Wednesday 10 May 2023

போய்ப் படி,படி என்றான்....

 



கண்ணுக்கு எட்டியவரை

அவரின் நிலம் 

விரிந்து கிடந்தது

அவரின் சொந்த ஊரில்...


தமிழ் நாட்டின் அனைத்து

நகரங்களிலும் 

பல கோடி மதிப்புள்ள

சொத்துகள் அவருக்கு இருந்தது..


எத்தனையோ கோடிக்கு

அதிபதி என்றாலும்

அவர் எளிமையாகத்தான் 

இருந்து வந்தார் தன் வாழ்க்கையில்...


சில நேரங்களில் வியந்ததுண்டு...

எப்படி இவ்வளவு

எளிமையாக இருக்கிறார் இவரென்று..


பணம் வந்தவர்கள் எல்லாம்

பவிசாக வரும் நாளில்

ஏன் இவர் மட்டும் இப்படி என்று...


அவரும் கூட ஒரு காலத்தில்

ஆடம்பரமாகத்தான் இருந்தார்

என அற்றைக் காலத்தில்

அவரைப் பார்த்த 

முதியவர்கள் சொன்னார்கள்...


வாழ்வில் என்றோ

எதனாலோ ஏற்பட்ட

மாற்றம் ஒன்று 

உள்ளத்தை உறுத்தி

இருக்க வேண்டும்...


சட்டென பாம்பு தன்

சட்டையைக் கழற்றி

எறிவது போல 

ஆடம்பரம் அனைத்தையும்

தூக்கி எறிந்து விட்டார்...


பாம்பு சட்டையைக் கழட்டினாலும்

அது தன் நஞ்சைக்  

கழட்டி எறிய இயலுமா?

எளிமையாகப் பணக்காரர்கள்

மாறினாலும்

அவர்களின் மனப்பான்மை

மாறிடுமா எனும்

எண்ணம் என்னை

எப்போதும் அவரிடத்தில்

எச்சரிக்கையாகவே 

இருக்கத் தூண்டியது...


இதைக் கேட்டு

கலகலவெனச்சிரித்த

நண்பன் சொன்னான்...

நடுத்தர வர்க்கம் எல்லாம்

நஞ்சு இல்லாமல் 

இருக்கிறார்களா? என்ன?

மனமாற்றம்

மனமாற்றம்தான்..

,மனமாற்றம் 

பணக்கார மனிதர்களைக்

கூட மனிதாபிமானம்

மிக்க மனிதர்களாக மாற்றும்...

போ,போ பணக்காரராக இருந்து

மனமாற்றத்தால் அள்ளிக்கொடுத்து

ஏழையாகிப்போன நிலையில்

மகத்தான இலக்கியம் படைத்த

டால்ஸ்டாய்-ஐப் போய்ப் படி,படி என்றான்...


                            வா.நேரு

                            10.05.2023

No comments: