Tuesday 23 May 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(13)....முனைவர்.வா.நேரு

   பேசுடா,எழுதுடா,பேசுடா,எழுதுடா …

 தெற்குத் தெரு என்னும் ஊரில் தான் பணியாற்றிய அனுபவத்தை என் தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள் தொடர்ந்தார்.

“ அத்தோடு தெற்குத்தெரு ஊரில் நான் பணியாற்றிய நான்கு வருட காலத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் ஆங்கிலத்தில் பேசவைத்தேன்.சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதவும் வைத்தேன்.11-ஆம் வகுப்பு வரும்போது அவனாக ஆங்கிலத்தில் எழுதிவிடுவான்.தலைமை ஆசிரியர் ரொம்ப சீனியர் மேன்.அவர் வந்து பார்த்துவிட்டு,அவரும் ஆங்கிலப்பாடம் எடுத்தார். “எப்படி சார்,இப்படி இவனுகளை சொந்தமாக எழுத வைக்க முடியுது ?” என்றார்.

“ சார் ,முதலில் நாம் அவனிடம் இங்கிலீசில் பேசணும்.அவன் என்ன சொன்னாலும்,சொல்வதை நாம் இங்கிலீசில் எழுதிக் காட்டணும். பேசுடா,எழுதுடா,பேசுடா,எழுதுடா என்று அவன் தப்பு பண்ணினாலும் மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் பேசு,ஆங்கிலத்தில் எழுது என்று அனுமதிக்கவேண்டும் “ என்றேன்

தெற்குத் தெரு விவசாய வளம் உள்ள பகுதி ஆனால் எல்லா இடத்தையும் விட மிகவும் பின் தங்கிய பகுதி அந்தப் பகுதியாகும்.அங்கேயே ஆங்கிலத்தில் பேசவும்,எழுதவும் மாணவர்களை வைக்க முடியும் என்றால்,ஏன் மற்ற பகுதிகளில் முடியாது.தெற்குத்தெரு கிராமத்து மக்களுக்கு ,அவர்களின் பிள்ளைகளின் படிப்பைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி.மட்டற்ற மகிழ்ச்சி.

அப்போது என்ன செய்தார்கள் என்றால்,அரசாங்கம் புதுக் கணிதத் திட்டத்தை பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றார்கள்.அந்தப் புதுக்கணிதத்தை சொல்லிக் கொடுக்க பயிற்சி ஆசிரியராகப் போட்டு விட்டார்கள்.6 மாதம் உசிலம்பட்டியில் நான் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்,அதாவது துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுக்க வேண்டும்.நான் போய் அங்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் எனக்குப் பதிலாக கணக்கும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்பதற்கு தெற்குத் தெரு பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கவில்லை…

தெற்குத் தெரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கதி என்னாவது? அதனால் நான் என்ன செய்தேன் என்றால் ,சனி-ஞாயிறு எனக்கு உசிலம்பட்டியில் விடுமுறை.ஆதலால் சனி,ஞாயிறு இரண்டு நாள் தெற்குத் தெருவுக்கு வந்து ,அங்கேயே இருந்து ,பள்ளிக்கு பையன்களை வரச்சொல்லி பாடத்தை நடத்திவிட்டேன்.குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. பையன்களுக்கு மிக நன்றாக பாடம் எடுத்துவிட்டேன்.

மாவட்டக் கல்வி அதிகாரி(DEO) எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலப்பாடம்,கணக்குப் பாடம் யார் பாடம் எடுக்கிறார்கள் என்று கேட்க,தலைமை ஆசிரியர் ‘வீரிசெட்டி வந்து ,சனி-ஞாயிறுகளில் பாடம் எடுத்து,பாடங்களை முடித்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.’அவருக்கு 6 மாதம் டூட்டி உசிலம்பட்டியில் போட்டு விட்டால்,அங்கேயே இருக்க வேண்டியதுதானே’ என்று சொன்னார் என்று சொன்னார்கள்.

தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை.எனக்குப் பதிலாக ஆசிரியர் போட்டிருந்தால் நான் வரப்போவதில்லை. வேறு ஆசிரியர் போடவில்லை.6 மாதம் கணக்கும்,ஆங்கிலமும் நடத்தவில்லை என்றால் மாணவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? நானாகத்தான்(வாலண்டிரியாக) போய் வகுப்புகள் எடுத்தேன்..” என்று குறிப்பிட்டார்.

 நான் படித்த “ கரும் பலகைக்கு அப்பால்என்னும் புத்தகத்தை எனது தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன்.மதுரையைச்சார்ந்த ஆசிரியர் ‘கல கல வகுப்பறை சிவா ‘ என்பவர் எழுதிய புத்தகம் இது.இன்றைக்கு ஆசிரியராக இருப்பவர் எழுதிய புத்தகம். கலகல வகுப்பறை சிவா தனது முன்னோட்டத்தில் ' ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.உலகமெங்கும் ஆசிரியர்கள்,குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இப்படங்கள் வாயிலாக அறிய முடியும்.அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் நல்ல பலன்களைத்தரும் " எனக்குறிப்பிடுவார். ஆமாம், அவர் பார்த்த ,ரசித்த ஆசிரியர்கள்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 12 திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்தான் அந்தப் புத்தகம்.

 கரும்பலகைக்கு அப்பால், தி இந்து தமிழ் பத்திரிக்கையில் வரும் தொடர் கட்டுரைத் தலைப்பு. 2011-ல் வெளியான "Beyond the Blackboard " என்னும் படத்தைப் பற்றியதுதான் முதல் கட்டுரை. இதுதான் புத்தகத்தின் தலைப்பும் கூட.சில ஆசிரியர்கள், நானே கூட எனது கல்லூரிக் காலத்தில் சந்தித்ததுண்டு. கைகளில் நோட்ஸ்களோடு  வருவார்கள், வருகைப் பதிவேட்டை எடுப்பார்கள். பின்பு எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு 40,45 நிமிடம் கரும்பலகையில் எழுதி மட்டும் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். சில விளக்கங்கள் சொல்வார்கள், ஆனால் அது உருப்படியாக இருக்காது.பாடத்தை விளக்கிச்சொல்லவேண்டும்,மாணவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதனை அறியவேண்டும் என்னும் நோக்கம் இருக்காது. இன்றைக்கும் பல ஆசிரியர்கள் அப்படி இருக்கக்கூடும்.

 பாடங்களைப் புரிவது, மாணவர்களைப் புரிவது, மாணவர்களின் வீட்டுச்சூழலைப் புரிவது எனப் பல புரிதல்களோடு வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரால் மட்டுமே , காலம் கடந்து நிற்கும் ஆசிரியராக நிற்கமுடியும். "டேசி பெஸ் என்ற ஆசிரியை தனது பள்ளி அனுபவங்கள் குறித்து எழுதிய 'Nobody Don't Love Nobody " என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மைச்சம்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " Beyond the Blackboard " என்று நூலாசிரியர் குறிப்பிட்டு இருப்பார்..

 கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கனவுகளோடு ஆசிரியராகப்போகும் டேசி பெஸ், எதார்த்தங்களால் உடைந்து போவதும், மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவதும் பின்பு சூழலை உள்வாங்கிக்கொண்டு மிகச்சிறந்த ஆசிரியராக, பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும், மாணவிகளும் நேசிக்கும் ஆசிரியராக எப்படி மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை என்பதனை நூலாசிரியர் குறிப்பிட்டு விவரிப்பார்." இயல்பான கலந்துரையாடலே கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது " " வகுப்பறை மாற்றங்களை சந்திக்கும்போது சுற்றுப்புறமும் மாறுகிறது " (பக்கம் 12), "ஆசிரியர் என்ற பெருமிதத்தை பார்ப்பவர்க்கும் வழங்குவதே, Beyond the Blackboard "  திரைப்படம் எனக்குறிப்பிடுவார்.

                       குறைபாடு உள்ள பிராட் என்னும் குழந்தை , பின்பு அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் விளக்கி, அந்தக் குறைபாட்டை வைத்துக்கொண்டே படித்து பின்பு  மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி மாறுகின்றார் என்பதனை விளக்கும் ஆங்கில மொழியில் வந்த " Front of the Class " என்னும் திரைப்படத்தை அடுத்த கட்டுரை விவரிக்கும். "குழந்தைகளிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்த தெளிவான அறிதல்கள் ஆசிரியருக்கு மிகவும் அவசியம்" என்று குறிப்பிடுவார்.

 

மலையாள மொழியில் 2012 எடுக்கப்பட்ட " Last Bench " என்னும் படம் பற்றியது அடுத்த கட்டுரை. " ஆசிரியர்களும்,பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமல்லாமல் முன் மாதிரியாக இருக்கவேண்டும் .(பக்கம் 28 ).என்பதனை கடைசி பெஞ்சில் உட்காருகிற, படிக்காத மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றியதுஇன்னும் பல திரைப்படங்களைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது.               

              ஒவ்வொரு திரைப்படத்தினையும் தன்னுடைய ஆசிரியர் அனுபவத்தோடு இணைத்து, இன்றைய சூழலில் இருக்கும் சமூகச்சூழலையும் சுட்டிக்காட்டி இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கின்றார் என்பது இந்த நூலில் சிறப்பு.

 இந்த நூலை நான் படித்துவிட்டு எனது  தலைமை ஆசிரியர்  அவர்களிடம் கொடுத்தேன். அவர் இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டு ," எல்லா வாத்தியார்களும் இதனைக் கட்டாயம் படிக்கவேண்டும்,.படிக்கவேண்டும் " என்றார்.“இந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்க இயலாதே” என்றார் அவர். . ‘லேப் டாப்பும் இணையதளமும் இருந்தால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்’ என்றேன்  நான். “ .கல்லூரிக் காலங்களில் தன் ஆங்கில மொழி அறிவு வளர்ந்ததற்கு ஆங்கிலப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் ஒரு காரணம் “என்றார். “புகழ் பெற்ற ஆங்கிலப்படங்களை எல்லாம் பார்ப்பதை ஒருகாலத்தில் வழக்கமாக நான் வைத்திருந்தேன் “என்றார்.அவருடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு அருமையாக அமைந்ததற்கு அவரது ஆங்கிலப்படங்களைப் பார்க்கும் பழக்கமும் ஒரு காரணம் என்று நினைத்துக்கொண்டேன்.

                            (தொடரும்)

 

 

 

 

 

No comments: