Thursday, 27 December 2018

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்........

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.....

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு                   : கருஞ்சட்டைப் பதிப்பகம்.

                                   கட்டுரை (3)
ஓவியா அவர்கள் தனது நூலில் தொல்காப்பியம் மற்றும் மனுநீதி என்னும் நூல்களை எடுத்துக்கொண்டு ,அந்த நூல்களைப் பெண்ணியல் நோக்கில் நோக்கி எழுதுகின்றார்.தொல்காப்பியம் எந்தக் காலத்தில் தோன்றியிருக்கின்றது என்பதனை "கற்பு, பரத்தமையும் இல்லாத சமூகத்திலிருந்து கற்பும், பரத்தமையும் தோற்றுவிக்கப்படுகின்றன.அங்கு ஒரு புதிய சமூகம் உருவாகிறது. அப்படி ஒரு புதிய சமூகத்தினுடைய குரலாக தொல்காப்பியம் பதிவாகிறது....அது சமூகத்திடம் வாழ்க்கை நெறிகளை முன்வைக்கிறது " என்று சொல்லும் நூலாசிரியர், அந்த நூல் சொல்லும் வாழ்க்கை நெறிகள் அனைத்தும் ஆணாதிக்க நோக்கிலானவை என்று ஆதாரங்கள் மூலம் குறிப்பிடுகின்றார். கற்பு நல்லது என்று தொல்காப்பியம் கூறுகின்றது அதே நேரத்தில் பரத்தமை தவறு என்றும் சொல்லவில்லை என்பதனைச்சொல்கின்றார். தொல்காப்பியம் நமக்கு கிடைத்த தொன்மையான நூல்தான், இலக்கண நூல்தான், பெருமை வாய்ந்ததுதான். ஆனால் அதுவும் ஒரு ஆணால் எழுதப்பட்டதுதானே . பெண் உரிமைகளுக்கு எதிரான நூற்பாக்களை, அவைகளின் கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கின்றார். பரத்தமை தப்பில்லை, ஆண் பரத்தையிடம் போகலாம், ஆனால் மாதவிலக்கான நாட்களுக்கு பிந்தைய  12 நாட்களும் பரத்தையிடம் போகாதே, மனைவியோடு இரு என்று சொல்லும் நூற்பாவை (செய்யுள் 187,அகத்திணையியல்,பொருளதிகாரம் )எடுத்துக்காட்டி ,தொல்காப்பியத்தின் நோக்கம் என்பதுவும் பிள்ளை பெறும் எந்திரமாக ,மனைவி இருக்க வேண்டும் என்பதுதானே என்னும் நியாயமான கேள்வியை முன்வைக்கின்றார்.

                                    மிகப்பெரிய  கலாச்சாரமாக சொல்லப்படும் தமிழனுடைய கலாச்சாரம் என்பது நிச்சயமாக பெண்ணுக்குச் சாதகமான கலாச்சாரம் இல்லை என்பதனை அடித்துச்சொல்லும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக்கொண்டே விளக்கியிருக்கின்றார்.மனுதர்மத்தோடு ஒப்பிடும்போது தொல்காப்பியம் நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க நூலாக இருக்கிறது என்பதனையும்  குறிப்பிடுகின்றார். 

மனுநீதி என்பது எப்படிப்பட்ட அநீதியான நூல் என்பது திராவிடர் கழகத்தினருக்கு தண்ணீர் பட்ட பாடு. அசல் மனுதருமம் என்னும் புத்தகம் திராவிடர் கழக மாநாடுகளில் ஆயிரக்கணக்கில் விற்றிருக்கிறது. மனுநீதி ஒரு மறுபார்வை என்னும் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களின் புத்தகம் மிகப்பெரிய கருத்து கருவூலம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைகளில் மிகப்பெரிய அளவிற்கு இந்த மனுநீதியைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றன,பெறுகின்றன. திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 'பெண் ' என்னும் அற்புதமான புத்தகத்தில் மனைவி,திருமணம்,மக்கட்பேறு,கருத்தடை,கைம்மையார்,விபச்சாரம்,கற்பு,மணவிலக்கு போன்ற உட்தலைப்புகளில் மனுதருமம் எப்படிப்பட்ட அதர்மங்களைச்செய்திருக்கிறது என்ற பட்டியல்களை மிகச்சுவையாகத்தருவார்.தந்தை பெரியாரும் அவரது தத்துவமும் எவ்வாறெல்லாம் பெண் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற விவரங்களைத் தந்திருக்கின்றார். எனவே விரிவாக தெரிந்திருக்கக்கூடிய நமக்கு மனுநீதியைப் பற்றி மிகச்சுருக்கமாகக் கொடுத்திருக்கும் பகுதியாகத்தான் இந்தப் பகுதி இருக்கிறது. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது.

மனுநீதி மனிதர்கள் எப்படிப் பிறந்தார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது . " முகத்திலிருந்து பிறப்பானோ மூடனே,தோளிலிருந்து பிறப்பானோ தொழும்பனே ...." என்னும் புரட்சிக்கவிஞரின் கவிதை நமக்கு நினைவில் வருகின்றது.  பிரம்மன் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் அப்புறம் கடவுளின் தோளில்,இடையில் காலில் பிறந்ததாகக் கூறும் மனுநீதி பெண்கள் எப்படிப் பிறந்தார்கள் என்பதனைச்சொல்லவில்லை என்பதனை ஓவியா  சொல்கின்றார்." பெண் எப்படிப்படைக்கப்பட்டாள் என்பதற்கு மனுதர்மத்தில் பதிலே  இல்லை.பெண்ணை ஒரு பொருட்டாகவே மனுதர்மம் எடுத்துக்கொள்ளவில்லை. இந்து மதத்தில் பெண்ணுக்கு இருத்தலே கிடையாது. தொல்காப்பியம் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரையும் மரியாதையோடு பேசியது.ஆனால் மனுதர்மம் அப்படியல்ல, உலகத்திலேயே ஒரு மோசமான நூல் மனுதர்மம். இதை எப்படி ஒரு நீதி நூலாக ஏற்றுக்கொள்வது என்கின்ற கேள்வியைத் தோற்றுவிக்கன்ற நூலாக இருக்கிறது " எனக்குறிப்பிடுகின்றார்,

மனுதர்மம் அங்கீகரிக்ககூடிய திருமணங்களைப் பார்க்கலாம் என்று கூறும் நூலாசிரியர் " இராட்சத திருமணம் என்கின்ற திருமணத்தைப் பற்றி இந்நூல் சொல்கிறது...இராட்சச திருமணத்தின் சரியான மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அது பாலியல் வன்முறையைத் தவிர வேறொன்றுமில்லை. மனுதர்மத்தை ஆழமாகப் பார்த்தோமேயானால் பெண் மீதான வன்முறையை முழுக்க முழுக்க மனுதர்மம் ஆதரிக்கிறது என்பதைத் தெளிவாகச்சொல்லலாம்  " என்று சொல்கின்றார்," இளம் வயதில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மகன். இந்த மூன்று நிலைகளிலும் பெண் காவலில்தான் இருக்கிறாள்.அதுமட்டுமன்றி மனுதர்மம் ஆண்களிடம்தான் பேசுகிறது. இந்த நூலின் வாசிப்பாளன் ஆண்தான். ஒரு வரி கூட பெண்ணை நோக்கியது கிடையாது " என்று குறிப்பிடுகின்றார். 

பெண்ணின், தமிழ்ச்சூழலின் உளவியல் பற்றிப் பேசுகின்றார் நூல் ஆசிரியர். அந்த உளவியலை உடைத்தது பெரியார் இயக்கம். உடைத்தவர்கள் கருஞ்சட்டைப் பெண்கள் என்பதனை நிறுவியிருக்கின்றார். "..உண்மையான அர்த்தம் என்னவென்று பார்த்தால் விடுதலை கேட்கும் பெண்ணை இந்தச்சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது,அங்கீகரிக்காது என்பதாகும். இப்படித்தான் தமிழ்ச்சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உளவியல் மூலங்களில் கை வைத்து கேள்வி கேட்டு ஒரு பெரிய கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட இயக்கம்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் " என்று சொல்கின்றார். விதிகளை எழுதியவர்களே பிள்ளை பெறவேண்டும் என்பதற்காக எப்படி விதிகளைத் தளர்த்தினார்கள் என்பதையும் மனுதர்மத்தில் உள்ள விசயங்கள் இன்றைக்கும் கூட உளவியலாக இருக்கும் தன்மை பற்றி எடுத்துக்காட்டுகளோடு கொடுக்கின்றார்.  
      
 சிலரிடம் பேசும்போது சொல்வார்கள், இதெல்லாம் அந்தக் காலத்தில் இருந்தது ,இப்ப இருக்கிறதா என்பார்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எப்படி மனு நீதி அடிப்படையில் இருக்கிறது என்பதற்கான பட்டியலை ஒரு நூலாக கொடுத்திருக்கின்றார். நாம் இராமயாணத்தைப் பற்றிப்பேசும்போது, ஏங்க இதைப்பத்தி இப்ப பேசுறீங்க என்று கேட்ட பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கூட சேது சமுத்திரத்திட்டம், ராமர் பாலம் என்னும் பெயரால் முடக்கப்பட்டபோது, நம்பிக்கை என்னும் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும் சேது சமுத்திரத்திட்டம் நிறுத்தப்பட்டபோது ,இன்னும் அதிகமாக இராமயாணப்பாத்திரங்களை மக்கள் மத்தியிலே பேசியிருக்க வேண்டும்  என்று ஒத்துக்கொண்டார்கள். அதனைப் போல சாதி ஒழியவேண்டும்,சாதி மறுப்புத்திருமணங்கள் நிறைய நடைபெற வேண்டும், பெண்கள் தங்கள் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இயல்பாக சமூக அமைப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காக உழைப்பவர்கள் மனு நீதி என்னும் கொடுமையான சட்ட நூலைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும், சாதி அமைப்பில் மேல் அடுக்கில் இருப்பவன் கீழ் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம், ஆனால் சாதி அமைப்பில் கீழ் அடுக்கில் இருப்பவன் மேல் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ள சட்டம் மனு நீதி. " உடுமலைப் பேட்டை சங்கர் கொலைக்கும், தருமபுரி இளவரசன் கொலைக்கும் அடிப்படைக் காரணம் மனுநீதி " என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

பெண்களுக்கு எதிராக நடக்கும், நடந்த அநீதிகளை பட்டியலிடும் நூலாசிரியர் " மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,கோயிலின் பெயரால்தானே இந்த அநியாயங்கள் எல்லாம் பெண்ணின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது .இந்த மதம்தான்...இந்தக் கோயில்தான்...இந்தக் கடவுள்தான் பெண்ணின் எதிரி என்று திராவிடர் இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கம் சொல்லியது ? 'பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவர் இதனைக் கேட்டார் ? என்று நறுக்கென மனதில் படும் வண்ணம் கேட்கின்றார்,..

(தொடரும்)

      

No comments: