Sunday, 8 September 2019

முரண்பட்ட மனப்போக்கு

                                               முரண்பட்ட மனப்போக்கு

                                                    முனைவர்.வா.நேரு
                                தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


இந்த நூற்றாண்டு தொழில் நுட்பங்களின் நூற்றாண்டு. தொழில் நுட்பங்கள் வளர,வளர குறிப்பாக தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வளர,வளர மூட நம்பிக்கைகள் குறையும் அல்லது முற்றிலும் ஒழிந்து போகும் என்பது பகுத்தறி வாளர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு மாறான நிகழ்வுகள் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.40 ஆண்டுகளுக்கு பின் னால்  குளத்திற்குள் இருந்து வந்த ஒரு தெய்வம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றார்கள்.ஆடி அமாவாசைக்கு இறந்து போன  தங்கள் பெற்றோருக்கு திதி கொடுக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னால் இத்தனை நாளாக குடிக்காதவர் இன்றைக்கு மட்டும் எப்படி குடிக் கின்றார் என்ற கேள்வி எதுவும் கேட்காமல் பால் வாங்கி பிள்ளையாருக்கு ஊற்ற என்று  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மக்கள் ஓடுகின்றார்கள்.ஜெபத்தினால் நோய் சரியாகும் என்று சொல்லும் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் கூட்டம் சேர்கிறது. சரியில்லாத சாமியார் என்று தெரிந்தும் அந்தச்சாமியாரை தரிசனம் செய்ய என்று உயர் மட்ட பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் வருகின்றார்கள்... உணவின்றி மக்கள் பசியால் வாடி வதங்கும் நிலையில் யாகம் என்று சொல்லி உணவினை நெருப்பில் போட்டு தீயில் வீணாக்கு கிறார்கள்... அப்படி வீணாக்கும் நிகழ்வுக்கு மாணவ - மாணவிகள் படிக்கும் கல்லூரியில் இடம் கொடுக் கிறார்கள்....? மழை பெய்யவில்லை, அதற்காக யாகம் நடத்துகிறோம் என்று சொல்லி அரசின் அற நிலையத்துறை நடத்துகிறது.... நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கு சில நேரங்களில் சோர் வைத் தருகிறது ...அறிவியல் மனப்பான்மை என் பதே மக்களிடம் அற்றுப்போய் விட்டதா? என்னும் கேள்வி மிகத்தீவிரமாக நமக்கு எழுகின்றது...

ஆனால் நாம் பகுத்தறிவுவாதிகள். ஒவ்வொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு என்பதனை நம்புகிறவர்கள்.நோய் விரைவாகப் பரவுகிறது என்றால் நோய் எப்படி பரவுகிறது? அதனை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது தான் ஒரு மருத்துவரின் சிந்தனையாக இருக்க முடியும்.நோய் பரப்பும் கிருமிகள் அடர்த்தியாக வளர்கிறது என்பதற்காக அமைதியாக பார்த்துக் கொண்டிருப் பவர் நல்ல மருத்துவர் ஆக இயலாது. அந்த வகையில் பரவும் இந்த மூட நம்பிக்கை  நோய் தானாகப்பரவவில்லை, ஆட்சியா ளர்களின் அனுமதியோடு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த உலகில் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அறிவியல்தான் அடிப்படை. நாம்  நீண்ட நாள் வாழ்வதற்கு, நமக்கு வந்த நோய்களை உலகை விட்டு விரட்டியதற்கு, விரைந்து செல் வதற்கு, உலகம் முழுவதும் ஒரு நொடியில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு என இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்திற்கும் அறி வியலே,தொழில் நுட்பங்களே  அடிப்படை. இன்றைய உலகில் வாழும் மக்கள் அறிவியலால் விளைந்த அற்புதங்கள் அனைத்தையும்  அனுப விக்கிறார்கள்,  பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அறிவியல் மனப்பான்மையை மனதிற்குள் ஏற்றிக் கொள்வதற்கு மறுக்கிறார்கள் .... ஏன் ? பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மை ஏற்படாமல் செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் நமது நாட்டில் திட்டம் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அதனைப் பெரும்பான்மையான நமது மக்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

முதுகலைப் பட்டம் பெற்று பணியாற்றும் ஒருவருக்கு உடல் நிலைக் கோளாறு ஏற்பட்டது. அவரைப் பார்க்கப் போயிருந்தோம். தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதிற்கு தனது தம்பியும், அவரது மனைவியும்தான் காரணம் என்று சொல்கிறார். எப்படி என்று கேட்டபோது, அவர்கள் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று எனக்கு செய்வினை செய்து விட்டார்கள். அதனால் தான் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னார்.அவரது மனைவி இன்னும் ஒரு படி மேலே போய் செய்வினை வைத்தவர்களுக்கு நாங்களும் செய்வினை வைக்கப்போகிறோம் என்று சொன்னார்.கணவன், மனைவி இருவருமே நன்றாகப் படித்தவர்கள்.நல்ல வேலையில் இருப்பவர்கள்.ஆனால் மனதளவில் அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை. ஒரு பக்கம் உடல் நிலைக்கோளாறுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் செய்வினை என்னும் மூடத்தனம் அவர்களின் எண்ணத்தைப் பாழாக்கியிருக்கிறது. கட்டாயம் அவர்களது உறவுகளுக்குள்  இந்தப் பேச்சு, இந்த எண்ணம் மிகப்பெரிய பிரிவினையை உண்டாக்கும்.அவர்களின் மனப்பான்மை எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.அருகில் இருந்த நண்பர் சொன்னார், இன்றைக்கு தொலைக் காட்சிகளில் ஒலிபரப்பாகும் தொடர்களில் 90 சதவீதம் அறிவியல் மனப் பான்மைக்கு  எதிரான 'பில்லி, சூனியம், மந்திரம், வசியம் ' போன்றவை ஒளி பரப்பப்படுகின்றன. அது பார்ப்பவர்களின் எண்ணத்தில் அவர்கள் அறியாமலேயே நஞ்சைக் கலக்கின்றன என்று சொன்னார். இவர்கள் முதுகலை வரை படித்த படிப்பு அறிவியல் மனப் பான்மையை துளி கூட இவர்களுக்கு கொடுக்க வில்லையே, இவர்கள் படித்த படிப்பால் சமூகத் திற்கு என்ன பலன் என்னும் கேள்வியும் ,இவர்களே இப்படி என்றால் தொலைக்காட்சியில் காட்டுவதை எல்லாம் உண்மை என்று நம்பும் படிக்காத மக்களின் கதி என்னாவது என்கிற எண்ணம் மனதில் ஓடியது.

ஒரு நல்ல சமூகம் அமைவதற்கு அடிப்படை அச்சமற்ற சூழல்...புறச்சூழல் அச்சமற்று இருப்பது போல அகச்சூழலும் அச்சமற்று இருந்தால்தான் நல்ல சமூகம் அமையும்.ஆனால் உள்ளத்து அளவில் பயமுறுத்துவதற்கான விதைகளை  மதவாதிகள் குழந்தையாக இருக்கும் போதே, குழந்தைகளின் மனதில் விதைத்து விடுகின்றார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலை மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் " வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு ,விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க, அந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற பேச்சுதனை விளையாட்டாகக் கூட நம்பி விடாதே, நீ வீட்டுக்குள்ளே பயந்து முடங்கி விடாதே " என்று பட்டி தொட்டி எங்கும் பரப்பினார். ஆனால் அவரின் வழி வந்தவர்கள்  என்று சொல்லிக் கொள் பவர்கள் செய்யும் அபத்தங்களுக்கு அளவில்லை.

அண்மையில் வந்த ஒரு கட்செவி(வாட்சப்)யில் ஒரு பெண் காவலர், கோவில் விழாவிற்கு பாதுகாப்பிற்கு போனவர், காக்கி சீருடையோடு  திடீரென சாமியாடுகிறார். எனது தாயார் ஆசிரிய ராக இருந்தவர், தனது சொந்தக்கார பெண்கள் யாராவது இப்படி சாமியாடினால், அப்படி சாமியாடிகிட்டே போய் கரண்டு கம்பியைப் பிடி பார்ப்போம் என்பார். சாமியாடும் அந்த பெண் காவலரை ஒரு குறைந்த மின் அழுத்தம் பாயும் கரண்டு கம்பியை பிடிக்கச்சொல்லி கரண்ட் அடிக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம். ஒரு ஜெபக்கூட்டத்தில் பேயாடும் ஒரு பெண் பேயாடிக் கொண்டே கலைந்து போய்க்கிடக்கும் தனது மாராப்பை சரி செய்கிறார். பேய்க்கு மாராப்பு திறந்து கிடக்கிறது என்னும் கவலை ஏற்படுமா? என்ன?  இப்படிக் கூத்தாய் நடந்து கொண்டி ருக்கிறது. இப்படியான நிகழ்வுகளுக்கு உடனடியாக அரசு தண்டனை கொடுக்க வேண்டும்.தற்காலிமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.அந்தப் பெண் காவலரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.அரசுப் பணியில் உள்ள ஒருவர் அறிவியல் மனப் பான்மைக்கு எதிராக நடக்கிறார் என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது அனைத்து மதங்களைச் சார்ந்த அரசுப் பணியாளருக்கும் பொருந்தும். அரசமைப்பில் உள்ளவர்கள் அறி வியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச்சட்டத்தின் விதிகளில் ஒன்று. அதற்கு நேர்மாறாக நடக் கிறார்கள் என்றால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த நாட்டில் நட வடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்ப வர்களே அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன விலை ? என்று கேட்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "மூடநம்பிக்கைகள் நிலைத் திருப்பதற்கு அடிப்படை எவை எவை? எனக் கேட்டு அதற்கு விடையாக  "1.பயம்  2.குருட்டு நம்பிக்கை 3.பகுத்தறிவுப்படி ஆராயாமை 4.பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப் போக்கு (Attitude)" (ஜனவரி 16-31, 2017.. உண்மை இதழ்) எனக்குறிப்பிடுவார்.இந்த பகுத்த றிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கு என்பது மாற்றப்படவேண்டியது என்பதனை புரிந்து கொண்டாலே அறிவியல் மனப்பான்மை வந்து விடும். ஆனால் அந்த மனப்பான்மை வர விடாமல் இன்றைய ஊடகங் களும் மதவாதிகளும் பார்த்துக் கொள்கிறார்கள்.

சாமியாடுவதை கேலி செய்யும் ஒரு மதத்தினர் தங்கள் மதத்தில் பேயாடுதல் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏன் இப்படி படித்தவர்கள் பேய் ஆடுவதாக ஆடுகிறார்கள் என்று கேட்டால் மற்ற மதத்தவர் சாமியாடுவதை நீங்கள் கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். சாமியாடுபவர்கள் பேயாடு வதை நீங்கள் சொல்வதில்லை என்று சொல் கிறார்கள். இந்த இருவரும் சேர்ந்து கடவுளுக்கு என்று சொல்லி தங்கள் உடம்பை கத்திகளால் கிழித்துக் கொள்கிறார்கள்,  அவர்களை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். நமது கருத்து எல்லா மதங்களும் மூட நம்பிக்கை கூடாரங்கள் என்பதுதான். எல்லா மதங்களும் அடிப்படையில் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது என்பதுதான். ஆனால் மதவாதிகள் தங்கள் மதத்தில் உள்ள அறிவியல் மனப் பான்மைக்கு புறம்பான கருத்துக்களை, செயல் பாடுகளை களைய வேண்டும் என்பதில் கருத்து கொள்ளாமல் அடுத்த மதத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொண்டால் எளிதாக அறிவியல் மனப்பான்மை மக்கள் மத்தியில் பரவும்.

