணைப்பாக பேரா. நம்.சீனிவாசன் பக்கம் 294-லிருந்து 310 பக்கம் வரை கொடுத்திருக்கின்றார். அவரது ஒவ்வொரு ஆண்டின் சுற்றுப்பயணமும் நம்மை மலைக்க வைக்கிறது. ஒரு இருதய ஆப்ரேசன் என்றாலே முடங்கிவிடும் மனிதர்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆசிரியரின் சுற்றுப்பயணம் நம்மை மலைக்கவும், வியக்கவும் வைப்பது. அதனை விரிவாக எடுத்துவைத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பதிவாக வைத்திருக்கின்றார். ஆசிரியர் அவர்கள் காலையில் விடுதலை அலுலவகம் வருவது,பணிகள்,மாலை நேர பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என அவரின் அன்றாட நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார். விடுதலை,உண்மை, பெரியார் பிஞ்சு,தி மாடர்ன் ரேசனலிஸ்டு போன்ற பத்திரிகை நிருவாகம், இயக்க நிருவாகம்- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி எனப் பல்வேறு பிரிவுகளின் பணி ஒழுங்குபடுத்துதல்-வழிபடுத்துதல்,அந்த அமைப்புகளின் செயல்ப்பாடுகள் , கல்வி நிருவாகம், பெரியார் திடல் நிருவாகம் எனப் பல்வேறு நிருவாகப் பணிகளை இந்த இயலில் பேரா.நம்.சீனிவாசன் விளக்கியுள்ளார். தந்தை பெரியார் காலத்தில் எத்தனை நிறுவனங்கள் இருந்தன, இப்போது எத்தனை இருக்கின்றன எனும் பட்டியல்களை எல்லாம் நிறைவாகக் கொடுத்திருக்கின்றார்.
முடிவில் ஆய்வு நிறைவுரை,மேலாய்வுக் களன்கள்,துணை நூற்பட்டியல்கள் என நூலாசிரியர் கொடுத்திருக்கின்றார். பின் இணைப்பாக ஆசிரியர் கி.வீரமணி-மோகனா அம்மையார் அவர்களின் வாழ்க்கைத்துணை ஒப்பந்த அழைப்பு-பெரியார் அழைத்தது,தந்தை பெரியாரின் நன்றி அறிவிப்பு,ஆசிரியர் வீரமணி அவர்களைப் பற்றி உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதை,இராவண லீலா கொண்டாடக்கூடாது என ஆசிரியர் எழுதிய கடிதத்திற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் ஆங்கிலக் கடிதம், முடிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கண்ட பேட்டி என இந்த நூல் நிறைவு பெறுகின்றது.
இன்று 86-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு அருமையான வாய்ப்பு. அரைகுறையாய் அவரை அறிந்தவர்கள், எதிர்க்கருத்து கொண்டவர்கள் கூட இந்த நூலைப் படித்தால் ஆசிரியர் அவர்களின் முழுமையான பரிமாணங்களை அறிந்து கொள்வர். மிகவும் நேர்த்தியாக முனைவர் பட்ட ஆய்வேட்டை,புள்ளி விவரங்களாலும், ஆக்க பூர்வமான கருத்துக்களாலும், அரிய வரலாற்றுத்தகவல்களாலும் நிறைவாக ஆக்கித் தந்திருக்கும் பேரா.முனைவர். நம்.சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாரட்டுகளும். தோழர்களே, கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். பரிசுப்பொருளாக திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளிலும் அளித்திடுங்கள்.
No comments:
Post a Comment