Thursday 3 August 2023

அச்சத்தைப் போக்கி அறிவூட்டுவோம்! – முனைவர் வா.நேரு...

 1985-90களில் தொலைபேசித் துறையில் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அப்போது தொலைபேசித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அச்சம் உருவானது. நமது வேலை எல்லாம் போய்விடும் கணினி வருகையால் என்று அனைவரும் பயந்தனர்.கணினி வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தொழிற்சங்கத் தலைவர்களிடையே இரண்டு போக்குகள் காணப்பட்டன. ஒரு தரப்பினர் ஆட்டோமைஸேசன் ஆண்டி நேசன் (இயந்திரமயமாக்குவது தேசத்திற்கு எதிரானது) என்று ஒரு முழக்கம் வைத்தனர்.அவர்கள் கணினி வருகையை எப்படியாவது தொலைபேசித் துறைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். கணினி கூடவே கூடாது, வந்தால் ஊழியர்கள் ஒன்றிணைந்து உடைத்தெறிவோம் என்று முழங்கினர்.

இன்னொரு தரப்பினர் கணினி மயம் என்பது உலக அளவிலானது. இது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு, இதனை நாம் தடுக்க இயலாது, ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் என்பது உண்மைதான்; ஆனால் முழுமையாகத் தடுப்போம் என்பது எதார்த்தம் கிடையாது; நம்மால் முடியக்கூடியது . அந்தக் கணினி வருகை நம் வேலைவாய்ப்பைப் பறிக்காமல் இருக்க என்ன செய்யமுடியுமோ அதனைச்செய்வோம். கணினி வருகையால் புதிய ஆள்களை துறையில் எடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இருக்கும் ஊழியர்களைக் காக்க நாம் ஒன்றிணைந்து, கணினியை எப்படி எப்படிப் பயன்படுத்துவது, எங்கெங்கே பயன்படுத்துவது என்பதை நிருவாகத்தோடு பேசி முடிவு செய்ய வைப்போம் என்றனர். இரண்டாவது அணுகுமுறைதான் வெற்றி பெற்றது.ஆனால் கணினி வேண்டவே வேண்டாம் என்றவர்கள்தான் அதில் முதலில் பயிற்சி பெற்றனர்; பலன் பெற்றனர் என்பது ஒரு நகை முரண்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவும், அதன் வழியாக அமைக்கப்படும் சாட்ஜிபிடி என்னும் மென்பொருளும் எல்லோருக்கும் வேலை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் போன்ற பெரியாரியல்வாதிகளுக்கு மாற்றம் கண்டு எப்போதும் பயம் ஏற்பட்டதில்லை. எவ்வளவு பெரிய மாற்றம் என்றாலும் அது மக்களுக்கு எந்த வகையில் பயன்படும் என்பதைப் பார்ப்பதுதான் பெரியாரியல் நோக்கு. அப்படிப் பயன்படவில்லை என்றால் அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு பிரச்சாரம்,போராட்டம் என்ற அணுகுமுறைதான் நமது அணுகுமுறை.

 கணினி, இணையம், முகநூல், வாட்சப் என்பவை எல்லாம் ஒரு வகையில் எளிய மனிதர்களுக்கான திறவுகோலாக மாறியிருக்கின்றன. தங்கள் குறைகளை ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது  மின் அஞ்சல், குறுந்தகவல் போன்ற செயலிகள் மூலமாகவோ அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க முடிகிறது.தீர்வு காண முடிகிறது. 1990-களில் கணினியை எதிர்த்து முழக்கம் எழுப்பியவர்களுக்கு இப்படியெல்லாம் வசிதிகள் வரும் என்று தெரியாது. மணியார்டர் இல்லாமலோ, வங்கிகளுக்குப் போகாமலோ பணத்தை ‘ஜிபே’ (G-Pay) போன்ற செயலிகள் மூலம் அனுப்பமுடியும் என்பதோ,வீட்டில் இருந்துகொண்டே இரயில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்ய முடியும் என்பதோ நம் கற்பனையில் கூட எட்டாத காலமாக இருந்த காலம் அது. இன்றைக்கு நினைத்துப் பார்க்கின்றபோது அன்றைய முழக்கம் எழுப்பியவர்களின் முழக்கங்கள் எவ்வளவு நகைப்புக்குரியன என்பது புரிகிறது.

