அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர் : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்,சென்னை-87. தொலைபேசி : 044-42047162
முதல் பதிப்பு : நவம்பர் 2018 மொத்த பக்கங்கள் 155, விலை ரூ 130
கருஞ்சட்டைப் படை என்பது வெறும் மனிதர்களால் கூடிய கூட்டமல்ல,சுயமரியாதை உணர்வுகளால் கூடிய கூட்டம். என்ன கொடுத்தும் ஏன் தங்கள் உயிரைக் கொடுத்தும் தங்கள் இலட்சியத்தை அடைவோம் என்று கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக களத்தில் நிற்கும் கூட்டம்.அந்தக் கருஞ்சட்டைப் படையில் இருந்த பெண் தலைவர்கள் பற்றிய ஒரு அறிமுகமாக எழுத்தாளர் ஓவியா அவர்கள் கருஞ்சட்டைப் பெண்கள் என்னும் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அண்மையில் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன், படித்தேன், முடித்தேன் என்று மற்ற புத்தகங்களைப் போலப் படித்து முடித்து வைக்க முடியவில்லை. நரம்புகளால் ஆனது உடல் என்பதுபோல, உணர்வுகளால் ஆன எழுத்துக்களால் ஆன புத்தகம் இந்தப் புத்தகம் .அதனால்தான் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது முன்னுரையில் "பாரம்பாரியமான இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆதலின் அந்த உணர்வு இந்நூலின் ஒவ்வொரு எழுத்திலும் சுடர்விடுவதைக் காணமுடிகிறது " என்று குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போதும் இந்த உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்கிறது, நூல் முழுக்கத் தொடர்கின்றது.
இந்த நூலினை தனது பாட்டி காந்தியாம்மாவுக்கு ...எனச் சுட்டியுள்ளார்." பெரியார் பெருந்தொண்டர் காந்தியம்மாள்.தனது வாழ்வின் இறுதிக்கட்டத்திலும் பெரியார் கட்சிக்காரி என்பதை மட்டும் தலை நிமிர்ந்து சொல்லும் சுயமரியாதை இயக்க வீராங்கனை.மதுரையில் கருப்புச்சட்டை மாநாடு நடந்த பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில் கலவரக்காரர்களுடன் தீரத்துடன் போராடித் தனது கணவரையும் குழந்தையையும் காப்பாற்றி மீட்டவர். பெரியாரின் அடிச்சுவட்டில் என்னை வளர்த்து ஆளாக்கியவர். எனது அம்மாவாகிய எனது பாட்டி காந்தியம்மாவுக்கு இந்த நூல்... " எனக்குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு கருஞ்சட்டை பெண்ணால் வளர்த்து செதுக்கப்பட்ட ஒரு கருஞ்சட்டைப்பெண் எழுதிய புத்தகம் இது.
பதிப்புரையை 'பெல்' ராஜன் அளித்திருக்கின்றார். முதல் அணிந்துரையை திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'பெண்ணுரிமைக் களத்தில் பதித்த சுவடுகள் என்னும் தலைப்பில் அளித்திருக்கின்றார்.."பயனுள்ள இந்நூலைக் கொண்டுவருவதற்கு அரிய முயற்சிகளை மேற்கொண்ட தோழர் ஓவியாவிற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் " என விரிவான அணிந்துரையின் முடிவாக அய்யா ஆசிரியர் அளித்திருக்கின்றார்.
'தாண்ட வேண்டிய தடைக்கற்கள் ' என்னும் தலைப்பில் அணிந்துரையை தி.மு.க.வின் மகளிரணிச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அளித்திருக்கின்றார். "சுயமரியாதைப் பாதையில் நமது கருஞ்சட்டைப்பெண்கள் துவக்கிய பயணத்தை தொடர்ந்துவரும் நாம்,கடந்து செல்ல வேண்டிய தூரமும் தாண்ட வேண்டிய தடைக்கற்களும் ஏராளமாக இருக்கலாம். ஆனால் மனத்துணிவுடனும் கொள்கைப் பற்றுடனும் நாம் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி அயராமல் பயணிப்பதே நாம் அவர்களுக்குச்செலுத்தும் நன்றியாக இருக்க முடியும்.அவர்களது வாழ்க்கைப்பயணத்தில் அவர்களோடு பயணிப்பது போன்ற ஓர் உணர்வை, மன நிறைவை ஓவியா அவர்களது இந்தப்படைப்பு நமக்குத் தருகிறது..." என்று குறிப்பிடுகின்றார். உண்மை,வாசிப்பவர்கள் இந்த உணர்வை உணரமுடியும்.
திராவிடர் கழகத்தின் பிரச்சாரச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் 'தாண்ட வேண்டிய தடைக்கற்கள் ' என்னும் தலைப்பிலேயே அணிந்துரை அளித்திருக்கின்றார். "பல ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகளின்மீது வெளிச்சம் பாய்ச்சும் கலங்கரை விளக்கமாக தோழர் ஓவியா அவர்களின் 'கருஞ்சட்டை பெண்கள் 'எனும் இந்த நூல் வெளியாகிறது " எனக்குறிப்பிட்டு "தோழர் ஓவியா அவர்களின் கருத்துக்கள் குழப்பமில்லாத தெளிவான சொற்களால் செதுக்கப்படும் வாக்குமூலங்கள் ...." என மிகச்செறிவான அணிந்துரையை அளித்திருக்கின்றார்.
"பெரியார் நூலகர் வாசகர் வட்டம் எனக்களித்த இந்த நல்வாய்ப்பு இந்தத் தொடர் மலரக்காரணமாக அமைந்தது " எனக் குறிப்பிட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் தான் நிகழ்த்திய சொற்பொழிவுகளே இந்த நூல் என என்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் ஓவியா குறிப்பிடுகின்றார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை கிருட்டிணன் அவர்களுக்கும் செயலாளர் சத்ய நாராயண சிங் அவர்களுக்கும் பொருளாளர் மனோகரன் அவர்களுக்கும் தனது நன்றியை முதலில் குறிப்பிடுகின்றார். உடனடியாக இந்த நூல் வரக்காரணம் திராவிடர் இயக்கத்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்கின்றார். " அன்னை மணியம்மையாரை சந்தித்து அவருடன் பேசுகிற வாய்ப்பெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கிறது எனபதைப் பெருமையுடனும் பணிவுடனும் நினைத்துப்பார்க்கிறேன்.அன்பானவர்.எளிமையானவர்.தனது வெளிப்புறத்தோற்றத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்..தலை கூட வாரியதில்லை.குளித்துவிட்டு முடியை உதறி முடித்துக்கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் எப்போதும் அமைதி தவழும் முகம். சிரிக்கும்போது மிக அழகாயிருப்பார். வெள்ளை ஜாக்கெட்டும் கருப்பு சேலையும் தவிர வேறு உடையில் நான் பார்த்ததேயில்லை....இயக்கம் என்பது குடும்பங்களின் இணைப்பாக இன்றும் தொடர்கிறது. அடையாறு அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் நான் சேர்ந்து படிக்க இடம் கிடைக்க உதவியதும்,விடுதியில் தங்கிய எனக்கு லோக்கல் கார்டியனாக ஆசிரியர் அவர்களும் அவரது வாழ்க்கைத்துணைவியார் மோகனா அம்மாவும் இருந்ததையும் இந்த இடத்தில் நன்றியுடன் குறிப்பிடுவதில் பெருமைப்படுகிறேன்.... " எனக்குறிப்பிட்டு "கருஞ்சட்டைப்பெண்கள் தொடர்வார்கள் ! வெல்வார்கள் ' என என்னுரையை முடித்திருக்கின்றார்.
கருஞ்சட்டைப்பெண்கள் என்னும் இந்தப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த வேளையில் அண்மையில் மறைந்த கருஞ்சட்டைப்பெண் திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் நினைவில் வந்தார்கள். மருத்துவம் படித்து,அரசு மருத்துவமனையில் பணியாற்றி, பின்பு இயக்குநர் என நிலையில் இருந்தபொழுது விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு திராவிடர் கழகத்தின் இயக்க வேலைக்கு வந்தார்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் பிறை நுதல்செல்வி அவர்கள்தான் சிறப்பு பேச்சாளர். அவர் அடுக்கு மொழி பேச்சாளர் இல்லை. ஆனால் ஆழமாக திராவிடர் இயக்கத்தை, தந்தை பெரியாரின் தத்துவத்தை, அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையை புரிந்துகொண்டவர்கள். எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார்கள். நன்றாக தயாரிக்கப்பட்ட உரை. அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டுகளோடு உரையாற்றியதைப் பார்த்து ,கேட்டு வியந்து கூட்டம் முடிந்தபின்பு பாராட்டியபோது அவ்வளவு தூரம் மகிழ்ந்தார்கள். வெள்ளை உள்ளமும் கொள்கை உறுதியும் கொண்டவர்கள்.போராட்டங்களில் பங்கு பெற்றார்கள். மாநாடுகளில் உரையாற்றினார்கள். கலந்துரையாடல்களில் வழிகாட்டினார்கள். கணவர் டாக்டர் கவுதமனோடு இணைந்து எப்படி எப்படி எல்லாம் கழகப்பணி ஆற்ற முடியுமோ அப்படியெல்லாம் கழகப் பணியாற்றினார்கள்.தலைமைக்கு அவ்வளவு நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். நாளை(18.12.2018) அவருக்கு சென்னையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள அய்யா ஆசிரியர் தலைமையில் படத்திறப்பு நடக்கும் நிலையில், கருஞ்சட்டைப்பெண்களின் வரலாறு பதியப்படும் .கருஞ்சட்டைப்பெண்கள் தொகுதி ஒன்று,கருஞ்சட்டைப்பெண்கள் தொகுதி இரண்டு ,மூன்று என்று வரலாறுகள் பதியப்படும் எனும் நம்பிக்கை பிறக்கின்றது. இந்தப் புத்தகத்தின் மூலம்...
மொத்தம் 16 தலைப்புகளில் இந்தப்புத்தகம் அமைந்துள்ளது
(தொடரும்)
.
No comments:
Post a Comment