''மக்களின் சுதந்திரத்தை மன்னர் தீர்மானித்த இருண்டகாலத்தில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கவில்லை. இந்தியா போன்ற மாபெரும் நாடு ,விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர,மதங்களை நோக்கி அல்ல. மதங்களை நோக்கி முன்னேறுவது நிச்சய மாக இந்தியாவின் நிலைத் தன்மையையும்,மத ரீதியான பதற்ற நிலை காரணமாக பல பெரிய தொழிற் சாலைகள் இந்தியாவை விட்டு வெளி யேறிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருப்பதும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் இளம் பகுத்தறி வாளர்களின் கரங்களிலேயே உள்ளன" இது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அவர்களின் கருத்து.

பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கோடு இருக்கும் ஆட்சி யாளர்களின் காதுகளில் இந்தக் கருத்து  எட்டுமா? இளம் மாணவர்கள் அறிவியல் மனப் பான்மை யோடு வார்க்கப்படவேண்டும் என்பது  புரியுமா? நரேந்திர தபோல்கர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஆகஸ்டு 21.அவர் இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு ஆண்டுகள் பல ஆனபின்பும் இன்னும் கொலை யாளிகள் கைது செய்யப்படவில்லை.அவரது இறப்பிற்குப்பின் அவர் விரும்பிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மகாராட்டிரா அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருநாடக மாநிலத்திலும் கொண்டு வரப்பட்டது.மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் இந்தியா முழு மைக்கும் கொண்டு வரப்பட வேண்டும். உடன டியாக  தமிழ் நாட்டில்  கொண்டு வரப்படவேண்டும். பில்லி, சூனியம், ஜோதிடம், சாமியாடுதல், பேயாடுதல் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். மந்திரவாதிகள் என்று சொல்லப்படு பவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விசா ரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  மூட நம்பிக்கைகளை ஒலிபரப்பும் தொலைக் காட்சித் தொடர்கள் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். இதற்கு தமிழகத்தில் இந்த உணர்வு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக மக்களவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்களும் குரல்  கொடுக்க வேண்டும்.'திட்டம் போட்டு மூட நம்பிக்கையை பரப்பும் கூட்டம் பரப்பிக்கொண்டே இருக்குது, நமது நாட்டில் அதனைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டமும் அமைதி யாக இருக்குது.." இதனை மக்களுக்கு உரத்த குரலில் சொல்ல வேண்டிய கடமையும், அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

                                                                                                            நன்றி :விடுதலை                                                                                                                                      02.09.2019

2 comments:

முனைவர். வா.நேரு said...

நம் வீட்டு சிறியவர்கள்,பெண்கள்,இளைஞர்களை இது போன்ற கட்டுரைகளை அவசியம் வாசிக்க வையுங்கள்.தோழர் நேரு தர்க்கவியல் ரீதியாகவும் நடப்பு அனுபவ ரீதியாகவும் அருமையாக அணுகியுள்ளார். தோழர் ஓவியா,'புதிய குரல்' வாட்சப் குழுவில் ...நன்றி.

முனைவர். வா.நேரு said...

" இந்த நூற்றாண்டில் அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து இருந்தும் மனிதனுக்கு அறிவியல் சிந்தனைகளை மனித அறிவுக்கு எதிராக அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த மதவாதிகளும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சாதாரண மனிதனாக இருந்தாலும் முதுகலை பட்டம் பெற்றவராக இருந்தாலும் மூட நம்பிக்கையில் பழி வாங்கும் சிந்தனையையும், பெண் காவலர் ஒருவர் கடமை தவறியதையும் ,பேய் ஆடும் நோயினால் ஒரு மதத்தவர் மாற்று மதத்தவர் சாமி ஆடுவதை கிண்டல் செய்வதையும் ,இத்தனை முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய விதம் அருமை. இரா.அழகுபாண்டி,திராவிடர் கழகம்,மதுரை.(வாட்சப் வழியாக)