அதைப் போன்றதுதான் செயற்கை நுண்ணறிவும் அறிவியலின் அடுத்த கட்டப் பாய்ச்சல். மனித குலம் முன்னேற்றத்தில் வசதிகள் ஏற்படுத்துவதில் எத்தகைய மாற்றங்களை இவை ஏற்படுத்தும் என்பது இப்போது நமக்குத் தெரியாது. இன்னும் ஒரு 40 – 50 ஆண்டுகள் கழித்து நமது வாரிசுகள் எங்கள் அப்பா, அம்மா காலத்தில் இப்படியெல்லாம் இருந்ததாம் என்று சொல்லி நகைக்கும் காலமாகத்தான் இருக்கும்.நாம் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நம் தந்தைகள் காலத்தில் ஒரு தொலைபேசி இணைப்பு வாங்குவதற்காக 4, 5 ஆண்டுகள் காத்துக் கிடந்ததைச் சொல்லும்போது நமது வாரிசுகள் சிரிப்பது போல, இன்றைய காலத்தை நினைத்து எதிர்காலத்தில் நமது வாரிசுகளின் வாரிசுகள் சிரிக்கக்கூடும்.

இனி வரும் உலகம் பற்றிச் சிந்தித்த தந்தை பெரியார் “அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும் அதிசயங்களையும் கொண்டிருக்குமென்று சொல்லுவது மிகைபடச் சொன்னதாக ஆகாது. ஆதலால், மக்கள் குறிப்பாக அறிவாளிகள், சிந்தனையாளர்கள், முற்போக்கில் கவலை உள்ளவர்களுக்கு இவற்றின் மூலம் சதா வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளது போல் கூலிக்கு வேலை செய்வதுபோலவோ,இலாபத்துக்கு வேலை செய்வதுபோலவோ இல்லாமல் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்து கொள்ளுவது என்றே கருத்தே வளரும்’’ (இனி வரும் உலகம் – நூல்) என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு என்னென்ன அற்புதங்களை,அதிசயங்களை இந்த உலகத்தில் ஏற்படுத்தும் என்று நமக்கு இப்போது தெரியவில்லை. ஆனால், நிகழுப்போகும் மாற்றங்கள் மிகப்பெரிய மாற்றங்களாக இருக்கும் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரிகிறது. நமக்கு அற்புதமாய்,ஆச்சரியமாய்த் தோன்றும் மாற்றங்கள் நிகழப்போகின்றன.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் அடுத்த 5 ஆண்டுகளில் எந்தெந்தத் துறைகளில் எல்லாம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும், புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்பதைப் பற்றி பி.பி.சி.தமிழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நிபுணர்கள்’ என்னும் புதிய வகை நிபுணர்கள் உருவாவார்கள் என்று குறிப்பிடுகிறது. ‘வணிக நுண்ணறிவு ஆய்வாளர்’,தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்,ஃபின்டெக் பொறியாளர்,தரவு ஆய்வாளர் ,ரோபோடிக்ஸ் பொறியாளர்,எலெக்ட்ரோ டெக்னாலாஜி பொறியாளர்,வேளாண் உபகரணங்கள் இயக்குபவர்,டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்கள் போன்ற பலவகையான புதிய வகையிலான வேலை வாய்ப்புகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் நிபுணர்கள்’ என்னும் வேலை வாய்ப்பைப் பற்றிக் குறிப்பிடும் பிபிசி கட்டுரை “இவர்களின் பிரதான பணி சுற்றுச்சூழலில் தங்கள் நிறுவனத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ஆற்றல் வளத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது, நீங்கள் எந்த நிறுவனத்துக்கு வேலை செய்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் பொறுப்பும் வேறுபடும்” என்று குறிப்பிடுகிறது.

சுற்றுச்சூழல் மாசு என்பது இன்றைக்கு உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அதன் மூலமாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும்நிலைமை செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் உமிழும் கார்பனின் அளவு,ஒரு தொழிற்சாலையில் உமிழப்படும் கார்பனின் அளவு என்று ஒவ்வொன்றும் கண்காணிக்கப் படலாம்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்து கொள்ளுவது என்றே கருத்தே வளரும்” என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டது போல என்னென்ன காரியங்கள் உலகுக்குப் பயன்படும், என்னென்ன காரியங்கள் உலகிற்குப் பயன்படாது என்பதை அளவிடும் கருவிகளையும், தவறு செய்பவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்கும் கருவிகளையும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவால் ஏற்படப்போகும் புதிய வேலைவாய்ப்புகள் நம் ஆவலைத் தூண்டுகின்றன. அதற்கு நம் தமிழ்நாட்டு இளைஞர்களை எப்படி ஆயத்தப்படுத்துவது என்பது பற்றிய சிந்தனைகள் ஓடுகின்றன.



கணினி வருகையை முன் கூட்டியே உணர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை பாடத்திட்டம் முதல் மென்பொருள் பூங்காக்கள்வரை அமைத்து, நமது தமிழ்நாட்டு இளைஞர்கள்கணினி மூலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் முதல் உள்நாட்டு வேலை வாய்ப்புகள்வரை பெறுவதற்கு வழிவகுத்த முத்தமிழ் அறிஞர் ,நூற்றாண்டு நாயகர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு வருகிறது.அதனைப்போல இன்றைய திராவிட மாடல் அரசு, அதன் சிறப்பு மிக்க முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து பல தொழில் நுட்பங்களை நம் மாணவர்கள் கற்பதற்கும் அதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழி வகுக்கும் திட்டங்கள் பல கொடுப்பார் என எண்ணுகிறோம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன. இன்னொரு பக்கம் மதம் மனிதர்களின் மனங்களை குறுகிய நோக்கம் கொண்டவையாக மாற்றிக் கொண்டே வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த அளவில் என்ன அறிவியல் சாதனங்கள் வந்தாலும் சனாதனத்தை மனதில் கொண்டிருக்கும் மனிதர்கள் மாறாதவரை எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

சக மனிதனை மனிதாக நினைக்கும் மனப்பான்மை வளர  மதங்களும், ஜாதிகளும் அழிவது அவசியம். அண்மையில் சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்த ஒரு செயல் நம்மை வெட்கித் தலை குனியவைத்தது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சக மனிதன் மீது ஒரு பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்த ஒருவன், பிரவேஷ் சுக்லா என்பவன் சிறுநீர் கழிக்கும் அந்தச் செயல், எப்படிப்பட்ட இழிவான மனநிலையில் அவன் இருக்கிறான் என்பதைக் காட்டியது. அவன் குடிபோதையில் இருந்தான் என்று சிலர் சொல்கின்றனர். குடிபோதையில் இருப்பவன் தான் தன் அடிமனதில் இருப்பதைச் செய்வான், உளறுவான் எனச் சொல்வர். சனாதனம் பிடித்த மனிதனின் அடிமனதில் இருக்கும் வெட்கம்கெட்ட, ஜாதித் திமிர் போக்கு நம்மைக் கவலை கொள்ள வைக்கிறது.

ஒருபக்கம் மனித நேயமற்ற இந்தச் சனாதன வெறிபிடித்தவர்களின் இப்படிப்பட்ட செயல்கள்; இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் முன்னேற்றங்கள். எப்பேர்ப்பட்ட அறிவியல் முன்னேற்றம் என்றாலும் அது எளிய மனிதர்களின் வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்கவேண்டும். அதற்கு அந்த எளிய மனிதர்களைப் பற்றி யோசிக்கும், அவர்களுக்காக அமையும் அரசாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு நம் கைகளில் இருக்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக மனித நேயமற்ற மதவெறியர்களை அடையாளம் காட்டுவதும், எதிர்கால அறிவியல் முன்னேற்றங்களை வரவேற்று அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நம்மைப் போன்றவர்களின் கடமையாகும்.அறிவியல் கருவிகள் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்பதும், எதிர்காலத்தில் யார் கைகளில் இருக்கவேண்டும் என்பதையும் மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்லி தெளிவுபடுத்தவேண்டும்.

புதிய தொழில் நுட்பங்களையும், செயற்கை நுண்ணறிவையும் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை, ஆனால் அது எந்தத் திசையில் செல்கிறது, எப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் தொடர்ச்சியான வாசிப்புகள் மூலமும் எழுத்தின் மூலமும் மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏனெனில், உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படப்போகிறது. நேர்மறையான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அதைப் பற்றிய அச்சத்தைப் போக்குவோம். அதே நேரத்தில் அது செல்லும் திசையை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருப்போம். ♦

No comments: