Monday 1 May 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(10)...முனைவர்.வா.நேரு

 

             மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்...


        தேவதானப்பட்டியில் வேலை பார்த்த அனுபவத்தைத் தொடர்ந்தார் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்கள்.

" அந்தப் பெரிய பணக்காரரும் ஜமீன்தார் என்ற முறையில் எங்களை  நடத்தவில்லை..போகாத குறை ஒன்றுதான்(போய் அவர்களை அணுகிக் கேட்காத குறைதான்)..எல்லோரையும் மரியாதையாக உட்காரச்சொன்னார். வேலைக்காரரை அழைத்து ," சாருங்க எல்லோருக்கும் காபி போட்டுக் கொடு " என்று சொன்னார்." என்ன சார்,எல்லோரும் வந்திருக்கீங்க,என்ன விசயம் ?" என்றார்.தலைமை ஆசிரியர் வந்ததற்கான காரணத்தைச்சொன்னார்.நான் உள்ளூர்க்காரன் என்பதால் என்னை அவருக்குத் தெரியும்.தலைமை ஆசிரியர் சொல்லி முடித்தவுடன் நானும் தொடர்ந்து சொன்னேன்.


" இப்படி இருக்குங்க அய்யா,  இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.அரசாங்கத்திற்கு கட்ட பணம் வேண்டும்.ஒன்று பணம் வசூல் செய்வதாக இருந்தாலும் செல்வோம்.ஊர் ஊராகப் போய் வசூல் செய்வோம்.அது நாளாகும்.மாணவர்களிடமே சொல்லி ,அவர்களின் பெற்றோர்களை வரச்சொல்லி மாணவர்கள் மூலமாகவும் செய்யலாம்.அதுக்கு அதனை நீங்கள் சொன்னால்தான் நடக்கும்.நாங்க அதனைச்சொல்ல முடியாது "என்றேன்.

" வாஸ்தவம்தான்,ரொம்ப அகராதிகள் இங்கே இருக்கிறவன்கள்.நாம பெற்றோர் கூட்டத்தைப் போட்டு பேசிவிட்டு அப்புறமா இறங்கி விடுவோம் " என்றார்.அதே மாதிரிக்கூட்டம் போட்டு ,ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும் இவ்வளவு என்று சொல்லி ,தீர்மானம் செய்து நன்கொடை வாங்கினோம்.அப்புறம் ஊர் ஊராகப் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் வசூலுக்கும் போனோம்.அதனை வசூல் செய்து,தேவதானப்பட்டி பள்ளிக்கூடத்தை உயர் நிலைப்பள்ளியாக நிலை நிறுத்தினோம்.

அங்கேயும் மின் இணைப்பு இல்லாமல் இருந்தது.அது வாடகைக் கட்டிடம்தான்.அதற்கு மின் இணைப்பு வாங்கினோம்.இரவு நேரப் படிப்பை அங்கும் ஆரம்பித்தோம்.அதற்கு முணு,முணுப்பு வந்தது.நான் கிராமத்திற்கு வந்து போக வேண்டும்.3 கிலோ மீட்டர் தூரம் தேவதானப்பட்டிக்கும் எனது கிராமத்திற்கும்.சைக்கிள் வைத்திருந்தேன்.சைக்கிளில்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்து போவேன்.நான் சாயங்காலம் பள்ளி முடித்து,கிராமத்திற்கு வந்துவிட்டு ,மறூபடியும் போகவேண்டும்.போனேன்.மற்றவர்கள் எல்லோரும் உள்ளூரில் இருக்கிறார்கள்.இருந்தாலும் முணுமுணுப்பு வந்தது.அப்புறம் அவர்களை எல்லாம் கூப்பிட்டு பேசி ,எல்லோருக்கும் வேண்டாம்.இந்த 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமாவது நைட் ஸ்டடி வைப்போம்.ரிசல்ட் வரவேண்டும்,அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னபிறகு,ஒத்துக்கொண்டார்கள்.இரவு நேரப்படிப்பு தேவதானப்பட்டியில் நடந்தது. நான்கு வருடங்கள் தேவதானப்பட்டியில் வேலை பார்த்தேன். " என்றார்.


பெற்றோர்களுக்கு படிப்பின் அருமை இன்றைக்குத் தெரிகிறது.தன் தெருவில் அல்லது கிராமத்தில் படித்ததால் முன்னேறி இருக்கும் தன்னைப்போன்ற மனிதர்களின் பிள்ளைகளைப் பார்த்து,தன் பிள்ளைகளும் படிக்கவேண்டும்,தன் பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் இன்றைக்கு மேலோங்கி இருக்கிறது.அப்படி எண்ணம் இருக்கும் பெற்றோர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து பணத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாழாக்குகிறார்கள் என்பது தனிச்செய்தி.இந்தத் தொடரின் பின் பகுதியில் எனது தலைமை ஆசிரியரிடம் நடத்திய உரையாடல்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்றைக்கும் கூட இறைப் பணி என்றால் மக்கள் உற்சாகமாக கிளம்பி விடுகின்றார்கள். ஊர் கூடித்தேர் இழுப்போம் என்று வீட்டிற்கு இவ்வளவு வரி என்று போட்டு எல்லா வீடுகளிலும் வசூலித்து விடுகிறார்கள்.இருக்கிறவர்கள் கூடுதலாகப் பணம் கொடுக்கின்றார்கள்.இல்லாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிப்பணத்தை கடன் வாங்கியாவது கட்டி விடுகின்றார்கள்.அதன் மூலம் திருவிழாக்களை மிக ஆடம்பரமாகக் கொண்டாடுகிறார்கள்.ஆனால் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடை என்றால் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?..


ஒரு வாட்சப் செய்தி படித்தேன்.ஒரு கோயில் கட்டினால் இந்துக்கள் மட்டும் வருவார்கள்.ஒரு சர்ச் கட்டினால் கிறித்துவர்கள் மட்டும் வருவார்கள்.ஒரு மசூதி கட்டினால் இஸ்லாமியர்கள் மட்டும் வருவார்கள். ஆனால் ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் எல்லோரும் வருவார்க்ள் என்று.அதுபோலத்தான் கல்விக்காக செய்யும் பணி என்பது அனைத்து மனிதர்களுக்கும் செய்யும் பணி.அனைவருக்கும் செய்யும் பணி.


கல்விக்காக நாம் கொடுக்கும் நன்கொடை நம் உள்ளத்தை மகிழ்ச்செய்வது மட்டுமல்ல,எத்தனையோ பேருக்கு வாழ்வளிப்பது.இந்த நேரத்தில் மதுரை தொலைபேசி நிலையத்தில் கோட்டப்பொறியாளராக வேலைபார்த்த திருமதி அருண்மொழி அவர்கள் நினைவுக்கு வருகிறார்.இன்றும் மதுரையில் வாழும் அவர் எனது வாழ்க்கையில் பெரும் மதிப்பிற்குரியவர்.

வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு அவருடைய நடுத்தர வயதில் ஏற்பட்டது.அவரது  ஒரே மகள் சியாமளா ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விபத்தில் மறைந்துவிட்டார்.கணவர் இல்லாத நிலையில் மகளே தன் வாழ்க்கை என்று இருந்தவரின் வாழ்க்கையில் அடித்த புயல் மிகப்பெரிய துயரம்.

.மதுரையில் காந்தி நினைவு நிதியால் நடத்தப்படும் சேவாலயம் என்னும் விடுதி மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ளது.அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்.மேலூர் போன்ற கிராமங்களில் இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.தான் வாங்கும் சம்பளப்பணத்தை எல்லம் செலவழித்து,அந்த சேவாலயம் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி(tuition)கொடுக்க ஆரம்பித்தார்.படித்த,கற்பிப்பதில் ஆர்வம் இருக்கும் இருபால் பட்டதாரிகளை அழைத்து பாடம் எடுக்கச்செய்தார்.அவரும் பாடம் எடுத்தார்.உடன் வேலை பார்க்கும் மற்றவர்களையும் வந்து இலவசமாக பாடம் எடுக்கத்தூண்டினார்.


அவருடைய தூண்டுதலின் பேரில் மதுரை தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும் பலர் அங்கு போய் டியூசன் எடுத்தனர். நானும் கூட சில மாதங்கள் எடுத்தேன்.வெள்ளேந்தியான மாணவர்கள்.கல்வியினால் என்ன கிடைக்கும் என்னும் தொலை நோக்கு இல்லாத மாணவர்கள்.ஆனால் அவர்களுக்கு கண்டிப்புடன் கூடிய கல்வி கிடைப்பதற்கு தன்னுடைய பணத்தை,நேரத்தை எல்லாம் செலவழித்தார்.


என்னுடன் வேலை பார்த்த எழுத்தாளர் பி.எஸ்.என்.எல். அதிகாரி பாலகுமார் விஜயராகவன்,செந்தில் போன்றவர்களை எல்லாம் இணைத்து தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு 2014-ல் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார்.அவருடைய மகள் சியாமளா அறக்கட்டளை என்னும் பெயரில் மதுரையில் இருக்கும் அந்த அறக்கட்டளை பொறியியல்,மருத்துவம் படிக்கும் பல மாணவ,மாணவிகளுக்கு 2014-ஆம் ஆண்டு முதல் உதவித்தொகையை வழங்கி வருகின்றது.

நான் மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தபோது,2010-ல் சேவாலயம் விடுதியில் இருந்து சில மாணவர்கள் அருண்மொழி மேடத்தைப் பார்க்க வந்தார்கள். என்னோடு லிப்டில் வந்த அந்த மாணவக் குழந்தைகள் அம்மாவைப் பார்க்க வேண்டும்,அம்மா எங்கு இருப்பார்கள் என்றெல்லாம் கேட்டபோது,எனது கண்களில் நீர் வந்தது. ஒரு குழந்தையை அவர்கள் பறிகொடுத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அம்மா,அம்மா என்று அன்பொழுக அழைக்கும் வாய்ப்பை,தான் ஏற்படுத்திக்கொடுத்த கல்வி வாய்ப்பால் பெற்றார்கள்.கல்வி கொடுப்பவர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள்,போற்றப்படுகிறார்கள் என்பதை நாம் கண் கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களிடம் லிப்டில் நான் அந்த மாணவர்களைச்சந்தித்தையும் ,எங்கள் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் வேலைபார்த்த மேடம் அருண்மொழி அவர்களைப் பற்றியும் அவரின் கல்விப்பணிகளைப் பற்றிச்சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்.அவர் அடைந்த மகிழ்ச்சியும் அவரை சந்தித்து நேரில் பாராட்டவேண்டும் என்று அவர் விரும்பியதும் இப்போது நினைவுகளில் ஓடுகிறது.

                                                                                                (தொடரும்)



No comments: