Thursday, 26 September 2019

எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்......

                                 எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்

இனிய தோழர், பார்க்கும் நேரமெல்லாம் அகம் மலர முகம் மலர 'அண்ணே ' என்று அழைத்து பாசம் பொழியும் அன்புத் தம்பி, மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் (27.09.2019). ஆசிரியராகப் பணியாற்றியவர்.மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றியவர்.வீட்டிலிருந்து பக்கத்தில் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்,  வேகமாக வண்டியை ஓட்டி வந்த ஒரு மடையனால் மோதப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டு இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்து , நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திய  நாள்.

"அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணை காக்கப்படுவதுதான் " என்றார் ரஸ்ஸல்.அப்படி வாழ்ந்து காட்டியவர் தம்பி சுப்பிரமணியன் அவர்கள். . உறவுகள் இழப்பைவிட எனக்கு எனது தோழர்களின் இழப்பு அதிக வருத்ததை தருவது எப்போதும். தன் வாழ்வு, தன் குடும்பம் என்று போய்க்கொண்டிருப்பவர்களுக்கு நடுவில் சமூகம் எனச்சிந்தித்து அதற்காக நேரத்தை, உழப்பை, பணத்தை செலவழிக்கும் எனது தோழர்களின் இழப்பு எப்போதும் அழியாத வருத்தத்தைத் தருகிறது. 

தம்பி ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் மதுரையில் விடுதலை பத்திரிக்கையின் முகவராகப் பணியாற்றியவர். வீடு வீடாகச்சென்று விடுதலையைக் கொண்டு சேர்த்தவர். மதுரை அருகில் உள்ள திருமங்கலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தினை  அரசாங்கப்பள்ளியை, தனியார் பள்ளிக்கு உரிய தரத்தோடு நடத்தியவர்.அந்த அரசுப்பள்ளியினை பலரின் உதவியோடு பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,ஒரே மாதிரியான பை எனப் பல வசதிகளை செய்துகொடுத்தவர் அவர்.சென்ற ஆண்டில் கொட்டும் மழையில் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் வரிசையாக கண் முன்னே ஓடுகின்றது.மிகுந்த துயரத்தோடு இருந்தாலும் கறுப்பு உடையை அணிந்து அவரின் துணைவியார் கிருஷ்ண வேணி, அவரது மகன் சு.சித்தார்த், அவரது மகள் சு.யாழினி ஆகியோர் எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உறவினர்களைக் கேட்டுக்கொண்டது,.அவரது உடல் எந்த விதமான மூடச்சடங்குகளும் இன்றி ஹார்வி பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது,.இறுதியாக தனது துணைவரின் முகத்தைப் பார்த்து ,ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணவேணி அவர்கள்' " நீங்கள் கடைப்பிடித்த கொள்கையை நாங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிப்போம். நான் எனது பிள்ளைகள் என்றும் பெரியார் கொள்கை வழிப்படி நடப்போம் " என பெருத்த குரலோடு உறுதிமொழி எடுத்தது என அனைத்தும் நினைவில் நிற்கின்றன. இறுதி நிகழ்வாய்   அஞ்சலிக் கூட்டம் நடந்ததும் அதில் அவரால் பலன் பெற்ற மாணவர் சரவணன் உட்பட பலர் பேசியதும் நினைவில் வருகிறது.

'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்பார் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உண்மைதான் ஏற்றுக்கொண்டு இன்னும் வேகமாக சமூகத்திற்கு உழைப்பதுதான் தம்பி சுப்பிரமணியன் போன்றவர்கள் நினைவைப் போற்றும் உண்மையான வழி.தொடர்வோம், தொண்டறம்-பகுத்தறிவுப் பணியினை.



திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களின் ஜெ.சுப்பிரமணியன் நினைவுக் கவிதை

பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!

No comments: