Saturday 21 September 2019

மதம் தேவய்தானா ?....தி.கோரா....




இன்று(21.09.2019 ) மின் நூலாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் வெளியிடப்படும் 'மதம் தேவய்தானா ? ' என்னும் நூலிற்கு நான் எழுதிய அணிந்துரை:


முனைவர் வா.நேரு,
தலைவர்,
மாநில பகுத்தறிவுஎழுத்தாளர் மன்றம்,தமிழ் நாடு.

.

புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,
                                 வணக்கம்.
பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.


மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  


இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.

                                                                                                                                                                        அன்புடன்
                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019


No comments: